தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மாடல்ல மற்றையவை

கைமருத்துவம் - ஜெய்சங்கர்

சென்ற மாதம் சில சாதாரணமான தொந்தரவுகளுக்கும், உடல் உபாதைகளுக்கும் கை வைத்தியம் என்ன செய்யலாம் என்று பார்த்தோமல்லவா… இந்த மாதம் மேலும் சில சாதாரண தொல்லைகளுக்கு வைத்தியங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

1. இருமல்:
மாடுகளுக்கும் நம்மைப் போல் இருமல் வரும். மாடுகள் இருமும் போது வேகமாக கட்டுப்படுத்த இயலாமல் வாய் வழியாக சத்தத்துடன் மூச்சுக் காற்றை வெளி விடும். இருமல் வர தொற்றும் கிருமிகள் அல்லது சளி, நெஞ்சுக் கூட்டிலோ அல்லது மூச்சுக்காற்று செல்லும் குழலிலோ இருப்பது சாதாரண காரணமாக இருக்கலாம். சில சமயங்களில் இருமல் நெஞ்சில் தங்கும் சில ஒட்டுண்ணிகளாலும் ஏற்படலாம். இருமல் உண்டாகும் மாடுகளில், மூக்கின் வழியாக அல்லது வாய் வழியாக சளி போன்ற திரவம் வெளிப்பட்டால், மூச்சு விடுவதற்கு மாடுகள் சிரமப்படும். மூச்சு விடும் போது அதிகமான சத்தம் வரும். இந்த அறிகுறிகள் இருந்தால், உள்ளங்கையில் சிறிது தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொண்டு அதில் சிறிது பூங்கற்பூரத்தை நுணுக்கி போட்டு மாட்டின் நெற்றியில் நன்றாக சூடு பறக்க தேய்த்து விடவும். ஒரு நாளைக்கு மூன்று நான்கு முறை இதை செய்யலாம். இருமலுடன் சளி எதுவும் இல்லையானால் நெஞ்சு அல்லது மூச்சுக்குழலில் தூசு அடைத்திருக்கலாம். தூசு அதிகம் உள்ள தீவனம் ஏதாவது மாடு உட்கொண்டதா என்று பார்க்கவும். இது தண்ணீர் அருந்தும் போதும், உணவு உட்கொள்ளும் போதும் சிறிது நேரத்தில் தானாக சரியாகி விடும். நாள்பட வறட்டு இருமல் இருந்தால் கால் கிலோ சிறு வெங்காயத்துடன் சாதாரண உப்பு இருபத்தைந்து கிராம் வைத்து நன்றாக அரைத்து ஒரு நாளைக்கு ஒரு வேளை இருபது தினங்கள் கொடுத்து வரவும். மாதுளைப் பழத்தோலை உலர்த்தி பொடி செய்து பசு வெண்ணெயுடன் சேர்த்தும் கொடுக்கலாம்.

2. அஜீரணம்:
மாடுகளுக்கு உணவு சரியாக செரிக்காமல் போக பல காரணங்கள் இருக்கலாம். பெரும்பாலும் தவறான உணவு, தீவனத்தில் திடீர் மாற்றம், அழுகிய அல்லது நொதித்த உணவு இவை காரணங்களாகும். செரிக்காமல் போனால் மாடு சாணி போடுவது முற்றிலுமாக நின்று விடும் அல்லது வெகு சிரமத்துடன் கெட்டியான சாணியாக இருக்கும். இதை சரி செய்ய முதலில் எந்த உணவினால் அஜீரணம் ஏற்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கிறீர்களோ அதை நிறுத்த வேண்டும். பிறகு, உப்பையும் வெல்லத்தையும் இடித்து உருண்டையாக உருட்டி நக்க வைக்கவும். சுக்கு, இந்துப்பு சம அளவு எடுத்து இடித்து பொடி செய்து தண்ணீரில் அறுபது கிராம் கலந்து இரண்டு வேளை கொடுக்கவும். இதற்கு பதிலாக பெருங்காயம், மிளகு இரண்டையும் சம அளவு கலந்து இடித்து இருபத்தைந்து கிராம் வீதம் தண்ணீரில் கலக்கியும் அளிக்கலாம். சாணி மீண்டும் சரியாக போடும் வரை எளிதில் செரிக்கக் கூடிய நொய் கஞ்சி பொன்ற உணவை அளிக்கவும்.

