தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தாளாண்மை வாசகர் சந்திப்பு

“ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி” என்று தாளாண்மை ஆசிரியர் குழுவில் யாரும் பாட முடியாது. ஏனெனில் தாளாண்மை வாசகர்களில் பெரும்பான்மையானவர்களை நாங்கள் பார்த்ததே இல்லை! எழுத்தாளர்களே ஒருவருக்கு ஒருவர் சந்தித்துக் கொண்டதில்லை. இந்த நிலையை மாற்றவும், வாசகர்களின் கருத்துக்களை நேரடியாகக் கேட்டறியவும், திருச்சியில் ஏப்ரல் 21ஆம் நாள் ஞாயிறு அன்று தாளாண்மை ஆசிரியர் குழு தம் வாசகர்களுடன் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது. தமிழகத்தின் எல்லாப் பகுதிகளில் இருந்து 40க்கும் அதிகமான வாசகர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி ஒரு நண்பர்கள் குழு விவாதம் போன்றதொரு வித்தியாசமான அணுகுமுறையுடன் திறம்பட நடத்தப்பட்டது.

மூன்று காரணங்களுக்காக இக்கூட்டம் கூட்டப்பட்டது.

1. தாளாண்மையின் வாசகர் வட்டம் தற்போது சிறியதாயினும் (400 +), பெரும்பான்மையான வாசகர்கள் அதில் தீவிர ஈடுபாடு கொண்டவர்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளவும், எழுத்தாளர்களோடு கலந்துரையாடவும் , அவர்கள் எதிர்பார்ப்புக்களைக் கண்டறிவதும் முதல் காரணம்.

2. விளம்பரங்களே இல்லாமல், லாப நோக்கு எதுவும் இன்றித் தற்சார்பாக நடக்கும் தாளாண்மை இதழ் தற்போது முழுக்க, முழுக்கத் தன்னார்வலர்களால் நடத்தப்பட்டு வருகிறது. தாளாண்மை இதழ் தயாரிப்பில் உள்ள பல வேலைகளையும் தன்னார்வலர்களைக் கொண்டே நிறைவேற்ற மேலும் பல கரங்கள் தேவைப்படுவதால், அதில் வாசகர்கள் பங்களிப்பைக் கண்டறிவது இரண்டாவது காரணம்.

3. இதற்கு ஒரு படி கடந்து, தாளாண்மை இதழில் அச்சிடப்படும் செய்திகளைக் கொண்டு, செயல் திட்டங்கள் வரைந்து , அண்மையில் உள்ள ஆக்கப் பணிகளில் ஈடுபட முனைவது (உதாரணமாக, மதுராந்தகம் ஏரியைப் பற்றியும் அதன் தற்போதைய பிரச்சினைகளையும் ஆராய்ந்து ஒரு கட்டுரை வெளி வந்தால், அப்பகுதியில் உள்ள‌ வாசகர்கள் கூடி அதன்பயனாக ஏதேனும் செயலாற்ற முனைவது) மூன்றாவது காரணம்..

ஒருவருக்கொருவர் அறிமுகத்துடன் இந்த நிகழ்ச்சியை திரு அனந்து அவர்கள் தொகுத்து வழங்கினார். தமிழகத்தின் இயற்கை விவசாய ஆசான் திரு.சுந்தரராமன் அவர்கள் கலந்து கொண்டது தனிச் சிறப்பு. எழுத்தாளர்களாய் திரு சுந்தரராமன், ராம், சித்தார்த், ஜெய்சங்கர் ஆகியோரும், ஆசிரியர் குழுவின் சார்பில் பாமயன், அனந்து, பாலாஜி சங்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர். தற்சார்பு இயக்கக் களப் பணியாளர்கள் குமாரி, ராணி ஆகியோரும் கல்ந்து கொண்டனர். கவிஞர் செல்வமணியும், எழுத்தாளர் ராமகிருட்டிணனும் வேலைப்பளு காரணமாகக் கலந்து கொள்ள இயலாதது வாசகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

தாளாண்மை ஆசிரியர் திரு.பாமயன் தாளாண்மை உழவர் இயக்கம் மற்றும் தாளாண்மை இதழின் 10 ஆண்டு வரலாற்றைப் பகிர்ந்து கொண்டார். பின்னர் 2011ல் திண்டுக்கல் காந்திகிராமில் தற்சார்பு இயக்கம் துவங்கப் பட்டதும் அதன்பின் தாளாண்மை இதழின் பயணமும் விவாதிக்கப் பட்டன‌. இதுவரை 14 இதழ்கள் 16 மாதத்தில் தற்சார்பு இயக்கத்தின் நிர்வாகத்தில் வெளிவந்துள்ளது. இந்நிலையில், புதிய சந்தாதாரர்கள் பெரும்பகுதி நுகர்வோராகவும், ந‌கரங்களில் உள்ளோராகவும் அமைந்து விட்டதால் தாளாண்மை இதழ் விவசாய இதழாக அன்றி தற்சார்பு வாழ்வியலைப் பரப்பும் இதழாக உருமாற்றம் பெறலாயிற்று.

