(அனந்து எழுதிய இக்கட்டுரையின் எளிமைப் படுத்தப் பட்ட ஒரு பகுதி தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ளது)
மரபீனி( Genes) என்றால் என்ன?
(மரபீனி என்ற சொல்லே சரியானது. மரபணு என்பது பொருளற்றது - ஒரு உயிரின் மரபை ஈன்றுவதால் மரபீனி என்ற அழைக்கப்படும். “ஈன்ற பொழுதும் பெரிதுவக்கும்” என்ற குறள் சொல்லாடலைக் காணவும் - ஆசிரியர்)
ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்ச்சியாக மரபுப் பண்புகளைச் சுமந்து செல்பவை இந்த மரபீனிக்கள். இவை செல்களின் உள்ளே இருக்கும் உட்கரு (nucleus)அமைப்பில் அமைந்துள்ள குருமேனிகள் (choromosomes) எனப்படும் பகுதியில் காணப்படுகின்றன. இவைதான் ஓர் உயிரினத்தின் உறுப்புக் கூறு அமைப்புகளை ஈன்று புறந்தருபவை. ஒவ்வொரு உயிரினத்தின் தனிக்குணம் மற்றும் தனித்தன்மையை நிர்ணயிப்பவை.
அதனால் தான் , “பலா விதையில் இருந்து பலாமரமே வரும். வேப்பமரம் வருவது கிடையாது”. இதற்குக் காரணம் அவற்றின் மரபீனிகளின் ஒன்றுபட்ட அமைப்பாகும். இன்றைய அறிவுலகம் இந்தக் கட்டமைப்பை மாற்றியமைக்கும் திறனைப் பெற்றுவிட்டது. அது வளர்ச்சியா வீழ்ச்சியா என்று பின்னர் பார்ப்போம்.
மரபீனிகளை மிக எளிதாக மாற்றியமைப்பது இயலாத செயல். இயற்கையில் ஓர் உயிரினத்தின் மரபீனிகளை மற்றொரு வகை உயிரினத்தின் செல்களுக்குள் செல்ல முடியாது. ஏனெனில் புதிய செல்லுக்குள் நுழையும் டி.என்.ஏவை, அச்செல்களில் அமைந்துள்ள நொதிமங்கள் அழித்துவிடும். இதனால்தான் இன்றும் “தாயைப் போல பெண் ; அப்பாவை உரித்து வைத்திருக்கிறான் பிள்ளை” என்றெல்லாம் சொல்ல முடிகிறது.
ஆனால் இந்தச் சட்டம் குச்சிலங்கள், நச்சுயிரிகள் (bacteria. virus) போன்ற உயிரினங்களில் சற்றுத் தளர்ந்து காணப்படுகிறது. அதாவது, நுண்ணுயிரிகளின் செல்களுக்குள் இருக்கும் நொதிமங்கள் அவ்வளவு ‘கடுமை’ யானவையல்ல. அவை பிற டி.என்.ஏக்களை உள்ளேவர இசைவு கொடுக்கின்றன. ஏனெனில் நுண்ணுயிரிகள் படிமலர்ச்சி (Evolution) நிலையில் முதல் படிக்கட்டில் இருப்பவை அவை.
மேலும் இப்படி படிமலர்ச்சியிலேயே மரபீனி மாற்றங்கள் நிகழ்வதில்லையா, வெவ்வேறு உயிரினங்களுக்கிடையே நடைபெறுவதில்லையா என்றால்- ஆம் நிகழும்! ஆனால் மிகவும் கீழ் நிலை உயிரி மற்றும் உயிரினினங்களிலும் மட்டுமே - அதுவும் பல்லாயிரக்கணக்கான வருடங்களில். அப்படி நிகழக்கூடிய ஒரு அரிய செயலை நாம் அறிவியல் என்ற பெயரில் பல ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்ற உயிரினங்களுக்கிடையே முயற்சிக்கிறோம். ஆம்! நாம் அறிவியலின் மூலம் படைப்பாளியாக (கடவுளாக) முயற்சிக்கிறோம். தேவையா?
