தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

ஆற்றுப் பெருக்கால்

சென்ற இதழ் தொடர்ச்சி…

சோழர்களின் பாசனப் பணிகள் தொடர்சியாக நடைபெற்று வந்தது. திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள திருவெறும்பூர் ஊர் மேம்பாட்டிற்காக விதிக்கப்பட்ட தீர்வைபற்றி பத்தாம் நூற்றாண்டு ஆவணம் பின்வரும் தகவலைக் கூறுகிறது, ‘…திருவெறும்பூர் சிவன் கோவிலை தீர்மானித்த செம்பியன் வடிவேலன் என்பவர் அக்கிராமத்து ஏரியை ஆழப்படுத்த 45 களஞ்சு தங்கம் அளிக்க முன்வந்தார்…’ என்று விரிவாகக் கூறிச் செல்கிறது. இக்காலம் இராசராசன் காலமாகும். இதேபோல குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டு உடைந்துபோன ஏரியைப் பராமரிப்பது பற்றி விரிவாகச் சொல்கிறது. இது ஏரி அடைக்க பொற்காசுகள் அளித்த செய்தி கூறுகிறது. இக்கல்வெட்டு கி.பி.1192 ஆம் ஆண்டைச் சேர்ந்தது.

'சோழமண்டலத்து புலியூர்க் கோட்டமான குலோத்துங்க சோழவளநாட்டுக் குன்றத்தூர் நாட்டுச் சோமங்கலமான பஞ்சத்தியான சதுர்வேதி மங்கலத்து ஏரி …உடைந்ததும் அடைப்பித்து இவ்வேரி பதினாலாவது நிலை நின்றபின்பு இம்மடைகளும் கரையும் பகுமை செய்கைக்கு …கல்லிக் கரைசெய்யக் கடவோமாகவும் இப்படிச் சம்மதித்து பழக்காசு நாற்பதும் பொலியூட்டாக கைக்கொண்டோம் இவ்வூர்மகாசபையோர்…’

இவ்வாறாக மன்னர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் நீர்ப்பாசனப் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டுள்ளனர். நாட்டின் பொருளியல் இந்த வேளாண்மையை வைத்தே இயங்கியது. பல்வேறு முறைகளின் வரிவிதிப்பை உருவாக்கி யிருந்தனர்.

நீர்வரி விளைநிலங்களுக்கு நீரைப் பாய்ச்சிக் கொள்வதற்கான வரியாகும். இதுவே ஏரி, குளம் பாய்ச்சலாக இருந்தால் அதன் பெயர் நிலைநீர்ப் பாட்டம் எனப்படும். ஆற்றுப்பாய்ச்சலுக்கு ஒழுகுநீர்ப்பாட்டம் என்று பெயர். அத்துடன் விளைநிலம் என்றும் விளையாநிலம் என்றும் பிரித்து வரி தண்டப்பெற்றது. விளையாநிலம் ஊர்ப்பொதுநிலம் என்றும் பட்டப்பாழ் (தரிசு) என்றும் பிரிக்கப்பட்டது. இவற்றுக்கு வரி கிடையாது எனவே இது இறையிலி என்று அழைக்கப்பட்டது. விளைநிலம் என்பது நீர்நிலம், கொல்லை, காடு என்று மூன்றாகப் பிரிக்கப்பட்டது. நிலவரி தீர்வை என்றும் வாரம் என்றும் பிரிக்கப்பட்டது. தீர்வை என்பது குறிப்பிட்ட அளவை ஆண்டு தோறும் தர வேண்டும். வாரம் என்பது விளைச்சலில் ஒரு பங்கு என்று வாங்கப்பட்டது. தீர்வை நிலம் தீர்வைப் பற்று என்றும் வார நிலம் வாரப்பற்று என்றும் அழைக்கப்பட்டது. வாரத்தையே பணமாகச் செலுத்தினால் அதன் பெயர் கடமைப்பற்று எனப்பட்டது. நன்றாக விளைந்த நிலத்தில் மட்டுமே வரி தண்டப்பெற்றது. விளையா நிலங்களில் வரி வாங்கப்படவில்லை. களஞ்சியத்தில் விளைபொருட்களும் கருவூலத்தில் பணமும் சேமித்து வைக்கப்பட்டன. இவை இரண்டிற்கும் பண்டாரம் என்று பெயர். ஊரளவு இருக்கும் பண்டாரத்தில் உள்ளூர் செலவு போக எஞ்சியவை தலைநகரில் உள்ள மூலப்பண்டாரத் திற்கு அனுப்பப்படும். வேளாண்மையும் அதற்கு மூலமான பாசனமும் பிற்காலச் சோழர்களின் இன்றியமையாக பணியாக இருந்துள்ளது.

