தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உழவை வெல்வது எப்படி - பசுமை வெங்கிடாசலம்

நிரந்தர விவசாயம்

ஆஸ்திரேலியாவைத் தாயகமாக கொண்ட பில் மொலிசன் (Bill Mollison) 1928 ஆம் ஆண்டு பிறந்தவர். டாஸ்மானியாவின் அருகிலுள்ள ஸ்டேன்லி என்ற சிற்றூரில் மீன்பிடிக்கும் தொழில் செய்து வாழ்ந்தவர். தனது 42 ஆவது வயதுக்கு மேல் அதிலிருந்து விலகி வேறு தொழில் செய்ய விரும்புகிறார். காரணம் தினம் கடல், மீன், மேலே வானம் சலிப்பேற்படுத்துகிறது. அதனால் பல இடங்களை காண அவர் மனம் விரும்புகிறது. அதற்கு மிகவும் சுலபமான வழி டிரக் டிரைவராக செல்வதென தீர்மானிக்கிறார். டிரக் டிரைவராக செல்வதால் பல இடங்களுக்கு செல்வதுடன் வருவாயும் கிடைக்கும். இப்படி டிரைவராக செல்லும்பொழுது சாலையின் இருபுறங்களில் இருக்கும் காடு, மலை, விவசாய பூமிகளை காணும் வாய்ப்பு ஏற்படுகிறது. அதில் மனம் செல்ல, தாவரவியல் படித்து அதனை அறிய ஆவல் ஏற்படுகிறது. தாவரவியல் படிக்கும்பொழுது சூழலியல் பற்றி அறிய ஒரு மலை கிராமத்தில் தங்க நேரிடுகிறது. அங்கு அவர்களுடன் தங்கியிருக்கும்பொழுது அவர்கள் செய்யும் விவசாய முறை அவருக்கு வியப்பு ஏற்படுத்துகிறது. அந்த மலைவாழ் மக்கள் மிகவும் எளிமையான, மரத்தினால் ஆன பொருட்களைக்கொண்டு விதைப்பது, உழுவது போன்ற வேலைகளை செய்கின்றனர். ஆனால் அதே காலத்தில் சம வெளியில் உள்ள பெரும் பண்ணைகள் பெரும் இயந்திரங்களைக்கொண்டு உழுவதையும் அறுவடை செய்வதையும் நினைவு கூர்ந்து இவ்விரண்டில் உள்ள வேறுபாடு தெரியாமல் குழம்பி அங்குள்ள கிராம தலைவரின் முன் இந்தக்கேள்வியை வைக்கிறார். அதற்கு அந்த கிராமத்தலைவர் தாங்கள் தாயின் மார்பிலிருந்து சுரக்கும் பாலை சப்பிக்குடிப்பதாகவும், கீழ் உள்ள பெரும் விவசாயிகள் தாயின் மார்பகத்தை அறுத்து இரத்தம் குடிக்கின்றனர் என்றும் கூறுகிறார்.

அந்த பதில் அவரை வியப்பில் ஆழ்த்துகிறது. அவர் மனம் இரண்டு இடத்திலும் நடைமுறைப்படுத்தப்படும் விவசாய முறைகளை ஆராய முற்படுகிறது. மிகவும் தீவிரத்துடன் இந்த இரண்டு செயல்பாட்டு முறைகளுக்குள்ள காரணங்களை ஆராய்கிறார். மலை கிராம மக்கள் தங்கள் உணவு மற்றும் வாழ்வாதாரத்தேவைகளுக்காகவே பயிர் செய்கின்றனர் என்றும் சமவெளியில் உள்ள விவசாயிகள் பணம் ஈட்டுவதற்காகப் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் செய்கின்றனர் என்றும் அறிகிறார். சம வெளி விவசாயத்தில் அதிக பணத்திற்காக அதிக உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஏதாவது ஒரே பயிரை விளைவிக்கும் முறை பின்பற்றப்படுகிறது. அதனால் ஒரே சமயத்தில் ஏராளமான நிலத்தில் உழுவதும், களை எடுப்பதும், உரமிடுவதும், அறுவடை செய்வதும் நடைபெறுவதால் பெரும் இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

