தோப்பில் ராஜசேகர்
உழவு தோற்கும் தொழில் என்று பலரும் முடிவு கட்டிவிட்ட வேளையில், உழவைத் தொழிலாக விரும்பி ஏற்றுக்கொண்டு அதில் இயற்கையாய் வென்று காட்டிக் கொண்டிருக்கும் சாதனையாளர்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் தாளாண்மை ஈடுபட்டுள்ளது. அவ்வரிசையில் இவ்விதழில் 37 வருடங்களாக இயற்கை வேளாண்மையை வெற்றிகரமாகச் செய்து வரும் திரு. ராஜசேகரை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்.நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுக்கா, வேட்டைகாரனிருப்பு என்ற கிராமத்தில் திரு.ராஜசேகர் என்பவர் இந்திய விமானப் படையில் (Indian Air Force) வேலை பார்த்து வந்தார். 1980ல் தனது சொந்த கிராமத்திற்கு வந்து இயற்கை வேளாண்மையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் செம்மையாகச் செய்து கொண்டு இருக்கிறார். தனது சொந்த பண்ணையில் முந்திரி, மா, தென்னை, வாழை, புன்னை போன்ற மர வகைகளையும் கடலை, நெல் போன்ற பயிர்களையும் இயற்கை முறையில் செய்து கொண்டு இருக்கிறார். அதோடு இல்லாமல் அவர் சிறுநீரகக் கல், மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு மூலிகை வைத்தியம் செய்து கொண்டும் இருக்கின்றார்.
'கால்நடைகளில் மாடு, மற்றும் ஆடு வளர்ப்பில் முக்கியமாக 1992ம் ஆண்டு முதல் ஐமுனாபாரி போன்ற ரகத்தை வளர்த்ததாகவும் 2007 முதல் தளச்சேரி, சிரேகி, பீட்டல் போன்ற ரகங்களையும் வளர்த்து வருகின்றார்.மாடு வளர்ப்பது கோமியம் மற்றும் சாணிக்காக மட்டுமே பாலிற்காக அல்ல என்று தெளிவாய்க் கூறுகிறார். இவர் சுற்றுப்புறச்சூழலை பாதுகாப்பிற்காக மிகவும் பாடுபடுகின்றார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக புன்னை எண்ணையில் (200 RMP) ஆயில் இஞ்சின் (Oil Engine) இயக்கிப் பாசனம் செய்கிறார். அதை மற்ற விவசாயிகளுக்கும் எடுத்துச் சென்றுள்ளார். (புன்னை - Callophyllum inphylum). புன்னை விதையில் 70-80 % எண்ணை பிழியும் திறன் (oil recovery) உள்ளது என்றும் நிரூபித்து உள்ளார். பசுமை விகடன் (10.10.2008 மற்றும் 10.12.2012) இதழில் இவருடைய புன்னை எண்ணையின் விரிவாக்கம் உள்ளது.
தற்சார்பு அளிக்கும் புன்னைப் பழங்கள்!

இவர் அனல் மின் நிலையம் தனது மாவட்டத்திற்கு வரக்கூடாது என்பதற்காக பல போராட்டங்களை நடத்தி உள்ளார். அனல் மின் நிலையம் மற்றும் ஆழ்கடல் துறைமுகம் எதிர்ப்பு போன்ற மாபெரும் உண்ணாவிரதம் போராட்டங்களையும் செய்துள்ளார்.
இயற்கை வேளாண்மை
இவர் 1987ம் ஆண்டு இவருடைய மா மற்றும் தென்னை தோப்பில் செயற்கை பூச்சிக்கொல்லி தெளித்த போது தேன் பூச்சிகள் அதிகமாக இறந்து விழுந்ததைப் பார்த்து அன்று முதல் பூச்சிக்கொள்ளி தெளிப்பதை நிறுத்திவிட்டார். இவர் தனது பண்ணையில் முந்திரி, மா, தென்னை (500) தோப்பிலிருந்து தனக்குத் தேவையான வருமானம் வருவதாகவும் கூறினார். கால்நடைகளிலிருந்து நல்ல உரம் கிடைப்பதாகவும் மகிழ்ச்சியுடன் கூறி தனது ஆடுகளை ஒரு கிலோ 300 முதல் 400 வரை விற்றுவிடுவதாகக் கூறினார்.தென்னையில் எலிகளால் அதிக பாதிப்பு இருப்பதைக்கூறி (குரும்பையை கடித்து கீழே போடுதல்) அதற்கு இவர் பயன்படுத்தும் இயற்கைத் தொழில்நுட்பத்தையும் எடுத்துரைத்தார்! தென்னையில் எலி மற்றும் காண்டாமிருக வண்டுகளை அழிக்க அவர் ஆந்தைகளைப் பயன்படுத்தும் விதம் மிகவும் அருமையாக இருந்தது.முன்பெல்லாம் தென்னந்தோப்புக்குள் ஏகப்பட்ட ஆந்தைகள் இருக்கும். இரவு நேரத்தில் மட்டும் வெளியில் வரும் ஆந்தைகள் எலி எங்கு ஒளிந்தாலும் பிடித்துத் தின்று விடும். காண்டாமிருக வண்டுகளை அழித்துவிடும். இப்போதெல்லாம் ஆந்தைகளின் நடமாட்டமே குறைந்து போனதாகவும் அதற்காக செயற்கை மரப்பொந்துகளை உருவாக்கிய விதத்தையும் சொன்னார்.
