தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

காந்தி உழவர் சங்கம் - சென்னகுணம்

கடந்த வருடம் ஐப்பசி இதழில் சென்னகுணம், காரணை- பெருச்சானூர், புரவடை ஆகிய கிராமங்களில் பரீட்சார்த்த முறையில் 21 உழவர்கள் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்திருப்பதை எழுதியிருந்தோம். 21 விவசாயிகள், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப 10 சென்ட் முதல் 40 சென்ட் வரை கிச்சடி சம்பா நட்டிருந்தார்கள். அதற்குத் தேவையான விதை, மண்புழு , தொழில்நுட்பப் பயிற்சி போன்றவற்றை தற்சார்பு இயக்கம் ஏற்பாடு செய்திருந்ததது.

கிச்சடி சம்பா

நாங்கள் கிச்சடி சம்பாவைத் தேர்வு செய்ததற்குப் பல காரணங்கள் உண்டு. செயற்கை விவசாயத்திலிருந்து இயற்கைக்கு மாறும் முதல் இரண்டு போகங்கள், மண் பெரும் அதிர்வுக்கு உள்ளாவதால், விளைச்சல் குறையும். அதன் பின் மூன்றாம் வருடத்தில் இருந்து செயற்கை விவசாயத்துக்கு ஈடாகவும் அதற்கு மேலும் இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்ய முடியும். [முதல் போகத்திலேயே எந்த வித இழப்பும் இன்றி இயற்கைக்கு மாற இயலும். ஆனால் இதற்கு உழவர்கள் மண்புழு உரம் , மீன் கரைசல் போன்ற தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, தன்னம்பிக்கையும் திடமும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். உண்மையைக் கூற வேண்டுமானல் நம் உழவர்கள் பலத்த அவநம்பிக்கையுடன், எங்கள் நச்சரிப்பு தாங்காமல்தான் பரிசோதனை முயற்சியாக இயற்கை விவசாயம் செய்தனர் என்பது குறிப்பிடத் தக்கது!]

நாங்கள் தற்போது செயற்கை விவசாயத்தில் உள்ள வரவு-செலவுகளை முன்னனமே தெளிவாகக் குறித்து வைத்திருந்தோம். அங்கு பெரும்பாலும் கார்த்திகைப் பட்டத்தில் ADT 38 என்னும் ஆடுதுறை 38 ரகமே பயிர் செய்து வருகிறார்கள். ஒரு ஏக்கர் உழுவதில் தொடங்கி அறுவடை வரை 14000 முதல் 15000 செலவு ஆனது. நல்ல விளைச்சல் என்பது 33 மூட்டை நெல் (மூட்டை 75 கிலோ) = 2475 கிலோ. மோட்டா ரகமாதலால் நாங்கள் ஒரு கிலோ நெல் 12 ரூபாய் வரை போகும் என்று கணித்திருந்தோம். ஆக மொத்த வரவு = 12 * 2475 = 29700. ஆக செலவு போக ஒரு ஏக்கருக்கு 15000 உழவனுக்கு ஊதியமாகக் கிடைக்கும். நாங்கள் உழவர்களிடம், இயற்கை முறை நெல் சாகுபடியில் உங்களுக்கு விளைச்சலில் பாதிப்பு இருந்தாலும் நிகர வருமானத்தில் பாதிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுகிறோம் என்று உறுதி அளித்திருந்தோம். இயற்கை விவசாயத்தில் 20 மூட்டைகளே (1500 கிலோ/ஏக்கர்) விளையும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இடுபொருள் செலவு 5000 குறையும் என்றும், எனவே இதே நிகர லாபம் பெற‌ 25000 பெறுமானமுள்ள விளைச்சல் பெற வேண்டுமானால், நெல்லை 16 ரூபாய்க்குக் குறையாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் ஒரு கணிப்பு செய்திருந்தோம். மேலும் அருகிலுள்ள நெல்வயல்களில் பூச்சிக் கொல்லி நஞ்சுகள் தெளித்தால் அதில் உள்ளபூச்சிகள் இயற்கை விவசாயப் பயிரைத் தாக்கிப் பெரும் சேதம் விளைவிக்காம‌ல் இருக்கவும் வேண்டும். இவை எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு சம்பா, பின் சம்பா பருவத்தில் விளையக் கூடிய, ஏக்கருக்கு 1500 கிலோ தரக் கூடிய, பூச்சி, நோய் இவற்றிற்கு எதிர்ப்புச் சக்தியுள்ள, சன்ன ரகமாக, சாப்பாட்டு அரிசிக்கு உகந்த நெல்லாகத் தேடினோம். இத்தேவைகளைத் தூயமல்லி, கிச்சடி சம்பா இரண்டும் நிறைவு செய்தன. கிச்சடி சம்பா நோய் எதிர்ப்பில் மிகச் சிறந்தது என்பதால் அதைத் தேர்ந்தெடுத்தோம்.

