தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உழவை வெல்வது எப்படி - பசுமை வெங்கிடாசலம்


ஆஸ்திரேலியாவைத் தாயகமாக கொண்ட பில் மொலிசன் (Bill Mollison) 1928 ஆம் ஆண்டு பிறந்தவர். டாஸ்மானியாவின் அருகிலுள்ள ஸ்டேன்லி என்ற சிற்றூரில் மீன்பிடிக்கும் தொழில் செய்து வாழ்ந்தவர். தனது 42 ஆவது வயதுக்கு மேல் அதிலிருந்து விலகி வேறு தொழில் செய்ய விரும்புகிறார். காரணம் தினம் கடல், மீன், மேலே வானம் சலிப்பேற்படுத்துகிறது. அதனால் பல இடங்களை காண அவர் மனம் விரும்புகிறது. அதற்கு மிகவும் சுலபமான வழி டிரக் டிரைவராக செல்வதென தீர்மானிக்கிறார். டிரக் டிரைவராக செல்வதால் பல இடங்களுக்கு செல்வதுடன் வருவாயும் கிடைக்கும். இப்படி டிரைவராக செல்லும்பொழுது சாலையின் இருபுறங்களில் இருக்கும் காடு, மலை, விவசாய பூமிகளை காணும் வாய்ப்பு ஏற்படுகிறது. அதில் மனம் செல்ல, தாவரவியல் படித்து அதனை அறிய ஆவல் ஏற்படுகிறது. தாவரவியல் படிக்கும்பொழுது சூழலியல் பற்றி அறிய ஒரு மலை கிராமத்தில் தங்க நேரிடுகிறது. அங்கு அவர்களுடன் தங்கியிருக்கும்பொழுது அவர்கள் செய்யும் விவசாய முறை அவருக்கு வியப்பு ஏற்படுத்துகிறது. அந்த மலைவாழ் மக்கள் மிகவும் எளிமையான, மரத்தினால் ஆன பொருட்களைக்கொண்டு விதைப்பது, உழுவது போன்ற வேலைகளை செய்கின்றனர். ஆனால் அதே காலத்தில் சம வெளியில் உள்ள பெரும் பண்ணைகள் பெரும் இயந்திரங்களைக்கொண்டு உழுவதையும் அறுவடை செய்வதையும் நினைவு கூர்ந்து இவ்விரண்டில் உள்ள வேறுபாடு தெரியாமல் குழம்பி அங்குள்ள கிராம தலைவரின் முன் இந்தக்கேள்வியை வைக்கிறார். அதற்கு அந்த கிராமத்தலைவர் தாங்கள் தாயின் மார்பிலிருந்து சுரக்கும் பாலை சப்பிக்குடிப்பதாகவும், கீழ் உள்ள பெரும் விவசாயிகள் தாயின் மார்பகத்தை அறுத்து இரத்தம் குடிக்கின்றனர் என்றும் கூறுகிறார்.

முழுக் கட்டுரை »

