தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பேய்ப்பழமும் பெரும்கொடையும் - பரிதி


“வளரும் நாடுகள்” அல்லது “மூன்றாம் உலக நாடுகள்” எனப்படும் பகுதிகளில் பசி, பட்டினி, ஊட்டச் சத்துக் குறைபாடு ஆகியன மிக அதிக அளவில் மக்களை வாட்டுகின்றன. உலகமயமாக்கல் எனும் பெயரில் ஈவிரக்கமின்றிக் கட்டவிழ்த்துவிடப்படும் சுரண்டல் முறைகளே இவற்றுக்குக் காரணம். இவற்றை மேலாண்மை செய்பவை வல்லரசு நாடுகளில் உள்ள நிதி மூலதனப் பெருநிறுவனங்களே.

கேவலமான, மனித வாழ்வுக்கு எதிரான சூழ்நிலைகளில் அடிமைகளாகத் தொழில் புரியும் பல கோடிக்கணக்கான ஏழைத் தொழிலாளர்களின் உழைப்பில் உருவாக்கப்படும் நுகர்பொருள்கள் வால்மார்ட் உள்ளிட்ட பல்துறைப் பேரங்காடிகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

மேற்கண்ட இழிவான சூழ்நிலைகள் உலகில் பரவலாக இருப்பது தற்செயலான நிகழ்வன்று. தொடர்ந்து பெருகும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்தாம் பன்னாட்டுப் பெருநிறுவனங்களைத் தாங்கிவருகின்றன. இந்நிறுவனங்களும் அவற்றுக்கு ஏவல் புரியும் அரசு இயந்திரங்களும் உலகம் முழுவதையும் இறுக்கமாகப் பின்னிப் பிணைத்துள்ளன.

உலக மக்கள் அனைவருடைய அடிப்படைத் தேவைகளையும் நிறைவு செய்வதற்குத் தேவையான வளமும் திறமும் உலகில் உள்ளன. ஊட்டச் சத்துக் குறைபாடு, பட்டினி ஆகியவற்றுக்குக் காரணம் ஏழ்மை. அதை உருவாக்கும் ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதே அந்த ஏழ்மையை ஒழிப்பதற்கு முதல் படி.

ஆனால், ஏற்றத்தாழ்வுகளால் பலனடையும் முற்றாதிக்கப் பெருநிறுவனங்கள் அந்த ஏற்றத்தாழ்வுகளைப் போக்குவதற்கு துளிக்கூட விரும்பமாட்டா என்பது உறுதி. தம் செயல்பாடுகளின் விளைவாகத் தான் பல கோடி ஏழைகள் சரிவிகித உணவு உண்ணமுடியாமல் தவிக்கிறார்கள் என்பதை அந்நிறுவனங்களின் உரிமையாளர்கள் நன்கு அறிவார்கள். அந்நிலையை மாற்றுவதற்கு பதிலாக அவர்கள் முன்வைக்கும் மோசடியான தீர்வுதான் மரபீனி மாற்றப்பெற்ற உணவுப் பொருள்களை (genetically modified organism) [“பேயுணவை” - பேயுணவு = பேய்த்தனமான (உயிரினங்களின் நலனுக்கு எதிரான) உணவு] மூன்றாமுலக நாடுகளில் பரவலாக்குதல்.

