துன்பத்துப் பால்
பல ஆண்டுகளுக்கு முன் நான் உணவையும் உற்பத்தியையும் பார்க்க ஆரம்பித்த பொழுது பாலும் அதில் அடங்கும். மிக இயல்பாக நாமெல்லாம் குழந்தைப்பருவம் முதல் உட்கொள்ளும் பால் எப்படி எல்லாம் சீரழிக்கப்படுகிறது என்று பார்க்க நேரிட்டது! உணவில் எப்படி ரசாயனங்களும் அதன் எச்சமும் வந்து பல பிரச்சினைகளை உண்டு பண்ணினவோ அதே அளவு பாலிலும் இருந்தது. மாட்டிற்கு கொடுக்கப்பட்ட துன்பங்களும் தெரிய ஆரம்பித்தன.
நஞ்சற்ற இயற்கை பொருட்களை உட்கொள்வது போல் , சரியாக நடத்தப்பட்ட கொடுமைபடுத்தப்படாத, சுதந்திரமாக நல்ல காடுகளில் மேய்ந்து வந்த மாடுகளின் பாலையே உட்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து அதனையும் தேடிப்பிடித்தோம்.
அப்பொழுது தான் (3 ஆண்டுகளுக்கு முன்) நான் ஒரு அரிய பெண்மணியை சந்தித்தேன். பூச்சிகொல்லிகள், இயற்கை பொருட்கள் மற்றும் ரீஸ்டோர் பற்றியும் பேச்சு போயிற்று. அப்படியே பால் பற்றி வர, அவர் என்னை பால் உட்கொள்வீர்களா என்றார்! ஆம், ஆனால் கொடுமைப்படுத்தப்படாத, சுதந்திரமாக இயற்கை ஊணவை சாப்பிடும், நல்ல படி மேய்க்கப்படும் மாட்டின் பாலையே (இயற்கை பால் என்று அழுத்தத்துடன்) பெருமையாக கூறினேன். அவரது முகம் சிவந்தது..தலையை ஆட்டி அது எப்படி? இவ்வளவெல்லம் பேசும் நீங்கள், ரீஸ்டோர் போன்ற நல்ல காரியம் செய்யும் நீங்கள்..சே என்றார்..எனக்கு புரியவில்லை. நான் மறுபடியும் இயற்கை பால் என்று கூற அவர் “கொடுமை படுத்த படாத சுதந்திரமாக இயற்கை உணவுடன் வளர்க்கப்படுவது ஒன்றே பசு வளர்க்கும் விதமாக இருக்க வேண்டும். அதனை பெரிய விஷயமாக கூறுவதை நிறுத்துங்கள். மேலும் வேறு (இன) மிருகத்தின் பாலை இப்படி திருடி தின்ன உங்களுக்கு அனுமதி கொடுத்தது யார்? வேறு ஏதேனும் மிருகம் மற்ற இனத்திடமிருந்து பாலை இப்படி கபளீகரம் செய்வதை காண முடியுமா? மற்ற விலங்குகளை கொன்று தின்னும் ஊனுண்ணிகள்(carnivore) கூட மொத்த மிருகத்தையும் சாப்பிடும் தர்மம் தான் அங்கு உண்டு.. நம்மைப்போல் பாலை திருடுவதில்லை” என்றார். அன்று முதல் பாலை விட்டு விட்டேன் நான் என்பதை சொல்லவும் வேண்டுமா இங்கு?
இருந்தும் அதற்கு முன் நான் பாலை உற்று நோக்கிய பொழுது கண்டவற்றை பகிர விழைகிறேன்.
முதலில் பால் என்பதே சிறு குழந்தைகளுக்காக தாய் கொடுக்கும் ஒரு அரிய உணவு. சிறு பருவத்தில் வளர்சிக்கான ஊக்கி மற்றும் நோய் காப்பு மற்றும் தடுப்புத்தன்மை பெற்ற பானம். சிறு பருவதிற்கு மட்டுமே! முதிர்ந்த பிறகு (தாய்க்கு பால் சுரப்பது நின்றது முதல்) தேவை இல்லை. அப்படி தான் இயற்கை வடிவமைத்துள்ளது. அதிலும் வேற்று இனத்தின் பாலை உட்கொள்வது? தார்மீக, அறநெறி அடிப்படையில் மட்டுமின்றி அறிவியல் பூர்வமாகவும் தவறு. மாடு தனது கன்றின் வளர்ச்சிக்காக சுரக்கும் பாலை, 42 நாட்களில் அதன் கன்றின் எடை இரட்டிப்பாக்க சுரப்பதை நாம் சுரண்ட நமக்கு மிஞ்சியது பல பிரச்சினைகள்! மனித குழந்ததை பிறப்பிலிருந்து எடை இரட்டிப்பாக 180 நாட்களுக்கு மேல் பிடிக்கும்.
