இருவகை இந்தியர்கள்
ஈசாப்பின் பழைய கதை ஒன்று உண்டு. நரியும் கொக்கும் ஒன்றை ஒன்று விருந்துக்கு அழைப்பதும், நரி அகன்ற தட்டில் கூழைக் கொட்டி கொக்கைச் சாப்பிடச் சொல்வதும் பின் கொக்கு நரியை மறு விருந்துக்கு அழைத்து வாய் நீண்ட பாத்திரத்தில் கூழ் கொடுப்பதும்தான் அது. இதில் கொக்கையோ நரியையோ குறை சொல்வது சரியல்ல. இரண்டின் தேவைகளும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை, முரண்பட்டவை. நம் இந்திய நாட்டு மக்களை நாம் சற்று விலகி நின்று ஒரு விமரிசனப் பார்வையோடு நோக்கினால் நம்மிடையே இரு வகை மக்கள் இருப்பது தெரிய வரும். நகரத்தில் பிறந்து, வளர்ந்து, வெறும் காலால் மண்ணையே மிதித்தறியாத நகரத்து நரிகள் ஒரு புறம்; மண்ணும், மண் சார்ந்த தொழில்களும் வாழ்வாதாரமாகக் கொண்ட கிராமத்துக் கொக்குகள் இன்னொரு புறம். இதில் எண்ணிக்கையில் நரிகள் குறைவாயினும், வலுத்த இனம் அதுதான். ஆள்பவர்கள், திட்டமிடுவோர், நிர்வாகிகள், அதிகாரிகள், ஊடகப் பணியில் உள்ளோர், கல்வி, மருத்துவம், சட்டம்-ஒழுங்கு, நீதி போன்ற இன்றியமையாத துறையில் உள்ளோர் அனைவரும் நரிகளே. கொக்கிற்கும், நரிக்கும் உள்ள உண்மை வேற்றுமை ஆங்கிலப் புலைமையும், ஏட்டுக் கல்வியும், அதற்குச் சமூகத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ள கவர்ச்சியான மரியாதையுமே. உண்மையான உழைப்பிலும் , உற்பத்தியிலும் ஈடுபடும் கொக்குகள் எவ்வித மரியாதையும் இன்றித் தங்கள் குஞ்சுகளை எல்லாம் நரிகளாக மாற்றத் துடிக்கின்றன.