தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

குமரப்பாவிடம் கேட்போம்

செல்வமும் அறமும் - தமிழில் அமரந்தா

( “கிராம இயக்கம் எதற்காக” (Why the Village Movement ) – பக்.70-73, ஆறாவது பதிப்பு, மார்ச் 1958)

செல்வத்தில் பலவகை உண்டு. ஒழுக்கம் என்னும் செல்வம், அறிவு என்னும் செல்வம், சொத்துக்கள் வடிவில் செல்வம். இவற்றில் பொருட்செல்வம் குறித்த சிந்தனைகளை மட்டும் நாம் இப்போது எடுத்துக்கொள்வோம்.

முதலாளித்துவ பொருளாதாரத்தின் தூண்டுதலால் செல்வத்தை பணமதிப்பைக் கொண்டு அளக்கவே நாம் கற்பிக்கப் பட்டுள்ளோம். பணத்தைக் கொடுத்து தேவையான பொருளை விலைக்கு வாங்கினால், அத்தோடு பரிவர்த்தனை முடிந்து விடுகிறது. அப்பொருள் உங்கள் தேவையை நிறைவு செய்யுமானால் மேற்கொண்டு வேறு கேள்வியில்லை. உங்கள் பணத்தின் மதிப்புக்குச் சம்மானது கிடைத்துவிட்டதென்று கூறப்படுகிறது. மனிதன் ஒரு விலங்கு என்றும், அவனுக்கு ஆன்மா இல்லையென்றும் கருதுவோமானால் விசயம் அத்தோடு முடிந்துவிடும். அப்போது “மனச்சான்று”, “அநியாயக் காசு” அல்லது ”அறங்காவலர்” பற்றியெல்லாம் பேச்சே இருக்காது.

நல்ல வேளையாக நம்மில் பலரும் பொருளாதாயத்தில் தோய்ந்தவர்களாக இல்லை. நாம் ஓரளவுக்கு உரிமைகளையும் கடமைகளையும் பற்றி தோராயமாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். குழப்பமாக இருந்தாலும் நமக்கு மனச்சான்று என்று ஒன்று இருப்பதால், மனிதர்களின் ஒழுக்கத்தையும் ஆன்ம நிலையையும் நாம் அறிந்து கொள்கிறோம். இதனால்தான் நமது பொருளாதார வாழ்வு நிலைத்தன்மை கொண்ட ஆன்ம தளத்திலும் விரிவடையும் வாய்ப்பை நல்கியுள்ளது. பொதுவாக பொருளாதாரம் என்பது யதார்த்த நிலை சார்ந்தது என்றும், அதில் அற மதிப்பீடுகளுக்கு இடமில்லை என்றும் கருதப்படுகிறது. ஆனால், இங்கிலாந்தில் உள்ள அறிஞர்கள் புவியீர்ப்பு விதிகளைப் போல பொருளாதாரத்தையும் ஒரு அருவமான அறிவியல் முறையில் அணுக முயன்றுள்ளனர். அதன் விளைவாக பொருளாதாரக் கோட்பாட்டை வெறும் வியப்பூட்டும் மனித இயல்புகள் மீதான உளவியல் ஆய்வாக முன்வைக்காமல் ஆல்பிரட் மார்சலும், பிகௌவும் பொருளாதாரக் கோட்பாடு கணித சூத்திரத்தில் வேரூன்றியுள்ளதை விளக்குகின்றனர். ஒரு கணம் நின்று யோசித்தோமானால், குறைந்தபட்சம் நவீனத்தன்மையற்ற மனிதர்கள் பொருளாதாரமே முக்கியம் என்பது போலும், பொருள்களின் மதிப்பு குறைவு என்பது போலும் நடந்துகொள்வதைப் பார்க்க முடியும்.

இதற்கு சில சான்றுகளைப் பார்ப்போம்:

பொதுமக்கள் பயன்படுத்தும் மதிப்பு அளவீடுகள் பல உள்ளன.

1) பணமதிப்பு ஏதுமற்றதாக இருப்பினும், சில பொருட்கள் வெறும் உணர்வு அடிப்படையில் மதிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, அன்பான பெற்றோரால் பயன்படுத்தப்பட்ட பழைய நாற்காலியோ, மேசையோ பணமதிப்புக்கு அப்பால் மிகுந்த மதிப்புள்ளதாக இருப்பதுண்டு.

2) பித்தளைப் பாத்திரக் கடையில் ஒரு லோட்டாவை எடைபோட்டு அதிலுள்ள பித்தளைக்கு விலை நிர்ணயம் செய்யும்போது, அந்த உலோகத்தினை எடைபோட்டு மதிப்பு போடப்படுகிறது.

