தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உணவும் உரிமையும் - சரா


நாம் இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டங்களில் சென்ற மாதம் மூழ்கியிருந்த அதே நேரத்தில், தெற்கு அமெரிக்க நாடான கொலம்பியா, ஒரு பெரும் புரட்சியில் முனைந்திருந்தது. முக்கியமாக அந்நாட்டின் 60 சதத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்கள் சுதந்திரம் பறிபோய்விடும் ஆபத்தை எதிர்த்து மிகப்பெரிய அளவில் ஒன்று திரண்டு, கொதித்தெழுந்தனர். அவர்களது தலைநகரம் முதலான பல நகரங்கள் முற்றுகையிடப் பட்டன; வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, விவசாயிகள் நகர வாசிகளுக்கு உணவு உற்பத்தி செய்வதை நிறுத்தினர்; பால் தெருக்களிலும், வயல்களிலும் கொட்டப்பட்டது. இதற்கெல்லாம் காரணம்?

அந்த நாட்டின் சிறு மற்றும் குறு விவசாயிகளை ஒட்டுமொத்தமாக, பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காக, காவு கொடுக்க அந்நாட்டு அரசாங்கம் எடுத்த சில முடிவுகள்தான் இப் புரட்சிக்குக் காரணம்.

கொலம்பியாவில் நடந்த இந்த முக்கியமான நிகழ்வு, நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இந்த நிகழ்வைக் குறித்த செய்தியே கடந்த சில நாட்களாகத்தான் வெளிவரத் தொடங்கியுள்ளது.

அந்நாட்டு அரசாங்கம் சமீபத்தில் அமேரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த சில நாடுகளுடன், 'தடையற்ற‌ வர்த்தக ஒப்பந்தம்' (free trade agreement) என்னும் ஒரு ஒப்பந்தத்தில் கை எழுத்திட்டது. இதன் மூலமாக, இந்த மேலை நாடுகளில் உற்பத்தியாகும் விளை பொருட்கள், மானிய விலையில், கொலம்பியாவில் இறக்குமதி செய்யப்பட்டது. இத்தகைய இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலை, கொலம்பியாவில் விளையும் பொருட்களை விட குறைவாக இருந்தன‌. இதனால் சந்தையில் மிகக் குறைந்த விலையில் விற்க வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். இதற்கிடையில், அமெரிக்க நிறுவனமான கார்கில் போன்ற பன்னாட்டு கம்பனிகளுடன், கொலம்பிய அரசாங்கம், மிகப்பெரிய அளவில், தொழில் சார்ந்த விவசாய விளைபொருட்களை கொலம்பியாவில் விளைவிப்பதற்காக ஒத்துழைப்பு அளித்தது. அவர்களுக்கு விளை நிலங்களைப் பெரிய அளவில் விற்பனை செய்ய, கொலம்பிய அரசாங்கமே ஒத்துழைத்தது! சிறு விவசாயிகள் விவசாயத்திலிருந்து, ஒடுக்கப்படவும், துரத்தப்படுவதற்கும் இசைவாகப் பல சட்ட திருத்தங்களைச் செய்தது. அவர்களின் வாழ்வாதார உரிமைகளைப் பறிக்க ஒட்டுமொத்த முயற்சி எடுத்தது. (இதெல்லாம் மிகவும் பழகியவை போல், இங்கே நடப்பவைபோல் தோன்றுகிறதே!).

தாங்கள் அழிவைத் தள்ளப்படுவதை உணர்ந்த விவசாயிகள் ஜூன் மாதத்திலிருந்தே ஒன்று திரள ஆரம்பித்தனர். கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடித்த இந்த இயக்கம், விரைவில் பலரையும் கவர்ந்து, ஆகஸ்ட் 19 ஆம் தேதி, தேசிய கடை அடைப்பு மற்றும் எழுச்சியாக உருவானது. எண்ணை உற்பத்தி தொழிலாளர்கள், சுரங்க தொழிலாளர்கள், லாரி ஓட்டுனர்கள், மருத்துவத்துறை தொழிலாளர்கள் என்று பலரும் விவசாயிகளுடன் ஒன்று சேர்ந்தது, இந்த விவசாயிகளின் உரிமை கோரும் இயக்கத்தை நாடு தழுவியதாக மாற்றியது. போராட்டத்தின் 10 ஆம் நாளான ஆகஸ்ட் 29ஆம் தேதி, 20,000 மாணவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு, தலைநகர் போகோடோவை, முற்றிலும் செயலிழக்கச் செய்தனர்.

