தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வேகும் புவியும் சாகும் உயிரிகளும் - பரிதி


[கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள அதிகம் புழக்கத்தில் இல்லாத தமிழ்ச் சொற்கள் குறித்த விளக்கமும் பிறமொழிப் பெயர்ச் சொற்களின் ஆங்கில வடிவமும் இறுதியில் தரப்பட்டுள்ளன.]

சென்ற மாத இறுதியில் உலக மக்கள் அனைவருக்கும் மிக, மிக முதன்மை வாய்ந்த அறிக்கைத் தொகுப்பு ஒன்று வெளியாயிற்று. சூழல் மாற்றம் குறித்த அரசிடை ஆயம் எனும் உலகளவிலான அறிஞர் குழுவின் ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கைத் தொகுப்பு (மஅ5) அது.

சூழல் மாசு குறித்த அறிவியல், அதன் விளைவுகள், அவற்றைக் கட்டுப்படுத்துதல் ஆகியன அவ்வறிக்கைகளில் மிக விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால், எந்த நாட்டின் அரசாங்கமும் இது குறித்து உண்மையான அக்கறையுடன் செயல்படுகிறதா என்பது ஐயமே. இந்தியாவில் அனைத்துக் கட்சிகளும் அரசுத் துறைகளும் தேர்தல் திருவிழாவில் முழு மூச்சுடன் பங்கெடுத்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த அறிக்கையில் உள்ள முதன்மையான தகவல்களைப் பற்றிக் கவலைப்படுவதற்கு ஆள்வோருக்கு நேரமும் இராது, தேவையும் இராது என்பது வருத்தம் தருகிறது.

மேற்படி ஆயம் மூன்று பணிக் குழுக்களை உருவாக்கிற்று. முதல் பணிக் குழு அறிவியல் அறிக்கையை வெளியிட்டது. [மாந்தச் செயல்பாடுகளால் உருவான] சூழல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை அந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது. இந்த மாற்றங்கள் நிகழ்ந்துவருவதை அறிவியலாளர்கள் பல பத்தாண்டுகளாக அறிந்துள்ளனர். இருப்பினும் பெரும் கன்னெய நிறுவனங்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் வேறு சிலரும் மக்களைக் குழப்பும் நோக்கில் தொடர்ந்து பொய்களைப் பரப்பிவந்துள்ளனர். இப்போது நிகழும் சூழல் மாற்றங்கள் இயற்கையாகவே நிகழ்பவை, அதனால் நாம் எவ்விதக் கவலையும் இன்றித் தொடர்ந்து நம் நுகர்வுக் கலாச்சாரத்திலேயே மூழ்கியிருக்கலாம் என்ற பொய்யைத் தம் பண வலுவின் மூலம் அனைத்து வகை ஊடகங்களையும் பயன்படுத்திப் பரப்பிவருகின்றனர்.

பசுமைக்குடில் வளிகளின் அடர்த்திகள் கடந்த எட்டு லட்சம் ஆண்டுகளில் இருந்ததைக் காட்டிலும் இப்போது அதிகமாக உள்ளன. வளி மண்டலம், கடல்கள், துருவப் பகுதிகளில் கடல்களின் மீது மிதக்கும் பனித் தகடுகள் ஆகிய அனைத்தும் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளில் இல்லாத மாற்றங்களைக் கண்டுள்ளன. மாந்தச் செயல்பாடுகளே இவற்றுக்குக் காரணமாக இருப்பதற்கு வாய்ப்புகள் மிக அதிகம் என்று முதல் பணிக் குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது. புவியின் வெப்ப நிலை உயர்வதை 2 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்தவேண்டுமானால் மொத்தம் வெளியிடப்படும் கரியமில வளி அளவைப் பத்தாயிரம் கோடி (1,000,000,000,000) டன் எனும் வரையறைக்குள் வைத்திருக்கவேண்டும் என்றும் நம் நுகர்வுக் கலாச்சாரச் செயல்பாடுகள் 2012-இலேயே மேற்குறித்த அளவில் பாதிக்கும் மேலாக வளிமண்டலத்தில் கரியமில வளியை இட்டு நிரப்பிவிட்டதாகவும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது. பொருளாதார வசதி படைத்தவர்களே இதற்குப் பெருமளவில் காரணம்; ஆனால் விளைவுகள் வறியோரைத் தான் மிக அதிகமாகப் பாதிக்கும் என்பதை நாம் மனத்தில் இருத்தவேண்டும். [சூழல் பாதிப்பின்] தாக்கம் மற்றும் தகவமைத்துக்கொள்ளல் குறித்த அறிக்கையை இரண்டாம் பணிக் குழு வெளியிட்டது. சூழல் மாசுபடுவதன் தீய விளைவுகளை அதிகம் சுமக்க நேரிடும் பகுதிகளில் இந்தியாவும் ஒன்று என்பதனை அவ்வறிக்கையின் மூலம் அறிகிறோம். ஏற்கெனவே வறுமையில் உழல்பவர்களின் இன்னல்களைச் சூழல் மாசுபாடு மேலும் மோசமாக்குகிறது. எடுத்துக்காட்டாக, வருங்காலத்தில் ஒவ்வொரு பத்தாண்டிலும் கோதுமை விளைச்சல் இரண்டு விழுக்காடு குறையும்; [வட இந்தியா உள்ளிட்ட] வறண்ட மிதவெப்பப் பகுதிகளில் நீர்நிலைகளிலும் நிலத்தடியிலும் உள்ள நீரின் அளவு குறையும் வாய்ப்புள்ளது; வறட்சிகள் அடிக்கடி நிகழக்கூடும்; உணவுப் பற்றாக்குறையாலும் தூய்மையற்ற நீரைப் பருகுவதாலும் சத்துப் பற்றாக்குறை அதிகரிக்கக்கூடும், எனவே, நிலைத்த மேம்பாட்டை அடையவேண்டுமானால் சூழல் மாசுபடுவதன் விளைவுகளைக் கட்டுப்படுத்தியாகவேண்டும்.

