தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

புதிய புலவர்கள் - 01 - வழிப்போக்கன்

இயல்பாய் உள்ளதை உள்ளபடி அறிவது அறிவியல். பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் புத்தம் புதிய கலைகள், உண்மையான ஆர்வத்தினால் உருவாகி வளர்ந்தன. இந்தியாவின் ஜகதீச சந்திர போஸ், ஆப்பிரிக்க-அமெரிக்கரான ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர், காந்தியின் சீடரான சதீஷ் சந்திர தாஸ் குப்தா போன்ற மிகப் பெரிய அறிவிலாளர்கள் 'காசு நம் பால் செல்லாதடா' என்று லாப நோக்கைப் புறக்கணித்துத் தங்கள் வாழ்நாளை அறிவியல் தேடலுக்கும் சுயநலமற்ற சேவைக்கும் அர்ப்பணித்தனர். அதன் பின் வந்த அறிவியல் வரலாற்றைப் பார்த்தால், சுயநலமான விஞ்ஞானிகளாயினும், தங்கள் கல்வியைச் செல்வமாக்கினாலும், தங்கள் அறிவுத் தேடலில் ஒரு திடமான நேர்மையும், கண்ணால் காண்பது மட்டுமே மெய் என்று தங்கள் பரிசோதனைச் சாலை முடிவுகளை அப்படியே குறித்தும், பிரசுரித்தும் விஞ்ஞானிகள் மேல் ஒட்டு மொத்த மனித இனத்திற்கும் ஒரு பற்றும், மரியாதையும் ஏற்படும்படி நேர்மையாய் இருந்தனர்.

மானுடத்திற்கு என்ன இன்னல் வந்தாலும், 'ந‌ம் விஞ்ஞானிகள் விடை கண்டு விடுவார்கள்', என்ற அசையாத நம்பிக்கை இருந்தது. ஆனால் இன்றோ, விஞ்ஞானிகள் விடைகளைக் காண்கிறேன் என்ற பெயரில் பல புதிய குழப்பங்களையும், கேள்விகளையும் உருவாக்கி விடுகிறார்கள். சில மாதங்களுக்கு முன் தாளாண்மையில் நம் எழுத்தாளர் ராம், 'தொழில்நுட்பத்தின் தர்மம் என்ன' என்ற ஒரு மிக முக்கியமான கேள்வியைக் கேட்டார். அறிவியலும், தொழில்நுட்பமும் தர்மம் என்ற ஒன்றை ஏற்றுக் கொள்வதில்லை. Curiosity எனப்படும் ஆர்வம் மட்டுமே எங்கள் தர்மம் - தோன்றும் திசையில் எங்கள் தேடலைச் செலுத்துவோம்; வரும் விடைகளைச் சொல்வோம். அதனுடன் எங்கள் பொறுப்பு முடிந்தது என்று ஒரு இறுமாப்புடன் விஞ்ஞானம் செலுத்தப்படுகிறது. Applied Science என்று சொல்லப்படும் பிரயோக அறிவியலோ, பலனை நோக்கியே தேடலைச் செலுத்துகிறது. ஆளுமையின் கருவியாக அறிவியல் மாறி விட்டது; உலகம் வாணிபத்தின் ஆளுமையில் இருப்பதால் தற்போதைய அறிவியல் வாணிபத்தின் கைப்பாவையாகி விட்டது.

இன்றைய அறிவியல் சூழல், வாணிபத்துக்கு எதிரான ஆய்வுகளைப் புறக்கணித்தும், அத்தகைய விஞ்ஞானிகளைப் பல்வேறு விதங்களில் இடர்ப்படுத்தியும், ஆய்வு முடிவுகளை ஏளனம் செய்தும், பொது மக்களிடம் இச்செய்திகளைக் கொண்டு செல்லக் கூடிய ஊடகங்களை அடக்கியும், ஒடுக்கியும், எப்பொருளையும் மெய்ப்பொருள் காண இயலாது ஒரு புகை மண்டலத்தை உருவாக்கியுள்ளது. அறிவியலைத் தொழிலாகக் கொள்ள வேண்டுமானால், பெறும் பன்னாட்டு வணிக நிறுவனங்களை ஆதரிக்கும் ஆய்வுகளைத்தான் மேற்கொள்ள வேண்டிய சூழலில் அறிவியலின் பல பிரிவுகள் உள்ளது.

பண்டைக் காலத்தில், மன்னர்களைப் புகழ்ந்து பாடும் புலவர்களுக்குப் பரிசும், வாழ்வாதாரங்களும் கிடைத்தன.

மிடுக்கிலாதனை வீமனே, விரல் விச‌யனே வில்லுக்கு இவனென்று 
கொடுக்கிலாதனைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரில்லை

என்று சுந்தர‌மூர்த்தி நாயனார், தேவாரத்தில் புலவர்கள் படும் பாட்டை நையாடுவார். இன்றும் புலவர்கள் பலர் இருக்கிறார்கள்; உதவாத, நிரூபணம் ஆகாத‌, அழிவு ஏற்படுத்தக் கூடிய தொழில்நுட்பத்தை இதுவே மனித குலத்திற்குப் பாதுகாப்பு, நம்மை உய்விக்க வந்த மாபெரும் தொழில்நுட்பம் என்றெல்லாம் புகழ் பாடி வயிற்றைக் கழுவும் இப்புலவர்கள் விஞ்ஞானிகள் வேடமிட்டு இருக்கிறார்கள் அவ்வளவே!

இது போன்ற புலவர்களை இனம் கண்டு வெளிச்சமிடும் முயற்சியாக இத்தொடரைத் துவங்கி இருக்கிறோம். அதற்கு முன், தற்கால அறிவியல் எப்படி இனத் தற்கொலைக்கு வழிவகுக்கிறது என்று ஒரு பார்வையாக “இயற்கைச் செய்திகள்” (Natural News) என்ற பத்திரிக்கையில் மைக் ஆடம்ஸ் எழுதிய கட்டுரையின் முதல் பகுதியை வெளியிடுகிறோம்.கட்டுரை ஆசிரியர் அறிவியலாளார் என்று சொல்வது இந்தப் புலவர்களைத்தான் - உண்மை விஞ்ஞானிகளை அல்ல‌!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org