3) ஒரு தங்கச்சங்கிலி விற்பனைக்கு வரும்போது, அது ஒரு குழந்தையின் கழுத்தை நெரித்து திருடிக்கொண்டு வந்த பொருள் என்ற உண்மை தெரிந்தால், அதை விலை கொடுத்து வாங்குமளவு பொருளாசை கொண்டவர்களைக் காண்பது அரிதாகவே இருக்கும். விலை குறைவு என்பதனாலேயே அதை வாங்க யாரும் முன்வருவதில்லை. இதுவே அறத்தின் இடம்.

4) காந்திஜியைப் போன்ற ஒருவர் வெள்ளி ஜரிகையும் தங்க ஜரிகையும் சேர்த்த வேட்டி அணியும் வசதியிருந்தும், இந்நாட்டின் பெரும்பான்மை ஏழைகளைப் போல கரடுமுரடான துணியில் கோவணம் அணிகிறார் என்பதால் அவர் மக்கள் மனதில் தெய்வ நிலைக்கு உயர்ந்து நிற்கிறார்.

கொடுக்கல் வாங்கல் ஒவ்வொன்றிலும் தனிமனித உணர்வு, நடைமுறை, அடிப்படை, போற்றுதல், கொள்கை என மதிப்பீடு செய்வதில் பல அளவீட்டு முறைகள் உள்ளன.

அதேபோல பணக்குவிப்பிலும் சரி, ஒருவர் கள்ளுக்கடை, விபச்சாரம் போன்ற சமூக விரோத முறைகளில் பணம் குவித்திருந்தால், அது கறை படிந்தது எனக் கருதப்படுகிறது. நமது அற அளவீட்டை நாம் இவற்றோடு நிறுத்திக் கொள்கிறோம். ஆனால் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வழக்கறிஞர் அல்லது மருத்துவரின் செயல்பாட்டிற்கு நாம் எந்த அற மதிப்பீடும் செய்வதில்லை. இவர்கள் தம்மை நம்பி வந்தவருக்கு உகந்த நிவாரணம் தருகிறாரா அல்லது அவரை வெறும் பணம் பண்ணுவதற்கான கருவியாக பயன்படுத்துகிறார என்று பார்ப்பதில்லை. மேலும், “வெற்றிகரமான” வணிகர்களின் வியாபார முறைகளையோ நாம் ஆராய்வதே கிடையாது.

பணச் செலவைப் பொறுத்தவரை உயர்ந்த மதிப்பு அளவீடு என்பது அறவே இல்லை. அன்றாட பரிவர்த்தனைகளில் தமக்குச் சில கடமைகள் உண்டென்பதை வாங்குபவர் உணர்வதில்லை. குழந்தை கழுத்தை நெறித்துப் பறித்த தங்கச்சங்கிலி போல சந்தையில் விற்கும் ஒவ்வொரு பொருளுக்கும் அறமும் ஆன்மாவும் சார்ந்ததோர் மதிப்பு உண்டு. சட்டப்பூர்வமான மொழியில் சொல்ல வேண்டுமாயின் விற்பவர் தனது பொருளை – அது நல்லதோ கெட்டதோ – வாங்குபவரிடம் ஒப்படைக்கிறார். எனவே, நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளையும் குறித்த அடிப்படைத் தகவல்களை விசாரித்தறிவது நமது கடமையாகிறது. இது ஒரு மாபெரும் கடமை. அன்றாடம் பொருட்களை வாங்கும் போது நம்மில் எத்தனை பேர் இந்தக் கடமையை நிறைவேற்றுகிறோம்?. தொழிலாளி பிழைப்பதற்குப் போதுமான கூலி தராமல் உற்பத்தி செய்யப்பட்ட பொருளை நாம் வாங்கும் போது, நாம் மனித உயிரையும் சேர்த்து விலைக்கு வாங்குகிறோம். இப்படி நினைத்துப் பார்ப்பது கொடுமையாக இருந்தாலும், சார்பு நிலை எடுக்காமல் சிந்திப்போமானால் இந்தக் கொடூர உண்மை புலப்படும். உற்பத்தி, இயந்திரத்தினால் செய்யப்படும் போது அது தேய்ந்து கொண்டே சென்று பின்பு இயங்காமல் வீணாகிவிடும். எனவே இயந்திரத்தின் தேய்மானம், பழுது நீக்கல், பராமரிப்பு ஆகிய செலவுகளை உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் எண்ணிக்கையோடு சேர்த்தே பொருளின் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். மனிதனும் ஒரு இயந்திரம்தான். ஒரு குயவர் பானைகளைத் தயாரிக்கிறார். அந்தக் குயவர் மட்டுமின்றி அவரைச் சேர்ந்தவர்களையும் சேர்த்து பராமரிக்கும் அளவுக்கு பானையின் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். பராமரிப்பு என்றால் அவர் உயிர் வாழ்வதற்கு மட்டும் என்று பொருளல்ல. அவர் வேலை செய்யும் வகையில் நலமாக இருக்கத் தேவையான பொருள் கிடைக்கவேண்டும். அவ்வாறில்லாமல் குறைந்த விலைக்கு வாங்கப்படும் பானை அக்குயவரின் குன்றும் உடல்நிலையையும் சேர்த்து வாங்குவதற்கு ஒப்பாகிவிடும். போதிய கூலி கொடுப்பதற்காக கூடுதலாக விலை நிர்ணயிக்கப்படுமானால், பொருளை வாங்குவோர் அதனை கொடுக்க சுணங்கக்கூடாது. எனவேதான் பண மதிப்பை மனித மதிப்போடு சேர்த்து மதிப்பிடும் நாம் பொருள் உற்பத்தியின் எல்லாth தன்மைகளையும் ஆராய்வது அவசியம். தொலைதூர நாடுகளிலிருந்து வரும் பொருட்களைப் பொறுத்தவரை இவ்வாறு ஆராய்வது மிகக்கடினமான, இயலாத காரியமாகி விடுகிறது. நாம் வாங்கும் பொருட்கள் உள்நாட்டுத் தயாரிப்பாக இருந்தால் நமக்கு இந்த ஆய்வு சாத்தியமே. “சுதேசி” என்பதின் அற அடிப்படை இதுவே.

