தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

அடிசில் பார்வை - அனந்து


சைவ உணவு நல்லது என்று மாட்டையும், பன்றியையும் காலம் காலமாக தினப்படி உணவில் உண்டு வரும் அமெரிக்கர்கள் உணர்ந்து சொன்னால்தான் நாம் கேட்போம். நம் இந்தியர்களின் தன்னம்பிக்கையும், தங்கள் பாரம்பரிய அறிவின்மேல் உள்ள மதிப்பும் அப்படிப்பட்டது! அந்த வரிசையில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான மிச்சிகன் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வை நாம் பார்ப்போம். அப் பல்கலைகழகம், ஒரு ஆய்வறிக்கையில் இப்படி கூறுகிறது: மஞ்சளில் குர்குமின்(curcumin) என்னும் பொருள் உள்ளது. அது நமது ஆரோக்கியதிற்கு மிகவும் முக்கியம். அது ஒரு சிறந்த கிருமி நாசினி, நோய்த் தடுப்பாளி, முக்கியமாக புற்று நோயை எதிர் கொள்ள மிகவும் உதவுகிறது என்று. ஆனால் அதனைச் சமையலில் சேர்த்துக் கொண்டால் அதிலுள்ள குர்குமின்னை நம் உடல் முழுவதுமாக 100 சதவிகிதம் உறிஞ்சிக்கொள்வது இல்லை; 60% வரை தான் எடுத்துக்கொள்கிறது. இன்னும் அதிகமாக‌ உட்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்றும் அவர்கள் ஆய்வு செய்தனர். அப்பொழுது பெப்ப‌ரின் (pepperine) என்னும் இன்னுமொரு பொருள் வேண்டும். அப்படி பெப்ப‌ரின் இருந்தால் இன்னும் 15% அதிகம் எடுத்துக்கொள்ளும். அதற்கு மேலும் நமது உடல் அந்த குர்குமினை உறிஞ்சிக்கொள்ள வேண்டும் என்றால், அதன் வெப்ப நிலையை அதிகரிக்க வேண்டும், அப்பொழுது இன்னும் 20% அதிகம் சத்துக்கள் ஈர்க்கப்படும் என்று கண்டறிந்தனர். இந்த பெப்பரின் என்பது குறுமிளகில் இயற்கையாய் உள்ள பொருள். எனவே உடல் ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்புக்கும் சூடாக்கிய மஞ்சள் பொடியும், மிளகுப் பொடியும் மிக நன்று என்று பல விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கின்றனர். என்னே அருமை! என்ன, பல ஆயிரம் ஆண்டுகள் தாமதமாக‌ வந்திருக்கிறது அவர்கள் ஆய்வு, அவ்வளவே!

நம் வீட்டிலிருக்கும் பாட்டி, நாம் இருமினாலோ, தொண்டை வலி, காய்ச்சல் என்றாலோ உடனே, காய்ச்சிய பாலில் மஞ்சள் பொடியும், மிளகு தூளும் கலந்து கொடுப்பார். ஆய்வுகளும் அறிக்கைகளும் இல்லாமலே நமக்கு இப்படி கொடுத்து நமது உபாதைகளிலிருந்து காப்பாற்றினார். நாம் அதனை வேண்டாவெறுப்பாகவே, ஒரு நம்பிக்கையின்மையுடனே பருகுவோம். இதையே இன்று ஒரு மேற்கத்திய பல்கலைகழகம் ஒரு ஆய்வறிக்கையாக வெளியிட்டால்? இந்தப் பெரிய ஆய்வின் வெளிப்பாடை நம் முன்னோர்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே அறிந்து தெரிந்து வைத்து இருந்தனர். 2500 வருடங்களுக்கு முன்னரே “அஷ்டாங்க ஹிருதயம்” என்று உணவையும், ஆரோக்கியத்தையும் முன்னிறுத்தி ஒரு அருமையான காவியத்தை படைத்தார் வாக பட்டர். இவர் தனது குருவான சரகர் எழுதிய ஆயுர்வேத சூத்திரங்களை நிருபிக்கவே தம் வாழ் நாள் முழுவதையும் அர்ப்பணித்தார். அதற்காக பல்வேறு பரிசோதநைகளை பற்பல மனிதர்களுடன் நடத்தித் தன் குருவின் சூத்திரங்களை நிரூபித்தார்.

இவ்வாய்வு நடத்துவதற்காகவும் அட்டாங்க இருதயத்தை நிரூபிக்கவும் வேண்டி அவர் மேற்கொண்ட முயற்சிகளால் 130 வயது வரை வாழ்ந்த வாக பட்டர், இனித் தன் வாழ்நாளில் செய்யவேண்டியது எதுவும் இல்லை என்று தானே தன் வாழ்வை முடித்துக் கொண்டார்! உணவிற்கும், உடல்நலத்திற்கும் உள்ள ஆழ்ந்த்த தொடர்பையும் அதன் மேல் நம் முன்னோர்களுக்கிருந்த அறிவும், ஆளுமையும் விவரித்து முடியாது.இப்படி உணவு மற்றும் ஆரோக்கியத்தை முன்னிறுத்திப் பல காவியங்கள் உள்ளன நம் பண்டை நாகரீகத்தில்.