மேலும் மரபீனி மாற்றச் செயல்பாட்டில் மூன்று வகையான மரபீனிகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை குறிப்பிகள் (markers) சுமப்பிகள் (Carriers) ஊக்கிகள் (Promoters) போன்றவையாகும். இவை பெரும்பாலும் உயிரினங்களில் நோயை உருவாக்கும் நச்சுயிரிகள், நுண்ணுயிரிகளில் இருந்தே பெறப்படுகின்றன.
மரபீனிகளை (genes) மாற்றியமைத்து, “புதிய உயிரினங்களை உருவாக்கும் முயற்சி மரபீனியப் பொறியியல் (genetic engineering) என்று அழைக்கப்படுகின்றது.
இவ்வளவு அறிவுபூர்வமான, அறிவியல்பூர்வமான விஷயத்தை என் போன்றோர் விமர்சிக்கலாமா?
முதலில் நாம் பார்க்க வேண்டிய விஷயம், இதனை உலகளவில் எதிர்ப்பது பெரும்பாலும் அறிவியலாளர்களே.விஞ்ஞானிகளே! இந்தியாவின் மரபீனியப் பொறியியலின் தந்தையான டாக்டர்.புஷ்பா பார்கவா அவர்கள்தாம் இதனை வன்மையாக எதிர்க்கிறார். எந்த விதமான ஒழுங்கு வழிமுறைகள் மற்றும் கண்காணிப்பு அற்ற இந்த “வளர்ச்சி” இந்தியாவிற்கு தேவை இல்லை என்பதே பல அறிவியலாளர்களின் கருத்தும். உலகளவில் பல விஞ்ஞானிகள் பல சோதனைகள் மூலம் இந்த தொழில்நுட்பம் இப்பொழுது விவசாயத்திற்கு தேவை இல்லை, இது பல சீரிய பின் விளைவு கொண்டது என்று எச்சரிக்கின்றனர்.
அப்படி என்றால் மேலை நாடுகள் இந்த தொழில் நுட்பத்தை ஏற்கவில்லையா? இதனைப் பெரு வியாபாராமாக, லாப வெறியாகப் பார்க்கும் சில பெரும் அமெரிக்க கம்பனிகள் ஆதிக்கம் செலுத்தக்கூடிய வெகு சில நாடுகளில் மட்டுமே செல்லுபடி ஆகியுள்ளது. 5 நாடுகள் மட்டுமே இன்றைய 90 சதவிகித மரபீனி மாற்றுப்பயிர்களை உற்பத்தி செய்கின்றன. அதிலும் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் கானடா இதனை மிருக உணவாக மட்டுமே பாவிக்கின்றன. ஆனால் நம் போன்ற நாடுகள் மீது எல்லா உணவு வகைகளுக்கும் இதை ஏற்குமாறு அழுத்தம் கொடுக்கின்றன, அரசியல் ரீதியாக ஏழை( நாடு)கள் எக்கேடு கெட்டுப்போனால் அவர்களுக்கு என்ன?
மொத்தத்தில் மரபீனி மாற்றப்பட்ட பயிர்கள் மற்றும் உணவு பல வகையான கேடு விளைவிப்பவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை- மனித மற்றும் சுற்றுசூழல் ஆரோக்கியத்திற்கு, நம் அடுத்த தலை முறைக்கு, நமது நாட்டின் பொருளாதாரத்திற்கும். இதெற்கெல்லாம் மேலாக நமது விவசாயிகளின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் அழிப்பவை. முற்றிலும் இயற்கைக்கு எதிரான,இயற்கையை பெரிதும் பாதிக்கும் ஒரு தொழில் நுட்பம்.