கிராம மக்கள் தங்கள் தேவைக்காக மட்டுமே பயிர் செய்வதால் பல விதமான பயிர் ரகங்கள் பயிர் செய்யப்படுகிறது. சிறிதளவே உள்ள பூமியும் பயன்படுத்தப்படுகிறது. மற்ற இடங்களில் உள்ள பூமியிலிருந்து அவர்களுக்கு தேவையான பொருட்கள் எந்த விதமான முயற்சியுமின்றி வருடம் முழுவதும் கிடைக்கிறது. ஆக அவர்களது வாழ்க்கை முறை மிகவும் எளிமையாகவும், எல்லா விதமான வசதிகளுடனும் இன்பமுடனும் அமைகிறது. அங்கு உழைப்பு என்பது மிகவும் குறைந்த அளவே உள்ளது. ஆனால் சமவெளியில் பெரும் பண்ணைகளில் மிகவும் அதிகமான உழைப்பும் பெரும் முதலீடும் கொண்டு செய்யப்படுகிறது. இது மிகவும் செலவை உள்ளடக்கியதாக‌ அமைகிறது. இதில் பூச்சி மற்றும் பருவச்சூழல் பெரும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. விவசாயிகளுக்கு நிரந்தரமான வருமானமின்றி விவசாயம் என்பது மிகவும் துன்பமானதாகிறது. செலவும் மிகக்கூடுதலாகவும் உள்ளது.

இந்த இரண்டு முறைகளுக்கும் உள்ள வேறுபாட்டைத் தெளிவாகப்புரிந்துகொண்ட பில் மொலிசன் விவசாயம் என்பது தொழில் அல்ல, அது இந்த உலக மக்களின் கலாச்சாரம், அதுவும் நிரந்தரமான கலாச்சார முறை ஆகும் என்பதை அறிந்துகொள்கிறார். ஆகவே தான் கற்றதை பல ஆயிரக்கணக்கான ஏக்கருள்ள விவசாய பூமியில் எப்படி செயல்படுத்தலாம் என்பதை அறிய தன்னுடன் ஒத்த கருத்துள்ள நண்பர்களுடன் இணைந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார். அதன் முடிவில் ஒரு விவசாய பூமி எப்படி அமையவேண்டும்,அதன் பயன் என்ன, அது எப்படி நிரந்தரமானதாகவும், இலாபகரமானதாகவும் இருக்கும் என்பதனை ஒரு புத்தகமாக வெளியிடுகிறார். அந்த புத்தகம்தான் 'பெர்மாகல்ச்சர்' (Permaculture) ஆகும். அதில் தன் ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் பண்ணை வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகள் என அனைத்தையும் தொகுத்து மிகவும் விரிவாக விளக்கியுள்ளார். அதில் அவர் கூறியவற்றில் மிகவும் முக்கியமான பகுதிகளை நாம் இங்கு பார்ப்போம்.

நிலைத்தன்மை கொண்ட‌ விவசாயத்தின் முதல் கோட்பாடு: வாழ்க்கை என்பது போட்டிகளால் ஆனது கிடையாது. அது கூட்டுறவினால் ஆனது.

உயிரினங்கள் ஒன்றுக்கொன்று பயன்படும் வகையில் தாங்கள் வாழும் சூழலில் மிக மாறுபட்ட குணங்களை கொண்டுள்ளது. இவை கூட்டிணைந்து, விட்டுக்கொடுத்து, பரிமாறிக்கொண்டு வாழ்கின்றன. மரத்தின் மேல்மட்டத்தில் உள்ள ஒரு இலை அல்லது கிளை கீழே விழும்போது அது கீழே உள்ள கரையான், மரவட்டை, நத்தை மற்றும் பூஞ்சைகளுக்கு உணவாகிறது. மேல்மட்டத்தில் பறந்து உண்ணும் பறவைகளின் எச்சம் பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு உணவாகிறது. அதில் இருந்து நமக்கு தெளிவாக தெரிவது, 'மேல்மட்டத்தின் கழிவு, கீழ்மட்டத்தின் உணவு', ' ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு' என்பதுதான். பூக்களில் உள்ள தேனை எடுத்துக்கொண்ட தேனீ அந்த தாவரத்தின் அயல்மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறது. மரத்தின் பழத்தை உண்ணும் பறவை அதன் விதையை வேறொரு இடத்தில் எச்சத்தின் மூலம் பரப்புகிறது. இன்னும் அந்த மரத்தை உண்டு வாழும் பூச்சியானது புழுக்களை பிடித்து உண்டு இரவிலும் வெயிலிலும் மரத்தில் தங்கி ஓய்வு எடுக்கிறது. இப்படி பல விதங்களில் தாவரங்களும் விலங்கினங்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து ஒன்றுக்கு ஒன்று உதவி வாழ்கின்றது, எந்த இடத்திலும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வதில்லை.

இரண்டாவது கோட்பாடு: நமக்கு ஓய்வு இன்றிக்கிடைக்கும் இயற்கை சக்தியான பஞ்சபூத சக்தியை அதிகபட்ச அளவு எப்படி பயன்படுத்திக்கொள்கிறோமோ அந்த அளவுக்குவெற்றி அமைகிறது.

