தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மாறி வரும் மத்தியப் பிரதேசம் - ராம்

பாரஸ் வாடா, மத்திய பிரதேசத்தின் மண்டலா மாவட்டத்தில் உள்ள, பெரும்பாலும் பழங்குடியினர் வாழும் ஒரு பகுதி. அதை சுற்றியுள்ள ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் உற்பத்தி செயப்படும் பொருட்கள் இந்த ஊர் சந்தையில் ஒவ்வொரு வாரமும் பெரிய அளவில் விற்பனை செய்யபடுகின்றது

இந்த பரபரப்பான மக்கள் குழுமியிருக்கும் சந்தையில், ஒரு கோடியில், இரண்டு சிறு லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த இரு லாரிகளின் ஒரு பக்கம் முழுவதும், நவீன பானர்கள், “இயற்கை விவசாயம் செயல் முறை” என்று பல விளக்கப்படங்கள் மற்றும் அவைற்றை விளக்கும் விதத்தில் சிறு வாக்கியங்கள். இந்த லாரிகளின் கீழே, வரிசையாக தங்கள் விலை பொருட்களை விற்பனை செய்யும் இயற்கை விவசாயிகள் வீற்றிருக்கின்றனர்

அதே சந்தையில் விற்பனையாகும் பொருட்களை, கிலோவிற்கு ஒரு ருபாய் முதல் ஐந்து ரூபாய் வரை, சந்தை விலையை விடக் கூடுதல் விலையில் பெருமையாக இந்த இயற்கை விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்; விற்பனை ஆகிறது.

சாதாரண கிராமத்தைச் சேர்ந்த பெண்களும், ஆண்களும், குடும்பமாக சந்தைக்கு வரும் சிலரும் நேராக இவர்களை நோக்கி வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். 'எங்களிடம் ஒரு முறை வாங்கினால், நிச்சியமாக மீண்டும் எங்களை எதிர்பார்கிறார்கள்”, என்று பெருமையாக இந்த விவசாய பெண் வியாபாரிகள் கூறுகின்றனர்.

நாட்களாக நீங்கள் எல்லாம் எங்கு இருந்தீர்கள்? எங்கு இருந்து திடீரென்று முளைத்தீர்கள்?”, என்று இங்கு உள்ள பழைய வியாபாரிகளே வியப்பில் கேட்கும் அளவில் இவர்களது வியாபாரம் சிறிது நாட்களிலேயே சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

600 பெண்களுக்கும் மேற்பட்ட, விளைவிப்போரே நேரடியாக விற்பனை செய்யும் இயற்கை விவசாய சந்தைப்படுத்தும் முயற்சியில்”தூடி” என்னும் குக்கிராமத்தை சேர்ந்த பெண்களும் ஒரு அங்கத்தினர். பரஸ்வாடா போன்று அந்த பகுதியில் உள்ள மூன்று பெரிய சந்தைகளுக்கு தங்கள் விளை பொருட்கள் சென்றடைவதாக பெருமையுடன் தெரிவிக்கும் இந்த கிராமத்தை சேர்த்த பெண்கள், இதன் மூலம் தாங்கள் நல்ல வருமானம் ஈட்டியதன் சாட்சியாக தங்கள் வங்கி கணக்கு புத்தகத்தை பெருமையுடன் காண்பிக்கின்றனர்.

நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ள இந்த கிராமத்தில், ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில், நதிக்கரையில் உள்ள 80 ஏக்கர் நிலத்தை பாசனத்துறை, இதே ஊரைச் சேர்ந்த 80 குடும்பங்களுக்கு தலா ஒரு ஏக்கர் என்கின்ற விகிதத்தில், மிகச் சொற்ப விலையில் குத்தகைக்கு விடுகிறது. இந்த ஒரு ஏக்கர் நிலத்தில் தான் எத்தனை விதமான விளைச்சல்? கத்திரி, மிளகாய், அவரை, வெண்டை, கீரை வகைகள் என்று பலவிதமான காய்கறிகளை இந்த ஊரின் பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த மக்கள் பெருமையாக விளைவித்து வருகின்றனர். ஒரு சிறு பூசணிக்காய் அளவிலிருக்கும் இவர்களது பாரம்பரிய கத்திரிக்காயை மிகப் பெருமையாக காண்பிக்கின்றனர் இந்த “கொண்டி” சமூகத்தை சேர்ந்த மக்கள்.

இந்த ஊரில், இந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குத் தேவையான விவசாய உபகரணங்களும் ஒரு வங்கியை போல் நிறுவப்பட்டு, சிறிய வாடகைக்கு இவர்களுக்கு வழங்கப்படுகிறது

எப்படி இந்த மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன? யார் இந்த முயற்சியை வழிநடத்துகின்றனர்?