இன்றளவில் நமது நாட்டில் மரபீனி மாற்றுப்பயிர் பருத்தியில் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு பி டி பருத்தி என்று (ராசி, பன்னி, ரம்யா, போல்கார்ட் என பல பெயர்களில் உலா வரும் இந்த பருத்தி விதை எல்லாம் ஒரே ஒரு கம்பனியின் சொத்து. ஆம் மொன்சான்டோவினுடையது!) 10 வருடங்களாக உலா வருகிறது. இந்த 10 வருடங்களில் 95 சதவிகிதம் இந்த பி டி பருத்தி தான் சந்தையில்- ஆனால் அது பெரும் லாபமோ நல்லதோ என்று அல்ல,விளம்பர வலுவாலும், அரசு இயந்திரங்கள் பரிந்துரைப்பதாலும், வேறு விதைகள் எளிதில் கிடைக்காத அளவு சந்தையைப் பண வலுவால் ஆக்கிரமிப்பதாலும் மேலும் இது போன்ற காரணங்களாலும் மட்டுமே மரபீனி மாற்றுப் பருத்தி அதிகம் பயன்படுத்தப் படுகிறது.! இன்று நிகழும் விவசாயிகளின் தற்கொலையில் 60 % மேல் பருத்தி விவசாயிகளே என்பது மிகவும் கொடுமையான விஷயம்.
ஆக , நமது ஆரோக்கியம் மற்றும் சின்னஞ்சிறார்களின் உடல் நலம் மற்றும் எதிர்காலம் உட்பட, மரபீனி மாற்றுப்பயிர்களும் உணவும் எல்லா வகையிலும் கேடு விளைவிப்பவையே. இதை எல்லா அரசியல் கட்சியினரும் நன்கறிவர்! அதனால் தான் எல்லா அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் மரபீனியை அனுமதிப்பதில்லை என்றே கூறி விட்டு ஆட்சியில் அமர்ந்ததும் மறந்து “வேறு சில காரணங்களால்” இதனை நம் மீது திணிப்பர். காங்கிரஸ் ஆட்சியிலிருந்த பொழுது பிஜேபி வன்மையாக கண்டித்தது. இன்றைய நிதி மந்திரி மற்றும் உள்துறை அமைச்சர் எங்களுடன் தர்ணாவில் சில மாதங்களுக்கு முன் அமர்ந்து எதிர்ப்பை தெரிவித்தார்! ஆனால் இன்று…?
ஒரு நாட்டின் இறையாண்மை அந்நாட்டின் உணவுப் பாதுகாப்பைப் பொறுத்தது. உணவுப் பாதுகாப்பு அங்கு நடைபெறும் வேளாண்மையைப் பொறுத்தது. வேளாண்மைக்கான இறையாண்மையோ விதைகளை அடிப்படையாகக் கொண்டது. எனவே விதைகள் மிகவும் இனறியமையாதவை. இந்த விதைத் துறையில் நுழைந்துள்ள பெரும் நிறுவனம் மான்சாண்டோ. அது அறிமுகப்படுத்தியுள்ள பருத்திவிதை-பாசில்லஸ் துரிஞ்சியஸ் (Bt) மூலம் பல கோடிகளை சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டது! விதை ஒரு லாப மற்றும் ஆளுமைக்கான கருவி என்று மட்டுமே செயல்படும் கும்பணி. உலக விதை மற்றும் உணவின் மேல் இப்படி ஆதிக்கம் செலுத்தி உலகின் குரல்வளையை பிடிக்கும் எண்ணம். பின்பென்ன, படை எடுத்தா நம்மை வீழ்த்த முடியும்? (கிழக்கிந்திய கம்பனி ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல!)
இந்த பாசில்லஸ் பி டி விதை பருத்திக்கு அனுமதித்தாலும், நமது உணவில் எளிதாக வர விடாமல் பல பொது நலவாதிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் விஞ்ஞானிகளின் தன்னலமற்ற செயல்பாட்டினால், பி டி கத்திரி முதல் பல்வேறு விதைகள் வர விடாமல் தடுத்து வருகின்றனர்.. ஜெயராம் ரமேஷ் சுற்றுசூழல் மந்திரியாக ஒரு சிறப்பான நாடு தழுவிய பொது மக்களிடம் புத்திமதி கோரல் (consultation) நடத்தி இதனைத் தடை செய்தார்.