3. வயிற்றுப் போக்கு:
வயிற்றுப் போக்கு அல்லது கழிச்சல் ஏற்படவும் பெரும்பாலும் தவறான உணவே காரணம். வயிற்றுப் போக்கினால் அவதியுறும் மாடுகள் மிகவும் திரவமான நிலையில் உள்ள சாணியை அடிக்கடி கழிக்கும். சில சமயம், கிருமிகளாலும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். அப்போது, கழிச்சலுடன் மாடுகளுக்கு காய்ச்சலும் இருக்கும். இன்னும், வயிற்றில் உள்ள ஒட்டிண்ணிகளாலும் சில முறை கழிச்சல் ஏற்படலாம். அப்போது, சாணியில் ஒரு வித துர் வாடை இருக்கும். விளாம் பழத்தின் சதைக்கு கழிச்சலை நிறுத்தும் ஆற்றல் உண்டு. பழத்தின் சதையை மட்டும் ஐந்து பங்கு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அளிக்கவும். விளாம்பழம் சில மாதங்கள் மட்டுமே கிடைக்கும். அது இல்லாத நேரத்தில் பார்லி மாவில் தணியாவையும் இந்துப்பையும் சம அளவு கலந்து அளிக்கலாம் அல்லது பார்லி மாவில் தணியாவுடன், சோம்பு, ஓமம் அகியவற்றை சம அளவு கலந்தும் அளிக்கலாம்.

4. வயிற்று உப்புசம்:
அதிக அளவில் உள்ள செரியாமையே இதன் முக்கிய காரணம். செரியாமையின் தொடர்ச்சியாக அதிக அளவில் வாயு வயிற்றில் தங்கி விடும். சாதாரணமாக மாடுகள் கார்பன்-டை-ஆக்ஸைடையும், மீத்தேனையும் வாயுவாக வெளியிடும். உப்புசம் ஏற்பட்ட மாடுகளின் வயிற்றில் இந்த வாயுக்கள் ஒரு இடத்தில் நுரையாக தங்கி வலியை ஏற்படுத்தும். அதிகமாக காராமணி போன்ற பயறு வகை பயிர்களை மேய்வதால் இந்த நிலை ஏற்படலாம். உப்புசத்தால் பாதிக்கப்பட்ட மாடுகளின் இடது பக்க வயிறு கல் போல் ஆகி விடும். மாடு அடிக்கடி சிறுநீர் கழிக்கும். சாணி போடும். கால்களால் வயிற்றில் இடித்துக் கொள்ளும். இதற்கு ஐம்பது கிராம் கடுகை நன்கு அரைத்து வெந்நீரில் கலக்கி கொடுக்கவும். கடுகு எண்ணெயில் உப்பை கரைத்து வயிற்றின் இரு புறமும் பூசலாம். மிளகாய் ஆறு கிராம், இஞ்சி ஐம்பது கிராம், பொரித்த பெருங்காயம் பனிரெண்டு கிராம் தூள் செய்து வெந்நீரில் கலந்து மூன்று மணிக்கு ஒரு முறை சரியாகும் வரை கொடுக்கலாம். கல்லுப்பு ஒரு பங்கு பனை வெல்லம் நான்கு பங்கு தண்ணீரில் கரைத்து கொதிக்க வைத்து ஆறிய பின்னர் குடிக்க கொடுக்கலாம். இவற்றில் ஏதேனும் ஒரு முறையே போதுமானது.

5. தொண்டை வீக்கம்:
இந்த நோய் மாடுகளின் தொண்டைப் பகுதி ஒரு வித பாக்டீரியாவினால் பீடிக்கப்படுவதால் ஏற்படுகிறது. முதிர்ந்த நிலையில் தொண்டையில் கட்டி ஏற்பட்டு வீக்கம் உண்டாகும். ஆரம்ப நிலையில் மாடுகள் மூச்சு விடும்போது சீட்டி அடிப்பது போன்ற சத்தம் கேட்கும். இதை சரி செய்ய, ஒரு வாளியில் கொதிக்கும் நீரை ஊற்றி அதில் சிறிது சொட்டுக்கள் யூகலிப்டஸ் தைலத்தை ஊற்றி மாட்டின் தலையை அதன் அருகில் சாய்த்து வரும் ஆவியை வாய் வழியாக உள்ளே செல்லும்படி செய்யவும். மேலும், பூங்கற்பூரம் ஒரு பங்கு வெல்லம் இரண்டு பங்கு ஒன்றாக இடித்து உருண்டையாக உருட்டி வைத்துக் கொண்டு தினமும் சில முறை நக்கி சாப்பிடும்படி செய்யவும்.