மாடல்ல மற்றையவை - ஜெய்சங்கர்


ஒரு பொருளின் மதிப்பை எப்படி கூட்டுவது? இன்றைய நமது 'வேகமாக ஓடு’ வாழ்க்கை முறையில் 'off the shelf’ என்று அழைக்கப்படுகிற, கடையின் அலமாரியிலிருந்து நமது வயிற்றுக்கு நேரே செல்லும் உணவுப் பொருட்களுக்கு மதிப்பு அதிகம். ஒரு விவசாயி இன்றைய சூழலில் கலப்பைத் தடி மட்டும் பிடித்தால் போதாது… (கலப்பை பிடிக்கிறோமா என்பதும் கேள்வியே!) தராசுத் தட்டையும் பிடித்தால் தான் விவசாயம் தொடர்ந்து நிலையாக செய்ய முடியும். அதிகம் விளைந்தால் விலை குறைவு, விலை அதிகமானால் விளைச்சல் குறைவு என்ற நிலையில் உழவனின் வருவாய் என்பது என்றுமே குறைவுதான். நாம் இப்போது அதையும் தாண்டி, ஒவ்வொரு பொருளையும் பல இடங்களில் இருந்து ஒரே இடத்தில் குவித்து, பின்னர் அதனை எல்லா இடங்களுக்கும் அனுப்பி வைக்கும் மைய வாணிகம் மட்டுமே செய்கிறோம். உள்ளூர் சந்தைகள் மற்றும் அண்மையில் விற்பது என்பது இல்லாமலே போய் விட்டது. நமது அண்மை சந்தைகளுக்கு விற்றது போக அதிகம் இருப்பதை மட்டுமே வெளி அங்காடிகளுக்கும், வியாபாரிகளுக்கும் விற்றால் விலை நிர்ணயத்தில் ஓரளவு சுதந்திரம் இருக்கும். உதாரணமாக, எங்கள் ஊருக்கு அருகில் விளையும் தக்காளி, வெங்காயம் போன்றவை வாழப்பாடி அல்லது தலைவாசல் அங்காடிகளுக்கு சென்று பின்னர் இங்கேயே சந்தை நாட்களில் விற்பதற்கென்று திரும்பி வருகிறது. எங்கள் ஊர் சந்தையில் உள்ள பொருட்களில் பெரும்பாலானவை மற்ற இடங்களிலிருந்து தருவிக்கப்பட்டவையே. இங்கு விளையாத பொருட்கள் வெளியிலிருந்து வந்தால் பரவாயில்லை. இங்குள்ள பொருட்களும் வெளியே சென்று தக்காளி போன்று அப்படியே திரும்பி வருகிறது அல்லது துவரை போன்றவை பயறாக சென்று பருப்பாக திரும்புகிறது. பெரும்பாலான நேரங்களில் வியாபாரியின் வருவாய் விவசாயியின் வருவாயை விட அதிகமாக இருப்பது வேதனையான உண்மை. இதற்கும், திரு. நம்மாழ்வார் அவர்கள் சொன்ன “ஒரு வரி தத்துவம்” ஒன்று நினைவுக்கு வருகிறது.

முழுக் கட்டுரை »

மரபீனி மாற்றுப் பயிர்கள் மற்றும் களப்பரிசோதனை - ஒரு பார்வை - அனந்து


மரபீனி( Genes) என்றால் என்ன?

(மரபீனி என்ற சொல்லே சரியானது. மரபணு என்பது பொருளற்றது - ஒரு உயிரின் மரபை ஈன்றுவதால் மரபீனி என்ற அழைக்கப்படும். “ஈன்ற பொழுதும் பெரிதுவக்கும்” என்ற குறள் சொல்லாடலைக் காணவும் - ஆசிரியர்)

ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்ச்சியாக மரபுப் பண்புகளைச் சுமந்து செல்பவை இந்த மரபீனிக்கள். இவை செல்களின் உள்ளே இருக்கும் உட்கரு (nucleus)அமைப்பில் அமைந்துள்ள குருமேனிகள் (choromosomes) எனப்படும் பகுதியில் காணப்படுகின்றன. இவைதான் ஓர் உயிரினத்தின் உறுப்புக் கூறு அமைப்புகளை ஈன்று புறந்தருபவை. ஒவ்வொரு உயிரினத்தின் தனிக்குணம் மற்றும் தனித்தன்மையை நிர்ணயிப்பவை. அதனால் தான் , “பலா விதையில் இருந்து பலாமரமே வரும். வேப்பமரம் வருவது கிடையாது”. இதற்குக் காரணம் அவற்றின் மரபீனிகளின் ஒன்றுபட்ட அமைப்பாகும். இன்றைய அறிவுலகம் இந்தக் கட்டமைப்பை மாற்றியமைக்கும் திறனைப் பெற்றுவிட்டது. அது வளர்ச்சியா வீழ்ச்சியா என்று பின்னர் பார்ப்போம்

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org