தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

புதிய புலவர்கள் - பாபுஜி


ஒவ்வொரு மாதமும் “புதிய புலவர்கள்” என்ற இக்கட்டுரைத் தொடரில், தற்கால விஞ்ஞானிகள் எப்படிப் பணத்திற்காக அரசரைப் பாடும் பண்டைக்காலப் புலவர்களைப் போல, வியாபார நிறுவனங்கள் இழுத்த இழுப்பிற்கு இணங்கி அறிவியலின் தூய்மையைக் காவு கொடுக்கிறார்கள் என்று எழுதி வருகிறோம். அவ்வரிசையில் நம் இம்மாதக் கதாநாயகன் மெர்க் (Merck) என்ற பெயருடைய ஒரு மிகப் பெரிய பன்னாட்டு மருந்து நிறுவனம். உயிர் காக்கும் மருத்துவமும், விஞ்ஞானமும், அதில் ஈடுபடும் நிறுவனங்களும், மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் கடவுளுக்குச் சமமாய்ப் பாமர மக்கள் நன்றியுடன் நினைக்கையில், காசுக்காக அவை செய்யும் பொய்களும், புரட்டுக்களும் எவ்வளவு இழிவானது!

உங்களுடைய நிறுவனம் பல்லாயிரக்கணக்கான கோடிகள் பொருளீட்டுகின்ற ஒரு மருந்தை கண்டுபிடித்து சந்தைப்படுத்துகிறது என்று வைத்துக்கொள்வோம். ஏராளமான மக்கள் அந்த மருந்தை பயன்படுத்தி பலன் அடைவார்கள் என்ற நம்பிக்கைக்கு எதிராக, அதை பயன்படுத்திய பல்லாயிரக்கணக்கான மக்கள் மாண்டு போனால் என்ன செய்வீர்கள்? உடனடியாக அந்த மருந்தை சந்தையிலிருந்து அப்புறப்படுத்தி எதனால் தவறு நிகழ்ந்தது என்று கண்டுபிடித்து தவறை சரி செய்து மக்களுக்கு ஊறு விளைவிக்காது என்று உறுதிப்படுத்திக்கொண்டு பின்னர் மீண்டும் அதை சந்தைப்படுதுவீர்கள்தானே? ஆனால் நடந்தது என்ன தெரியுமா?

மெர்க் என்கிற இந்தப் பன்னாட்டு மருந்து நிறுவனம் 2003 ஆம் ஆண்டு வையாக்ஸ் (vioxx) என்ற ஒரு மருந்தை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை( Food and Drug Administration -FDA )யின் அனுமதியோடு சந்தைக்கு கொண்டு வந்தது. மூட்டு வலி மற்றும் பிற‌ வலி நிவாரணியாக விளம்பரம் செய்யப்பட்ட இம்மருந்து, இருதய நோய், மாரடைப்பு போன்றவற்றை உருவாக்கி ஏறத்தாழ 50,000 பேரைக் கொன்றது! (கட்டுப்பாட்டு துறையின் அனுமதி பெறுவதே குதிரை கொம்பு -பல கட்ட மருத்துவ சோதனைகளை செய்து அதன் முடிவுகளை தரப்படுத்தி அந்த மருந்தின் நன்மைகள் அதன் பயன்பாட்டினால் விளையக்கூடிய பக்க விளைவுகளை விட மேலதிகமானது என்றும் சந்தையில் அந்த மருந்தை விட அதிக பயன் தரும் மருந்து எதுவும் இல்லை என்றும் ஆய்வு மூலம் உறுதி செய்த அறிக்கைகளை மருந்து நிறுவனம் கட்டுப்பாட்டு துறைக்கு அனுப்பி, கட்டுப்பாட்டுத்துறை அதை ஆய்வு செய்த பின்னரே அனுமதி அளிக்கும்).

சந்தைக்கு வந்த முதல் ஆண்டிலேயே அந்த மருந்தின் விற்பனையின் மூலம் மெர்க்குக்கு கிடைத்த வருவாய் 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் பன்னிரண்டாயிரம் கோடி ரூபாய்!) . ஆனால் 2004இல் தொடங்கி அந்த மருந்தின் பயங்கரமான விளைவுகள் (மரணம் - குறைந்த அளவில் அல்ல, பல்லாயிரக்கணக்கில்!) தெரிய வந்ததும்தான் அந்த நிறுவனம் எவ்வளவு பெரிய அளவில் அனைவரையும் ஏமாற்றி இருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் குவிய ஆரம்பித்தன.

