'பயிற்றிப் பலகல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்' என்றான் நம் பாரதி. மாறுபட்ட, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல துறைகளில், ஆழ்ந்த அறிவும், கல்வியும், பட்டறிவும் பெற்ற ஒரு நல் மனிதரைப் பற்றி இம்மாதம் காண்போம். ஒவ்வொரு முறையும் ஒடிஷா மாநிலம் செல்லும் பொழுதும் ஏதேனும் புதியதாக காண்பதற்கும் கற்பதற்கும் இருக்கும். எனக்கு அந்த மாநிலத்தின் மீது தனி பிரியமே உண்டு. சென்ற முறை நான் சந்தித்த மனிதரோ, கடந்த எல்லாப் பயணங்களை விடவும் எனக்கு மிகச் சிறந்த அனுபவத்தைக் கொடுத்தார். விஞ்ஞானி, பன்மொழி வல்லுநர், விவசாயி, எழுத்தாளர், இயற்கைக் கட்டிட நிபுணர், விதை உற்பத்தியாளர் , காடு வளர்ப்பதில் அறிஞர், இயற்கை வேளாண் விஞ்ஞானி, அமெரிக்க பல்கலைகழகம் ஒன்றிற்கு பகுதி நேர வருகைப் பேராசிரியர் (visiting professor), மனித இன இயல் வல்லுநர் (anthropologist), சூழலியல் தன்னார்வலர், அநீதி எதிர்ப்பாளர் (activist), இசையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர், தொகுப்பு முறையியல் வல்லுநர் (taxonomist) என்று இவரின் பல்துறை வன்மையை பட்டியலிட்டுக் கொண்டே பொகலாம்.