6. விஷம்:
<மாடுகள் சில சமயம் ஒவ்வாத பொருட்களை உட்கொண்டு விடும் அல்லது தன் உடலுக்கு விஷமுள்ள பொருட்களை சாப்பிட்டு விடும். உதாரணமாக, வயலில் எலிக்கென வைத்த விஷத்தை உண்ணக் கூடும். அப்போது, தண்ணீரில் புளியும் வெல்லமும் கரைத்து ஒரு மணிக்கு ஒரு முறை விஷத்தின் வீரியம் குறையும் வரை கொடுத்து வரலாம். வாழைத்தண்டு சாற்றில் வெல்லம் கலந்தும் உள்ளுக்குக் கொடுக்கலாம். கொய்யா இலையை இடித்து சாறு பிழிந்து கொடுத்து வரலாம் அல்லது வெங்காயச் சாறுடன் உப்பு சம அளவு கலந்து கொடுக்கலாம்.

7. பாம்புக்கடி:
எதிர்பாராத விதமாக பாம்பு கடித்து விட்டால், விஷம் வீரியமாக இருந்தால் கடித்த பாம்பிற்கு தகுந்த விஷ முறிவு மருந்து கொடுத்து காப்பாற்றுவது கடினம். சாதாரணமாக, பாம்பு கடிப்பதை நாம் பார்ப்பது என்பது நடக்காது. மாடுகள் சோர்ந்து விழுவதை பார்த்த பிறகே நாம் காரணத்தை ஆராய முற்பட்டு, கடி வாயை வைத்து பாம்புக் கடி என்று அறிவோம். எனவே, என்ன பாம்பு கடித்தது என்பதை அறிவதும் சிரமம். அருகில், மனிதர்களுக்கு பாம்பு கடி வைத்தியம் பார்ப்பவர் யாரேனும் இருந்தால் முயற்சி செய்து பார்க்கலாம். இல்லாவிடில், பொது வைத்தியமாக கடித்த இடத்தில் கத்தியால் கீறி விஷமுள்ள இரத்தத்தை எடுத்து, பின் டெட்டால் அல்லது பொட்டாசியம் பெர்மாங்கனேட் போட்டு கழுவவும். பாம்பு கடித்த இடத்திலிருந்து அதிக இரத்தம் கசிவதை நனைத்த துணியால் கட்டி நிறுத்தவும். கடி வாய்க்கு மேல் உள்ள பகுதிக்கு இரத்த ஓட்டம் வேகமாக செல்வதை தடை செய்ய இறுக்கமாக ஒரு துணியால் கட்டி வைக்கவும். ஆனால், அதை வெகு நேரம் அப்படியே வைப்பது இரத்த ஓட்டத்தை முழுமையாக நிறுத்தி விடும். எனவே, இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை கட்டை இலேசாக தளர்த்தி மீண்டும் கட்டவும். அடுப்புக் கரியை தண்ணீரில் கலக்கி உள்ளுக்கு கொடுக்கவும். பூந்திக்கொட்டை மற்றும் சீயக்காயை அரைத்து தண்ணீரில் கலக்கியும் உள்ளுக்கு கொடுக்கலாம். இதே, விழுதை உடல் முழுவதும் பூசியும் விடலாம்.

8. வெறி நாய்க்கடி:
வெறி நாய் மாட்டை கடித்து விட்டால் தினமும் ஐம்பது கிராம் பூண்டை வேக வைத்து இருபத்தியோரு நாட்கள் தொடர்ந்து கொடுக்கவும். கடித்தவுடன், இருபத்தியோரு எருக்கம் பூவை வெல்லத்துடன் சேர்த்து இடித்து பின்னர் கால் லிட்டர் நல்லெண்ணெயில் கலக்கி உள்ளுக்கு கொடுக்கவும். எருக்கம் பாலை கடி வாயில் தடவி விடவும்.