இதில் கொடுமை என்னவென்றால் இம்மருந்தால் இந்தப் பக்க விளைவுகள் உள்ளது என்றும் அவை உயிருக்கு அபாயம் விளைவிக்கலாம் என்றும் இந்நிறுவனத்திற்கு முன்னமே தெரிந்து இருந்தது. ஆனால் அதைப் பற்றிய உண்மைகளை முற்றிலுமாக மெர்க் மறைத்து விட்டது. வையாக்ஸ் வலி நிவாரணியை உட்கொண்டால் மாரடைப்பு உருவாகும் வாய்ப்பு 35% அதிகரிக்கும் என்று மெர்க்கின் விஞ்ஞானிகள் கண்டறிந்த ஆய்வுகள் வெளியிடப் படவே இல்லை. பின் இது எப்படி வெளிவந்தது? வையாக்ஸினால் இறந்தவர்களின் உறவினர்கள் மெர்க் நிறுவனத்திற்கு எதிராக இழப்பீடு கேட்டு வழக்குத் தொடர்ந்த போது இவ்வாவணங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

மெர்க்குக்கு அமெரிக்க மருத்துவத்துறையை (FDA ) ஏமாற்றுவது எவ்வாறு சாத்தியமானது?

மெர்க் FDA யின் அனுமதி பெறுவதற்காக வையாக்ஸ்இன் தீமைகளை குறைத்தும், நன்மைகளை உயர்த்தியும் தன்னுடைய 'அறிவியல் ஆய்வு அறிக்கைகள்' இருக்குமாறு பார்த்துக்கொண்டது. மெர்க் தன் உட்கம்பனி விஞ்ஞானிகளையே பாரபட்சமற்ற வெளி விஞ்ஞானிகள் போல் உருவகம் செய்து, அவர்களின் ஆய்வறிக்கைகளை விடம் சமர்ப்பித்துத் தன் மருந்திற்கு அனுமதி பெற்றது. இந்த அறிக்கைகள் அறிவியல் அறிக்கைகள் போல் தோன்றினாலும் இயல்பில் அவை வையாக்ஸின் சந்தை மதிப்பை கூட்டுவதற்காக எழுதப்பட்டவையே!

மெர்க் எதனால் இந்த உண்மைகளை மக்களிடம் இருந்து மறைக்கத்துடிக்கிறது? பணம், பணம் மட்டுமே காரணம்!

மெர்க் இன் ஏமாற்று வேலைகள் அதன் மருந்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமெரிக்க நீதிமன்றங்களில் தொடுத்த வழக்குகளினால்தான் வெளிச்சத்துக்கு வந்தன. அதனால் மெர்க்கும் ( வியப்பூட்டும் வகையில் FDA யும்) இப்பொழுது மக்களின் இத்தகைய வழக்குகளை நீதிமன்றங்கள் எடுத்துக்கொள்ளவே கூடாது என்று வாதம் செய்து வருகின்றன (FDA அனுமதி அளித்துவிட்டால் அதன் பிறகு அதைப்பற்றி யாருக்கும் கேள்வி கேட்கும் உரிமை இருக்கக்கூடாதாம்! இதன் மூலம் மெர்க்கின் அழுக்கான ரகசியங்கள் வெளியே தெரியாமலேயே இருக்கும் - ஆனால் வையாக்ஸினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் இழப்பீடும் மறுக்கப்படும்!!

இவ்வாறான வழக்குகளில் செய்தி சேகரிக்கும் பருவம் (discovery phase) நிறுவனங்களின் மறைக்கப்பட்ட அழுக்கு உண்மைகளை வெளிக்கொணர்ந்துவிடும் என்ற பயத்தினால்தான் மெர்க் போன்ற நிறுவனங்கள் FDA

அனுமதியின் பின்னால் ஒளிந்துகொள்ளப்பார்க்கின்றன.

நமக்கு தெரிந்த உண்மைகளே இவ்வளவு என்றால் தெரியாத உண்மைகள் எவ்வளவு இருக்கும்?

