தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி

மஞ்சள் சிட்டு

இந்த மாதம் நாம் காணும் பறவை ஒரு வசந்த காலக் குருவி. அழகே உருவான இக்குருவிக்கு சின்ன மாப்பிள்ளைக் குருவி மற்றும் மஞ்சள் சிட்டு என்ற பெயர்கள் உண்டு. ஆங்கிலத்தில் Common Iora என்று பெயர் பெற்ற இதன் அறிவியல் பெயர் Aegithina tiphia. வசந்த காலம் வந்ததின் அடையாளமாய் மா, முருங்கை, மருதாணி, புங்கன், ஒதியன் போன்ற மரங்கள் பூவாய்ச் சொரிந்து அழகை ஆராதிக்கும். இந்த அழகுக்கு மிக அழகு சேர்க்கும் ஒரு அழகிய சிறு பறவை மஞ்சள் சிட்டு.

இம்மரங்களின் இடையே ஒரு சிறிய கருப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை நிறங்கள் கலந்த மஞ்சள் சிட்டைப் பொறுமையாக அமர்ந்து காலை/மாலை நேரம் காத்திருந்தால் காணலாம். மர உச்சியில் அங்கும் இங்கும் அலைந்து , இனிய விசில் போன்ற ஒலி எழுப்பும். (பல பறவைப் பார்வையாளர்கள் மஞ்சள் சிட்டையும், மாங்குயிலையும் குழப்பிக் கொள்வர். மாங்குயிலை விட இது சிறியதாக இருக்கும்).

தோற்றம்:

சிறிய பறவை (passerine). 11.5 - 15.5 cm அளவுதான் இருக்கும். எப்போதும் தன் இணையுடன் இருகும். ஆணின் சிறகுகள் கருப்பு நிறத்திலும், உடல் தங்க மஞ்சள் நிறத்திலும் கண்ணைக் கவரும். பெண் பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். அழகிய குரல் வளம் கொண்டவை. காலை 6 முதல் 8 மணிவரை அழகாய்ப் பாடும்.

உணவு

பூச்சி, புழுக்களை உண்ணும் (அதனால் உழவனின் நண்பன்!). பூக்கும் மரங்களில் பூச்சிகளைப் பறந்து வேட்டையாடும். வெய்யிலில் இதுவும், மாங்குயிலும் பறக்கும் போது தங்கத்தை வாரி இறைத்தது போல் மின்னும்.

இனப்பெருக்கம்

சித்திரை முதல் புரட்டாசி வரை இவை இனப்பெருக்கத்தில் ஈடுபடும். தன் கூட்டை அழகிய கிண்ணம்போல் கட்டும். ஆண், பெண் இரண்டும் அடைகாப்பதிலும், குஞ்சு வளர்ப்பிலும் ஈடுபடும். 2 முதல் 4 முட்டைகள் இடும். இனப்பெருக்கத்தின் போது ஆண் தன் இணையை ஈர்க்க வானில் பறந்து, பந்து போல் உடலை ஆக்குதல், இறகுகளை விசிறி போல் அழகாய் விரித்தல் போன்ற பல சாகசங்கள் செய்யும்.

சிறப்புச் செய்திகள்

பெரும்பாலும் இந்தியத் துணைக்கண்டத்திலேயே இவை உள்ளன. சீனாவின் சில பகுதிகளிலும், தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் சில ரகங்கள் உள்ளன. ஆணின் சிறகமைப்பு இடத்துக்கு இடம் வேறுபட்டு இருக்கும். இலங்கை மற்றும் தென் இந்தியாவில் கருப்புக் கிரீடம் போல் தலையில் இருக்கும். இமயத்திலும், சீனாவிலும் இக்கிரீடம் பல நிறங்கள் கொண்டதாய் இருக்கும்.

வசந்த காலங்களில்தான் அதிகம் பாடும். மரங்களில் உச்சாணிக் கொம்புகளிலேயே இவை இருப்பதால் இதன் குரலை வைத்துத் தான் இனங் காண முடியும். அவ்வளவு எளிதாய்க் கண்ணில் தென்படாது.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org