தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மண் பயனுற வேண்டும்


வீடென்று எதனைச் சொல்வீர் - செம்மல்

நாம் 'மண் பயனுற வேண்டும்' தொடரில் மண்ணால் வீடு கட்டும் தொழில்நுட்பங்களைப் பற்றி எழுதி வருகிறோம். ஆனால் தற்காலத்தில் மண்ணால் வீடு கட்ட யார் துணிவார்கள்? இதெல்லாம் கவைக்கு ஒவ்வாது என்று பெரும்பாலோர் புறக்கணித்து விடுகிறார்கள். விரைவில் மண்ணைத் தவிர வேறு தொழில்நுட்பங்களைப் பயன் படுத்த இயலாத அளவு ஆற்றல் பற்றாக்குறை ஏற்பட்டு விடும்! அப்போது மண்ணால் வீடு கட்டும் தொழில்நுட்பங்கள் அழிந்து போய் விடலாம் - எனவே வரு முன்னர்க் காப்போராய், அறிவுள்ள மக்கள் இத்தொழில் நுட்பங்களைக் குறிப்பெடுத்து வைத்துக் கொள்வது மிக நன்று. 21ம் நூற்றாண்டில் மண்ணால் வீடு கட்டிக் குடி பெயரப் போகும் ஒரு தம்பதியினரை இவ்விதழில் காண்போம்.

பகட்டான பங்களாக்கள், தீப்பெட்டியால் செய்தாற் போன்ற அடுக்கு மாடிக் கட்டிடங்கள், நீச்சல் குளம் இடது புறம், உடற்பயிற்சிக் கூடம் வலது புறம் என ஆர்ப்பரிக்கும் நகரம் நோக்கி நகரும் இச்சமுதாயத்தின் உழலில் இருந்து மாறுபட்ட ஒரு குடும்பத்தைப் பார்ப்போம் .

ரமேஷ் அமெரிக்காவில் வர்த்தக மேற்படிப்பு (MBA) படித்து, அங்கேயே சில வருடங்கள் பணியாற்றினார். கடந்த நான்கைந்து வருடங்கள் நெதர்லாந்து நாட்டில் மிக உயர்ந்த பதவி வகித்தவர் (Head of Corporate Office, Aegon Asset Management). இப்பொழுது தன் மனைவி ஸ்ரீதேவியுடன் பொள்ளாச்சி அருகே பெரியபோது பஞ்சாயத்தில் அமைந்துள்ள காந்தி ஆசிரமம் கிராமத்தில் வசித்து வருகிறார்.இன்னும் பல ஆண்டுகள் வெளி நாட்டில் பணி புரிந்து பொருளீட்டும் வாய்ப்புகளை உதறி விட்டு இச்சிறிய கிராமத்தில் என்ன செய்கிறார் என்பது அவர் உறவினர், நண்பர்கள், மற்றும் அயலார்க்கும் புரியாத வினா.

அவர் மனைவி தேவி தீவிர இயற்கை விவசாய ஆர்வலர். இன்ஃபோஸிஸ் மென்பொருள் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தவர். தணல் என்னும் சூழல் பாதுகாப்பு அமைப்பின் முக்கிய உறுப்பினர். மும்பை நகரத்தில் வாழ்ந்த பொழுது, Urban Leaves என்ற நகர்ப்புற வாழ்மக்கள் வீட்டளவில் சிறு தோட்டம் அமைத்து, தமது வீட்டு காய்கறித் தேவையில் தன்னிறைவு அடையும் அமைப்பை துவங்குவதில் சிறப்பான பணியாற்றியவர். இது தவிர, மரபீனி மாற்றம‌ற்ற இந்தியாவிற்கான‌ கூட்டமைப்பில் அங்கத்தினராகவும் உள்ளார். முன்னர் மரபீனி மாற்றுக் கத்தரி வருவதை எதிர்ப்பதில் சிறப்பான பணி ஆற்றியவர்.

தம்பதிகள் இருவரும் உலகம் விரும்பும் சராசரி வாழ்க்கை முறையைக் காட்டிலும் இயற்கையுடன் இயைந்து வாழும் வாழ்வே சிறந்தது என்று ஒத்த கருத்துடன் கூறுகிறார்கள். கிராமத் தொழில்களின் முன்னேற்றமும், தன்னிறைவும் தற்சார்பும் உடைய கிராமங்களும் மட்டுமே இந்தியாவைத் தலை நிமிர வைக்கும் என்று உறுதியாக நம்புகின்றனர். வெறும் பிரசாரமாக இல்லாமல் தங்களின் ஒவ்வொரு செயலும் கிராம முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். எவ்வளவோ வசதி இருந்தும் இளம் வயதிலேயே பேருந்துகளில் ப‌யணம் கொண்டும், தங்கள் தோட்டத்தில் தாங்களே உடல் உழைப்பில் ஈடுபட்டுக் கொண்டும் இருக்கும் இவர்கள் போன்ற தெளிந்தவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் பணி தாளாண்மைக்கு இருக்கிறது.