பாண்டியர்கள் பாண்டியர்களின் வரலாறு மிக நெடியது. ‘பஃறுளியாறும் பன்மலை அடுக்கமும் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள’ என்ற சங்க இலக்கிய வரிகள் பாண்டியர்களின் பழைய வரலாற்றைக் கூறும். இன்றைய இந்தியாவின் தென்கோடிப் பகுதியான குமரி முனைக்கும் தெற்கே மிகப் பெரிய நிலப் பரப்பு இருந்ததாகவும் அது பெரியதொரு கடல்கோளால் அழிந்ததாகவும் தொன்மச் செய்திகள் உள்ளன. இதற்கு ஆதரவான முறையிலே பல அகழ்வாய்வுச் சான்றுகளும் சில ஆய்வாளர்களின் கருத்துக்களும் உள்ளன. அந்த பெரிய நிலப் பரப்பில் குமரி, பஃறுளி என்ற இரு ஆறுகள் ஓடிச் செழிப்பிக்கச் செய்தன. இந்த பஃறுளி என்பதன் பொருள் பல துளி என்பதாகும். சிந்து என்பது சில துளி என்று பொருள்படும். அதாவது பஃறுளி ஆற்றுடன் ஒப்பிடுகையில் இப்போதுள்ள சிந்து ஆறு மிகச் சிறியதாகும். அப்படியானால் பஃறுளி எவ்வளவு பெரியது என்று நாம் கற்பனை செய்து பார்க்க வேண்டும்! இந்த நாட்டில் நெடியோன் என்ற பாண்டிய அரசன் இருந்துள்ளான். இவனுக்கு நிலந்தருதிருவிற் பாண்டியன் என்று ஒரு பெயரும் வடிலம்ப பாண்டியன் என்றொரு பெயரும் உண்டு. இவன் இயற்கையை மிக வேகமாக அழித்துள்ளான் இதனால் கடல் புகுந்து குமரிக் கண்டம் அழிந்துவிட்டது.

‘வடிவேல் எறிந்த வாழ்பகை பொறாது’ பெரும் குமரிமலையும் ஆறும் அழிந்து போயின. இந்தப் பாண்டிய அரசர்கள் வடநாட்டில் குருசேத்திரத்தில் நடந்த பாண்டவ-கவுரப் போரில் இன்றைய செஞ்சிலுவைப் பணியாளர்கள் போல் பணியாற்றிய செய்திகள் மகாபாரதம் என்ற இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. பாண்டிய வீரர்கள் காயமடைந்த வீரர்களுக்கு உணவும் பிற உதவிகளும் செய்துள்ளனர். இவ்வளவு பண்டைய வரலற்றைத் தனன்னகத்தே கொண்ட பாண்டியர்களின் பாசனப் பணி என்பது வையை ஆற்றோடும், பொருநை என்ற தாமிரபரணியோடும் நெருக்கமானது. வையை மேற்கு மலைத் தொடரில் தோன்றும் ஆறு. கண்ணகியும் கோவலனும் கடும் கோடை காலத்தில் மதுரைக்குள் நுழைகின்றபோது படகுகள் ஓட்டும் அளவிற்கு நீரோட்டத்தைக் கொண்டிருந்தது. ‘புனல்யாறு அன்று இது பூம்புனல் யாறு என அனநடை மாதரும் ஐயனும் தொழுது பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும் அரிமுக அம்பியும் அருந்துறை இயக்கும் பெருந்துறை மருங்கின் பெயராது ஆங்கண் மாதவத் தாட்டியொடு மரப்புணை போகித் தேமலர் நாறும் பொழில் தென்கரை எய்தி’ (சிலம்பு: 175) என்று வையை ஆறு பல்வகையான மலர்களுடன் ஓடியதையும், அதில் குதிரைமுக படகுகளும், யானைமுகம் படகுகளும், சிங்கமுகப் படகுகளும் சென்ற செய்தியை இளங்கோவடிகள் பதிவு செய்துள்ளார். வேனில் காலத்தில் இவ்வளவு நீர் ஓடிய செய்தியைப் பார்க்கும்போது இன்று வேதனைதான் மிஞ்சுகிறது. இந்த ஆற்றில் பாண்டியர்கள் கட்டிய அணைகள் பற்றிய செய்திகள் முதலில் கல்வெட்டு வடிவில் கிடைப்பது சேந்தன் செழியன் காலத்தியது. இது கி.பி.620-650. சேந்தன் செழியன் வைகையில் மதகு அமைத்த செய்தி இதில் அமைந்துள்ளது. இதேபோல அரிகேசரி என்ற கால்வாயையும் வெட்டியுள்ளான்.

