தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலைநகரில் ஒரு உழவர் பேரணி - அனந்து

டில்லியில் கிஸான் மஹா பஞ்சாயத்

உழவர்களின் நலனைச் சற்றும் கருத்தில் கொள்ளாது பன்னாட்டுப் பெரும்நிறுவனங்களுக்குச் சாதகமாய் மத்திய அரசு செயல்பட்டு வருவதை எதிர்த்தும், உழவர்களுக்கு ஒரு அடிப்படை வருமானத்திற்கு உத்திரவாதம் கோரியும், வரலாற்று சிறப்பு மிக்க ஒரு மாபெரும் விவசாயிகள் கூட்டம் மற்றும் போராட்டம் ஒன்று கடந்த மாதம் (மார்ச் 18 முதல்) டெல்லியில் கூடியது. இதில் இந்தியா முழுவதிலிருந்தும் விவசாயிகள் வந்திருந்தனர். நம் தமிழகத்திலிருந்தும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் வந்திருந்தனர். உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, இயற்கை விவசாயி ராஜரீகா, விவசாயிகள் தலைவர் நல்ல கவுண்டர், கன்னையன் போன்றவர்களை அங்கு காண முடிந்தது. உத்தர பிரதேசம், ஹரியான, பஞ்சாப், முதலிய மாநிலங்களிலிருந்து பெரும் திரளாக விவசாயிகள் வந்திருந்தனர்.

அவர்கள் டிராக்டர் கணக்காக உணவு பொருட்கள் கொண்டு வந்து அங்கேயே சமைத்து எல்லோருக்கும் பரிமாறியது அருமையான காட்சியாக இருந்தது. இவர்கள் “அன்ன தாதாக்கள்” தான் என்பதை நிரூபித்தது. இன்னும் ஒரு அதிசயம், இன்னமும் அந்த மறைந்த விவசாயிகளின் பெருந்தலைவர் “பாபா திகைத்” அவர்களின் மேல் உள்ள அன்பும் மரியாதையும், அவரது பெயரிலேயே இன்னமும் உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானாவிலிருந்து விவசாயிகள் ஆயிரக்கணக்கில் கூடுவதும்! முதல் முறையாக விவசாயிகள் அமைப்புகள் மட்டுமின்றி NAPM போன்ற மக்கள் இயக்கங்களும் இடம்பெயரப்பட்ட மக்கள் இயக்கங்களும் சேர்ந்து போராடின.

டெல்லியில் பார்லிமென்ட் தெருவில் இந்த போராட்டம் ஒருநாளுக்கென்று தொடங்கபெற்றது. விளை பொருட்களுக்கு நியாயமான நல்ல விலை, கையகப்படுத்தப்படும் விவசாயநிலங்களுக்கு நல்ல விலை / சந்தை விலை , மரபீனி பயிர்கள் வேண்டாம், விவசாயம் தனியார்மயமாக்கப்படக்கூடாது, விவசாயிகள் வருமான உத்தரவாதம் முதலியன கேட்டு இந்த பெரிய போராட்டம் கூட்டப்பட்டது. 50000 -க்கும் மேற்பட்ட மக்கள் இந்த மாபெரும் கூட்டத்தில் கூடியும் நம் இந்திய அரசாங்கம், பல விஷயங்களிலும் செயல் படாததைப்போலவே இதிலும் மெத்தனமாக இருந்தது.

ஒரு நாள் மட்டுமே கூடுவதாய்த் திட்டமிட‌ப்பட்ட இந்த மகா பஞ்சாயத்து, அரசு கண்டுகொள்ளாததை எதிர்த்து, அரசு உயர் மட்டப் பேச்சுவார்த்தைக்கு வரும் வரை தலைநகரிலேயே இருந்து போராட்டத்தைத் தொடர்வது என்று முடிவு செய்தனர். ஒரு நாளுக்கு மட்டுமே திட்டமிட்டு வந்த விவசாயிகள் அங்கேயே தங்கி போராட்டத்தை நீடித்தது மட்டுமல்லாமல் மேலும் பலரையும் அருகாமை மாநிலங்களிலிருந்து வரவழைத்தனர். உணவும் விவயசாயக்கூட்டமும் குறையின்றி வருவதைக்கண்டும், பத்திரிக்கைகள் இப்பேரணியை நாடு முழுவதும் பிரகடனப் படுத்தியதைக் கண்டும், வேறு வழியின்றி மத்திய அரசு, 3-ஆம் நாள் சரத் பவார், ஜெனா, தாமஸ், ஜெயராம் ரமேஷ் உட்பட 6 அமைச்சர்களை பேச்சு வார்த்தைக்கு அனுப்பியது.

இவர்களது கோரிக்கைகளை எல்லாம் முன்னிறுத்தி, பேச்சுவார்த்தை மேற்கொண்டனர் விவசாய தலைவர்கள் . அடுத்த நாள் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், விளை பொருள் நிர்ணயத்திற்கு ஒரு கமிட்டியும், நிலம் கையகப்படுத்துவதற்கு ஒரு கமிட்டியும் விவசாயத்தில் அந்நிய முதலீடுக்கும் ஒரு கமிட்டியும் அமைத்தது அரசாங்கம். இதை அடுத்து இந்த மாபெரும் விவசாயிகள் போராட்டம் நிறைவு பெற்றது.

இருப்பினும் பவார் போன்றவர்களிடம் பேசி எந்தப் பலனும் இல்லை என்றே நான் நினைக்கிறேன். அதே போல் அவர்களுடன் என்ன கமிட்டி அமைத்தும் என்ன பயன்? பெயருக்காக சித்தரித்த‌தைப் போல தான் உள்ளது இந்த கமிட்டிகளும் இந்த அரசாங்கத்தின் செயல்பாடும். சுக்கி நஞ்சுண்டஸ்வாமி, கவிதா குருகண்டி போன்றவர்களும் இந்த பேச்சுவார்த்தைகளிலும் பின்னர் விவசாயத்தலைவர்களிடையே நடைபெற்ற கூட்டத்திலும் இடம் பெற்றது கொஞ்சம் நம்பிக்கையை கொடுக்கிறது. இருப்பினும் மேலும் ஒரு பெரிய போராட்டம் வெடிக்க வேண்டி இருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org