வளம்படுத்தும் கொள்கைகள்
சென்ற இதழில் இடைப்பட்ட தொழில்நுட்பம் பற்றிப் பேசுவதாகப் புறப்பட்டோம். அதற்கு முன் ஏன் பொருளாதாரக் கொள்கை சூழல் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று காண்போம். பொருளாதாரத்தைப் பற்றிப் புரிந்து கொள்ள முற்படுமுன், பணம் என்பதற்கும் செல்வம் அல்லது வளம் என்பதற்கும் உள்ள வேற்றுமையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை
என்றார் வள்ளுவர்.
“பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும் ” என்று மு.வரதராசனார் இக்குறளுக்கு விளக்கம் அளிக்கிறார். ஆகப் பொருளுக்கும் வளத்துக்கும் வேறுபாடு உள்ளது என்று தெளிவாகிறது. வளம் (குறிப்பாக இயற்கை வளம் மற்றும் மனித மன வளம்) என்பது அடிப்படையான செல்வம். வேறு ஒரு குறளில் வள்ளுவர் “நாடென்ப நாடா வளத்தன ”, என்று தேடாமலே இயல்பாக வளம் உள்ள நாடே நல்ல நாடு என்கிறார். அவ்வகையில் பார்த்தால் உலகில் மிகப் பெரிய வளங்களை உடைய நாடுகள் “மூன்றாம் உலகம்” என்று சொல்லப் படும் ஏழை நாடுகளே. அமெரிக்காவைத் தவிரப் பிற வளர்ந்த நாடுகள் அனைத்தும் குறைந்த வளங்களை உடையவையே. பிரிட்டனும், ஸ்பெயின்,பிரான்சு மற்றும் போர்ச்சுகீசிய நாடுகளும் கடல் கடந்து மூன்றாம் உலகைத் தேடிச் சென்ற காரணம் 400 - 500 வருடங்களுக்கு முன் ஐரோப்பாக் கண்டத்தில் வளங்கள் பற்றாக்குறை மிக அதிகமாகி வாழ்வு பெரும் போராட்டம் ஆனதுதான். வட அமெரிக்காவும் செவ்விந்தியர்களிடம் இருந்து கொலை கொள்ளைகளால் பிடுங்கப் பட்டதுதான்.
செவ்விந்தியர்கள் என்று அழைக்கப்பட்ட வட அமெரிக்கக் கண்டத்தின் பழங்குடியினர், 'மண் என்பது நம் தாய், அவளைக் காயப் படுத்துதல் பெரும் தவறு' என்று நிலத்தை உழுவதையே ஒரு பெரும் பாவமாகக் கருதினர். வேட்டையாடி உண்பதும், மீன் பிடித்து உண்பதும் மற்றும் மரங்களில், இயற்கைச் செடிகளில் கிடைக்கும் காய்கனிகளை உண்பதும் அவர்கள் இனம் செழித்து இருக்கப் போதுமானதாய் இருந்தது. மிகப்புதுமைகள் கண்டு விட்ட, இன்றைய கால கட்டத்திலும் மங்கோலியாவில் உள்ள கால்நடை வளர்க்கும் நாடோடிகள், கடும் குளிரில், திறந்த வெளிகளில் தங்கள் கூடாரங்களை அமைக்கக் கூட குழி வெட்டுவதில்லை. மண்ணைக் காயப் படுத்துதல் மன்னிக்க முடியாத குற்றம் என்று நம்மைத் தாங்கும் நிலத்தைப் புனிதமாகப் பேணுகின்றனர். நம் நாட்டில் நியம்கிரி போன்ற மலைகளை வசிப்பிடமாகக் கொண்ட ஆதிவாசிகளும், மலையை ஒரு கடவுளாகவும், அதைக் குடைவதை தெய்வ குற்றம் என்றும் தீவிர நம்பிக்கை கொண்டு, மலையைக் குடையக் கிளம்பியுள்ள பன்னாட்டுக் கும்பணிகளுக்கு எதிராய்ப் போர்க்கொடி உயர்த்துகின்றனர். நதிகளைத் தாயாகவும், கடவுளாகவும் பாராட்டும் மரபுகள் எல்லாக் கலாச்சாரங்களிலும் தொன்றுதொட்டு இருந்து வருகின்றன. நம் நாட்டில், ஒவ்வொரு மரத்திற்கும், ஒவ்வொரு மிருகத்திற்கும் ஒரு கடவுளைத் தொடர்பு படுத்தி உயிர்ப்பன்மையத்தைக் காத்த நம் மூதாதையர்களின் கூர்ந்த அறிவு தெளிந்த ஞானத்தினால் பிறந்தது. தொழில்நுட்பம் இல்லாததனாலோ, அல்லது இயலாமையினாலோ பழங்குடியினர் இயற்கை வளங்களைச் சுரண்டாமல் இருக்கவில்லை. அதைச் சுரண்டும் தொழில்நுட்பத்தை அறிந்திருந்தாலும், காசாக்கத் தெரிந்திருந்தாலும், பணத்தை விட செல்வம் உயர்ந்தது - நிலைத்தன்மை உடையது என்ற விவேகமே வளங்களைப் பாதுகாக்கக் காரணம்.