அவர்களுடன் ஒரு சிறு நேர்காணல்

தாளாண்மை: நீங்கள் பன்னாட்டு பணி மற்றும் வாழ்க்கையை விடுத்து ஒரு கிராமத்துக்கு குடி பெயர்ந்த காரணம் என்ன?

ரமேஷ் - தேவி:வாழ்க்கை என்பதே முயற்சி. நாம் முடிந்த அளவு இயற்கையோடிணைந்து வாழ முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் இந்த குடி மாற்றத்திற்கு அடிப்படை.

தா:இந்த துருவ மாற்றம் அவ்வளவு எளிதல்லவே. மாறிய முதல் மாதம் எவ்வாறு உணர்ந்தீர்கள்?

ர:நல்ல கேள்வி. முதல் மாதம், சில சிரமங்கள் கண்டிப்பாக வரும். சற்றே பொறுமையும், நம் செல்லும் பாதை மட்டுமே சரியானது என்ற நம்பிக்கையுமே நமக்குக் கை கொடுக்கும். நிறைய நேரங்களில் நம் வாழ்வு முறை, அது எப்படிப் பட்டதாயினும், சிறு சலனங்களுக்கு உட்பட்டே செல்கிறது. நம் குறிக்கோள் தெளிவாக இருப்பின், இச்சலனங்கள் வ்ந்து போகுமெ தவிர, நம்மை பாதிக்காது என்பது என் நம்பிக்கை.

தா: கொஞ்சம் விளக்க முடியுமா?

ர: நம்மைச் சுற்றி யாவும் பொருளியல் அடிப்படையில் வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன. அர்த்தமற்ற, சூழலைப் பற்றி சிறிதும் அக்கறை இல்லாத இந்தப் போக்கு, நம் பிற்கால சந்ததிகளுக்கு, வாழ்விடத்தையே ஒரு பாலைவனம் ஆக்கி விடும் என்று நாங்கள் நம்புகிறோம். இதற்கு ஒரே மாற்று, எளிமையான, இயற்கையுடன் ஒத்த, நம் தொன்று தொட்ட வாழ்க்கைமுறை தான். இதை நாங்களே கடைப் பிடிப்பது என்ற முயற்சி தான் இது. குறிப்பாக ஒரு சில ப‌டிகள்

  1. பொது போக்குவரத்தையே பயன் படுத்துதல்
  2. தொலைக்காட்சியை அறவே தவிர்த்தல்
  3. முடிந்தவவரை, நம் உணவுத் தேவைகளை நாமே உற்பத்தி செய்தல்

சாக்ரடீசீன் சொற்படி “பரிசோதனைகளற்ற வாழ்க்கை பயனற்றது”

தா: உணவைத் தேவைகள் என்று நீங்கள் கூறுவது?

ர: இக்காலத்தில், நம் தொன்மையான உணவு முறைகள் மறைந்து போய்க்கொண்டிருக்கின்றன. நம் முன்னோர்கள், தட்ப வெப்ப நிலைகளுக்கேற்றவாறு உணவு உட்கொண்டனர். அதிலும் அருகாமையில் விளையும் பொருட்களே பயன் படுத்தப் பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் புழக்கடையில் கட்டாயம், வீட்டிற்கு அவசியமான கீரை, காய் விளையும். இப்போதோ நாம், எல்லா இடங்களிலும், பணப்பயிர் மட்டுமே உற்ப்த்தி செய்கிறோம். இது போல இல்லாமல், எங்கள் நிலத்தில், கலவை முறையில் செய்ய முயற்சிக்கிறோம். இங்கு நாங்கள் நான்கு ஏக்கர் பூமியில், இரண்டு ஏக்கரில், மரங்கள் நட்டிருக்கிறோம். கடந்த போகத்தில், மீதம் இரண்டு ஏக்கரில், எள், தட்டைப் பயிறு, கொள்ளு, பச்சைப் பயிறு, வேர்க்கடலை, கம்பு, தினை என்று பல வித (எங்களுக்குத் தேவையான) உணவுப் பயிர்களை விளைவித்தோம். - அழகாய் உருவாகி வரும் மண் வீடு!

தா: வேறு ஏதும் திட்டங்கள் உள்ளனவா?

ர: நிச்சயமாக. கிராம புற தொழில் வளர்ச்சிக்கு எங்களால் இயன்ற பங்களிக்க விரும்புகிறோம். நம் இளைஞர்களில் ஒரு ஐந்து பேரிடமாவது, சூழல் பேணும் உறுதியை உருவாக்க வேண்டும்.

தா: வாழ்த்துக்கள். நன்றி

காந்திய கருத்துகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர்கள், காந்தியின் குடிலைப் போலவே, தாம் குடியிருக்க, ஒரு மண்வீட்டை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். இதன் சிறப்பம்சம் என்னவென்றால், மிக அருகில் கிடைக்கும் கட்டுமானப் பொருட்களைக் கொண்டே, இப்பணி நடைபெறுகிறது. இவ்வீட்டைக் கட்டும்போது அவர்கள் கடந்த போரட்டங்கள், சந்தித்த ஆச்சரியங்கள், பெற்ற உதவிகள் அனைத்தையும் வரும் இதழ்களில் பகிர்வோம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org