தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

அக்கரை பார்வை - 16 - அனந்து

பயிற்றிப் பல கல்வி தந்து... தசாவதானி தேபல் தேப்!

'பயிற்றிப் பலகல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்' என்றான் நம் பாரதி. மாறுபட்ட, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத‌ பல துறைகளில், ஆழ்ந்த அறிவும், கல்வியும், பட்டறிவும் பெற்ற ஒரு நல் மனிதரைப் பற்றி இம்மாதம் காண்போம். ஒவ்வொரு முறையும் ஒடிஷா மாநிலம் செல்லும் பொழுதும் ஏதேனும் புதியதாக காண்பதற்கும் கற்பதற்கும் இருக்கும். எனக்கு அந்த மாநிலத்தின் மீது தனி பிரியமே உண்டு. சென்ற‌ முறை நான் சந்தித்த மனிதரோ, கடந்த எல்லாப் பயணங்களை விடவும் எனக்கு மிகச் சிறந்த அனுபவத்தைக் கொடுத்தார்.

விஞ்ஞானி, பன்மொழி வல்லுநர், விவசாயி, எழுத்தாளர், இயற்கைக் கட்டிட நிபுணர், விதை உற்பத்தியாளர் , காடு வளர்ப்பதில் அறிஞர், இயற்கை வேளாண் விஞ்ஞானி, அமெரிக்க பல்கலைகழகம் ஒன்றிற்கு பகுதி நேர வருகைப் பேராசிரியர் (visiting professor), மனித இன இயல் வல்லுநர் (anthropologist), சூழலியல் தன்னார்வலர், அநீதி எதிர்ப்பாளர் (activist), இசையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர், தொகுப்பு முறையியல் வல்லுநர் (taxonomist) என்று இவரின் பல்துறை வன்மையை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அஷ்டாவதானி என்பவ‌ர் எட்டு வேலைகளை ஒருங்கே செய்ய கூடியவர் . இவர் பத்துக்கும் மேற்பட்ட வேலைகளை எந்த அலட்டலும் இன்றி அமைதியாக‌ மேற்கொள்பவர்.

இவர் தான் தேபல் தேப். சர்வசாதாரணமாக 900க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல்வகைகளை மீட்டுள்ளார்; பல இன்னல்களுக்கு நடுவில் இன்று வரை காப்பாற்றி வருகிறார். பல்கலைக் கல்வி மையம் (Center for Inter Disciplinary Studies) என்ற லாப நோக்கற்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

அதற்கு முன், நான் அவருடைய இடத்திற்கு எப்படி சென்றடைந்தேன் என்பதை பார்ப்போமா? ஒடிஷாவின் பவானிப்பட்டினா அருகில் அழகிய‌ நியம்கிரி மலை தொடரில் பொதிந்து இருக்கும் இந்த கிராமத்தை அவ்வளவு எளிதில் சென்றடைய முடியாது. நியம்கிரி தொடரினுள் ஒளிந்திருக்கும் இந்த கிராமத்திற்கு, அங்கே இருக்கும் இவரது கழனிக்கு செல்ல கடைசி இரண்டு கிலோமீட்டரை நடந்து மட்டுமே செல்ல முடியும். ஒரு அழகிய முழு நிலவு ஒளிரும் நள்ளிரவில் அந்த கடைசி 2 கி மி க்கு முன் ஒரு ஜீப்பில் விடப்பட்டேன். அந்த இரவில் அரவமற்ற காட்டினுள் நடந்து செல்வதே ஒரு அற்புதமான அனுபவம். மறுநாள் எனக்கு கிடைக்க இருந்த அனுபவத்திற்கு ஒரு சிறப்பான‌ முன்னொட்ட்டம்.

அங்கு தான் இந்த அற்புத மனிதர், தனி ஒருவனாக 900 -க்கும் மேலான நெல் ரகங்களை சேமித்து வைத்துள்ளார். நான் சந்திக்கும் போது இன்னும் 50-க்கும் மேல் கூடிய விரைவில் சேர்க்கப்படும் என்றார். இந்த பணியை இவர் கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறார். மேற்கு வங்காளத்தில் பான்குடா என்னும் இடத்தில் சென்ற ஆண்டு வரை மேற்கொண்டு வந்தார். அந்த 'பசூதா பண்ணையை' 2010இல் நான் சென்று பார்த்திருக்கிறேன்.அங்கு தேபல் அவர்கள் மிக அற்புதமான வேலை செய்திருந்த போதும், தண்ணீர் பற்றாக்குறையினாலும் உள்ளூர் அரசியல்வா(வியா)திகளாலும், மேற்கு வங்கத்தை விட்டு ஒடிஷாவிற்கு சென்ற ஆண்டு இடம் பெயர வேண்டியதாயிற்று. அவர் அங்கு தான் உருவாக்கிய, சாதித்த அனைத்தையும் விட்டு, தான் சேகரித்து வந்த நெல் ரகங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு ஒடிஷாவில் ஒரு புது இடத்தில் குடியேறினார்.

