தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

நிலப் பறிப்பு - மனிதர் உணவை மனிதர் பறித்தல்

பரிதி

[கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள அதிகம் புழக்கத்தில் இல்லாத தமிழ்ச் சொற்கள் குறித்த விளக்கமும் பிறமொழிப் பெயர்ச் சொற்களின் ஆங்கில வடிவமும் இறுதியில் தரப்பட்டுள்ளன.]

உணவுப் பற்றாக்குறை, பரவலான நிதிச் சிக்கல் ஆகிய இரண்டு பெருஞ் சிக்கல்களை உலகம் 2008-ஆம் ஆண்டு எதிர்கொண்டது: இவையிரண்டும் இணைந்து கவலையளிக்கும் புதிய போக்கு ஒன்றைத் தோற்றுவித்துள்ளன:

உலகில் ஒரு பகுதியில் நுகர்வதற்குத் தேவையான பண்டங்களை விளைவிப்பதற்காக வேறொரு பகுதியில் அடிமாட்டு விலைக்கு நிலத்தைப் பறித்தல். தனியார் நிறுவனங்களே இந்த நிலப் பறிப்பில் பெரும்பாலும் முன்னணியில் உள்ளன. எனினும் பல நாட்டு அரசுகளும் அவற்றுக்குத் துணை போகின்றன. அவர்களைப் பொருத்தவரை நிதி, உணவு, எரிபொருள் ஆகிய துறைகளில் நிலவும் உலகளாவிய சிக்கல்கள் கொழுத்த உபரி ஈட்டுவதற்கான நல்வாய்ப்புகள்.

இழப்பீடு இல்லாமல் அல்லது மிகக் குறைந்த இழப்பீடு தந்து பரந்த அளவில் ஊர்ப்புற ஏழைகளை அப்புறப்படுத்துவதன் மூலம் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களைப் பறித்தல், அப்படிப் பறிக்கும் நிலங்களை ஆலைமயமான வேளாண்மைக்கும் உயிரி எரிபொருள் உற்பத்திக்கும் பயன்படுத்துதல், அதன் விளைவாக அப்பகுதிகளின் சூழல் கெடுவதற்குக் காரணமாக இருத்தல் ஆகியன இத்தகைய நிலப் பறிப்பின் தனிச்சிறப்பான அடையாளங்கள்.

நிலப் பறிப்பு, தழைப்பொருள்கள் சூழலில் இருந்து நீக்கப்படுதல் (அறுவடை செய்து வேற்றிடங்களுக்கு எடுத்துச்செல்லுதல்; இதனால் மண்வளம் குன்றும்), உலகளவில் மிகச் சிறுபான்மையினரான சொத்துடைமையாளர்களுடைய தேவைகள், விருப்பங்கள் ஆகியவற்றை நிறைவு செய்வதற்காகப் பெரும்பான்மையினரான வறியோர் தம் வாழ்வாதாரங்களை இழத்தல் ஆகிய அனைத்துமே ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புடையன என்பதை அண்மைக்கால ஆய்வுகள் பல எடுத்துக்காட்டியுள்ளன.ஆதலால், நிலப் பறிப்புக்கு எதிரான போராட்டங்களுக்கும் சூழல் கேடு குறித்த வாதங்கள், உணவுத் துறையில் இறையாண்மை, பழங்குடி மக்களுடைய உரிமைகள், குமுகவிய மற்றும் சூழலியல் நீதி ஆகியவற்றுக்கான போராட்டங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