பாலில் கால்சியம் இருக்கிறது என்பர். இந்த ஆங்கில மருத்துவம் மற்றும் திட்ட உணவு (diet) இரண்டிலும் உட்கிரகித்தல் என்னும் bio absorption மறக்கப்படுகிறது. கால்சியம் நமது உடம்பினுள் உட்கிரகிக்க மக்னீசியம் 1:1 அல்லது 1:2 வரையாவது தேவை. மாட்டுப்பாலில் அது மிக மிக குறைவு.இன்று சுவரொட்டிகளைத் தின்னும் மாடுகளுக்கு அறவே இருக்காது.
ஆனால் இன்றைய பாக்கெட்(ட) பாலில் இருப்பவை என்ன என்ன என்று தெரியுமா? சீழ், உயிரிக்கெதிரிகள்(antibiotics), ஆக்சிடாக்சின், என்று பல.. ஆம்! ஒவ்வொரு பாக்கெட்டிலும் 3-5 சொட்டுக்கள் சீழ் இல்லாமல் பால் இன்று இல்லை என்று கால் நடை மருத்துவர்கள் கூறுகின்றனர். பல அறிக்கைகளில் இது உறுதி செய்யப்ப்பட்டுள்ளது. இந்த மாடுகள் மிகவும் கேவலமான சுற்றுச்சூழலில் இருப்பதாலும் அவற்றுக்கு மிகவும் தவறான மிகவும் கேவலமான உணவுகள் கொடுக்கப்படுவதாலும் அவை பற்பல வியாதிகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகின்றன. அதனால் இவற்றுக்கு மிகவும் அதிகமான உயிரிக்கெதிரிகள் கொடுக்கப்பட்டு அவை நமக்கும் வந்து சேருகின்றன. இதனால் நாம் எதாவது உடல் நலக்கேட்டிற்கு மருந்து உட்கொண்டால் அவற்றுக்கு பெரிதும் பயன் இருப்பதில்லை.நம் உடல் உயிரிக்கெதிரிகளுக்கு ஒருவித எதிர்ப்புத்தன்மையை வளர்த்துக் கொண்டு விடுகிறது.
பிரசவ வலி போன்று ஒரு வலியை ஏற்படுத்தி இன்னும் அதிகம் பால் சுரக்க 'ஆக்சிடாக்சின்” ஊசிகள் ஏற்றப்படுகின்றன! இது மட்டுமா? பாவம் அந்த மாடுகளுக்கு அவற்றின் கன்றுகளைக் கூட காட்டாமல் (அவை பாலை குடித்து விட்டால் லாபம் குறைகிறதல்லவா?), பாடம் செய்த பொம்மைகளை காட்டி கறக்கின்றனர். கன்று ஈன்ற 2-3 மாதங்களிலேயெ மறுபடியும் செயற்கை முறையில் கருத்தரிக்க விட்டு, நமது கொடூர லாப வெறியை அவைகள் மீது ஏவுகிறோம். சில சமயங்களில் மாடுகளுக்கு புலாலையும் (மாமிசக்கறி) கொடுத்து அதனால் பல புதிய வியாதிகள் வந்து அவை மனிதனுக்கும் பரவி, அதனால் பல்லாயிரக்கணக்கான மாடுகளைக் கொன்றனர் நமது மனித உரிமை காவலர்களான ஐரோப்பியர்கள். இதெல்லாவற்றிலும் கொடுமை, அவை இருக்கும் சிறு சிறு குடில்களோ தரக்குறைவான உணவோ அல்ல. அம்மாடுகளுக்கு (பசுக்களுக்கு) ஆண்- எருதுகளை கண்ணிற்கே காட்டாமல், உறவே இல்லாமல் பல முறைகளும் செயற்கை கருதரிப்பு (ஊசி மூலம்) மட்டுமே நிகழ்த்தி அவற்றை 4-5 ஆண்டுகளில் திறனற்றவை என்று பட்டம் புகுத்தி அடி மாடு என்று வெட்ட அனுப்பி விடுகின்றனர். அப்படியேனும் பால் வேண்டுமா நண்பர்களே?
நாம் எவ்வளவு இயற்கையிலிருந்து நகர்ந்திருக்கிறோம் என்பதை அறிய நமது பால் கொள்முதலையும் அதன் உற்பத்தியையும் பார்த்தாலே போதும்!
இவை மனிதப் பேராசையின் கோர வெளிப்பாட்டின் ஒரு பக்கமே.
