தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பறவைகள் -சகி


இந்த‌ மாதம் நாம் அறிந்து கொள்ளும் பறவை பஞ்சுருட்டன். கட்டாலன் குருவி என்றும் அழைக்கப்ப‌டும் இவை பல பறவை ரகங்களை உள்ளடக்கிய ஒரு பறவை இனமாகும். உதாரணத்திற்கு நீளவால் பஞ்சுருட்டன் (Bee-eater), பச்சைப் பஞ்சுருட்டன், செந்தளைப் பஞ்சுருட்டன், காட்டுப் பஞ்சுருட்டன் போன்றவை.இவை பார்ப்பதற்கு ஒன்று போல இருந்தாலும் சிறு,சிறு வேறுபாடுகள் மூலம் ஒன்றை ஒன்று அடையாளம் காணலாம்.

இப்பறவையினம் விவசாயியின் குலதெய்வம் என்றே கூறலாம். பூச்சிகளில் ஒன்றைக் கூட விட்டுவிடாது. பறந்து, பறந்து அடிப்பான் என்பது போல பறந்து, பறந்து பூச்சிகளைப் பிடிக்கும். பறக்கும் பூச்சிகளைப் பிடிக்கும்போது இவை அந்தரத்தில் தலைகீழாய் வட்டமிடும் அழகு இவற்றை எளிதாய் இனம் காட்டி விடும்.

வசிப்பிடம்

இந்தியா முழுவதும் இவற்றைக் காணலாம். சிலவகை அந்த இடத்திலேயே வருடம் முழுவதும் வசிக்கும் - வேறு சில, தட்பவெட்பத்திற்கு ஏற்ப இடம் பெயரும். கிராமங்கள், வயல்வெளிகள், புதர்கள், காடுகள் போன்ற இடங்களில் இவற்றைக் காணலாம் - ஓரளவு மரங்கள் உள்ள நகரங்களிலும் இவை இருக்கும். மண்ணில் குடைந்து, கூட்டமாக‌ இவை கூடு கட்டும். ஆற்றங்கரை ஓரங்களிலும், கால்வாய் மேடுகளிலும் துளைகளில் கூடு அமைத்துக் கூட்டமாக வாழும்.

தோற்றமும் அளவும்

சிட்டுக்குருவியை விடச் சற்றும் பெரிதாக இருக்கும் இவை பச்சை நிறத்தில் இருக்கும். நீளவால் பஞ்சுருட்டனுக்கு நீண்டவாலும், கழுத்தில் அட்டிகை போன்ற கருப்பு அல்லது பச்சை கலந்த நீல‌க் கோடும் இருக்கும். கண்களைச் சுற்றிக் கடவுளே மையிட்டாற்போல் அழகாக இருக்கும். மூக்கு நீண்டு, குத்தூசி போல இருக்கும்.

உணவு

பூச்சிகளைத்தான் உணவாய் உண்ணும். தேனி, தும்பி, வெட்டுக்கிளி, ஈசல் போன்றவற்றை உண்ணும். தேனிக் கூட்டைக் கண்டால் இவை கூட்டமாகச் சென்று, கூட்டைக் கலைத்து அனைத்துத் தேனீக்களையும் வேட்டையாடும். பூக்களில் அமரும் பூச்சிகள், இலைப்புழுக்கள் ஆகியவற்றை உண்ணும். சோளக் காட்டில், சோளத்தை உண்ணாமல் அதில் உள்ள பூச்சிகளைத் தின்னும் ஒரு மாமிச பட்சிணி, உழவனின் நண்பனான‌ இப்பறவை!

இனப்பெருக்கம்

காலம் மாசி முதல் சித்திரை வரை. வசந்தம் வந்தாலே இவற்றிற்குக் கொண்டாட்டம்தான்! நீண்ட குழாய்கள் போல் கூட்டைக் கட்டி 4 முதல் 7 முட்டைகள் இடும். இரு பறவைகளும் குஞ்சு வளர்ப்பதில் ஈடு படும். பெரும்பாலான பஞ்சுருட்டன்கள், வாழ்நாள் முழுவதும் ஒரே துணையுடன் வாழும்

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org