9. எலும்பு முறிவு:
மாடுகள் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டால் நமக்கு புத்தூர் கட்டு போடுவது போலவே போடலாம். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பட்டிகளை தண்ணீரில் நனைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர், முறிவு ஏற்பட்ட இடத்தை சரியாக மூங்கில் பத்தைகள் வைத்து ஆடாத அளவிற்கு பிடித்துக் கொண்டு நனைத்த பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பட்டிகளை அதன் மேல் சுற்றி, நனைத்த தண்ணீரை அதன் மேலேயே ஊற்றி விடவும். கட்டிய பிறகு அரை மணி நேரம் அசையாமல் பிடித்திருக்கவும். கால்களில் தான் பொதுவாக எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மேய்ச்சலுக்கு மாடுகளை அனுப்புவது இயலாது. கொட்டகையில் வைத்து தீவனம் அளித்து பாதுகாப்பது சிரமம். அனால், முக்கியம். கட்டு கட்டிய பிறகு மூன்று வாரம் அப்படியே விட்டு விடவும். பிறகு, கட்டை அவிழ்த்து, மீண்டும் ஒரு முறை அதேபோல் மூங்கில் பத்தைகள் வைத்து கட்டி விடவும். இம்முறையும் மூன்று வாரம் பொறுத்து கட்டை அவிழ்த்து, காயத்தின் மேல் மீன் எண்ணெய் தடவி விட்டு, பேண்டேஜ் துணியையும் அதே எண்ணெயில் முக்கி கட்டி விடவும். பிறகு அதன் மேல் பஞ்சு வைத்து பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பட்டிகளால் கட்டு போடவும். இம்முறை இரண்டு வாரம் பொறுத்து கட்டை அவிழ்த்து மாட்டை மெதுவாக முறிந்த இடத்தை உபயோகிக்க அனுமதிக்கலாம்.

10. கொம்பு ஆட்டம்:
சில மாடுகளுக்கு கொம்பு ஆடத் தொடங்கும். அப்போது, தாரில் ஒரு துணியை நனைத்து ஆடும் இடத்தில் வைத்து இறுக்கமாக கட்டி விடவும். நான்கு வாரம் அப்படியே விட்டு விட்டால் தார் இறுகி கொம்பு ஆடுவது நின்று விடும்.

11. கொம்பு முறிவு:
கொம்பு முறிந்தால், இரத்தப் பெருக்கை முதலில் நிறுத்த வேண்டும். இதற்கு, உப்பு கரைத்த நீரில் பஞ்சை நனைத்து கொம்பு முறிந்த இடத்தில் வைத்து அழுத்தி அதன் மேல் நனையாத பஞ்சை வைத்து கட்டி விடவும். வெங்காயத்தை வெட்டி மாட்டை முகரச் செய்யவும். பின்னர், சுண்ணாம்பை பூசி கட்டு கட்டி அதன் மேல் கற்பூரம் கரைத்த வேப்பெண்ணெயை ஊற்றவும். உளுந்தை அரைத்து பூசி அதன் மீதும் கற்பூரம் கரைத்த வேப்பெண்ணெயை ஊற்றலாம்.

12. கொம்பு கூடு கழன்றால்:
கொம்பின் மேல் கூடு கழன்றால் இரத்தம் வரும். நீரில் துணியை நனைத்து கட்டி இரத்தம் வருவதை முதலில் நிறுத்தவும். பின்னர், ஐம்பது கிராம் சர்க்கரையை கால் லிட்டர் தண்ணீரில் கரைத்து அதில் சுத்தமான துணியை நனைத்து கொம்பின் குருத்தைச் சுற்றி கட்டி விடவும். ஒரு வாரம் பொறுத்து வாரம் இரண்டு முறை அதே சர்க்கரை கரைசலால் துணியை ஆறு வாரங்களுக்கு நனைத்து வரவும். பிறகு, புதிய கூடு கொம்பை மூடி விடும்.

13. கண் நோய்:
கண்களில் காயம் ஏற்பட்டாலோ அல்லது அதிகம் பீளை தள்ளினாலோ, நீர் வடிந்தாலோ படிகாரத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி பிறகு அந்த தண்ணீரால் கண்ணை கழுவி வரவும்.

இன்னும் நாவரி, பால் காய்ச்சல், உண்ணி போன்ற வெளி ஓட்டுண்ணிகளால் வரும் தொந்தரவுகள், உண்ணிக் காய்ச்சல் போன்ற சாதாரண நோய்களுக்கும் பல விதமான தொற்று வியாதிகளுக்குமான வைத்தியங்களைப் பற்றி அடுத்த மாத இதழில் அறிந்து கொள்வோம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org