இன்னொரு பக்கம் இதோ:
நான் திருவண்ணாமலையிலிருந்து ஒரு முறை சென்னை வருவதற்கு லாரியில் ஏறினேன். (பல முறை இயற்கை விவசாயிகள் கூட்டத்திற்குப் பின் இப்படித்தான் பயணங்கள் சுவாரசியமாக அமையும்) அது ஒரு பால் கொள்முதல் வண்டி. அவர்களது கொள்முதல் எப்படி இருக்கும், எப்படி விலை நிர்ணயம், எல்லாம் கேட்ட பொழுது பல அதிசயங்களையும் அவலங்களையும் கண்டேன். இவர்கள் பாலை கொள்முதல் செய்ய செல்லும் போது பேரோமீட்டர் என்னும் கொழுப்பு சக்தியை அளவிடும் கருவியுடன் செல்கிறார்கள். கொழுப்பு சக்தியை வைத்து விலை நிர்ணயம். அதனால் பலரும் தங்களுக்கு கூடுதல் பணாம் கிடைக்கவும் அதிக லாபத்திற்காகவும் யூரியாவை கலக்கின்றனர். ஆம் யூரியாவே தான். அதற்கு நிரூபிக்கப்பட்ட பல உடற்கேடுகள் உண்டு. சென்ற ஆண்டு சீனாவின் பால் மற்றும் பால்பொருட்கள் ஐரோப்பாவில் தடை செய்யப்பட்டது, கொழுப்பு சக்தி அதிகமாக காட்ட மெலாமின் கலக்கப்பட்டதற்காக. (மெலாமின் யூரியாவை போன்றே ரசயான ஃபார்முலா கொண்டது என்பது நாம் மனதில் நிறுத்த வேண்டும்). மேலும் சீன அரசு பல குழந்தைகள் அவர்களது கலப்பட பால் உட்கொண்டதால் அடைந்த உடற்கேட்டிற்காக நட்ட ஈடு கொடுத்தது எல்லொருக்கும் தெரிந்த விஷயம்.
நான் சில ஆண்டுகள் முன் மஹாராஷ்டிரத்தில் உட்பகுதிகளில் பயணித்துக்கொண்டிருந்த பொழுது அந்த சிறு கிராமங்களிலும் பாலில் மெல்லிய தாள்களை (tissue paper)கரைப்பதைக்கண்டேன். அதுவும் கொழுப்பு தரத்தை அதிகம் காட்டி அதிக லாபத்திற்காக! இப்பொழுது அது எல்லா ஊர்களிலும் கடைபிடிக்கப்படும் ஒரு உத்தியாக இருக்கிறது.
சென்ற தீபாவளி அன்று நான் ரூர்க்கேலா அருகே ஆதிவாசிகள் வசிக்கும் காட்டினுள் ஒரு படிப்பினைக்காக சென்றிருந்தேன். அப்பொழுது 3 நாட்களுக்கு பின், நகரத்தின் பக்கம் வந்தவுடன் நான், எங்களது வழிகாட்டியிடம், 'தீவாளி நேரம் அல்லவா? நல்ல இனிப்பு அங்காடிக்கு அழைத்து செல்லுங்கள். நான் இனிப்புகள் சாப்பிட வேண்டும்' என்றேன். அவர் பததைத்து, “ஐய்யோ, இனிப்பு அங்காடிகளில் எப்பொழுதுமே சாப்பிடுவது கேடு. அதுவும் இதைப்போன்ற பண்டிகைகளின் போது அவ்வளவு பால் (சக்கரை கூட) எங்கு கிடைக்கும்? எல்லாம் யூரியா தான் என்றார். பின்னர் அதனை பல்வேறு இடங்களில் உறுதிப்படுத்திக்கொண்டேன்.
இப்படி பல வழிகளிலும் கெடுக்கப்பட்டு மனித பேராசைக்கு மட்டுமே வழிவகுக்கும் பால் நமக்கு தேவை தானா? அதன் மருத்துவ குணங்களையே இன்று கேள்விக்குறியானதாக உள்ளது என்கின்றனர் பல மருத்துவர்களும் அறிவியலாளர்களும். ஆக நமது நன்னெறி அடிப்படையில், நமது உடல் நலன் அடிப்படையில், சுற்றுசூழல் அடிப்படையில், பால் ஒதுக்கபடவேண்டிய பொருள் ஆகும்.
அமிலச்சத்து நிறைந்த மாட்டுப்பால் எலும்பிலிருந்து கால்சியத்தை உரிஞ்சும் என்கின்றன சில ஆய்வறிக்கைகள். (பால் தான் அமில சத்து கொண்டது; தயிர், மோர் இவை எல்லாம் கார சத்து கொண்டவையே) மூட்டு வலி மற்றும் மூச்சு பிரச்சினைகள் உள்ளவர்கள் பாலை நிறுத்தினால் உடனே நல்ல முன்னேற்றம் காண்பதை நான் பல முறை கண்டிருக்கிறேன்.