நாம் தப்பித்தோமா என்றால் இல்லை..
சமீபத்திய சர்ச்சை
களப்பரிசோதனை- (திறந்த வெளியில் மரபீனிப் பயிர்களைப் பரிசோதிக்கும் முயற்சி) என்பதற்கு அனுமதி! இதனை நாம் வெறும் அறிவியல் பரிசோதனையாகப் பார்க்கக்கூடாது. மரபீனி மாற்று மகரந்தங்கள் காற்று, நீர், தும்பி, தேனீ போன்றவற்றால் விரைவில் நீக்கமற எங்கும் கலந்து விட வேண்டும் என்பதே மன்சான்டோவின் திட்டம்.
பல சரியான காரணங்களால் உச்ச நீதிமன்றத்தின் நிலுவையிலுள்ள இந்த பூதத்தை ஏன் இப்பொழுது தட்டி எழுப்ப வேண்டும்?
- பாராளுமன்ற வேளாண் நிலைக்குழுவின் அறிக்கை சென்ற ஆண்டு வெளியிடப்பட்டது. அதில், சீரிய ஆய்விற்குப்பின், பல மாற்றுகள் உள்ள படியாலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் என்பதாலும் மரபீனி மாற்று பயிர்கள் தேவை இல்லை என்பதை அழுத்தமாக கூறியதுடன் பல முற்போக்கான குறிப்புகளையும் வெளியிட்டுள்ளது. களப்பரிசோதனைக்கும் அதே தீர்வு: நிலுவை!
- நமது நாட்டின் சிறந்த 5 விஞ்ஞானிகளை கொண்ட உச்ச நீதி மன்றத்தின் ‘தொழில்நுட்ப ஆய்வுக் குழு’வும் மரபீனி மாற்று பயிர்கள் மற்றும் களப்பரிசோதனை நமது நாட்டிற்கு தேவையே இல்லை. நிரந்தர தடை வேண்டும் என்று உச்ச நீதி மன்றத்திற்கு அறிக்கை அளித்துள்ளது
- மத்திய வேளாண் அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட சொபோரி கமிட்டி, தனது மெய்யாயும் அறிக்கையில் (investigation report) மரபீனிக் களப்பரிசோதனைகளால் நடந்த தவறுகளையும் கேடுகளையும் தெளிவாக சமர்பித்தன. அதுவும் நூற்றுக்கணக்கான வேளாண் பல்களைகழகங்கள், கல்லூரிகள், நிறுவனங்கள், நீர்வாகக் குழுக்கள் அடங்கிய NARSஇன் (National Agricultural Research System) களப்பரிசோதனை முறைகேடுகளையும் மாசுக்கலப்பையும்(contamination) தெளிவாக விளக்கியுள்ளது.
- இந்த மரபீனி மாற்றப் பயிரினங்கள் சாகுபடி செய்யப்படும்போது, அருகில் உள்ள வேறு பயிர்களுக்கும் மகரந்தச் சேர்க்கை வழியில் பண்புகளைக் கடத்தும். இது எவ்வித மாற்றத்தை உருவாக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஏனெனில் இது கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுச் சாலையில் நடைபெறுவது அன்று. திறந்த வெளியில் நடைபெறுவது! காற்று மற்றும் தேனிக்களின் மகரந்த சேர்க்கையினாலும் பண்புகளைக் கடத்தும். இதற்கு முன்னர் பல முறைகளும் இந்த தனியார் கம்பனிகளால் நடத்தப்பெற்ற களப்பரிசோதனைகள் சரியான விதிகளை பின்படுத்தாதது முதல் பல கடுமையான விதி மீறல்களும், பரிசோதனை எச்சங்களை அங்கேயே அக்கறையின்று விட்டுச் செல்வது வரை நடந்து, சுட்டிக்காட்டப்பட்டுள்ளன
- மீட்க முடியாத தூய்மைக்கேடு (irreversible contamination) ஒரு உறுதியான சாத்தியக்கூறு! உயிரி பன்மையம் (biodiversity), உழவர்களின் பாரம்பரிய (அரிய) விதைகளின் தூய்மைக்கேடு, சுற்று சூழல் பாதிப்பு என்று பல..
