வளமா வளர்ச்சியா?
ஒரு வழியாகத் தமிழகத்தில் தேர்தல் ஆரவாரங்கள் அடங்கி மக்கள் வழக்கமான வேலைகளுக்குத் திரும்பி விட்டனர். தேசிய அளவில் இன்னும் மேடைக் கூச்சல்களும், பொய்யும், புரட்டும், பிரிவினை வாதங்களும், ஒருவர்மேல் ஒருவர் சேற்றை வாரித் தூற்றிக்கொள்வதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் இதைவிடக் கீழே போக முடியாது என்ற நாம் நினைப்பதற்குள் ஆசாம்கான், கிரிராஜ் சிங், ராம்தேவ் போன்றவர்கள் புதிய, புதிய பாதாளங்களை நமக்குக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்! யாரும் நாட்டைப் பற்றியோ, அதன் குடிமக்களான நம்மைப் பற்றியோ சிந்திப்பதாகத் தெரிவதில்லை. வளர்ச்சி, வளர்ச்சி என்று காங்கிரஸும், பி.ஜே.பியும் மாறி மாறி முழக்கிக் கொண்டிருக்கையில், கடந்த 20 வருடங்களில் ஏழைகளின் வாழ்க்கைத் திறன் மேம்பட்டிருக்கிறதா என்று கேட்போர் யாரும் இல்லை.
வளர்ச்சியில் குஜராத் மாதிரி, தமிழக மாதிரி , மேற்கு வங்க மாதிரி என்று ஆளாளுக்குச் சொற்போர் நிகழ்த்திக் கொண்டிருக்கையில், யாரும் வளர்ச்சி என்றால் என்ன என்று சொல்வதே இல்ல. நாட்டிற்கான திட்டங்களையும் யாரும் சொல்வதாய் இல்லை.
விவசாயிகள், நெசவாளர், மண்பாண்டம் செய்வோர், மீன் பிடிப்போர், மரம் ஏறுவோர் என்று அனைத்து கிராம மக்களின் எதிர்காலமும் பெரும் கேள்விக்குறி ஆகி விட்டது. கொத்தனார், ஆசாரி போன்று நகரங்களுக்குத் தொழில் செய்வோரின் நிலை மட்டுமே மேம்பட்டுள்ளது. இயற்கை வளங்களை நம்பி உள்ள பெருவாரியான மக்களின் வாழ்வாதாரங்கள் பெரும் நிறுவனங்களுக்கு இலவசமாகவோ, அல்லது அடி மாட்டு விலைக்கோ தாரை வார்க்கப் படுகின்றன. இதைத்தான் நாம் வளர்ச்சி என்று மார் தட்டிக்கொள்கிறோம்.
நிலக்கரி போன்ற கனிம வளங்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழலுடன் ஒரு சில கும்பணிகளுக்கு உரிமம் வழங்கப் பட்டிருக்கின்றன. இது மட்டுமன்றி நியம்கிரி போன்று ஆதிவாசிகள் வாழும் காடுகள் தொழிற்சாலைகளுக்காகத் தாராளமாகத் திறந்து விடப் பட்டுள்ளன. பல கோடி வருடங்களாக இயற்கையால் உருவான வளங்களை அழிக்க இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது? வளர்ச்சி என்பது இயற்கை வளங்களை கும்பணிகள் அழிப்பதுதானா?
சூழல் இல்லையேல் பொருளாதாரம் இல்லை என்று ஒரு பொருளியல் மேதை எழுதினார் (There can be no economy without ecology). இந்த அடிப்படை உண்மை அனைவரும் அறிந்ததே. அதை மறந்து விட்டு, வளங்களை அழித்துக் காசாக்குவது வசதியாக உள்ளது - அதனால் யாரும் சூழல் பற்றிப் பேசுவதில்லை. எளியோரைக் கடனாளிகளாகவும், நுகர்வோராகவும் ஆக்கவேண்டி, வலுவான சந்தைச் சக்திகள் ஊடகங்கள் மூலம் விடாமல் மூளைச் சலவை செய்து வருகின்றன. 50 விழுக்காடு இளைஞர்களைக் கொண்ட புதிய பாரதமும் அந்த மகுடிக்கு மயங்கி ஆடி வருகிறது.
69% மக்கள் கிராமங்களில் வாழும் நாட்டில், நகரம் சார்ந்த வளர்ச்சி என்பது ஒரு குருட்டுக் கொள்கையே. திட்டமிடுவோர், நிர்வகிப்போர், ஊடகப் பணி புரிவோர் போன்று அனைவரும் நகரங்களில் வசிப்பதால், நாட்டின் தலை எழுத்து நகரத்துள்ளோரால், நகரங்களை நோக்கி, நகரங்களிலேயே முடிவு செய்யப் படுகின்றது. ஓட்டு மட்டுமே கிராமங்களில் போடப் படுகின்றன. இருக்கும் வளங்களைப் பாதுகாக்கக் கடும் சட்டங்கள் இயற்றி, கிராமம் சார்ந்த சிறுதொழில்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இயற்கை விவசாயம் மற்றும் கிராமப்புறத் தொழில்களை மையமாகக் கொண்ட ஒரு புதிய அரசும் அந்த அரசால் இயல்படும் இயற்கை வளர்ச்சியுமே நமக்கு மிகத் தேவையான அரசியல். அதுவன்றி, ஓட்டுக்கு இருநூறும், முன்னூறும் கொடுத்து ஏழை மக்களை ஏமாற்றும் கட்சிகள் இருக்கும் வரை அரசியல் என்பது ஒரு மூடிய சாக்கடையே!