தொழில்நுட்பம்

முன்னர் நாம் தாளாண்மை இதழில் நெல் விளைக்கச் சில நுட்பங்கள் என்ற தலைப்பில் அனுபவப் பாடங்கள் சிலவற்றை தொழில்நுட்பங்களாகத் தொகுத்து இருந்தோம். அதன்படி ஒற்றை நாற்று முறைக்கும்(12-15 நாள் வயதுடைய தனி நாற்று நடவு), குத்து நாற்றுமுறைக்கும்(35-40 நாள் வயதுடைய 10-12 நாற்றுக்கள் குத்து நடவு) இடைப்பட்ட ஒரு பாதையாக 20 நாள் நாற்றுக்களை 2-3 ஆக கலந்த நடவாய் இடைவெளி விட்டு நடும் முறையைப் பரிந்துரை செய்தோம். ஆனால், விவசாயிகள் நாங்கள் கூறியதைக் கேட்காமல் 30 நாட்களுக்கு மேல்தான் நடவு ஆரம்பித்தனர். இதனால் தூர்கள் குறைவாகக் கட்டியிருக்கும் என்றே நான் நினைக்கிறேன். நடுவதற்கு முன் அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு உரமும், மேலுரமாக மீண்டும் ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு உரமும், அதன் பின் நடவின் பின் பச்சை பிடித்ததும் மீன் கரைசலும், தூர் கட்டும் பருவத்தில் ஒரே ஒருமுறை பஞ்சகவ்வியமும் பரிந்துரை செய்தோம். பாரம்பரிய ரகம் ஆதலால் இதுவே அதிக பட்ச ஊட்டம் என்று நான் நினைக்கிறேன். எனினும், மூட்டை மூட்டையாக செயற்கை உரங்களைக் கொட்டிப் பழகிப் போன நம் உழவர்கள், ஆர்வக் கோளாறின் காரணமாக ஏகப்பட்ட ஆட்டுப் புழுக்கை, பசுந்தாள் உரங்கள், கோமயம் என்று நம் பரிந்துரையை மீறி தழைச் சத்தைக் கொட்டித் தள்ளி விட்டார்கள். ஒருவர் கோழி எரு இரண்டு மூட்டையும் கொண்டு கொட்டினார்! இதனால் பச்சை பிடித்த நாற்று அதிகப்படி தழைச்சத்தைத் தாங்காமல் அதிகபட்சமாய்ப் பணைத்தும் உயர்ந்தும் விட்டது.( ஒரு வயலில் மாடு ஒன்று இறங்கி ஒரு ஓரத்தில் மேய்ந்து விட்டது. அந்த வயலில் கடைசியில் மாடு மேய்ந்த பகுதிதான் மிக அருமையாகத் தூர் கட்டி விளைந்தது. ஜெய்சங்கர் வரகு சாகுபடியில் மாட்டைக் கட்டி மேய்ப்பது பற்றி எழுதியதை இங்கே நினைவு கூர வேண்டும்)

நோய் நிர்வாகம்

எதிர்பார்த்தது போலவே பாரம்பரிய ரகமான கிச்சடி சம்பா, அதிகம் பூச்சி நோய்த் தாக்குதல் இன்றி நன்றாய்ப் பணைத்து வளர்ந்தது. நாற்று நட்டு அறுவடை செய்யும்வரை உள்ள 100 நாட்களுக்கு, ஒரே ஒரு முறை களை எடுப்பதைத் தவிர எந்த வேலையும் பெரிதாய் இருக்கவில்லை. எனினும் விவசாயிகளைச் சமாளிப்பது பெரும் பாடாக இருந்தது. முதலில் நாற்று வெள்ளையாக இருக்கிறது, பச்சை பிடிக்கவில்லை பணைக்கவில்லை, நிலத்தை மூடவில்லை என்று ஒரே புலம்பல். பின்னர் நெல் நன்றாய்க் கிளைத்து அடர்ந்து வளார்ந்ததும் ஒரு 30 நாட்களுக்கு எல்லோரும் கொஞ்சம் அமைதியாய் இருந்தனர். ஆனால் கதிர் வந்ததும்தான் எங்கள் தொல்லையே தொடங்கியது! பட்டம் தாழ்ந்து நட்டதாலோ, அல்லது அதிக பட்ச தழைச் சத்தாலோ , அல்லது வேறு எதனாலோ தெரியவில்லை; குருத்துப் பூச்சி மற்றும் இலைக்கருகல் நோய் தாக்குதல் ஆங்காங்கே திட்டுத் திட்டாய்க் காணப்பட்டது.