- GEAC என்னும் மரபீனி பொறியியல் மதிப்பீட்டு ஆணையம் மற்றும் RCGM போன்ற ஒழுங்காற்று ஆணையங்களின் ஒழுங்குபாடு கவனிக்கப்பட வேண்டும், சீரமைக்கப்பட வேண்டும் என்று ஜெயராம் ரமேஷ் அவர்களின் அறிக்கை கூறியது. இந்த ஒழுங்காற்று ஆணையங்களின் செயல்பாட்டை சீரமைக்கவும் மார்க்கர் மரபீனிக்களை திணிக்கும் இயற்கைக்கு மாறான தொழில்நுட்பங்களை உபயோகிக்கும் நவீன அறிவியல் சம்பந்தப்பட்ட விஷயம் இது போன்ற அரைகுறை ஆணையங்களால் முடிவு செய்யப்படக்கூடாது என்றும் கூறியது. இந்த ஆணையம் புதிய அரசு வந்த பிறகு அதன் கூட்டங்களின் குறிப்புகள் (minutes of meeting ) இணையத்தில் வெளியிடுவதை நிறுத்தியுள்ளது
- உச்ச நீதி மன்றத்தில் மரபீனி பற்றி நடக்கும் பொது நல வழக்கு இப்பொழுது முடியும் தறுவாயில் உள்ளது. மேலே கூறியது போல் உச்ச நீதி மன்றத்தின் தொழில்நுட்ப ஆய்வுக் குழு தனது அந்திம அறிக்கையை வெளியிடுள்ளது.
- விவசாயம் ஒரு மாநில அரசின் அரசுரிமை. அதன் இறையாண்மையைப் பறிப்பது போல் இந்த களப்பரிசோதனைத் திணிப்பு மத்திய அரசால் கொண்டு வரப்படுகிறது.
- பாரதிய ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் மரபீனி மாற்றுப் பயிர் மற்றும் உணவுக்கு தேவை இல்லை, தனது ஆதரவும் இல்லை என்றே குறிப்பிட்டுள்ளது.
- இந்த மோடி அரசின் மத்திய வேளாண் அமைச்சர் ராதாமோஹன் சிங் அவர்கள் பதவியேற்ற முதல் நாளே இயற்கை வேளான்மையின் முக்கியத்துவதைக் கூறி, மரபீனி பயிர்கள் தேவை இல்லை, என்று அழுத்தம் திருத்தமாக கூறினார்
- பாரதிய ஜனதாவின் சக உதர அமைப்புகளான சுதேசி ஜாக்ரன் மன்ச், பாரதீய கிசான் சங் மற்றும் பாரதீய கிசான் மோர்சா இந்த களப்பரிசோதனை விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் எதிரான ஒன்று, இதனை அனுமதிக்கக்கூடாது என்று இப்பொழுதும் கூறியுள்ளன
- www.indiagminfo.org என்னும் வலைத் தளத்தில் 250க்கும் மேலான நமது நாட்டின் சிறந்த விஞ்ஞானிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதும், 400க்கும் மேற்பட்ட விஞ்ஞான /ஆதார அறிக்கைகளும் (published scientific references and papers) பதிக்கப்பட்டுள்ளன.
இவ்வளவு இருந்தும் இந்த மத்திய அரசு இப்படி வெளிப்படையற்ற அவசரகதியில் பொது விவாதங்களற்ற முறையில் இந்த களப்பரிசோதனைகளை அறிவித்திருப்பதன் காரணம் வேறு என்னவாக இருக்க முடியும்?
” நல்ல நாட்கள் வர உள்ளன” என்ற முழக்கத்தின் உண்மை அர்த்தம் இது தானா? பெரும் பன்னாட்டுக்கம்பனிகளுக்கு தானா?