இறந்து போனவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமாய் இருந்தும் எப்படி அமெரிக்க நீதித்துறையும், FDA வும் அரசும் மெர்க் போன்ற நிறுவனங்களை கண்டுகொள்ளாமல் விடுகின்றன? இத்தகைய ஏமாற்று நிறுவனங்கள் (மெர்க்) நீதியினால் தண்டிக்கப்பட வேண்டாமா?

தன் ஏமாற்றுத்தனத்தினால் 50,000 க்கும் அதிகமான மக்களை கொன்ற இத்தகைய ஒரு நிறுவனம் சட்டத்தின் முன்னால் (சட்டத்தை பாதுகாப்பவர்கள் முன்னால்) குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டாமா? ஆனால் அது எந்த வரையறையுமின்றி தன் மருந்துகளை வழக்கம் போல் சந்தைப்படுத்துதலை அமெரிக்கா எவ்வாறு அனுமதிக்கிறது? என்ரான்(Enron) போன்ற நிறுவனங்கள் (கொலைகள் செய்யவில்லை,கணக்கு வழக்கில் மட்டுமே ஏமாற்று வேலை செய்தன) தண்டிக்கப்டும்போது மனித கொலைகளை செய்யும் மெர்க் போன்ற நிறுவனங்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டாமா? இவற்றை வெளிக்கொணர வேண்டிய ஊடகங்களோ மெர்க் இன் ஏமாற்றுத்தனமான விளம்பரங்களை மக்களிடம் பரப்பி, மெர்க் தவறான வழியில் ஈட்டிய பொருளில் இருந்து லாபம் சம்பாதிக்கின்றன!!

தனி மனிதர்கள் சக மனிதர்களை ஏமாற்றும் போதும், கொலை செய்யும்போதும் அவர்கள் மீது பாயும் கடுமையான சட்டங்கள் மெர்க் போன்ற நிறுவனங்களை மட்டும் அதே போன்ற தவறுகளுக்கு தண்டனை வழங்காமல் விட்டு விடுவது ஏன்? தண்டனையில் இருந்து தப்பியது மட்டுமல்லாமல் என்ன தைரியமிருந்தால் இந்த நிறுவனங்கள், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போடும் வழக்குகளில் இருந்து, சட்டம் தங்களை பாதுகாக்க வேண்டும் என்று விவாதிக்க முடிகிறது? ( இந்த வழக்குகள் மனித குலத்தை மேம்படுத்த மருந்துகள் தயாரிக்கும் தங்கள் பொன்னான நேரத்தினை பாதிக்கின்றதாம்!)

இங்கே இயல்பில் நடப்பது என்னவென்றால் பணம் படைத்த வசதி மிக்கவர்கள் கொலை செய்து விட்டு சுலபமாக தப்பிப்பதும், ஏழைகள் பொருந்தாத தண்டனையை அனுபவிப்பதும்தான். இது காலம் காலமாக நடந்து வரும் ஒன்றுதானே!

மெர்க் ஒரு தீவிரவாத அமைப்பா? இல்லை. ஆனால், எந்த தீவிரவாத அமைப்பும் செய்யாத அளவுக்கு அமெரிக்க மக்களை காவு வாங்கியிருக்கும் நேர்மையற்ற, ஊழல் மிகுந்த, நல்ல நிறுவனம் போல் நடித்து மக்களை ஏமாற்றும், நல்ல அறிவியலுக்கு களங்கம் விளைவிக்கும் ஒரு நிறுவனம்!

மெர்க் ஒரு தீய சக்தி,மனித உயிர்களையும் மருத்துவத்துறையின் நம்பகத்தன்மையையும் சேர்த்தே பழி வாங்கும் ஒரு கட்டுப்படுத்த முடியாத நிறுவனம். ஒரு நாள் இந்த நிறுவனத்தை பற்றிய உண்மைகள் பரவலாக வெளியே வரும்போது, ஹிட்லரால் நடத்தப்பட்ட யூத முகாம்களை முதல்முதலாய் பார்க்க நேரிட்டபோது மக்களிடம் ஏற்பட்ட அதிர்ச்சிக்கு இணையான ஒரு அதிர்ச்சியும் நம்ப இயலாத தன்மையும் நம் மக்களின் மனதில் வரும்…நாம் எப்படி இதை நம் மண்ணில், நம் குழந்தைகளுக்கு, நம் குடும்பங்களுக்கு நிகழ அனுமதித்தோம்? என்று.

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org