வள்ளுவர் சொன்னது போல், செல்வம் வரும் வழிகள் வளங்களைப் பெருக்குவதாகவும், பாதுகாப்பதாகவும் இருத்தல் வேண்டும். வளங்களைச் சுரண்டிப் பணம் பண்ணுவது பொன்முட்டை இடும் வாத்தை அறுத்த கதைதான். பெரிய தென்னந் தோப்பு உடைய ஒருவன், தேங்காய்களையும் , மட்டைகளையும் விற்று வாழ்ந்தால் அது நிலைத்தன்மை உடையது. மாதம் சில தென்னை மரங்களை வெட்டி விற்றுக் குடும்பம் நடத்தினால் அது எவ்வளவு மூடத்தனமோ அவ்வளவு மூடத்தனமானது கனிம வளங்களைச் சுரண்டித் தொழிற்சாலைகளை உருவாக்குவது. அதிலும், அத் தொழிற்சாலைகளை நிறுவவும், அதன் லாபத்தை அனுபவிக்கவும் வேற்று நாட்டவருக்கு அனுமதி அளித்து, 'அதனால் வேலைகளை உருவாக்குகிறோம் அதுவே வளர்ச்சி' என்று மார் தட்டிக் கொள்வது என்ன பெருமை? இது தென்னை மரங்களை வேறு ஒருவர் வெட்டிக் கொள்ள அனுமதித்து விட்டு, அவரிடம் தோப்புக்காரன் விறகு வெட்டியாய்க் கூலி வேலை செய்வதற்கு ஒப்பாகும். சொல்லவே அபத்தக் களஞ்சியமாய், முழு மூடத் தனமாய் இருக்கும் இப்பொருளாதாரக் கொள்கையை எப்படி அறிவுள்ளவர்கள் ஏற்றுக் கொள்வது?
ஆங்கிலப் பொருளியல் அறிஞரும், மிக நுட்பமான கலைவிமர்சகரும் , சிறந்த சிந்தனையாளரும் ஆன ஜான் ரஸ்கின் என்பவர் தன்னுடைய “அன் டு திஸ் லாஸ்ட்” (Unto This Last) என்ற நூலில் பணத்திற்கும் செல்வத்திற்கும் உள்ள வேறுபாட்டை மிக அழகாக விவரித்துள்ளார். பணம் என்பது சந்தையைச் சார்ந்தது. தேவை- இருப்பு என்ற இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டினால் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கும் ஒரு மாற்றிக் கொள்ளும் கருவி. எந்த வளத்தையும் தன்னுள் அடக்காத ஒரு வெறும் சின்னம். செல்வம் என்பது அப்படி அல்ல - தனக்கென்று ஒரு மதிப்பை உள்ளடக்கியது.