உலகளவில் சுமார் 300 கோடி ஏக்கர் நிலங்கள் இவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய நிலப் பறிப்புகளில் முக்கால் பங்கு ஆப்ரிக்கக் கண்டத்தில் சகாராப் பாலைவனத்திற்குத் தெற்கில் உள்ள நாடுகளில் நிகழ்ந்துள்ளது. ஆப்ரிக்கக் கண்டத்தின் வடகிழக்கில் உள்ள எத்தியோப்பியா நாடு இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. எத்தியோப்பியாவில் எண்பது விழுக்காட்டு மக்கள் வேளாண்மையை நம்பி வாழ்கின்றனர். சுமார் மூன்றரைக் கோடிப் பேர் பசிப்பிணியால் வாடுகிறார்கள். இப்போது சுமார் பதினைந்து லட்சம் பேர் நிலப் பறிப்பினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் பறிக்கப்பட்ட நிலம் அப்பகுதி மக்களின் உணவுத் தேவைகளை நிறைவு செய்வதற்காகப் பயன்படுத்தப்படுவதில்லை. ஏற்றுமதிச் சந்தைக்காக ரோசா மலர்கள் உள்ளிட்டவற்றை விளைவிப்பதற்கே பயன்படுத்தப்படுகிறது. உலக வைப்பகம், பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள், நடு ஆசியப் பகுதி நாடுகள், சைனா, இந்தியா ஆகிய நாடுகளின் அரசுத் துறைகளும் மேற்கு நாடுகளைச் சேர்ந்த சில தொண்டு நிறுவனங்களும் இதற்குத் துணை போகின்றன.

எத்தியோப்பியாவின் மேற்குப் பகுதியில் உள்ள கேம்பெல்லா எனும் செழிப்பான பகுதியில் தொன்றுதொட்டு வாழ்ந்துவந்த இரண்டு லட்சத்துக்கும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு அவர்களுடைய நிலங்கள் வெளிநாட்டுப் பெருநிறுவனங்களுக்கு மிகக் குறைந்த குத்தகைக்குத் தாரைவார்க்கப்பட்டுள்ளன.

சௌதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு பெரும் நிறுவனம் கேம்பெல்லாவில் இருபத்தையாயிரம் ஏக்கர் நிலத்தை எத்தியோப்பிய அரசின் உதவியுடன் பறித்துள்ளது. அங்கு விளைவிக்கப்படும் அரிசி அரேபியத் தீபகற்ப நாடுகளுக்கும் பிற பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். அப்பகுதியில் வாழும் மக்கள் அரிசியை உணவாகக்கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தியோப்பியாவின் தென் பகுதியில் உள்ள ஓமோ பள்ளத்தாக்கிலும் இன்னும் பல பகுதிகளிலும் வாழும் மக்கள் மிகப் பெரிய எண்ணிக்கையில் தம் வாழ்வாதாரங்களை இழந்துள்ளார்கள். ஆயிரக்கணக்கானோர் தம் இன்னுயிரையும் ஈந்துள்ளனர். அங்கு இயற்கையாக உள்ள காடுகளையும் புல்வெளிகளையும் அழித்து 700 சதுர மைல் பரப்பில் கரும்புத் தோட்டங்களை நிறுவுதல், அதற்கான பாசன வசதிக்காகப் பெரும் அணை கட்டுதல் ஆகியவற்றுக்காகத் தென் ஓமோ பகுதி மக்கள் ஏதிலிகளாக்கப்பட்டுள்ளனர். அந்த அணையைக் கட்டுவதற்குச் சீன அரசும் நிறுவனங்களும் நிதியுதவி செய்தன. கரும்புத் தோட்டங்களில் உழைப்பதற்காகச் சுமார் எழுபதாயிரம் தொழிலாளர்கள் பிற பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளார்கள்.

எத்தியோப்பிய அரசு இது குறித்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறது. ஆனால், தளைப்படாத, அரசு சார்பில்லாத, ஆய்வாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து உரையாடுவதற்குப் பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை. அப்படியே அனுமதிக்கப்பட்டாலும் காவல் துறையினரும் உடனிருப்பதால் பாதிக்கப்பட்ட மக்கள் தம் உண்மை நிலை குறித்து வெளிப்படையாகப் பேச முடிவதில்லை. நிலம் பறிக்கப்படுவதற்கு எதிராகப் போராடும் மக்களை அடக்கியொடுக்கவேண்டும் என்பதும் கூட எத்தியோப்பிய அரசு கையெழுத்திட்டுள்ள சில வணிக உடன்படிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது: “குத்தகைக்கு விடப்படும் நிலங்கள் தொடர்பாக எவ்வகையான தடங்கல்களும் இல்லாதிருக்கவேண்டும்; அந்நிலங்களில் வாழ்பவர்கள் அனைவரும் வெளியேற்றப்படவேண்டும்; போராட்டங்கள், எதிர்க் கிளர்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து வகைத் தொல்லைகளில் இருந்தும் காக்கும் நோக்கில் குத்தகை எடுப்பவர்களுக்கு அரசு தன் செலவில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தரவேண்டும்.”