எடுத்துக்காட்டாக நமது பூமியை ஒட்டியுள்ள குன்றில் வழிந்து வரும் மழை நீர் நமது பூமியைக் கடந்து செல்லும்போது பூமியில் சிறு சிறு தடுப்புகள் அமைத்து நீர் சேகரிக்கச்செய்யும் உத்திகள், நமது நிலத்தின் மீது விழும் சூரிய ஒளியை முற்றிலுமாக பயன்படுத்துவது போன்றவற்றை சொல்லலாம். இதற்கு பில் மொலிசன் மரங்களை மூன்று அடுக்கு முறையில் வளர்க்க சொல்கிறார். இதனால் சூரிய ஒளி அதிகபட்ச அளவில் அறுவடை செய்யப்படும். இதே போல காற்று மற்றும் பூமிப் பரப்பை அதன் போக்கில் புரிந்து கொண்டு அதை அதிக அளவுக்கு பயன்படுத்த பயன்படும் உத்திகளை பயன்படுத்துதல். இதன் மூலம் இயற்கை வளம் தொடர்ந்து சேமிக்கப்படுவதுடன் அது தொடர்ந்து நிலை பெற்றதாகவும் உள்ளது. இயற்கை வளங்கள் நிலை பெறுவதால் மனிதனின் பெருமளவு உழைப்பும், வெளி இடுபொருட்கள் மிகவும் குறைவதால் அந்த பண்ணை நிரந்தர இலாபத்தை கொடுக்கக்கூடியதாகவும் உள்ளது.

மூன்றாவது கோட்பாடு: மனிதனின் உழைப்பைப் பயன் உள்ள வகையில் பயன்படுத்துவதாகும்.

நமது குடியிருப்புக்கருகில் கால்நடை கொட்டகைகள் அமைத்தல், அவற்றுக்கு வேண்டிய பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனங்களை சேமித்து வைத்தல், இதனால் மனிதனின் 'தேவையற்ற நடை' குறைந்து எந்த நேரத்திலும் அவனது கண்பார்வையில் கால்நடை பராமரிப்பு இருக்கும். நீர்நிலையில் மீன் மற்றும் வாத்துகளை இணைப்பது. அவற்றிலும் நம் வேலைகளை குறைக்கும் உத்திகளை பயன்படுத்துதல். வீட்டுக்கு வேண்டிய காய்கறி வீட்டுக்கு அருகிலும் வருடம் ஒரு முறை அறுவடை செய்யும் மா, பலா, நாவல்,புளி போன்ற மரங்களை தோட்டத்தின் கடைக்கோடியில் நட்டு பராமரிப்பது போன்றவை ஆகும். ஆக ஒரு பண்ணையின் அமைப்பில் ஒரு மனிதனின் அன்றாட வேலைப்பளு மிகவும் குறைவானதாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இயற்கை சக்திகளை புரிந்துகொண்டு அதை நமது பண்ணையின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும். இப்படித் திட்டமிட்டு அமைக்கப்படும் பண்ணை ஒருங்கிணைந்த பண்ணையாகவும், நீடித்து நிலைத்த பண்ணையாகவும், நிரந்தர இலாபத்தை கொடுக்கக்கூடிய பண்ணையாகவும், சுயசார்பு வேளாண் பண்ணையாகவும் அமையும்.

ஆக பில் மோலிசனின் இந்த மூன்று கோட்பாடுகளின்படி பண்ணை அமையும்போது நமக்கு அடுத்த தலைமுறையும் அதற்கடுத்த பல தலைமுறையினரும் எந்தவித மாசுபாடுமற்ற உலகத்தில் வலம் வருவார்கள். சந்தோஷமாக வாழ்வார்கள். இந்த பூமிப்பந்தும் பசுஞ்சோலையாக வற்றாத வளத்துடன் மீண்டும் மீண்டும் வளமுடன் வாழும். நாம் நமது அடுத்த தலைமுறைக்கு பணமும் பொருளும் சேமிக்க நினைத்து சந்தைக்காக நமது பண்ணையில் பயிர் செய்ய நினைத்தால் இப்போதுள்ள பிரச்சினைகளை போல இன்னும் எண்ணற்ற இன்னல்களுக்கு ஆளாக நேரிடும். ஒரு கட்டத்தில் மனிதன் நோயிலும் பஞ்சத்திலும் அல்லாட வேண்டி வரும்.

இயற்கையோ தனது போக்கில் எப்போதும்போல் நிலைத்து நிற்கும் . இப்போது முடிவு செய்யுங்கள், நாம் எதை நோக்கி பயணம் செய்யலாம் என்று!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org