இதைச் செய்வதன் மூலம் அந்நிறுவனங்கள் அறச் செயல்களில் ஈடுபடுவது போன்ற மாயை உருவாக்க முடியும். அத்தோடன்றித் தாம் உருவாக்கும் பொருள்களுக்கான சந்தையைப் பெருமளவில் விரிவுபடுத்துவதற்கும் இது வழி செய்யும். மேலும், உலக உணவாதாரத்தின் மீது தம் முற்றதிகாரத்தை நிலைநாட்டுவதற்கும் இது பயன்படும். காப்புரிமைகளால் பாதுகாக்கப்பட்ட, உலக முழுமைக்குமான உணவு உற்பத்தியை ஓரிடத்தில் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவான, உலக மக்கள் தத்தம் பகுதிகளில் தாமாக விளைவிக்கவியலாத மரபீனி மாற்றப்பெற்ற பயிர்களுக்கு ஏழை நாடுகளை அடிமைப்படுத்துவதன் மூலம் உலகளாவிய ஏற்றத்தாழ்வுகளைச் செயல்படுத்தும் கொடியவர்கள் மனித குலத்தின் மீதான தம் பிடியை மேன்மேலும் இறுக்கமுடியும்.

பல நூற்றாண்டுகளாக மேற்கத்திய வெள்ளையின மக்கள் பிற மனிதர்கள் மீது ஏவி விட்ட கொடுமைகளின் மிக மோசமான தொடர்ச்சியே இந்தப் புது வகைப் பயிர்கள்.

மரபீனி மாற்றப்பெற்ற உணவுப் பொருள்களை விற்பனைக்குக் கொண்டுவருகையில் நுகர்வோருக்கு அவற்றை அடையாளப்படுத்துவதை எதிர்ப்பதன் மூலம் நுகர்வோரை அறியாமை எனும் இருளில் தொடர்ந்து வைத்திருப்பவை இந்த முற்றதிகாரப் பெருநிறுவனங்களின் கொள்கைபரப்பு வலைப்பின்னல்கள். அவைதாம் அறச்செயல்கள் எனும் போர்வையில் “பொன்னரிசி”, “சத்துவாழை” போன்ற கவர்ச்சிமிக்க சொற்களில் நம் நலனுக்குத் தீங்கு பயக்கும் உயர் உயிரித்தொழில்நுட்பப் பயிர்களை நம் மீது திணிக்கின்றன. வெகுவிரைவில் இந்தியாவில் இத்தகைய வாழையைப் பரவலாக்குவதற்கு பில் கேட்ச் அறக்கட்டளை (Bill Gates Foundation) உள்ளிட்ட பன்னாட்டுக் கொள்ளையர்கள் தீவிரமாக முயற்சி செய்துவருகின்றார்கள். வந்தனா சிவா உள்ளிட்ட சூழலியலாளர்கள் இவற்றை எதிர்த்துப் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தகைய பெருநிறுவனங்கள் உருவாக்கும் பொருள்களுக்குத் தொடர்ந்து சந்தையை விரிவாக்குவதற்கு இந்தச் சொல்லாடல்களும் வணிக உத்திகளும் பயன்படுகின்றன. அது மட்டுமன்று. அந்நிறுவனங்களின் உள்நோக்கங்களை அம்பலப்படுத்துபவர்களை ஏழைகளின் எதிரிகளாக உருவகப்படுத்துவதற்கும் இந்த உத்திகள் பயன்படுகின்றன: அவர்கள்தாம் ஏழைகளின் பட்டினிக்குக் காரணம் என்பது போன்ற மாயத் தோற்றத்தை அந்நிறுவனங்கள் பரப்புகின்றன.

இச்செயல்பாடுகள் அனைத்து மட்டங்களிலும் மக்களின் ஆளுமைகளைக் குலைத்து அவர்களை அடிமைகளாக வைத்திருப்பதற்கே பயன்படுகின்றன. ஆகவே அவற்றை நாம் ஒன்றுபட்டு முழு ஆற்றலுடன் எதிர்த்து விரட்டவேண்டும்.

சரியான தீர்வு என்ன?

ஏழைகள் போதுமான ஊட்டச் சத்து உள்ள உணவைப் பெற இயலாதவர்களாக உள்ளனர். அந்நிலையைப் போக்குவதுதான் முறையான, பருண்மையான, அறநெறி வழிப்பட்ட தீர்வாக இருக்கும். மரபீனி மாற்றப்பெற்ற உணவுகளை அவர்களுடைய வாயில் திணிப்பது தீர்வாகாது.