அப்படி என்றால் மனிதருக்கு மாட்டுப்பால் தேவையே இல்லையா? தேவை தான்: மாட்டுக்கு எவ்வளவு நாய் பால் தேவையோ, நாய்க்கு எவ்வளவு பன்றிப்பால் தேவையோ அவ்வளவு நமக்கும் தேவை! பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஏதேனும் ஒரு அத்தியாவசிய (அல்லது நெருக்கடி) தேவைக்காக ஆரம்பித்திருக்ககூடிய ஒரு வழக்கத்தினை இன்றளவும் தொடர்ந்து ஒரு அவசர தேவையை பண்பாடு, கலாசாரம் ஒட்டிய வழக்கமாக்கியதே நமது பெருங்குற்றமாக இருக்கக்கூடும். எலும்புக்கு, அதற்கு இதற்கு என்று பல நன்மைகளை கூறும் இவர்கள், நம்மிடமிருந்து மறைப்பது ஒன்று: எப்படி ரீஃபைன்டு என்னும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணை வந்த பிறகே இதய நோய்கள் அதிகரித்தனவோ, பால் அதிகம் உட்கொள்ளும் நாடுகளிலே தான் எலும்பு முறிவுகளும், ஆச்டியோபோரொஸீஸ் என்னும் எலும்பு வலுக்குறைவு நோய் அதிகம் காணப்படுகிறது. உண்மையில் நெருக்கமாகவும் அடர்த்தியாகவும் எலும்புகளை கொண்ட யானை மற்றும் மாடுகள், 2 வயதிற்க்கு மேல் செடிகளிலிருந்தே ஆரோக்கியத்தை அடைகின்றன, பாலிலிருந்து அல்ல.
இன்று நீரிழிவு நோய் முதல் இள வயதில் பூப்பெய்தல், கொழுப்பு அதிகரித்தல், புற்று நோய் வரை பலவற்றிற்கும் (பாக்கெட்) பால் தான் காரணம் என்று பல மேலை நாட்டு ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
நாம் என்ன செய்யலாம்: இன்னமும் இந்த பாலை பற்றி தெரிந்து கொண்டு, முடிந்தால் விட்டு விடுவது. அவசியம் என்றால் இதன் நுகர்வை மிகவும் குறைக்கலாம். முதற்கண் அந்த கேடு கெட்ட கலப்படம் மற்றும் வன் கொடுமை நிறைந்த பால் சுழற்சியின்று வரும் பாலை உட்க்கொள்வதை நிறுத்த வேண்டும். தேவை இல்லாமல் நிறைய காபி/தேனீர் உட்கொள்வது, அதனால் அதிகமான பால் நுகர்வு; அனாவசியமான பால் இனிப்பு வகைகள் உட்கொள்வது; தவறாக நெய் பயன்படுத்துவதை அதிகரித்தது போன்ற பழக்கங்களிலிருந்து விடுபடலாம். மெதுவாக ஆனால் உறுதியாக பாலிலிருந்து விடுபட்டால் நமக்கு வரும் உடல் உபாதைகளையும் சூழலியல் கேடுகளையும் குறைக்கலாம்.அப்படியே வேண்டும் என்றால் இயற்கையாக சுதந்திரமாக நல்ல மேய்ச்சலில் உண்டு நல்ல விதமாக வளரும் மாடுகளிடம் நம் எதிரே கறக்கப்பட்டு கொடுக்கப்படும் பாலை மட்டுமே உட்கொள்ள முடிவெடுக்கலாம்.
ஆசிரியர் குறிப்பு:
இக்கட்டுரை அனந்து அவர்களின் தனிப்பட்ட கருத்தே அன்றித் தாளாண்மையின் கருத்தல்ல. உணவு என்பதே ஒரு உயிரை இன்னொரு உயிர் தின்பதே. வன்முறையைக் குறைப்பதே தன் வாழ்வின் குறிக்கோளாய்க் கொண்ட காந்திஜி கூட ஆட்டுப் பாலைக் கடைசி வரை பருகினார். சைவ உணவை மட்டுமே சாப்பிடுவது (vegetarianism) ஒரு நல்ல கொள்கை என்பது போல் தாவர உணவை மட்டுமே உட்கொள்ளுவது (veganism) ஒரு நல்ல கொள்கை என்பதை மறுக்க முடியாது . எனினும், இக்கட்டுரை நகரத்து நுகர்வோர்களுக்கே அதிகம் பொருந்தும் - எல்லாத் தாளாண்மை வாசகர்களுக்கும் அல்ல.