மேம்பாடு, வளர்ச்சி போன்ற கவர்ச்சியான சொற்களைப் பயன்படுத்தி ஏழைகளை வஞ்சிக்கும் இத்தகைய கொடுஞ்செயல்களில் இந்திய நிறுவனங்களுக்கும் பங்கு இருப்பது நம்மில் பலருக்கு புதிய செய்தியாக இருக்கக்கூடும். அதைவிட வியப்பான செய்தி என்னவெனில் எத்தியோப்பியாவில் நுழைந்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களில் மிக அதிக நிலப்பரப்பைப் பறித்துள்ளவை இந்திய நிறுவனங்களே என்பதும் அவற்றுக்கு இந்திய அரசும் அரசுத் துறை நிறுவனங்களும் உதவி புரிந்துள்ளன என்பதுமே!

இந்தியாவிலும் சார்க்கண்ட், சத்தீச்கட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இத்தகைய கொடுமைகள் பரந்த அளவில் இன்றும் அரங்கேறுகின்றன. மேலும், இந்தியாவில் இருந்து பிரித்தானிய ஆட்சி அகன்ற பின்னர் கடந்த சுமார் 65 ஆண்டுகளில் ஏறக்குறைய ஏழு கோடிப் பேர் பெரும் அணைக்கட்டுகள், ஆலைகள் ஆகியவற்றைக் கட்டுவதற்காகவும் கனிமச் சுரங்கங்களைத் தோண்டுவதற்காகவும் ஏதிலிகளாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பழங்குடிகளும் தாழ்த்தப்பட்டவர்களுமே. இந்தக் கோணத்தில் பார்த்தால் இந்திய அரசின் உதவியுடன் இந்தியப் பெரு நிறுவனங்கள் ஆப்ரிக்காவில் கொள்ளையடித்தல் வியப்புக்குரிய செய்தியல்ல!

ஏற்றுமதி-இறக்குமதிக்கான இந்திய வைப்பகம் எனும் இந்திய அரசு நிறுவனம் ஓமோ பள்ளத்தாக்கில் கரும்பு பயிரிடுவதற்கும் சர்க்கரை ஆலைகள் அமைப்பதற்கும் எத்தியோப்பிய அரசுக்கு 64 கோடி டாலர் கடன் தந்துள்ளது. அப்பகுதியில் பத்து மிகப் பெரிய இந்திய நிறுவனங்களுக்குப் பதினைந்து லட்சம் ஏக்கர் நிலம் 99 ஆண்டுகளுக்கு மிக மிகக் குறைவான குத்தகையில் தரப்பட்டுள்ளது. பல சிறிய நிறுவனங்களும் இத்தகைய குத்தகைதாரர்களாக எத்தியோப்பியாவில் கால் பதித்துள்ளன. நிலம் மட்டுமின்றிப் பல வகையான வரிச் சலுகைகளும் பிற ஊக்கக் கொடைகளும் இந்நிறுவனங்களுக்குக் கிடைத்துள்ளன.

இதன் நேரடி விளைவாக அப்பகுதிவாழ் மக்கள் அச்சுறுத்தல்கள், ஒடுக்குமுறை, கைதுகள், பாலியல் வன்கொடுமைகள், அடிதடிகள் ஆகியவற்றுக்கு உள்ளாகினர். சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதழியலாளர்களும் அரசியல் எதிர்ப்பாளர்களும் சிறை வைக்கப்பட்டனர். தம் வாழிடங்களை இழந்தவர்களில் ஆயிரக்கணக்கானோர் அண்டை நாடுகளுக்கு ஏதிலிகளாக இடம் பெயர்ந்தனர். இக்கொடுஞ்செயலில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்களில் 'கருத்தூரி க்லோபல்' முதன்மையானது. 1994-ஆம் ஆண்டு பெங்களூருவில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் 2003-இல் ஆண்டொன்றுக்கு எண்பது லட்சம் ரோசா மலர்களை உற்பத்தி செய்து இத்துறையில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாக வளர்ந்தது. (ஒரு ரோசா மலரை உற்பத்தி செய்வதற்குச் சுமார் பத்து லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது!) பின்னர் ஆப்ரிக்காவிலும் உற்பத்தியைத் தொடங்கி, 2008-ஆம் ஆண்டு நாளொன்றுக்கு 15 லட்சம் ரோசா மலர்களை சப்பான், ஆச்த்ரேலியா, தென்கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்து அந்தத் துறையில் உலகில் முதலிடத்தைப் பிடித்தது.

