தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

குமரப்பாவிடம் கேட்போம் - தமிழில் அமரந்தா


சுருக்குக் கயிறு

இந்தியாவும் வட அமெரிக்காவும் ஒரு மாதத்திற்கு முன்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. வளர்ச்சித் திட்டங்களுக்காக இந்தியாவிற்கு 50 மில்லியன் டாலர் (5 கோடி டாலர்) உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. வட அமெரிக்க ஆக்டோபஸ் உலகின் பல பகுதிகளிலும் தன் நிதிக் கொடுக்குகளைப் பதித்துள்ளது. பிரிட்டன் அரசியல் வல்லாதிக்கதிற்கு பேர் பெற்றதென்றால், வட அமெரிக்கா நிதிமய வல்லாதிக்கத்திற்குப் பேர் போனது. இந்த நிதி உதவி உலக நடப்புகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாமல் நம் வாயை அடைப்பதற்கா? ‘கிராமப்புற – நகர்ப்புற வளர்ச்சி’ உள்ளிட்ட எத்தகைய எலும்புத் துண்டிற்கும் மயங்காமல் நாம் எச்சரிக்கையாக இருப்போம்.

50 மில்லியன் டாலர் வழங்கியதில் திருப்தியடையாத அமெரிக்கத் தூதர் திரு. செஸ்டர் பவல்ஸ் இந்தியாவின் ’முன்னேற்றத்தை’ விரைவுபடுத்த 1000 மில்லியன் டாலர் (100 கோடி டாலர்) உதவித் தொகையை வழங்க ஆலோசித்து வருகிறார். வட அமெரிக்க ‘நிபுணர்கள்’ இதற்கென ஏற்கனவே இங்கு வரத் தொடங்கி விட்டார்கள். இவையெல்லாம் அபாயகரமானவை. வட அமெரிக்க ஊடுருவல் டிராக்டர்களையும் வணிகமயத்தையும் இங்கு கொண்டு வரும். நமது விவசாயம் கச்சா எண்ணையையும் இயந்திரங்களையும் சார்ந்திருக்குமானால் நம் உடல், பொருள், ஆவி அனைத்தும் வட அமெரிக்கா வசமாகிவிடும். அதன் பிறகு அமெரிக்க ஆணைகளைக் கண்டு நாம் சினம் கொண்டால் ‘நமக்கு புத்தி புகட்ட’ அவர்கள் கச்சா எண்ணை விநியோகத்தை நிறுத்திவிட்டால் போதும். நாம் பட்டினியால் அவர்களிடம் சரணடைய வேண்டியதுதான். சென்ற முறை நிகழ்ந்த போருக்கு முன்னால், சில வசதிபடைத்த விவசாயிகள் சென்னை அருகேயுள்ள சில பகுதிகளில் கச்சா எண்ணை பம்பு செட்டுகளை நிறுவினார்கள். தேவையான எரிபொருள் கிடைக்காததால் போரின் போது அவர்களின் பொருளாதாரம் தடம் புரண்டது. ஒரு சிலர் இந்தப் பற்றாக்குறையால் நொடித்துப் போய்விட்டார்கள்.

நமது நாட்டில் இல்லாத அல்லது உற்பத்தி செய்யபடாத பொருட்களை நம்பி நம் பொருளாதார அமைப்பை நிறுவுவது தற்கொலைக்குச் சமம். ஜப்பானின் அனுபவத்தைக் கண்டு நாமும் பயனடைவோம். அணுகுண்டுக்குப் பயந்து ஜப்பான் சரணடையவில்லை. தொடர்ந்து போர் நடத்த போதிய பெட்ரோல் கையிருப்பில்லை என்பதாலேயே ஜப்பான் வட அமெரிக்காவிடம் சரணடைந்தது. ஹிரோசிமா ஒரு கெளரவமான சாக்கு; அவ்வளவுதான். முன்னேற்றம் சிறிதளவே சாத்தியம் என்றாலும் நாம் நம் காலில் நிற்போம். வளர்ச்சி வேகத்தை அதிகரிக்க முயல்வது பேரழிவிற்கு இட்டுச் சென்றுவிடும். எளிதில் திருப்பித் தர இயலாத பெரு அந்நிய நாட்டு உதவி புதிதாக நாம் அடைந்த சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் சுருக்குக் கயிறாக மாறிவிடும்.

(கிராம உத்யோக் பத்ரிகா, பிப்ரவரி 1952)

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org