“நாங்கள் இயற்கை விவசாயத்தின் மூலமாக, மக்களுக்கு நல்ல வருமானமும் உடல்நலமும் ஏற்படும் என்று நம்புகிறோம், அதனாலேயே இந்த முயற்சியை இரண்டு வருடங்களாக பல தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் ஏற்படுத்தி நடத்தி வருகிறோம்”, என்கிறார், இந்த மாவட்டத்தின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (National Rural Livelihood Mission) தலைவரான, மனோஜ் ஜெயின். நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த முயற்சி நடந்து வருவதாக இவர் தெரிவிக்கின்றார்

நிலத்தை மேம்படுத்துவதில் துவங்கி இடுபொருட்கள் தயாரிப்பது மற்றும் பூச்சி விரட்டி மருந்துகள் தயாரிப்பது வரை அனைத்து தொழில் நுட்ப பயிற்சிகள் இவர்களுக்கு அரசாங்கமே அளிக்கிறது. மற்றும் இவர்கள் விளை பொருட்களை சந்தைக்கு எடுத்து செல்வதற்கான லாரிகளை கடன் உதவியாகவும் அளித்துள்ளது.

சவர் ஜோடி என்னும் மற்றொரு ஊரை சேர்ந்த பெண் விவசாயி கூறுகின்றார், “எங்களுக்கு இயற்கை விவசாய முறைகள் மிகவும் பிடித்துள்ளது, முன்னர் நாங்கள் மிக தூரத்திற்கு சென்று ரசாயன உரங்களை அதிக விலையில் வாங்கி வந்து, அதன்மூலம் எங்கள் சருமத்திற்கு ம் உடலுக்கும் கெடுதல் வந்ததையும் பொருட்படுத்தாமல் விவசாயம் செய்தும், பெரிதாக ஒன்றும் பொருள் ஈட்ட முடியவில்லை”.

இன்று? “எனக்கு தேவையான இடுபொருட்களை நானே தயாரித்து கொள்கின்றேன், உடல்நலத்திற்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை, நல்ல வருமானமும் கிடைக்கின்றது”, என்று பெருமை பட்டுக்கொள்ளும் இவர் தனது மகளை வாஞ்சையுடன் நம்முன் நிறுத்தி, “இவள நல்லா படிக்க வைக்கணும்”, என்னும் போது, இந்தியாவின் பெரும்பாலான தாய்மார்களின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துவதாகவே தோன்றியது. “எங்க ஊருக்கு வந்து, எங்கள் ஊரில் உள்ள தாய்மார்களிடம் உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்வீர்களா?” என்ற கேள்விக்கு, “நிச்சயமாக!” என்று உற்சாகமான புன்னகையுடன் பதிலளிக்கின்றார். “உங்க ஊரு நாக்பூருக்கு பக்கமா?” என்று கேட்கிறார். இவர்களுக்கு தெரிந்த மிக தூரமான ஊர் என்றால் அது நாக்பூர் மட்டுமே (அங்கிருந்து ஏறத்தாழ 200கி. மி. தூரத்தில் உள்ளது நாக்பூர்). சென்னை நாக்பூரிலிருந்து இன்னும் ஒரு இரவு முழுவதும் தொடர்ந்து பயணிக்கவேண்டும் என்று பக்கத்தில் உள்ளவர் தெரிவிக்க, “அம்மாடியோவ்! அவ்வளவு தூரமா, நான் வரம்மாட்டேம்பா!” என்று சிரித்துக்கொண்டே மறுக்கின்றார்.

பெருமை, நிம்மதி, சந்தோஷமான முகங்கள், குப்பை நிறையா கிராமங்கள்…இவற்றை பார்த்தபடி நாம் அங்கிருந்து விடைபெறும்பொழுது நம் நினைவில், அவர்களின் லாரியில் பெருமையுடன் எழுதியுள்ள வாக்கியம் நினைவில் ஆதிக்கம் செய்கின்றது - “தேசி பாடி ந செக்கா?”, “நமது பாரம்பரிய கத்திரிக்காயை சுவைத்ததில்லையா?” என்னும் பொருள் படும் இந்த வாக்கியத்துடன் அவர்கள் தங்கள் வியாபாரத்தை துவங்குகின்றனர். எத்தனை உண்மை! நமது பாரம்பரிய உணர்வுகளை, இந்த 'கொண்டி' பெண்களின் பெருமையிலும், ஆழ்ந்த நம்பிக்கையிலும் காண முடிகின்றது…இதன் சுவையில் திளைக்கும் பொத்து, எதிர்காலம் பிரகாசமாகவே தெரிகின்றது. ஆம்! மத்தியப்பிரதேசத்தில் மாற்றம் ஏற்பட்டுவருகின்றது…நாம்?

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org