தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மாடல்ல மற்றையவை

மாடுகளுக்கு நாம் உணவு அளிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒன்று அது மாட்டிற்கு திருப்தியாக இருக்க வேண்டும், இரண்டு நிறைவாக இருக்க வேண்டும், மூன்று அதன் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவையான ஊட்டத்தை அளிப்பதாக இருக்க வேண்டும். மேலும், மாடுகளுக்கு பழக்க வேண்டாத, செரிக்க இயலாத உணவை தவிர்க்க வேண்டும். தேவைக்கு அதிகமான ஊட்டமும் அதன் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும். எனவே, உணவு சரிவிகிதமாக இருக்க வேண்டும். இந்த வரையறைக்குள் நாம் தேர்ந்தெடுக்கும் தீவனம், பெரும்பாலும் நமது பண்ணையிலேயே கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். வெளியிலிருந்து வாங்க வேண்டி இருந்தாலும் நமக்கு அருகாமையில் கிடைக்கக் கூடியதாகவும், பதப்படுத்தாத, இயற்கையான உணவாக இருப்பதும் அவசியம். (மாட்டுத் தீவன கம்பெனிகள் தயாரிக்கும் தீவனமும் விளையும் பொருட்களிலிருந்தே தயாரிக்கப்படுகின்றது. ஆனால், வெகு நாட்கள் கெடாமல் இருக்கவும், விற்பனைக்கும், போக்குவரத்திற்காகவும் பதப்படுத்தபடுகின்றது.) உணவிற்கு ஆகும் செலவு நமக்கு கிடைக்கும் பலன்களில், பாதிக்கும் குறைவாக இருக்க வேண்டும். மாட்டிற்கு அளிக்கும் உணவு, நமது உணவுடன் போட்டியாக இருக்கக் கூடாது. தானியம் மனிதனுக்கு - தவிடு மாட்டிற்கு, எண்ணெய் மனிதனுக்கு - பிண்ணாக்கு மாட்டிற்கு, பருப்பு மனிதனுக்கு - பொட்டு மாட்டிற்கு, சோறு மனிதனுக்கு - கஞ்சியும், கழுநீரும் மாட்டிற்கு என்று நமது உணவு தயாரிப்பில் எஞ்சியது மாட்டிற்கு என்று அமைய வேண்டும். (நாம் முதல் அத்தியாயத்தில் பார்த்தது போல் பீர் மனிதனுக்கு - பீர் பொட்டு மாட்டிற்கு என்று அதிரடியாக முடிவு செய்ய வேண்டாம்.)

இவை தானா, இன்னும் வேறு கட்டுப்பாடுகள் உள்ளதா என்று மலைக்க வேண்டாம். மாட்டிற்கு என்று இதை எழுதத் துணிந்தாலும், ஒரு முறை படித்துப் பார்த்தால், நாம் நமது உணவிற்கும் இதே வரையறைகளைப் பயன்படுத்துகிறோம் (பயன்படுத்த வேண்டும்!). எனவே, மாடுகளின் வயிறு அமைப்பின் வேறுபாட்டையும், அதன் செரிக்கும் தன்மையின் வித்தியாசத்தையும் சிறிது தெரிந்து கொண்டால் போதும். தீவனம் என்ன, எவ்வாறு, எவ்வளவு என்பதை எளிதாக முடிவு செய்யலாம்.

