தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


இருவகை இந்தியர்கள்

ஈசாப்பின் பழைய கதை ஒன்று உண்டு. நரியும் கொக்கும் ஒன்றை ஒன்று விருந்துக்கு அழைப்பதும், நரி அகன்ற தட்டில் கூழைக் கொட்டி கொக்கைச் சாப்பிடச் சொல்வதும் பின் கொக்கு நரியை மறு விருந்துக்கு அழைத்து வாய் நீண்ட பாத்திரத்தில் கூழ் கொடுப்பதும்தான் அது. இதில் கொக்கையோ நரியையோ குறை சொல்வது சரியல்ல. இரண்டின் தேவைகளும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை, முரண்பட்டவை. நம் இந்திய நாட்டு மக்களை நாம் சற்று விலகி நின்று ஒரு விமரிசனப் பார்வையோடு நோக்கினால் நம்மிடையே இரு வகை மக்கள் இருப்பது தெரிய வரும். நகரத்தில் பிறந்து, வளர்ந்து, வெறும் காலால் மண்ணையே மிதித்தறியாத நகரத்து நரிகள் ஒரு புறம்; மண்ணும், மண் சார்ந்த தொழில்களும் வாழ்வாதாரமாகக் கொண்ட கிராமத்துக் கொக்குகள் இன்னொரு புறம். இதில் எண்ணிக்கையில் நரிகள் குறைவாயினும், வலுத்த இனம் அதுதான். ஆள்பவர்கள், திட்டமிடுவோர், நிர்வாகிகள், அதிகாரிகள், ஊடகப் பணியில் உள்ளோர், கல்வி, மருத்துவம், சட்டம்-ஒழுங்கு, நீதி போன்ற இன்றியமையாத துறையில் உள்ளோர் அனைவரும் நரிகளே. கொக்கிற்கும், நரிக்கும் உள்ள உண்மை வேற்றுமை ஆங்கிலப் புலைமையும், ஏட்டுக் கல்வியும், அதற்குச் சமூகத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ள கவர்ச்சியான மரியாதையுமே. உண்மையான உழைப்பிலும் , உற்பத்தியிலும் ஈடுபடும் கொக்குகள் எவ்வித மரியாதையும் இன்றித் தங்கள் குஞ்சுகளை எல்லாம் நரிகளாக மாற்றத் துடிக்கின்றன.

நரிகள் நல்லெண்ணத்துடன் கொக்குகளை நரிகளாக மாற்றி விட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். மேம்படுத்துதல் என்பது எல்லாரையும் நரிகளாக மாற்றி 2.5% முதல் 4% வரை இன்றியமையாத உற்பத்தியைக் கவனிக்க மட்டும் சில கொக்குகளை வைத்திருக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். நிறைய மக்களை விவசாயத்திலிருந்து இடம் பெயர்க்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சொன்னதும், நூறு புதிய நகரங்களை உருவாக்க வேண்டும் என்று இந்நாள் பிரதமர் மோடி சொல்வதும் எல்லாம் கொக்கின் பிரச்சினையை அறியாத நரிகளின் உள்ளக் கிடக்கைகளே. திட்டமிடுவோர் மற்றும் ஊடகங்களில் உள்ளோர் அனைவரும் நகரம் சார்ந்து இருப்பதால் அவர்கள் திட்டங்கள் அனைத்தும் அகன்ற பாத்திரங்களைச் சார்ந்தே இருக்கின்றன; அதற்கே மரியாதை கிடைக்கிறது. ஆனால் ஒரு காட்டிற்கு நரிகளும் தேவை, கொக்குகளும் தேவை. உண்மையான‌ உள்ளடக்கிய வளர்ச்சி என்பது ஊரக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, கொக்குகளைக் கொக்குகளாகவே கவுரவத்துடன் பறக்க விடுவதுதான் - நரிக் கூட்டில் அடைப்பதல்ல‌.

இன்று வாய்நீண்ட பாத்திரங்களில் சாப்பிடும் 69% கொக்குகளுக்குத் தேவை மண்சார்ந்த வேலை வாய்ப்பு; அவர்களின் வாழ்முறைக்கு ஒரு கௌரவம்; இயற்கை வளங்களை அழிக்காத தொழில்நுட்பமும் திட்டவரைவுக்களும். இதை நடைமுறைப் படுத்தத் தேவை கிராமம் பற்றி அறிந்த திட்டமிடுவோர். கிராமப்புற இளைஞர்களுக்கு அவர்கள் கிராமத்திலேயே சிறு தொழில்தொடங்க அவரவர் தாய்மொழியில் மேலாண்மைக் கல்வி அளிக்க வேண்டும். பிறந்த இடத்திலேயே தொழில்செய்வதும் நிலத்தைக் காப்பதும் மிகுந்த மரியாதைக்கு உரியது என்று பறைசாற்ற வேண்டும். இதற்கு ஒரு சமூக அங்கீகாரம் உருவாக்க தூர்தர்சன்,அகில இந்திய வானொலி போன்ற‌ அரசு இயந்திர‌ங்களும், பிற ஊடகங்களும் கிராம வாழ்முறையை உயர்த்தித் தொடர்ந்து பேச வேண்டும்.மிக முக்கியமாக‌ இயற்கை சார் சிறுதொழில்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் தர வேண்டும். தங்கள் இயற்கை வளங்களைத் தாங்களே ஆளுமை செய்ய ஒவ்வொரு கிராமத்திற்கும் அதிகாரம் வேண்டும்.

கொக்குகள் தன்னம்பிக்கை இழந்தால் நரிகளுக்குப் பட்டினிச் சாவுதான் என்பதை மறக்கலாகாது.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org