இந்த 900 வகைகளையும் 2 (ஆம் இரண்டே) ஏக்கரிலிருந்து காப்பாற்றி வருகிறார்! இவை யாவும் விவசாயிகளிடமிருந்து, அவர்கள் காலம் காலமாக மூதாதையர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற நன் விதைகள், பாரம்பரிய வகைகளை எடுத்து வந்து சேமிக்கிறார்! பற்பல கிராமங்களுக்கும் சென்று, அவர்களிடத்தே உள்ள பாரம்பரிய விதைகளை கொண்டு வந்து மிகவும் கவனமாக, அறிவியல்பூர்வமாக பன்மடங்காக பெருக்கி விவசாயிகளுக்குக் கொடுத்து உதவுகிறார்.

இவர் 'நெல் வாழ்க்கை' வாழ்கிறார் என்றால் மிகை ஆகாது. ஒரு களைக்களஞ்ஞியம் போல் பல தரவுகளை, தகவல்களை தன்னிடத்தே வைத்துள்ளார். ரகம், சூரிய உணர்ச்சி, வாழ் திறன் (விளை திறன்), மற்றும் பல குணங்களை விரல் நுனியில் வைத்துள்ளார். நாள் முழுவதும் இவரது செயல்களை, பொங்கித் ததும்பும் திறனை பார்த்துக்கொண்டே இருக்கலாம். எனக்கு ஆரோவில்லில் உள்ள என் நண்பர் கூறிய கதை ஞாபகத்திற்கு வந்தது: இயற்கை வேளாண் தந்தை ஃபுகுவோகா அவர்கள் இந்தியா வந்த பொழுது, இங்கு பாண்டிசேரியை அடுத்து உள்ள ஆரோவிலுள்ள ஒரு இயற்கை பண்ணையில் அவரிடம் ஒரு ஓற்றை நாற்றை (ஆம்- ஃபுகுவோகாவிற்கே ஒத்தை நாற்று!) கொடுத்த பொழுது, அவர் அதனை உற்று நோக்கி, உடன் - அது எவ்வளவு நாள் பயிர், என்ன ரகம் (சன்னமா, குண்டா, சம்பா/கார் போன்று), எவ்வளவு நாள் நாற்று, நாற்று மாற்றி நட்டு எவ்வளவு நாள், என்று ஒரு மந்திரவாதியை போல் கூறிறினாராம். மேலும் எவ்வளவு நாட்களுக்கு முன் தண்ணீர் பாச்சப்பட்டது என்றும் அதில் யூரியா அதிகம் இருந்தது என்றும் குறிப்பிட்டாராம். ஆனால் அது ஒரு இயற்கை பண்ணையிலிருந்து வந்தது, யூரியா இருக்க முடியாது என்பதை அவரிடம் எப்படி மறுப்பது என யோசித்து அந்த பண்ணையில் வேலை செய்தவரை கேட்ட போது, இந்த் நாற்று பறித்த‌ இடத்தில் கோமியம் கலன் வைக்கப்பட்டு கசிந்து இருந்தது என்றும் அதனால் நைட்ரஜன் அதிகமாக காணப்பெற்றிருக்கலாம் என்று நண்பர்கள் கண்டு கொண்ட‌தாக கூறுவார்.