10 மூட்டை விளையும் நிலத்தை(கால் காணி-33 சென்ட்) வீணாக்கி விட்டீர்களே என்று எல்லோரும் எங்களை வசை பாடினர். நம் களப் பணியாளர் குமாரிதான் பாவம் தினமும் எல்லா உழவர்களிடமும், அவர்கள் மனைவி, மாமன், மச்சான், பாட்டன் , பேரன் என்று எல்லாரிடமும் பாட்டு வாங்கிக் கொண்டிருந்தார். பத்து வருடங்களாய் கிச்சடி சம்பா நட்ட எனக்கு அந்த நெல்மேல் மிகுந்த நம்பிக்கை இருந்தது. அறுவடை வரை எல்லாரும் பொறுத்திருங்கள் அதன் பின் உங்களுக்கு ஏற்படும் இழப்பிற்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம் என்று உறுதி அளித்திருந்தோம். நாங்கள் நோய்க்கோ பயிருக்கோ எந்த நிர்வாகமும் செய்யவில்லை - உழவர்களை நிர்வாகம் பண்ணுவதுதான் பெரும் போராட்டமாக இருந்தது!

அறுவடை

ஒரு வழியாக மாசி கடைசியில் நெல் அறுவடைக்குத் தயாரானது. முதல் அறுப்பிற்கு நானும், குமாரியும் கூடவே நின்று என்ன நடக்கிறது என்று பார்த்தோம். கால் காணியில் 7 மூட்டை போல விளைச்சல் கண்டது.(33 சென்டில் - 525 கிலோ). பெரிதும் கவலைப்பட்ட விவசாயிகளுக்கும், 'சுத்தமாய்ப் போச்சு' என்று சொன்ன விவசாயிகளுக்கும் எல்லோருக்குமே சராசரியாக இந்த விளைச்சல் விளைந்துள்ளது. அப்போது அன்றைக்கு ஆடுதுறை 38 மூட்டை 850 ரூபாய் (கிலோ 11.33 ரூ) என்று கொள்முதல் செய்யப் பட்டுக் கொண்டிருந்தது; நான் ஒருசில கணக்கெல்லாம் போட்டு விட்டு, “நாங்களிந்த நெல்லை மூட்டை 1500 ரூபாய் (கிலோ 20.00 ரூ) என்று கொள்முதல் செய்கிறோம்” என்றதும் உழவர்களுக்கெல்லாம் ஒரே மகிழ்ச்சி. இவ்விலையில் அவர்களுக்கு ஏக்கருக்கு 30,000 வருமானமும், அதில் 20,000 லாபமும் வருகிறது என்று நான் கணக்கிட்டுக் காட்டினேன். “அடடா எல்லா நிலமும் இதையே நட்டிருக்கலாமே” என்று வசை பாடிய உழவர்கள் உரக்கவே சொல்ல ஆரம்பித்தனர்.

உழவர் கூட்டுறவு

கொள்முதல் செய்வது எப்படி? பணம் எவ்வளவு தேவைப்படும்? அந்த நெல்லை என்ன செய்வது? அனந்து அக்கரைப் பார்வையில் மாதா மாதம் தற்சார்புச் சந்தைகளைப் பற்றியும், உழவர் கூட்டுறவு முயற்சிகளைப் பற்றியும் எழுதி வருகிறார். நாமும் ஒரு கூட்டமைப்பு உருவாக்கினால் என்ன என்ற விடுதலை வேட்கையில் “காந்தி உழவர் சங்கம்- சென்னகுணம்” என்று ஒரு அமைப்பை உருவாக்க உள்ளோம். கொள்முதல் செய்த நெல்லைத் தூற்றிக் காய வைத்து 5-6 மாதம் பழைமை ஆனதும் பச்சரிசியாக அரைத்து நாங்களே மதிப்புக் கூட்டிய பொருளாக விற்பனை செய்வது என்று முடிவு செய்துள்ளோம். இதன் விவரங்களையும், நடைமுறையில் நாம் சந்திக்கப் போகும் வெற்றி மற்றும் பின்னடைவுகளையும் அவை வரவரக் காண்போம்!

பாடங்கள்

ஆனால், ஒரு ஒப்பந்த அடிப்படையில், லாப நோக்கைக் காட்டி உழவர்களை இயற்கைக்கு மாற்றுவது ஒரு நிலைத்த பொருளாதாரத்திற்கு வழி வகுக்காது என்றே நான் நினைக்கிறேன். உழவர்கள் அவர்களாக மாற வேண்டும்; நாம் கருத்துக்களை எடுத்துரைத்து, தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். விதைகள், மண்புழு, கரைசல்கள், பஞ்சகவ்யம் போன்றவற்றை மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாகத் தயாரித்துக் கொடுக்கலாம். ஒப்பந்த விவசாயம் என்பது மிகுந்த பணத் தேவையை உள்ளடக்கியது.

அதே போல், உழவர்கள் தன்னம்பிக்கையையும் தற்சார்பையும் முற்றிலுமாக இழந்துவிட்டார்கள்.செயற்கை இடுபொருட்களிடாமல்விளைக்கலாம் என்ற அடிப்படை நம்பிக்கையே அவர்களுக்கு இல்லை. இதையெல்லாம் தனி மனிதர்களோ, தொண்டு நிறுவனங்களோ சரியாக்க இயலாது; அரசாங்கம் இயற்கை விவசாயத்தை முழுமையாக ஆதரித்து, அதை நடைமுறைக்குக்கொண்டு வந்தால்தான உழவன் விடுதலை உன்மையாக மலரும்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org