மாடுகளின் வயிறு நான்கு அறைகளைக் கொண்டது. அவற்றில் முதல் அறை மிகப்பெரியது. மாடுகள் சாப்பிடும் போது உணவை நன்றாக கூழாக அரைப்பதில்லை. அவை மேயும் போது கவனித்தீர்களானால், முன் பற்களால் புல்லை வெட்டி, உமிழ் நீருடன் கூட்டி, துண்டாக்கி, அப்படியே விழுங்கி விடும். இந்த உணவு முதல் அறையாகிய அசைவூண் வயிறுக்கு செல்கிறது. அங்கே, பல வித நுண்ணுயிர்களுடன் கலந்து இலேசாக சிதைகின்றது. பின், மாடுகள் அசை போடுவதை கவனித்திருப்பீர்கள். சிறிது நொதித்த நிலையில் உள்ள உணவை அசைவூண் வயிற்றிலிருந்து மீண்டும் வாய்க்கு கொண்டு வந்து, கடைவாய் பற்களால் நன்கு அரைத்து, கூழாக்கி மீண்டும் விழுங்கும். இது இரண்டாவது அறைக்கு சென்று, தேவையில்லாத பொருட்கள் அங்கே தங்கி விடும். பின் மூன்றாவது அறைக்கு சென்று, திரவ நிலையில் உள்ள பொருட்கள் அனைத்தும் உறிஞ்சப்பட்டு நான்காவது அறையான செரிக்கும் வயிறுக்கு செல்லும். இதற்குள்ளாக, உணவு பல வகை நுண்ணுயிர்கள், என்ஸைம்கள் ஆகியவற்றுடன் கலந்து செரிப்பதற்கு தயாராக இருக்கும். இந்த செரிக்கும் அறை நமது வயிறைப் போன்ற அமைப்பு கொண்டது. நமக்கு செரிமானம் ஆவது போல் இந்த அறையில் உணவு செரித்து உடலுக்கு தேவையான ஊட்டத்தை அளிக்கிறது. இந்த அமைப்பினாலேயே மாடுகளால், நமக்கு செரிக்க கடினமான பொருட்களைக் கூட உண்டு செரிக்க இயல்கிறது.

மாடுகளுக்கான உணவை மூன்று வகையாக பிரிக்கலாம்: பசுந்தீவனம், உலர்தீவனம், அடர்தீவனம். பசுந்தீவனம் என்பது புற்கள், மர இலைகள் போன்ற பசுமையாக உள்ள பொருட்கள். உலர்தீவனம் என்பது காய்ந்த நிலையில் உள்ளவை: வைக்கோல், சோளத்தட்டை, கடலைச் செடி போன்றவை. அடர்தீவனம் என்பது தானியத்தின் எஞ்சிய பகுதி: தவிடு, பிண்ணாக்கு, பொட்டு போன்றவை. இந்த தீவனங்களை என்ன அளவில் அளிக்க வேண்டும்? மாடுகளும் குழந்தைகளைப் போல், எல்லா உணவும் தேவைக்கு அதிகமாக இருந்தால், பிடித்த உணவை மட்டுமே வயிறு நிறைய உட்கொண்டு விடும். எனவே, நாம் தான் மாடுகள் சரிவிகிதமாக உண்ணும்படி கலந்து அளிக்க வேண்டும். பசுந்தீவனத்திலும், உலர்தீவனத்திலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே, எளிதில் செரிக்கும் தன்மை கொண்டது. ஊட்டச்சத்து அதன் எடையுடன் ஒப்பிடும் பொழுது குறைவாக இருக்கும். ஆனால், கனிம உப்புக்களும், வைட்டமின்களும் அதிகம். இவை மாட்டிற்கு நல்ல ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்புத்தன்மையையும் வழங்கும். இந்த வகை தீவனத்தின் கொள்ளளவு அதிகமாக இருப்பதால், மாட்டிற்கு வயிற்றை நிரப்பி, திருப்தியை அளிக்கும். மாட்டின் முழு உணவுத் தேவையையும் இந்த இரண்டு தீவனம் மூலமே அளிப்பது சிறந்தது. அது இயலாத போது, அடர் தீவனத்தை, ஈடு கட்டுவதற்காக அளிக்கலாம். அடர் தீவனம் மட்டுமே அளிப்பது சரிவிகித உணவாகாது. அடர் தீவனத்தில் ஊட்டச் சத்துக்கள் அதிகம். ஆனால், செரிக்கும் திறன் குறைவு. பல வித தவிடுகள், பொட்டுகள், பிண்ணாக்கு போன்றவற்றை கலந்து கலப்பு தீவனமாக அளிக்கலாம்.