நமது நாயகன் தேபல் தேப் அவர்களும் அப்படியே! பார்வையிலேயே பல குணாதிசயங்களை குறிப்பிடுவார், ரகங்களை பிரித்தறிவார். இவர் விவசாயிகளிடமிருந்து பெரும் ஒவ்வொரு ரகத்திற்கும் சீராக சரியாக பிரித்தெடுக்க, 2 வருடம் வேண்டும் . பல ரகங்கள் ஒரே ரகத்தினுள் கலப்படமாகி இருப்பது ஒரு பெரும் பிரச்சினை. கண் தேர்வு, விதை தேர்வு (seed selection), ரஃபிங் (Roughing) போன்ற பல வழி முறைகளை கையாண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும். இவற்றில் பல நுட்பங்களையும் இவர் விவசாயிகளிடமே கற்றார். 'பல்கலைகழகங்களில் அல்ல' என்று பெருமையாக சொல்கிறார் இந்த பேராசிரியர்! ஆனால் மிகவும் வேதனையுடன் அவர் தெரிவிப்பது 'இன்று புத்தகஙகளில் இந்த நுட்பங்கள் காணப்படுவதில்லை. பெரும்பான்மையான விவசாயிகளுக்கும் இவை பற்றி தெரிவதில்லை”. ஓவ்வொரு ரகம்/செடியும் ஒவ்வொரு ஆண்டும் 6 பருவங்களை கடக்க வேண்டும். நாற்று, கீழ் இலை நிறம், ஐந்திலை பருவம் முதலியன கடந்த உடன் அதன் மரபீனி குணம் நிர்ணயிக்கப்படுகிறது. பின்னர் நாற்று நட்ட 7ஆம் நாள் குருத்துக்களிடையிலான நிறம் சரி பார்க்கப்பட்டு, 2ஆம் வாரம் இலைகளின் எண்ணிக்கை மற்றும் 7 இலை பருவம் கண்காணிக்கப்படுகிறது. இந்த நிலையில் 7 இலை இல்லாத செடிகள் (6 அ 8 இலைகள் கொண்டவை ) நீக்கப்படுகின்றன. அதன் பின் ஒவ்வொரு ரகத்திற்கும் , பூக்கும் பருவம் மற்றும் பால் சுரக்கும் நாள் குறிக்கப்படுகிறது. இவை தவிர பருவ கால மாற்றங்களும் (புது) பூச்சிகளின் வரவும் பதிவு செய்யப்படுகின்றன. இவை அனைத்தையும் செய்வது இவரின் இருவர் கொண்ட படையே!

2 x 2 மீட்டரில் ஒவ்வொரு ரகமும் பயிர் செய்யப்பட்டு, மிகவும் அறிவியல் பூர்வமாக விளைவிக்கப்பட்டு பின் நேர்த்தியாக சேமிக்கப்பட்டு மற்ற விவசாய பெருமக்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இந்த 2மீ x 2மீ நிலத்தில் 2 மாதம் முதல் 6 மாதம் வரை வயதுடைய பல்வெறு ரகங்களும் விளைவிக்கப்பட்டு 1 முதல் 2.5 கிலோ வரை அறுவடை செய்யப்பட்டு, இவர்களது சேமிப்பிற்கு/ பெருக்கத்திற்கு 60 கிராம் போக மீதி விவசாயிகளிடம் பெருக்கத்திற்கு கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு ரகத்தையும் இவர் குறியீடு செய்து வெறும் எண்களாக சேமித்து வைப்பது ஒரு அலாதி அழகு.

வேண்டாதவர்களின் கைக்கு எளிதாக செல்லாத வண்ணம் குறியீடுகளாக மட்டுமே சேமிக்கப்படுகின்றன. மெலும் கதிருடன் அப்படியே விதைகளை சேமிக்கிறார்; பின்னர் எந்த குழப்பமும் வராமல் இருக்க, மிகுந்த அக்கறையுடன், அறிவியல் பூர்வமாக எல்லாவற்றையும் சேமித்து வைக்கிறார். ஒவ்வொரு செயலும் ஒரு பரிசோதனைச் சாலையை விட நேர்த்தியாகவும், அறிவியல்பூர்வமாகவும், முனைப்புடனும், அக்கறையாகவும் செய்யப் படுகின்றது. இவ்வாறு காக்கப் பட்ட விதைகள் பல்வேறு விதை திருவிழாக்களின் மூலம் விவசாயிகளை சென்றடைகிறது. அவற்றில் பல வரட்சி தாங்ககூடியவை, சில வெள்ளம் தாங்ககூடியவை, உவர் நிலங்களில் வளருபவை, உப்பு நீரில் வளரக்கூடியவை போன்றவை.

