தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


பிணம் தின்னும் சாத்திரங்கள்!

பல அறிவாளிகளால், சேவை மனப்பான்மையுடன் உருவாக்கப்பட்ட‌ இந்திய‌ அரசியல் சட்ட அமைப்பு (Constitution) பற்பல அடிப்படை உரிமைகளைத் தனி மனிதனுக்கும், பஞ்சாயத்துக்களுக்கும், மாநிலங்களுக்கும் வகுத்துள்ளது. எல்லோரும் நல்லவர்களாய் இருந்தால் அரசே தேவையில்லை; 'உண்மையில்லை பொய்யுரை இலாமையால்' என்று கம்பன் கற்பனை செய்தது போல், பூட்டும், போலீசுக்காரனும் இல்லாமல் அனைவரும் இருக்கலாம். எல்லோரும் தீயவர்களாய் இருந்தால் அரசே சாத்தியமில்லை - சட்டத்தை கடைப்பிடிக்க யாரும் இல்லாத போது சட்டம் என்ன செய்யும்? பெரும்பான்மையான மக்கள் நல்லவர்களாய், சட்டம் ஒழுங்கைக் கடைப்பிடிப்பவர்களாய், அமைதியை விரும்புவோர்களாய் இருப்பதால்தான் ஆட்சியில் யார் இருப்பினும், தர்மம் என்ற ஒன்று நம்மை இட்டுச்சென்று கொண்டிருக்கிறது. இப்போது அந்த அடிப்படை அமைதிக்குப் பெரும் கேடு நிகழ்த்தப் பட்டுக் கொண்டிருக்கிறது.

இதற்கு முன் பல முறை பாராளுமன்றத்தில் கொண்டுவர முயற்சி செய்யப்பட்டு இயலாமல் போன BRAI சட்ட வரைவு இம்முறை 21 - 04 - 2013 அன்று கொண்டுவரப்பட்டுள்ளது. BRAI (Biotech Regulatory Authority of India) என்னும் மரபீனித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையம் என்ற ஒன்றை உருவாக்கி அதற்கு வானளாவிய அதிகாரம் அளிக்கும் முயற்சி இது. விவசாயத்தை நேரடியாகப் பாதிக்கும் இம்மசோதா, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் கொண்டு வரப்பட்டது இன்னொரு விந்தை! இந்திய அரசியல் சாசனப்படி விவசாயம் என்பது மாநிலங்களின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இம்மசோதா சட்டம் ஆனால், மாநிலங்களின் அதிகாரத்தை மீறி, சுற்றுச் சூழல் அமைச்சகம், வேளாண் அமைச்சகம், வனத்துறை போன்ற பல அங்கங்களின் அதிகாரத்தைப் புறக்கணித்து மரபீனி விதைகளை அங்கீகரிக்கும் ஏகபோக அதிகாரம் அறிவியல் அமைச்சகத்தின் அங்கமான இந்த ஆணையத்திடம் சென்றடையும்.

இதனால் நேரடியாகப் பயனடைவது விவ‌சாயிகளோ, பொது மக்களோ அல்ல. மன்சான்டோ நிறுவனமும், அதன் நிழலில் இருக்கும் அரசியல்வாதிகளும், விஞ்ஞானிகளும் மட்டுமே! தொழில்நுட்பத்தை வளர்க்க வேண்டிய தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழேயே, பெரும் சர்ச்சைக்குள்ளான, இக் கேள்விக்குரிய, தொழில்நுட்பத்தை ஒழுங்காற்றும் ஆணையம் உள்ளது பூனைக்குத் தோழனையே பாலுக்குக் காவலாய்ப் போட்ட விதமாக இருக்கிறது. நம் பாரத தேசத்தின் பல்லுயிர்ப்பன்மையமும், இயற்கை வளங்களும் மரபீனி விதைகள் வந்தால், மீட்க இயலாத அழிவிற்குச் சென்று விடும். மரபீனி விதைகளால் உற்பத்தி பெருகவே இல்லை என்று பல நடுநிலை ஆய்வுகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. எனினும் நம் அரசும் அமைச்சர்களும் பெரும் பிடிவாதத்துடன் மன்சான்டோ நிறுவனத்தை வெளிப்படையாக ஆதரித்து வருகிறார்கள்.பாராளுமன்ற வேளாண் குழு மற்றும் உச்ச நீதி மன்றத்தின் நிபுணர் குழு மரபீனித் தொழில்நுட்பம் நமக்குத் தேவையே இல்லை என்று திட்டவட்டமாகக் கூறிய பின்னரும் அதை அரசு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

“பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் ” என்றான் மகாகவி. அர‌சாட்சியில் பேய்கள் இருந்தால், சாத்திரங்கள் பிணம் தின்பதைச் சட்டபூர்வம் ஆக்கிவிடும் என்பது பொருள். த‌ற்போது நம்மை மனிதர்கள்தான் ஆள்கிறார்கள். ஜனநாயகம் என்ற பெயரில் நாமே தேர்ந்தெடுத்த‌தாய் நாம் நம்பிக் கொண்டிருக்கும் மனிதர்கள்தான் ஆட்சியில் இருக்கிறார்கள். இருந்தும் நம் அரசியல் சட்ட அமைப்பு பல திருத்தங்களுக்குத் தொடர்ந்து உட்படுத்தப்பட்டு வருகிறது. ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கும் பாமர மக்களுக்கு எதுவுமே புரியாதபடி சத்தமின்றி, யுத்தமின்றி சட்டங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்பது ஒரு சட்ட திருத்தமே; இது போல் பற்பல திருத்தங்கள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து நிறைவேறிக் கொண்டும் அவைக்குக் கொண்டு வரப்பட்டும் இருக்கின்றன. அரசியல் நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளுக்கே கூட இவை பற்றிய தெளிவான புரிதல் இல்லாதபடி இவை வெகு நூதனாமாக நுழைக்கப்பட்டு வருகின்றன.

சட்டம் ஏன் திருத்தப் பட வேண்டும்? அது வேலை செய்யாவிடிலோ, அதில் ஓட்டைகள் அதிகமாகிக் குற்றவாளிகள் தப்பிக்க நேர்ந்தாலோ சட்ட திருத்தங்கள் தேவை. ஒழுங்காக இருக்கும் சமூக அமைப்பில் ஏன் சட்டங்கள் திருத்தப் பட வேண்டும்? பெரும் பணக்காரர்களுக்கும், பன்னாட்டு வாணிப நிறுவனங்களுக்கும் சாதகமாகவே எல்லாத் திருத்தங்களும் இருப்பது ஏன்? கடந்த 10 வருடத்தில் 90 லட்சம் இந்தியர்கள் விவசாயத்தில் இருந்து வேறு தொழிலுக்குப் பெயர்ந்து விட்டனர். பல லட்சம் பேர் விவசாயக் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டு விட்டனர். நம் புதிய சாத்திரங்கள் இந்தப் பிணங்களைத் தான் தின்னச் சொல்கின்றனவா?

நம்மை ஆள்வதற்கு நாம் தேர்ந்தெடுத்தவர்கள் நம்மைச் சந்தையில் விற்றுக் கொண்டிருப்பது ஜனநாயகத்தின் தோல்வி அல்லவா ? இதற்கா நாம் வெள்ளையனை விரட்டி அடித்தோம்?

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org