2005-ஆம் ஆண்டு முதல் இந்நிறுவனம் எத்தியோப்பியாவில் செயல்படுகிறது. ரோசா மலர்கள், எண்ணெய்ப் பனை, மக்காச்சோளம் உள்ளிட்ட தானியங்கள், உயிரெரிபொருள் உற்பத்திக்கான பயிர்கள் ஆகியவற்றைப் பயிரிடுவதற்காக இந்த நிறுவனம் கேம்பெல்லா பகுதியில் ஏக்கருக்கு ஆண்டொன்றுக்குச் சுமார் 22 ரூபாய் அளவில் குத்தகைக்கு எடுத்திருந்தது! ஆனால், கடந்த சில மாதங்களில் இந்த நிறுவனம் தன் பொறுப்புகளில் இருந்து மறைமுகமாகச் சிறுகச்சிறுக வெளியேறிவருகிறது. கென்யா நாட்டின் நைவாசா பகுதியில் இந்நிறுவனத்தின் ஐநூறு ஏக்கர் மலர்த் தோட்டம் உள்ளது. அதற்கான மின் கட்டணம் 140,000 யூரோவை (சுமார் 1,32,00,000 ரூபாய்) கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன் விளைவாக மாதந்தோறும் முப்பதாயிரம் பேர் பயன்படுத்திவந்த கருத்தூரி மருத்துவமனை மூடப்பட்டது. கருத்தூரியின் தோட்டங்களில் வேலை செய்தோரின் குழந்தைகள் கல்வி கற்பதற்கெனத் தொடங்கப்பட்ட கருத்தூரிப் பள்ளி செப்டம்பர் 2013-இல் மூடப்பட்டது. தோட்டக் கூலித் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நான்காயிரம் பேருக்கு ஆறு மாதச் சம்பளம் தரப்படவில்லை. ஆனால், சம்பளம் வாங்கவேண்டாம் என்று தொழிற்சங்கங்கள்தாம் தொழிலாளர்களைத் தூண்டியதாக நிறுவனம் விளம்பரப்படுத்திற்று. தொழிலாளர்களின் சம்பளம் ஓராண்டாகத் தரப்படவில்லை என்று டிசம்பர் 2013-இல் கென்யத் தொழிற்சங்கங்களின் நடுவண் கழகம் கென்ய நாட்டு அதிபருக்குத் தெரிவித்தது. தொழிலாளர்களின் வாழ்விடங்களும் பணியிடங்களும் மிக மோசமாக இருப்பதாகவும் அதைச் சரி செய்யுமாறும் நீதி மன்றங்கள் 2013 அக்ட்டோபரில் கருத்தூரிக்கு ஆணையிட்டன.

இந்தக் குற்றச்சாட்டுகளைக் குறித்து கருத்தூரி என்ன சொல்கிறது? அவற்றை மறுத்தல், வைப்பகங்கள் மீதும் தொழிற்சங்கங்கள் மீதும் பழி சுமத்துதல் ஆகியவையே அந்நிறுவனத்தின் எதிர்வினைகளாக உள்ளன. இந்தியாவில் உள்ள அதன் பங்குதாரர்கள் இது வெறும் “பணப் புழக்கச் சிக்கல்” தான் என்று கண்டுகொள்ளாமல் உள்ளன. இந்த ஆண்டு சனவரியில் இந்திய 'முதலீட்டுத் தகவல் கடன் மதிப்பீட்டுக் குழுமம்' கருத்தூரியின் கடன் நம்பகத் தன்மையை “B+” தரத்தில் இருந்து “C” தரத்திற்குத் தாழ்த்தியது. கடனைத் திரும்பச் செலுத்துவதில் மிகுதியான இடர் இருப்பதற்கான வாய்ப்புகளை அது சுட்டுகிறது.