இவரது தந்தை இவரது சிறு வயதில் ஒரு முறை, ஒரு பெரும் செல்வந்தரின் வீட்டிற்கு அழைத்து சென்றார். பின் வீட்டிற்கு வரும் வழியில், “இந்த பணக்காரரின் வீட்டை பார்த்தாயா? உன்னை எதற்கு இங்கு அழைத்து வந்தேன் தெரியுமா? இதை போல் நீ என்றும் வரக்கூடாது. இந்த ஆடம்பரம் தவறு. தேவையற்றது' என்று கூறியவை இன்று வரை இவரது வாழ்வில் பிரதிபலிக்கிறது. இன்றளவும் மின் மற்றும் ஆழ் துளை கிணறு போன்ற எதுவும் இல்லாத மண் வீட்டில், மிகவும் எளிய ஆனால் சிறப்பான வாழ்க்கையை மேற்கோண்டுள்ளார். நண்பர்கள் மற்றும்ஆர்வலர்கள் பண உதவி செய்வதற்கு முன்வந்தாலும் ஏற்றுகொள்ள மறுக்கும் இவர், மிக சிறிய மூலதனத்தில் செய்தால் தான் நம் (சிறு)விவசாயிகளுக்கு நம்பிக்கை வரும் என்கிறார். தன் எண்ணற்ற திறமைகள் எவற்றையுமே சுயநலமாய்ப் பணம் பண்ணப் பயன் படுத்தாதது இவரின் சிறப்பு.

இங்கு ஒடிஷாவிற்கு வந்த பிறகு, இங்கும் மண் வீடு தான் கட்டினார். நம் தாளாண்மை இதழில் கூறியது போன்ற 'adobe' என்னும் அச்சு மண் வீடு. இதற்கும் அவருக்கு சில நெருக்கடிகள்; இவர் வாழும் இந்த பகுதி மொத்தமும் மூங்கிலே கிடைக்காது. காரணம் ஜே கே காகித ஆலை என்னும் - ஒரே ஒரு பெருநிறுவனம். இந்தப் பகுதியில் இருந்த அனைத்து மூங்கில் மரங்களும் வெட்டப்பட்டு அந்த ஆலைக்கே கொடுக்கப்பன. கூரைக்கு மூங்கில் இல்லாத‌தால், சிமென்ட், ப்ளாஸ்டிக் இல்லாமல் இயற்கைக் கூரை அமைப்பது எப்படி? அதற்கும் இவர் மண்ணாலேயே ஒரு தீர்வு கண்டார். அச்சுமண் கற்களை வைத்து Dome என்ற கூண்டு அமைப்புடன் வீடும் விதை சேகரம் செய்யும் இடமும் செய்துள்ளார்.

இப்படியெல்லாம் முனைந்து ஒரு பெரும் காரியம் இவர் செய்வதை சமூகமும் அரசும் போற்றுகின்றனவா? இல்லை! பல இன்னல்களைத்தான் கொடுக்கின்றன. இவர் வங்காளத்தில், காட்டிலாக்காவின் அனுமதியுடன், ஒதுக்கப்பட்ட காட்டுப்பகுதியில் (reserve forest), இவரது பசுதா பண்ணைக்கு அருகில் ஒரு பன்மய காட்டினை உருவாக்கி வந்தார். ஒருமுறை இவர் வெளியூர் சென்ற் பொழுது, இதயமற்ற காட்டிலாக்கா அதிகாரி ஒருவர் எல்லா மரங்களையும் வெட்டி விற்று விட்டார்! இவர் அதனைக் கண்டித்து ஒரு பொது நல வழக்குத் தொடர்ந்தார்.பல கோடிகள் பெருமானம் உள்ள அந்த 'வியாபாரத்தில்” மேல்மட்டம் வரை பாய்ந்ததால், காட்டிலாக்கா இவர் மேல் ஒரு சித்தரிப்பு வழக்கு ஒன்றைப் போட்டு இவரது வழக்கைத் தள்ளுபடி செய்ய வைத்து, இவரை இன்றும் வழக்காடு மன்றத்திற்கு இழுத்தடித்துப் பல இன்னல்களுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கிறது.

(அவர் செய்த மேலும் பல அற்புத காரியங்களும், வேதாந்தா என்னும் சுரங்க அரக்கனை விரட்டியது, அவர் எழுதிய‌ 'developmentality' என்னும் ஒரு சிறந்த ஆங்கில புத்தகம், பல பழங்குடியினருடன் சேர்ந்து அவர்களது பாரம்பரிய வாழ்முறைகளை மீட்டது, மேற்கு கடற்கரைகளில் மீனவர்களின் மக்கள் வளர்ச்சி ஆராய்ச்சி (anthropology), காட்டிலாக்காவினால் நாட்டிற்கு விளைந்த நட்டம், தேசீய உயிர் பன்மயதிற்கு அவரது பங்கு, மற்றும் பல அடுத்த இதழில்)

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org