நமக்கு வேண்டியன அரசியல் தீர்வுகளேயன்றி உயர் தொழில்நுட்பம் தீர்வேயன்று. இருபதாண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்தும் உயிரித் தொழில்நுட்பத்தால் எவ்வகைப் பலனும் இல்லை. மாறாக, வீரியமிக்க களைகள், லட்சக் கணக்கான உழவர்களின் தற்கொலை, சூழல் மாசுபாடு ஆகியவைதாம் அந்தத் தொழில்நுட்பத்தின் விளைவுகளாக உள்ளன. நாம் செய்யவேண்டியவை எவை?

மேற்குலக நாடுகள் ஆசியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளில் உள்ள வளரும் நாடுகளைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு உதவும் 'கட்டற்ற வணிக' ஒப்பந்தங்கள் உள்ளிட்ட மோசடிகளைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

ஏற்றுமதி வணிகத்தைச் சார்ந்த ஓரினப் பயிர்களை வளர்ப்பதன் விளைவாக உழவர்கள் பெருநிறுவனங்களைச் சார்ந்திருத்தல், கடனாளிகளாகி இறுதியில் தற்கொலை செய்துகொள்ளுதல் ஆகியவற்றில் இருந்து அவர்களைக் காக்கவேண்டும். மேலும், ஓரினப் பயிர் சாகுபடி மண்ணுக்கும் சூழலுக்கும் மிகுந்த கேடு விளைவிக்கும். இதற்கு மாற்றாகச் சிறு குறு உழவர்களுக்கு முறையாகப் பயிற்சி அளிப்பதன் மூலம் இயற்கை வேளாண்மையை ஒவ்வொரு பகுதியின் தட்பவெப்பம் உள்ளிட்ட நிலைமைகளுக்கு ஏற்றவாறு - அதாவது, மண்ணுக்கேற்ற வேளாண்மையை - உள்ளூர் அளவில் மீண்டும் செழிக்கச் செய்யவேண்டும். இதுவே நிலைத்த, நீடித்த உணவாதாரத்துக்கு வழிவகுக்கும். அப்படிச் செய்வதன் மூலம் ஏழை நாட்டு மக்களின் ஊட்டச் சத்துக் குறைபாட்டையும் போக்கவியலும்.

ஆனால், பெரும்பாலான அரசுகள் நிதி மூலதனப் பெருநிறுவனங்களின் மறைமுகக் கட்டுப்பாட்டில் இருப்பதால் அந்த அரசுகள் இத்தகைய தீர்வுகளைச் செயல்படுத்த முனையும் என்று நாம் நம்பியிருக்க இயலாது. ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்கள் ஒன்றிணைந்து நீடித்த, நிலைத்த வேளாண்மை உள்ளிட்ட எளிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித் தம் வாழ்வாதாரங்களைக் காத்துக்கொள்ளவேண்டும். அதன் பலன்கள் மெதுவாகத்தான் தெரியவரும். ஆனால் அவை நிலைத்த பலன்களாகத் திகழும். இது நடைமுறைச் சாத்தியமானது என்பதை விரிவான உலகளாவிய ஆய்வுகள் நிறுவியுள்ளன.

- பரிதி (thiru.ramakrishnan@gmail.com)

ஆய்வுக் குறிப்புகள்

(1) Tony Cartalucci, Monsanto, Syngenta, Bayer: Big Agri Peddles “GMO Gruel” to the Impoverished Global Research, June 21, 2014, http://www.globalresearch.ca/monsanto-syngenta-bayer-big-agri-peddles-gmo-gruel-to-the-impoverished/5387960

(2) Max Goldberg, GMO-Bananas are Going Into Human Trials – Why This Won’t End Well, June 22, 2014, http://livingmaxwell.com/gmo-bananas-human-trials-bill-gates

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org