சரி, அந்த ஆய்விற்கு வருவோம். மஞ்சளை கிட்டத்தட்ட அனைத்து நோய்க்கும் தீர்வாகவே சித்தரிக்கிறது அந்த ஆய்வு. புற்று நோய் முதல் பல வியாதிகளுக்கும் இதுவே மருந்து என்கிறது. 2010ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் நாகசாகி நகரில் உள்ள சீபோல்ட் பல்கலைக் கழகம் உடல்நலத்துடன் உள்ளவர்கள் குர்குமின் மாத்திரைகளை உட்கொண்ட சில மணி நேரங்களிலேயெ அவர்கள் ரத்தத்தில் geranylgeranoic acid (GGA) எனப்படும் புற்றுநோய் எதிர்ப்பு அமிலம் இருப்பதைக் கண்டறிந்தனர். 2011ல் சீன மருத்துவர்கள் தாங்கள் மேற்கொண்ட ஆய்வில் மார்பகப் புற்றுநோய் உள்ளவர்கள் குர்குமின்னை உட்கொண்டால் புற்றுநோய் திசுக்கள் அழியும் apoptosis என்னும் நிலை ஏற்படுகிறது என்றறிந்தனர். இதோடு நின்றுவிட‌வில்லை மஞ்சளின் நற்குணங்கள். வலுமையான வீக்க-எதிர்ப்பு, ரத்த சோகை எதிர்ப்பு போன்ற தன்மைகளை உடைய குர்குமின், இருதய நோய், நீரிழிவு நோய், வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவு தவறுதல், அல்சைமர் நோய் எனப்படும் மனத் திறனிழப்பு நோய் போன்றவற்றைத் தடுக்கும் ஒரு சிறந்த இயற்கை மருந்து ஆகும். தென்னிந்தியாவில் 5000 வருடங்களுக்கு முன்னரே மஞ்சள் பயிரிடப் பட்டிருக்கிறதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுத்தமான மஞ்சள் தூளில் 17% மங்கனீசு, 10.1% இரும்புச் சத்து, 4% வைட்டமின் பி, 3.2% பொட்டாசியம் மற்றும் 4.3% நார்ச்சத்து உள்ளது.

இந்தப் பாரம்பரியம் மிக்க மஞ்சளை மருந்தாகப் பயன் படுத்துவதை இரண்டு அமரிக்க விஞ்ஞானிகள் தங்கள் கண்டு பிடிப்பு என்று காப்புரிமை செய்து விட்டனர் 1996ல்! அதன் பின்னர் நம் நாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுக் குழுவும்(CSIR), டாக்டர் வந்தனா சிவாவும் உலக வர்த்தகக் குழுமத்தில் போராடி இது நம் பாரம்பரிய அறிவு, காலம் காலமாக நம்நாட்டில் இருப்பது என்று ஆதாரங்களுடன் எடுத்து வாதாடி அக்காப்புரிமையை ரத்து செய்தனர்.

இப்படிப் பல அரிய பண்புகளை கொண்ட மஞ்சளை, எப்படிக் கையாள்கிறோம் இன்று? உங்களில் பலருக்கும் நினைவு இருக்கும்- நம் ஒவ்வொரு வீட்டிலும் மஞ்சள், கிழங்காக இருக்கும். யாரேனும் விருந்தாளி வீட்டிற்கு வந்தால், அவர்களுக்கு வெற்றிலை பாக்குடன் சில மஞ்சள் கிழங்குகள் கட்டாயம் வைக்கப்படும். அப்படி அந்த மஞ்சளின் அருமை பெருமைகளை உணர்ந்து, அவற்றைப் பல வழிகளிலும் உபயோகித்தும் பகிர்ந்தும் வந்தனர். உடலுக்கும் சமையலுக்கும் அவ்வப்பொழுது அரைத்து உடனுக்குடன் உபயோகித்து வந்தனர். இன்றும் நம் தாய்மார்கள் காய்கறி, வெங்காயம் வதக்கும் போது மஞ்சள்தூள் இடுவது இதனால்தான். வீட்டிலேயே மசாலா போன்றவை அரைக்கப்படும் பொழுது வரும் நறுமணம் நாசியைத் துளைக்கும். இன்று? மஞ்சள் கிழங்கையே பார்த்திராதோர் பலர் இருப்பர். மேலும் மஞ்சள் பொடியின் அருமையும் தெரியாது உள்ளனர்.மேலும் இன்றைய வியாபார மற்றும் பேராசை பிடித்த வர்த்தக‌ உலகம், இந்த மஞ்சளிலும் கலப்படங்கள் பல செய்து அதனையும் கெடுத்து விட்டனர்.