முதலில் எவ்வளவு உணவு அளிப்பது என்பதை உலர் எடையில் (dry weight) அளக்க வேண்டும். ஒவ்வொரு தீவனத்தின் எடை அதன் உலர் எடையை விட அதிகமாக இருக்கும். அடர்தீவனத்திலும், உலர்தீவனத்திலும் 90 விழுக்காடு உலர் எடை இருக்கும். அதாவது, 10 கிலோ அடர்தீவனத்தின் உலர் எடை 9 கிலோவாகும். 5 கிலோ வைக்கோலின் உலர் எடை 4.5 கிலோவாகும். பசுந்தீவனத்தை நாம் இரண்டு விதமாக அளிக்கலாம். ஒன்று மாடுகளை மேய்ப்பது. அந்த வசதி இல்லாத போது, பசுந்தீவனப் பயிர்களை விளைவித்து, மாடுகளுக்கு வெட்டி அளிப்பது (stall fed). மாடுகள் மேயும்போது பச்சை புற்களுடன் சில காய்ந்த புற்களும் இருக்கும். எனவே, அதன் உலர் எடை 30 விழுக்காடாக இருக்கும். தீவனப் பயிர்களை வெட்டி அளிக்கும் போது அவற்றின் உலர் எடை 25 விழுக்காடே இருக்கும். அதாவது, ஒரு மாடு 10 கிலோ புல் மேய்ந்தால் அதன் உலர் எடை 3.3 கிலோ. அதுவே, நாம் புல்லை வெட்டி அளித்தால் 10 கிலோ புல்லின் உலர் எடை 2.5 கிலோ என்று கணக்கெடுத்துக் கொள்ள வேண்டும். மாடுகள் மேயும் போது எவ்வளவு புல் மேய்கிறது என்பதை கணிப்பது, மேய்ச்சல் நிலத்தின் தன்மையையும், மாட்டின் மேயும் வேகத்தையும், அதன் பசியையும் பொறுத்து மாறுபடுவதால், மிகவும் கடினம். எனவே, நீங்களே உங்கள் இடம், மாடு அகியவற்றை பார்த்து ஒரு தோராயமான கணக்கு வைத்துக் கொள்ளவும்.

மாடுகளின் தீவனத் தேவையை அதன் உடல் எடையையும், அது அளிக்கும் பாலின் எடையையும் பொறுத்து கணிக்க வேண்டும். மாட்டின் எடையை எவ்வாறு அறிவது. எல்லா பண்ணைகளிலும், மாடுகளை நிற்க வைத்து எடை போடும் வசதி இருக்காது. அது போன்ற சந்தர்ப்பங்களில் தோராயமாக எடையை கணக்கிட ஒரு சூத்திரம் உள்ளது. முதலில், மாட்டின் நெஞ்சு சுற்றளவை அங்குலத்தில் அளக்கவும். முன்னங்கால்களுக்கு பின்னால் ஒரு கயிற்றை சுற்றி அளவெடுக்கலாம். பின்னர், மாட்டின் முன் காலிலிருந்து வால் வரை உள்ள நீளத்தையும் அங்குலத்தில் அளக்கவும். பிறகு கீழ்க்கண்ட சூத்திரத்தை பயன்படுத்தவும்.

எடை = (சுற்றளவு X சுற்றளவு X நீளம்) / 660

அதாவது, ஒரு மாட்டின் நெஞ்சு சுற்றளவு 58 அங்குலம், அதன் நீளம் 48 அங்குலம் என்றால் அதன் எடை 58X58X48/660 = 161472/660 = 244 கிலோ (தோராயமாக). சுமார் 200 கிலோ எடையுள்ள மாட்டிற்கு சுமார் 3.5 கிலோ உலர் எடை அளவு தீவனம் தேவைப்படும். அதற்கு மேல் ஒவ்வொரு 50 கிலோ எடைக்கும் 1 கிலோ உலர் எடை சேர்த்துக் கொள்ளவும். அதாவது, நமது உதாரணத்தில் உள்ள மாட்டிற்கு 3.5+1=4.5 கிலோ உலர் எடை தீவனம் தேவை. 300 கிலோ எடையுள்ள மாட்டிற்கு 3.5+1+1=5.5 கிலோ உலர் எடை தீவனம் தேவை.