தென்பாண்டிச் சீமையில் பாயும் பொருநையில் சிறு சிறு மண்ணணைகள் மட்டுமே பண்டைய நாட்களில் செய்யப்பட்டுள்ளன. பிற்காலப் பாண்டியர்களே நிறைய அணைகளைக் கட்டியுள்ளனர். திருக்கோவிலூர் அணை உள்ள இடத்தில் ஒரு மதகு அமைத்து வாய்க்கால் பிரித்ததை விக்கிரம பாண்டியன் கல்வெட்டுக் கூறுகிறது. பவானி ஆற்றில் உள்ள காலிங்கராயன் கல்வெட்டு பிற்காலப் பாண்டியனான சடையவர்மன் குலசேகரன் காலத்தியது. இவனது பட்டப் பெயர் காலிங்கராயன். மாறவர்மன் சுந்தரபாண்டியனது அமைச்சர் ஒருவருக்கு காலிங்கராயன் என்ற பட்டம் இருந்ததது. கொங்கு மண்டலத்தில் இவர் பணியாற்றியபோது இவர் கட்டிய பாசனக் கட்டுமானம் இது. இது தவிர கோடைமேல் அழகியான் அணை, நதியுண்ணி அணை, கன்னடியன் அணை என்று பல அணைக் கட்டுகள் கட்டப்பட்டன. நாஞ்சில் நாட்டில் பழையாற்றின் குறுக்கே பாண்டியன் அணை கட்டப்பட்டது. இதில் புதிய அணையான புத்தன் அணை கட்டப்பட்டது. தமிழகத்தின் பாசன வரலாற்றில் இருப்பைக்குடி கிழவன் என்ற சிற்றரசனுக்கு மிகச் சிறந்த இடம் உண்டு. இவன் சிறிமாற சிறிவல்லபன் என்ற பாண்டிய அரசனுக்கு உட்பட்டவன். இவனது காலம் கி.பி. 815 முதல் 862 வரை. இவன் வாழ்நாளில் பெரும்பகுதியை பாசனப் பணிகளுக்காகவே செலவிட்டான். சாத்தூர், கோவில்பட்டி, முதுகுளத்தூர், விளாத்திகுளம் ஆகிய பகுதிகளைக் கொண்டது இருஞ்சோணாடு. இப்பகுதியை ஆட்சி செய்தவன் இவன். ‘ஏரிநூலிட்டு ஏறுவித்தல்’ என்ற செப்பமான அணைக்கட்டும் தொழில்நுட்பம் இவனது காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவன்தான் நீர் அறுவடை என்று இன்று கூறப்படும் நுட்பத்தின் தந்தை எனலாம்.

பாண்டிய மண்டலம் முழுமையும் ஏரிகளை உருவாக்கி பெய்யும் மழையைப் பிடித்து வறண்ட பகுதிகளை வளமாக்கினான். கிழவனேரி, திருமால் ஏரி, மாறனேரி, திருநாராணயன் ஏரி, பெருங்குளம் என்று பெருமளவு ஏரிகளை அமைத்துள்ளான். ஆற்றின் மட்டத்திலிருந்து உயரமான இடத்திற்கு நீரைக் கொண்டு செல்லும் தொழில்நுட்பத்தை இவர்கள் மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர். எங்கெல்லாம் ஒரேஒரு கால்வாய் பிரிகிறதோ அங்கெல்லாம் ‘ட’ வடிவத்திலும், இருபுறத்திலும் கால்வாய் பிரியும் இடத்தில் குதிரைலாட வடிவில் காய்வாய்கள் அமைக்கப்பட்டன. இதை அறியாத ஆங்கிலேயர் பாறையின் போக்கிலேயே இது கட்டப்பட்டதாக கருதினர். இதனால் அவர்கள் கட்டிய அணைகள் உடைப்பெடுத்தன. மருதூர் அணையிலும் திருவைகுண்டம் அணையிலும் இத்தகைய உடைப்புகள் நடந்தன. பின்னர் இதை அறிந்து வேண்டிய திருத்தங்களை ஆங்கிலேயர் செய்தனர். இதன் பின்னர் ஆட்சிக்கு வந்த நாயக்க மன்னர்களும் பாண்டியர்களைத் தொடர்ந்து பாசனப் பணிகளைச் செய்துள்ளனர். தாமிரபரணி ஆற்றிலுள்ள அரியநாயகிபுரம் அணைக்கட்டு தளபதி அரியநாதரால் கட்டப்பட்டது. பாளையன் அணைக்கட்டு, மருதூர் அணைக்கட்டு, சுத்தமல்லி அணைக்கட்டு போன்றவை றாயக்கர் காலத்திய கட்டுமானங்கள். கும்பகோணம் மகாமகக் குளத்தை தஞ்சையில் வாழ்ந்த நாயக்க மன்னர்களின் அமைச்சரான கோவிந்த தீட்சிதர் அமைத்தார். இவர் ஐயன் குளம், ஐயன் வாய்க்கால், ஐயன்கடை என்ற பாசனப் பணிகளைச் செய்துள்ளார். பாண்டியர்கள் தொடங்கி வைத்த சங்கிலித் தொடர் ஏரிகள் இன்றும் பலரை வியப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org