வேளாண்மை செய்துபல விளைய வேண்டும்
வேதியுரம் நஞ்சுகளும் விலக்க வேண்டும்
தாளாண்மைப் பண்ணையெங்கும் தழைக்க வேண்டும்
தகுதியிலா விதைக்கடைகள் தடுக்க வேண்டும்
மாளாத நீர்உண்ணாப் பயிர்கள் வேண்டும்
மண்ணையினி வளமாக்கும் வழியே வேண்டும்
நாளெல்லாம் உழைப்போர்கள் நலமே வேண்டும்
நஞ்சில்லா உணவையவர் நாட வேண்டும்
வேளாண்மைப் புரட்சிகளால் விளைந்த தென்ன
வெற்றுரைகள் பேசியவர் விளைத்த தென்ன
தாளாண்மை தொலைத்தவர்கள் தந்த தென்ன
தள்ளிவிட்ட தொழில்நுட்பத் தரந்தான் என்ன
மாளாத கடன்உயிரை மாய்ப்ப தென்ன
மான்சான்ட்டோ போன்றவையே மலர்வ தென்ன
நாளெல்லாம் உழைத்தபின்னும் நலந்தான் என்ன
நல்லுடம்பும் நஞ்சுகளால் நலிந்த தென்ன
மான்சான்ட்டோ போன்றவைதான் வாழ லாமோ
மரபீனித் தொழில்நுட்பம் மண்ட லாமோ
அன்றாடம் நஞ்சுகளை அடிக்க லாமோ
அதனாலே உயிர்க்கொலைகள் அடுக்க லாமோ
இனிதான தொழுஉரத்தை இழக்க லாமோ
இனிமேலும் மானியங்கள் இழக்க லாமோ
என்றுமினி மன்னுயிரைக் கெடுக்க லாமோ
ஏற்றமிகு பல்லுயிரை வெறுக்க லாமோ
எண்ணியினிச் செயல்பட்டால் ஏற்றந் தானே
இருப்பதினித் தற்சார்பு இயக்கந் தானே
கண்ணான பொருள்நமக்குத் தண்ணீர் தானே
கரைபெருக்கி அதைக்காத்தல் கடமை தானே
உண்பொருளே விளைவித்தால் உறுதி தானே
ஊடுபயிர் அதிலிருந்தால் ஊக்கந் தானே
உண்டாகும் உழைப்போர்க்கு உயர்வு தானே
உயிர்வாழும் பல்லுயிர்கள் உண்மை தானே!