காலையிளங் கதிர்வருமுன் கரிக்குருவி பாடும் கண்விழித்த மீன்கொத்தி கான்வீட்டை நாடும் சோலையிலே சின்னான்கள் சூழ்ந்தஇசை விருந்தாம் சுற்றிவரும் நாகணவாய் தொடருமதை விரைந்தாம் காலைமுதல் தேன்சிட்டோ கள்மலரை நாடும் கருஞ்சிட்டோ மகிழ்ந்துலவிக் கான்வெளியில் பாடும் வால்குருவி ஈபிடிக்க வந்தென்றும் பறக்கும் வந்துலவும் பசுஞ்சிட்டால் வளர்மரங்கள் சிறக்கும்
அக்காக்குயில் இசைபாடி அதன்துணையை ஈர்க்கும் அயர்ந்திரவில் உறங்காமல் ஆள்காட்டி ஆர்க்கும் பக்கத்தில் வல்லூறு பதுங்கியிரை தேடும் பாங்காகத் தவிட்டுப்புள் பலசேர்ந்து ஓடும் கொக்கினங்கள் ஆவோடு குந்தஇரை மாட்டும் கோலமிகு தோட்டக்கள்ளன் கொஞ்சுமெழில் காட்டும் குக்குறுவான் மெதுவாகக் கூவிமரந் தாவும் குயிலென்றும் இசைபாடும் குட்டிப்புறா கூவும்
மஞ்சளான மாங்குயிலோ மரக்கிளையில் மறையும் வளர்புல்லில் கவுதாரி மருண்டோடி உறையும் பஞ்சுருட்டான் பலதிரியும் பைங்கிளியும் கூவும் பாங்காக வால்காக்கை பாடியிணை மேவும் அஞ்சாமல் நாரையொன்று அலுங்காமல் நடக்கும் அழகான உழவாரன் அதுகானைக் கடக்கும் கொஞ்சுமொழி ஆந்தைகளும் கூவுகின்ற இரவாம் கூகையொன்று குரலுயர்த்திக் கூட்டுகின்ற வரவாம்
வியக்கவைத்த கொண்டலாத்தி விரிக்குமெழிற் காட்சி விரைந்தியங்கும் செண்பகத்தின் இரைகவரும் மாட்சி மயில்கூட்டம் வந்திறங்கும் வளப்பயிரை அழிக்கும் மறைந்துலவும் புட்பெயரை மனந்தேடி விழிக்கும் ஒயிலாக அழைத்திருக்கும் ஒருகுருவி என்றும் ஒளிந்ததனைக் காண்பதற்குள் ஓடியெங்கோ ஒன்றும் தயங்காமல் வந்தமரும் சாம்பலிரு வாயன் தனியழகுக் கீச்சானும் தான்மறையும் மாயம்
தூக்கணாங் குருவிபல தொடுத்திருக்கும் கூடு தூங்காமல் வௌவால்கள் சுற்றுமிருட் காடு மூக்காலே மரங்களுக்கு முதலுதவி செய்யும் முழவெனவே மரங்கொத்தி மோதியிசை பெய்யும் (முழவு = மத்தளம்) காகங்கள் கரைந்திருக்கும் கரிக்குருவி விரட்டும் காட்டுகின்ற வீரத்தால் காட்டிலணி திரட்டும் நாக்குமிக நீண்டவராம் நகரிலுள்ளோர் வருவார் நடுக்காட்டில் இருப்பதுவோ நாம்தனியாய் என்பார்
எக்காலம் தனித்திருந்தோம் இக்கானில் நாங்கள் எம்குடும்பம் பெரிதென்றே எடுத்துரைப்போம் நன்றாய் மிக்கமகிழ் வீந்திருக்கும் மிகச்சிறிதாம் புட்கள் மீட்டுமிசை கவலைகளை விரட்டுமெழில் நாள்கள் தக்கமழை காணாமல் தவிப்பதொன்றே கவலை தனிமையெனுந் தொல்லையெமைத் தாக்கியதே இல்லை இக்காலம் பொற்காலம் இக்கானில் வாழ்வே இதற்கிணையோ நகரந்தான் எமக்குரைப்பீர் ஆய்ந்தே!