சூழல் மாசுபடுதலின் தீய விளைவுகளைத் தணித்தல் குறித்த மூன்றாவது பணிக் குழுவின் அறிக்கை ஏப்ரல் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. மனித இனத்தை எதிர்நோக்கியுள்ள கடுஞ்சிக்கல் தொடர்பாக உடனடியான செயல்பாடுகள் தேவை என்பதையும் அது எவ்வளவு கடினமான செயல் என்பதனையும் அந்த அறிக்கை தெரியப்படுத்துகிறது. புவியின் வெப்ப நிலை உயர்வதை 2 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்தவேண்டுமானால் மனித குலம் வெளியிடும் பசுமைக்குடில் வளிகளின் அளவை 2050-ஆம் ஆண்டுக்குள் நாற்பது முதல் எழுபது விழுக்காடு வரை குறைக்கவேண்டும் என்றும் 2100-ஆம் ஆண்டுக்குள் ஏறக்குறைய முற்றிலும் நிறுத்தவேண்டும் என்றும் அவ்வறிக்கை எச்சரிக்கிறது. 2010-ஆம் ஆண்டு மெக்சிக்கோ நாட்டின் கேன்குன் நகரில் நடந்த உலக அரசுகளின் மாநாட்டில் அரசுகள் எடுத்துக்கொண்ட உறுதிமொழி மேற்கண்ட குறிக்கோளை எட்டுவதற்கு எவ்வகையிலும் உதவாது. ஆனால், இது தொடர்பான செயல்பாட்டைத் தள்ளி வைப்பது வருங்காலச் சந்ததியினரை முட்டுச்சந்தில் தள்ளிவிடும்; விளைவுகள் மிக மோசமானவையாகவும் எதிர்காலத் தீர்வுகள் மிகுந்த செலவு பிடிப்பனவாகவும் இருக்கும். சூழல் காப்புத் திட்டக் கொள்கைகளை மதிப்பீடு செய்கையில் நிலைத்த வளர்ச்சியும் நியாயமும் நேர்மையும் உள்ள நெறிமுறைகளும் அடிப்படைகளாக அமையவேண்டும் என்றும் அந்த அறிக்கை அறிவுறுத்துகிறது. இதைச் செயல்படுத்துவதற்கான வழிகளையும் அடையாளங்காட்டுகிறது.

வளர்ச்சி, மேம்பாடு, நியாயம், நேர்மை ஆகியவையும் சூழல் காப்பும் ஒன்றுக்கொன்று எதிரானவை எனும் மிகத் தவறான கருத்து உலகெங்கும் பரப்பப்பட்டுள்ளது. சூழல் மாசுபடுவதைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டே நியாயமான, அனைவருக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க உதவும் வளர்ச்சியைச் செயல்படுத்த முடியும். இதைச் செய்வதற்கு நேர்மையும் தன்னலங்கருதாப் பண்பும் உள்ள அரசியல்வாணர்கள் உலக நாடுகள் அனைத்திலும் ஆட்சிக்கு வரவேண்டும். அதற்காக உலகெங்கிலும் மக்களும் மக்கள் நலம் நாடும் இயக்கங்களும் பாடுபடவேண்டும். மாந்த இனம் மட்டுமன்றி அனைத்து உயிரினங்களும் உய்ப்பதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை!

மேற்கோள்: “Deepening Challenge in Climate Change”, Economic and Political Weekly, Vol - XLIX No. 17, April 26, 2014

(thiru.ramakrishnan@gmail.com)

  • ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கை (மஅ5) assessment report-5
  • கரியமில வளி carbon di-oxide
  • கன்னெயம் பெட்ரோலியம் என்பதன் தமிழ் வடிவம்
  • கேன்குன் cancun
  • சூழல் மாறுதல் குறித்த அரசிடை ஆயம் intergovernmental panel on climate change
  • செல்சியச் (சென்ட்டிக்ரேட்) celsius
  • டன் (1000 கிலோ) tonne
  • பசுமைக்குடில் வளி greenhouse gas
  • பணிக்குழு working group
  • பனித் தகடுகள் ice sheets
  • மெக்சிக்கோ mexico
  • வளி மண்டலம் the atmosphere
 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org