அது உற்பத்தி முதல் பொடியாகும் வரை பல ரசாயனப் பொருட்கள் கலக்கப்படுகின்றன. உற்பத்தியில் பல விஷங்கள், DAPயிலிருந்து பல்வகை ரசயனங்கள்- காப்பர் ஆக்சி குளோரைடு, ப‌விஸ்டின் போன்ற கொடிய விஷங்கள் உபயோகிக்கப்படுகின்றன. 7 முதல் 8 மாதப்பயிரான மஞ்சள் நிலத்தில் பல களைகள் வளரும். இன்று களைக்கொல்லிகளும் மிகவும் தாராளமாக தெளிக்கப்படுகின்றன. இவை போக பூஞ்சை மற்றும் உறிஞ்சும் புழுக்களுக்கும் விஷம் தெளிக்கப்படும். முன்பொரு காலத்தில் எரு மற்றும் சாணம் மட்டுமே இட்டு விளைவிக்கப்பட்ட மஞ்சள் இன்றும் இயற்கை விவசாயிகள் மிக நேர்த்தியாக மிக சில இடுபொருட்கள் மட்டுமே உபயோகித்து விளைவிக்கின்றனர்.நமது தாளாண்மையின் சுந்தரராமன் அவர்கள் முன்பே நமது இதழில் எழுதியது போல் பல அற்புதமான தொழில் நுட்பங்கள் உள்ளன இயற்கை விவசாய முறையில் பயிரிடும்போது.சமீபத்தில் கல்வராயன் மலை பகுதிகளில் நான் பார்த்த பொழுது, வேர் அழுகல் பிரச்சினை அதிகாமாக இருந்தது, அதற்கு மேலும் கொடிய ரசாயன விஷங்கள் தெளிக்கப்பட்டன. இருந்தும் பயனில்லை. ஆனால் இயற்கையாக விளைவிப்பவர்கள் பனம்பழத்தை கோமியத்தில் ஊற‌ வைத்துப், பின் தெளித்து மிக எளிதாக‌ இந்த வேர் அழுகலிலிருந்து காப்பாற்றினர். ஊடு பயிரின் மூலம் பூச்சி மற்றும் வியாதிகளிலிருந்து காப்பாற்றிவந்தனர். ஆயினும்…

இன்றைய வியாபார உலகில், மஞ்சள் அறுவடைக்கு பிறகு இன்னும் பல நஞ்சுகள்! பல்வேறு சோதனைகளில் இந்த கொடிய நஞ்சுகள் தங்கி நிற்பது நிரூபிக்கப்பட்டது. மேலும் மஞ்சளுக்கே மஞ்சள் சாயம் அடிக்க நம்மவர்களால் மட்டுமே முடியும்! அவை நம்மை அறையும் பளீர் மஞ்சளாக இருக்க லெட் கிரோமேட், மெட்டாலிக் எல்லோ, கோபால்ட் எல்லோ போன்ற கொடிய நச்சுப் பொருட்கள் கலக்கப்படுகின்றன. இவற்றுக்கு மனிதர்களின் பேராசையும், நம் போன்ற நுகர்வோரின் அறியாமையுமே காரணம். இவை போதாதென்று மேலும் எடை கூட்ட, தவிடு மற்றும் மரத்துகள்கள் கலக்கின்றனர். லாப வெறிக்கு ஒரு எல்லையே இல்லை அல்லவா?

இதில் மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால், மஞ்சள் நம் பாரம்பரியத்தில் மருத்துவ (மற்றும் தெய்வ/மங்கள‌) காரியங்களுக்கு பெருமளவில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. அதனாலேயே பல முறை, நமக்கு ஏற்படும் பல பக்க‌ விளைவுகளுக்கும், வியாதிகளுக்கும் இப்படிச் சீரழிக்கப்பட்ட மஞ்சளுக்கும் நாம் முடிச்சு போடுவதில்லை.

இதற்கு நாம் என்ன செய்யலாம்? எப்பொழுதும் இயற்கையாக விளைவிகப்பட்ட மஞ்சளையே தேடி உபயோகிக்கலாம். மஞ்சள் போன்ற பொருட்களில் பெரும் விலை வித்தியாசமும் இருப்பதில்லை. மேலும் ஒரு தேக்கரண்டி இயற்கை மஞ்சள் தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி தேனையும் கலந்து அதி காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், பல வியாதிகளிலிருந்தும் காக்கும் என்று எல்லா பாரம்பரிய மருத்துவ பள்ளிகளும் கூறுகின்றன.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org