சந்தைப் பொருட்களில் பல இரகங்கள் இருக்கையில், விலை குறைவான அந்நிய நாட்டுப் பொருட்களை நாம் வாங்குவோமானால், நம் நாட்டில் வேலையின்மையையும் ஏழ்மையையும் நாமே உருவாக்குகிறோம் என்று பொருள். விலை கூடுதலாக இருப்பதால் உள்நாட்டுப் பொருட்களை வாங்கி நமது தேவையை நிறைவேற்றிக் கொள்ள முடியாதபோது, அந்நிய நாட்டுப் பொருளை வாங்காமல் தவிர்ப்பது உயர்ந்ததோர் கொள்கையாகும். ஒரு பொருள் எத்தகையை உயர் மதிப்புடையதாயினும், நமது உளச்சான்றுக்கும் அற மதிப்பீட்டிற்கும் உகந்ததாக இல்லையெனில், நாம் அதனை நிராகரிக்கவேண்டும். நமது அற உணர்வு உறுதியாக இருக்குமானால், எதோ ஒரு தேவை நிறைவடையாமால் போவதை நம்மால் எளிதாக ஏற்கமுடியும். சர்க்கரை வாங்கச் சென்ற இடத்தில் பழுப்பான நாட்டுச் சர்க்கரையும், வெள்ளை வெளேரென்ற வெள்ளைச் சர்க்கரைக் கட்டிகளையும் அருகருகே காணும்போது, நமது கண்கள் மில் தயாரிப்பினால் ஈர்க்கப்படலாம். ஆனால், நமது மனக்கண் திறந்திருந்தால், அது அழுக்காகத் தோன்றும் என்பதில் ஐயமில்லை. “மனிதனை வெளியிலிருந்து வரும் எதுவும் தீயவனாக்குவதில்லை; அவனது இதயத்திலிருந்து வெளிப்படும் எண்ணங்களே அவனை தீயவனாக்குகின்றன”. நம்மில் பலரும் பொருள் குறித்து விழிப்பாகவே இருக்கிறோம். சற்றே முயன்று மனச்சான்றையும், அற உணர்வையும் வளர்த்துக்கொள்ள முடியாதா? சர்க்கரையில் அழுக்கிருந்தால் சிறிது முயன்று அதை நீக்கிவிடலாம். ஆனால், நம் ஆன்மாவை இழக்க முடியுமா?

நாம் நமக்காக மட்டுமே வாழ்வதில்லை. நம் செயல்கள் நம் சமூகத்தில் உள்ளவர்களையும் பாதிக்கின்றது என்ற புரிதலோடு இயன்றவரை உயர்வாக சிந்தித்து செயல்பட முயன்றால் ஆன்ம வளர்ச்சியில் பெரிதும் முன்னேற முடியும்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org