பனைமரக்கூடு
மாமரக் கிளைகள் இடையில் ஆந்தை வசிக்கப் பனை மரப் பொந்து
“என்னோட தோப்புல 30 வயதுக்கு மேற்பட்ட மாமரங்கள் நிறைய இருக்கு. ஆனாலும் அதுல பொந்துகள் கிடையாது. அதனால பனை மரத்தை வெட்டி, மாமரக்கிளைக்கு இடையில் வெச்சு, அதுல இதுமாதிரி பல இடத்துல வெச்சுவிட்டேன். ஒரே வாரத்துல தானாகவே ஆந்தைகள் வந்து தங்க ஆரம்பிச்சுது. ஒரு மாசத்துக்குள்ள முட்டை போட்டு குஞ்சுகளே உருவாகிடுச்சு” என மகிழ்ச்சியுடன் கூறிய அவர் 10 அடி நீளப் பொந்து (பனை மரம்) போதுமானது. உட்பகுதி சற்று சொரசொரப்பாக இருப்பதால் ஆந்தையின் முட்டைகள் உருண்டு விடாமல் இருக்கும். 10 அடி நீளத்திற்கு குறைவாக இருந்தால் வெளிச்சம் உற்புகும் என்பதால் 10 அடி நீளம் அவசியம் என்றார். இந்த 10 அடி நீள பனை மரத்தை தெற்கு வடக்காக வைக்க வேண்டும். ஒர மரத்தில் அமைக்கப்படும் பொந்து மூலமாக ஆந்தைகளை வரவழைத்து ஏறத்தாழ 10 ஏக்கர் தென்னந்தோப்பை எலிகள் மற்றும் காண்டாமிருக வண்டுகளிடமிருந்து பாதுகாத்துவிட முடியும் என்றார். நிழல் தரும் மரங்களில் 10 அடி உயரத்துக்கு மேலே உள்ள கிளைகளில் தான் செயற்கை முறையில் பொந்தை அமைக்க வேண்டும். கீழே விழுந்துவிடாத அளவுக்கு கிளைகளோடு இணைத்து உறுதியாக இறுக்கிக் கட்ட வேண்டும். படுக்கை நிலையில் சமமான நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். அதே போல் சூரிய ஒளி உள்ளே வந்துவிடாத அளவுக்கு வடக்கு தெற்காகத்தான் அமைக்க வேண்டும் என்று தெளிவாக கூறினார்.
அசோலா
மீன் குளத்தில் அசோலா வளர்ந்து கால்நடைகளுக்கு தீவனமாகவும், அசோலா மூலம் மண்புழு உரம் தயாரிப்பதாகவும் கூறினார்முடிவுரை
ஒருங்கிணைந்த இயற்கை உயிர்ச்சூழல் பண்ணை ஒன்றுதான் உழவனைக் காக்கும் என்பதற்குத் திரு. ராஜசேகர் ஒரு நல்ல எடுத்துக் காட்டு. இந்தியாவின் தலைசிறந்த இயற்கை விவசாயி என்று கருதப்படும் திரு. பாஸ்கர் சாவே அவர்கள் ஒரு பண்ணையை வடிவமைக்கும்போது “நீண்ட காலப் பயிர்கள் (மா, தென்னை போன்று), இடைக்காலப் பயிர்கள் (வாழை, பப்பாளி போன்று), குறுகிய காலப் பயிர்கள்(நெல், கடலை,காய்கறிகள் போன்று) என்று மூன்றையும் ஒருங்கிணைத்து வேளாண்மை செய்ய வேண்டும்” என்று பரிந்துரைப்பார். வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மிருகக் கழிவுகள், தாவரக் கழிவுகள் இரண்டும் இணைந்ததுதான் உரம் என்பார். மேலும் 'ஒவ்வொரு இயற்கை விவசாயியும் ஒரு விஞ்ஞானியே என்றும்' கூறுவார். மண்ணை நாம் பாதுகாத்தால் , மண் பயிரைக் காத்து விடும் என்பது இயற்கை விவசாயிகள் மட்டுமே உணரும் நிதர்சனம்; ராஜசேகரின் பண்ணையில் இதை உணரலாம்!திரு.ராஜசேகரைத் தொடர்பு கொள்ள : 9751002370