செம்மார்பு குக்குருவான்:
செம்மார்பு குக்குருவான் என்றும் சின்னக் குக்குருவான் என்றும் ஆங்கிலத்தில் coppersmith barbet என்றும் விஞ்ஞானிகளால் Megalaima haemacephala என்றும் பலவாறாய் அழைக்கப்படும் இந்த அழகிய சிறிய பறவைதான் இந்த மாதக் கதாநயகன். கிராமங்களில் மட்டுமன்றி நகரங்களிலும் காணப் படும் இச்சிறு குருவி பல வண்ணங்களுடன் நம் கண்களைக் கவரும் நாயகன்.
தோற்றம்:
சிட்டுக்குருவி அளவில் (15 முதல் 17 செ.மீ) இருக்கும். ஆண், பெண் இரண்டும் ஒரே போல் இருக்கும். சிறகுகள் - பச்சை, மூக்கு - கருப்பு, மூக்கின் மேல் பகுதி சிகப்பு, கண்களைச் சுற்றி - வெண்மையும் கருப்புப் கோடும், கழுத்து மஞ்சள், கழுத்தின் அடிப்பகுதி நீல நிறக் கோடுகளுடன் சிகப்பு, உடல் சாம்பல் நிறம் அதில் கருநீலக் கோடுகள், வால் சிறியதாய் நீல நிறத்தில், கால் பவளம்போல் என்று ஓவியன் ஒருவன் மிகுந்த உழைப்புடன் தீட்டியது போல் இருக்கும்!