உதாரணமாக 50 ரூபாய் என்பது 50 வருடங்களுக்கும் முன் மிகப் பெரும் பணம். தற்போது ஒரு விவசாயத் தொழிலாளியின் ஒரு மணிநேர சம்பளம். இன்னும் சில ஆண்டுகள் போனால் ஒரு கோப்பைத் தேனீர் வாங்கும் காசாகி விடும். அதற்கென்று எந்த உள்ளடங்கிய மதிப்பும் இல்லாதது. ஆனால் ஒரு படி நெல் என்பது 10,000 ஆண்டுகளுக்கு முன்னும் , இன்னும் பத்தாயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஒரே மதிப்பு உடையது - ஏனெனில் அது ஒன்றிரண்டு பேரின் ஒரு வேளைப் பசியைத் தீர்க்க வல்லது. அதற்கென்று ஒரு உள்ளடங்கிய செல்வம் உள்ளது. இதனால்தான் சோழநாட்டில் பெரும்பாலான வேலைகளுக்கு ஊதியம் நெல்லில் கொடுக்கப் பட்டு வந்தது. கோவில் நிர்வாகம் தொடங்கி, கோவில் குருக்கள், நீர் மணியகாரர், ஆசாரி, முடிவெட்டுபவர், துணி துவைப்பவர், விவசாயத் தொழிலாளி என்று அனவருக்கும் இத்தனை மூட்டை நெல் என்று கூலி நிர்ணயிக்கப்பட்டு, பணமே தேவைப்படாத ஒரு அண்மைப் பொருளாதாரம் நிலவி வந்தது. இப் பொருளாதாரத் திட்டவரைவு விலைவாசி ஏற்றத்தாலோ, தேவை-இருப்பு என்ற சிக்கலாலோ பாதிக்கப் படாதது. இன்று முதலீட்டு நிறுவனங்கள் என்று பொது மக்களின் பணத்தை வாங்கிச் சூதாடும் பெருநிறுவனங்கள் பணவீக்கத்தை எப்படிவெல்வது என்று மிகவும் தலைப் பிய்த்துக் கொண்டிருக்கையில் பண்டைய பண்ட மாற்று முறையும், செல்வம் சார்ந்த (பணம் சாராத) வாணிபமும் கண்ட முன்னோர்களின் பொருளாதார அறிவைப் புறக்கணிப்பது என்ன மேதாவித்தனம்?
இன்று உலகச் சந்தையில் பெரும் ஆளுமை செலுத்தும் அமெரிக்க நிதி மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் பலவும் வளரும் நாடுகளில், ('மூன்றாம் உலகத்தில்') விளைநிலங்களை வாங்கிச் சேர்க்கப் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றன. 1950 முதல் 2008 வரை அமெரிக்காவின் Standard & Poor's Index என்ற முதலீட்டுக் குறியீடு சராசரியாக 11.8% வருட லாபத்தை ஈட்டியுள்ளது. இந்தச் சமயத்தில்தான் அமெரிக்க மிக வேகமாக வளர்ந்து உலகின் முதல்பெரும் சந்தையாக உருவாகியது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் இதே காலத்தில் விளைநிலங்கள் 11.6% சராசரி வருட லாபத்தை ஈட்டியுள்ளன! 4% முதல் 6 % வரை பணவீக்கம் கொண்ட அமெரிக்காவில் வருடம் 11.8% என்பது மிகச் சிறந்த ஒரு லாபம். இதில் ஒளிந்துள்ள உண்மை என்னவெனில், 11.8% ஈட்டிய பல தொழில்கள் இன்று நலிவடைந்து விட்டன - கடனில் உள்ளன. வேளாண்மையோ, நிலைத்தன்மையுடன் , வளத்தை அழிக்காத செல்வமாக இருக்கிறது.
வளம் என்றால் நம் பாரத நாட்டில் என்ன உள்ளது என்று கேட்கலாம். என்ன இல்லை என்று கேட்டால் எளிமையாகப் பதில் கூறிவிடலாம்! நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும், குளிர்பூந் தென்றலும் கொண்ட பாரத நாட்டைப் பாரதி
திருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை!
தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை;
மருவு செய்களின் நற்பயன் மல்குவை,
வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை
என்று நிலம், நீர் வளம் நிறைந்ததைப் போற்றுகிறார். உலகிலேயே மிக அதிக உயிர்ப்பன்மையம் உள்ள நாடுகளில் ஒன்றாகவும், உலக மக்கள் தொகைக்கு முழுவதும் உணவு அளிக்கக் கூடிய வளம் கொண்டதாகவும் உள்ளது நம்நாடு.
செய்தக்க அல்ல செயக் கெடும்; செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.
இயற்கை வளங்களைத் தாரை வார்ப்பது செயத்தகாதது. அவற்றைப் பாதுகாக்குமாறு தொழில்கள் தொடங்குவது செய்தக்கது. எனவே நம் புதிய பொருளாதாரக் கொள்கை வளம் பெருக்குவதாக இருக்க வேண்டும். பெருக்காவிடினும், குறைந்த பட்சம் இருப்பதைக் காப்பதாகவாவது இருக்க வேண்டும். அடுத்த கட்டுரையில் இடைப்பட்ட தொழில்நுட்பம் என்பது எவ்வாறு வாரி பெருக்கி வளம் படுத்துகிறது என்று காண்போம்!