எத்தியோப்பிய அரசுடன் தொடக்கத்தில் கருத்தூரி ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் 2010-ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இரண்டரை லட்சம் ஏக்கர் பரப்பில் வேளாண்மை செய்யப்போவதாக அப்போது கருத்தூரி உறுதி தந்தது. ஆனால் 2012-இன் இறுதியில் பத்தாயிரம் ஏக்கரில் மட்டும் மக்காச்சோளம் விளைவித்ததாகவும் 2013 ஏப்ரல்-மே வாக்கில் மேலும் 12,500 ஏக்கரில் விளைவிக்கப்போவதாகவும் கருத்தூரி தெரிவித்தது. ஆனால், கருத்தூரி, சவுதி ச்டார் உள்ளிட்ட பல நிறுவனங்களின் செயல்பாடுகள் நிறைவு தரவில்லை என்று எத்தியோப்பிய வேளாண் அமைச்சர் சூன் 2013-இல் தெரிவித்தார். ஊழல், சூழல் அழிப்பு, ஒப்பந்தத்தின்படி நடந்துகொள்ளாதது ஆகிய சட்டத்துக்குப் புறம்பான செயல்பாடுகளுக்காகக் கருத்தூரி உள்ளிட்ட நிறுவனங்களை எத்தியோப்பிய அர,சு டிசம்பர் 2013 முதல் ஆய்வு செய்துவருகிறது. இப்போது கருத்தூரியின் எத்தியோப்பிய மலர் உற்பத்தியும் நின்றுவிட்டது!

(கட்டுரை ஆசிரியரைத் தொடர்பு கொள்ள : thiru.ramakrishnan@gmail.com )

  • ஆச்த்ரேலியா australia
  • உபரி profit (லாபம் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்)
  • உலக வைப்பகம் (உலக வங்கி) the world bank
  • எக்ட்டேர் (2.5 ஏக்கர்) hectare
  • எத்தியோப்பியா Ethiopia ஏதிலி = ஏதுமில்லாதவர் refugee (அகதி என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்)
  • ஏற்றுமதி-இறக்குமதிக்கான இந்திய வைப்பகம் the export-import bank of india
  • ஒடிசா odisha
  • ஓமோ omo
  • கருத்தூரி க்லோபல் karuturi global
  • கென்யத் தொழிற்சங்கங்களின் நடுவண் கழகம் central organization of trade unions
  • கென்யா kenya
  • கேம்பெல்லா gambella
  • சகாரா sahara
  • சத்தீச்கட் chhattisgarh
  • சப்பான் japan
  • சவுதி ச்டார் saudi star
  • சார்க்கண்ட் jharkhand
  • தழைப்பொருள்கள் biomass
  • நைவாசா naivasha
  • பிரித்தானியர் the british
  • முதலீட்டுத் தகவல் கடன் மதிப்பீட்டுக் குழுமம் the indian investment information credit rating agency, ltd. (ICRA)
  • யூரோ (சுமார் 80 ரூபாய்க்குச் சமம்) euro
  • விழுக்காடு percent ('சதவீதம்' என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்)
மேற்கோள் கட்டுரைகள்
  • http://www.grain.org/bulletin_board/entries/4907-ejolt-report-10-the-many-faces-of-land-grabbing-cases-from-africa-and-latin-america.
  • http://www.counterpunch.org/2013/08/02/ethiopia-lives-for-land-in-gambella/
  • http://www.theguardian.com/global-development/poverty-matters/2013/feb/25/indian-land-grabs-ethiopia
  • http://www.aljazeera.com/programmes/peopleandpower/2014/01/ethiopia-land-sale-20141289498158575.html
  • http://www.csmonitor.com/World/Africa/2013/0916/In-Ethiopia-more-land-grabs-more-indigenous-people-pushed-out
  • http://businesstoday.intoday.in/story/karuturi-global-challenges-ram-karuturi-agriculture/1/23499.html
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org