நிலைகுலைந்த அரசாங்கம் செய்வதறியாது தவித்தது. 250க்கும் மேற்பட்ட விவசாய மற்றும் தொழிற்சங்க தலைவர்களை, இல்லாத காரணங்களை காட்டிச் சிறை இட்டது. அந்நாட்டின் ஜனாதிபதி சந்தோஸ், தொலைகாட்சிகளில் தோன்றி, விவசாயிகளின் எழுச்சி என்று எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் நடக்கவே இல்லை என்று அறிக்கையிட்டார். ஆனால் அடுத்த நாளே, ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க போலிஸ் நடத்திய கண்ணீர் புகைத் தாக்குதலை, ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்!

இவர்களின் இந்த போராட்டத்தின் அடிப்படை கோரிக்கை என்ன?

முன்னமே கூறியதைப்போல, கொலம்பிய‌ அரசாங்கம், அமெரிக்க மற்றும் ஐரோப்ப நாடுகளுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தந்தின் அடிப்படையில், கொலம்பியாவில் முதலீடு செய்வதற்குக் கப்பமாக, அந்நாட்டின் விதை சந்தைக்கு, இவ்வந்நிய க‌ம்பனிகளுக்கு ஏகபோக உரிமை வழங்கப்பட்டது. அதாவது, சிறு விவசாயிகளுக்கு, தங்கள் விதைகளை பராமரிப்பதற்கோ அல்லது பகிர்ந்து கொள்வதற்கோ எந்த விதமான உரிமையும் இல்லை என்று அரசாங்கமே முடிவெடுத்தது.

பாரம்பரிய விதைகளைப் பேணுவதற்கான உரிமையை விவசாயிகளிடமிருந்து பறிக்கும் சட்டங்கள் உலகெங்கும் உள்ள ஏழை நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாகவே இயற்றப்படுவது நாம் அறிந்ததே. வெறித்தனமாக, இந்நாடுகளின் உயிர்ப்பன்மையத்தின் மேல் போர்தொடுக்கும் வேகத்துடன் இச்சட்டங்கள் எல்லாப் பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப் படுகின்றன. இதைப்போலவே கொலம்பியாவிலும், விவசாயிகள், பாரம்பரிய விதைகளை சேமிப்பதோ அல்லது மற்ற விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்வதோ சட்ட ரீதியாகத் தவறு என்று பிரகடனப்படுத்தப் பட்டது. கொலம்பியா அரசாங்கமே 2011 ஆம் ஆண்டு, விவசாயிகளின் விதை கிடங்குகளை முற்றுகை இட்டு, அங்கு பாதுகாக்கப்பட்ட 70 டன்னுக்கும் மேற்பட்ட விதைகளை எரித்தது!

இவை எல்லாமே, சிறு விவசாயிகளால் கொலம்பிய‌ நாட்டிற்கு உணவளிக்க இயலாது என்ற காரணத்தினால் அல்ல. இந்த முயற்சிகள், வேறொரு பொருளாதார சித்தாந்தத்தை முன்வைத்து, அத்தகைய சித்தாந்தம் தான் உலகின் மொத்தத்திற்கும் உணவளிக்க இயலும் என்று, பன்னாட்டு கம்பனிகளின் லாபத்திற்காகவும், சில அரசியவாதிகளின் பேராசைக்குத் தீனி போட‌வும் மேற்கொள்ளப்படும் உத்திகள். விவசாயிகளின் உரிமை இன்று பறிபோனால், நுகர்வோரின் உரிமை நேற்று பறிபோனதாக அல்லவா நாம் உணர்து கொள்ளவேண்டும்?

“அரபு தேசங்களுக்கு கச்சா எண்ணை உற்பத்தி எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு உணவு உற்பத்தித் தொழில் (இன்று) அமெரிக்காவிற்கு முக்கியமானது (லாபம் தரக்கூடியது, பாதுகாக்கப்பட‌ வேண்டியது)”

- அமெரிக்க உளவுத்துறை பதிப்பு, 2009

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org