திரு பாலாஜி ச‌ங்கர் அவர்கள் தாளாண்மை இதழின் அடிப்படைக் கொள்கையான மாற்று வாழ்முறையை விளக்கினார். காந்தி, குமரப்பா கூறிய நிலைத்த பொருளாதாரமும், சூழல் சுவட்டைக் குறைக்கும் இயற்கையோடிசைந்த வாழ்வும் தேடுவதே தாளாண்மையின் அடிப்படைக் கொள்கை. தமிழில் தற்சார்பு வாழ்வியலைப் பரப்பும் ஆதார‌பூர்வமான‌ இதழ்கள் இல்லையென்றும், இல்வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம், பொழுதுபோக்கு இவை யாவும் இப்போது சந்தைப் பொருட்களாய் விலை போவதால், இவற்றிற்கு எளிமையான மாற்றுக்களைக் கண்டறிவதும், அச்சிடுவதும் தாளாண்மையின் முதல் கடமை என்றார்

தற்சார்பு இயக்கமும், தாளாண்மையும் சார்பற்றவை - எந்த இன, நிற, மத, மொழி வேறுபாடுகளுக்கும் இடமின்றி எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் நிறை என்று மனித நேயத்துடன் , உயிர்ம நேயத்துடன் செயல்படுபவை. உலகின் பல்வேறு இடங்களில் நடக்கும் தற்சார்பு முயற்சிகளை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வருவது, தற்சார்பில் வென்ற பற்பல செயல்வீரர்களை அறிமுகப்படுத்துவது, தற்சார்பு வாழ்வியலைத் தமிழ் அறிந்தோரிடம் பரப்புவது இம்மூன்றும் நம் நோக்கம். இயற்கை வேளாண்மை என்பது தற்சார்பு வாழ்வியலின் ஒரு அங்கம். கிராமப்புற அண்மைத் தொழில்கள் இன்னொரு முக்கிய அங்கம். அழியும் பாரம்பரியத் தொழில்நுட்பங்களை மீட்பது, இயற்கையோடிசைந்த விஞ்ஞானம் வளர்ப்பது போன்று நிறையப் பொறுப்புகள் தற்சார்பு இயக்கத்துக்கு உள்ளன. இயற்கை விவசாய உத்திகளையும், உழவர் தொழில்நுட்பங்களையும் கையேடுகளாக அச்சிட்டு குறைக்கப்பட்ட விலையில் உழவர்களுக்கு அளிக்கும் திட்டத்தில் தற்சார்பு இயக்கம் ஈடுபட்டுள்ளது.

மையப் படுத்தப் பட்ட, உலகமயமாகிற‌ பொருளாதார சூழலில் நலிந்தோர் நலிவதும், வலுத்தோர் மேலும் வலுப்பதும், கிராமங்கள் களையிழந்து எல்லோரும் நகரம் பெயர்வதுமாய் உள்ள நிலைமையில், கிராம மறுமலர்ச்சி என்பது மிக அவசியமாகிறது. உழவையும், சிறு தொழிலையும் மீட்கவும், சுரண்டலைத் தடுக்கவும் கிராம‌ சுயராஜ்ஜியமும், தனி மனிதத் தற்சார்பும் பெருமளவில் பரவ வேண்டும். வாழ்வின் அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை, வீடு, கல்வி, தொழில், மருத்துவம், கலை போன்ற அனைத்திற்கும் மாற்று விடைகளைக் கண்டு, தற்காலத்திற்காகவும், எதிர்கால சந்ததியினருக்காகவும், அவற்றை அச்சில் பதிக்கும் ஒரு இதழ் தமிழில் தேவைப்படுகிறது. இந்த வெற்றிடத்தைப் பூர்த்தி செய்யும் இதழாக இருப்பதே தாளாண்மையின் நோக்கம்.

அதன் பின்னர் இதழ் வெளிக்கொணர்வதில் உள்ள நடைமுறை சிக்கல்களை விவரித்து வாசகர்களின் கோணத்தில் அவர்களின் எதிர்பார்ப்புகளையும் எந்த வாசகர் இதழ் தயாரிக்கும் பொறுப்பில் எந்த பணியை, தாமாகவே முன் வந்து ஏற்றுக்கொள்கின்றனர் என்ற விவரங்களையும் சேகரித்த பின்பு மதிய உணவுடன் சந்திப்பு இனிதே நிறைவடைந்தது.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org