பால் கறக்கும் மாடுகளுக்கு ஒவ்வொரு 2.5 லிட்டர் பாலுக்கும் ஒரு கிலோ உலர் எடை சேர்க்க வேண்டும். நமது உதாரணத்தில் உள்ள மாடு ஒரு நாளைக்கு 5 லிட்டர் பால் கறக்கிறது என்று வைத்துக் கொண்டால் அதற்கு பாலுற்பத்திக்கென 2 கிலோ உலர் எடை தீவனம் அளிக்க வேண்டும். மொத்தமாக, 244 கிலோ எடையுள்ள, 5 லிட்டர் கறக்கும் மாட்டிற்கு ஒரு நாளைக்கு 4.5 + 2 = 6.5 கிலோ உலர் எடையுள்ள தீவனம் அளிக்க வேண்டும்.

சரி, இந்த 6.5 கிலோ உலர் எடையுள்ள தீவனத்தை எப்படி அளிப்பது? முன்னே சொன்னது போல் பசுந்தீவனம் மற்றும் உலர்தீவனம் மூலம் அளிப்பது சிறந்தது. இந்த 6.5 கிலோவில் மூன்றில் இரண்டு பங்கு பசுந்தீவனம் மூலமும் மீதி மூன்றில் ஒரு பங்கு உலர் தீவனம் மூலமும் அளிக்க வேண்டும். அதாவது, சுமார் 4.350 கிலோ உலர் எடை பசுந்தீவனம், 2.150 கிலோ உலர் எடை உலர் தீவனம். இது உலர் எடை என்பதை கவனத்தில் கொள்ளவும். இதிலிருந்து உண்மை எடையை கண்டுபிடிக்க அந்தந்த தீவனத்தின் உலர் எடை விழுக்காட்டினால் வகுக்கவும். அதாவது, பசுந்தீவனம் - தீவனப்புல் வெட்டி அளிப்பதானால் 4.350/0.25 = 17.400 கிலோ அளிக்க வேண்டும். மேய விடுவதானால் குறைந்தது 4.350/0.3 = 14.5 கிலோ எடையுள்ள புற்களை மேய விடவும். உலர் தீவனம் 2.150/0.9 = 2.400 கிலோ என்ற அளவில் அளிக்கவும்.

மேற்சொன்ன அளவிற்கு புற்கள் (பசுந்தீவனம்) இல்லாத போது அடர் கலப்பு தீவனத்தைக் கொண்டு ஈடு கட்டலாம். கலப்பு தீவனத்திற்கு தேவையானவற்றை பெரும்பாலும் நாம் வெளியிலிருந்து காசு கொடுத்து வாங்க வேண்டும் என்பதாலும், அது மாட்டின் வயிற்றுக்கு நிறைவைத் தராது என்பதாலும், அது மொத்த உலர் எடையில் மூன்றில் ஒரு பங்கை விட அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது, 6.5 கிலோ உலர் எடையில் அது 2.150 கிலோவை விட மிகுதியாக ஆகக் கூடாது. எனவே அதன் உண்மை எடை 2.150/0.9 = 2.400 கிலோவாக இருக்க வேண்டும். இப்போது, மீதம் உள்ள 4.350 கிலோ உலர் எடையை மீண்டும் பசுந்தீவனத்தின் மூலமும் உலர்தீவனத்தின் மூலமுமே நாம் பூர்த்தி செய்ய வேண்டும். மீண்டும், பசுந்தீவனத்தின் மற்றும் உலர்தீவனத்தின் எடை விகிதம் 2:1 என்றே இருக்க வேண்டும். அதாவது, 4.350 கிலோவில் மூன்றில் இரண்டு பங்கு, 2.900 கிலோ பசுந்தீவனமும், மூன்றில் ஒரு பங்கு, 1.450 கிலோ உலர் தீவனமும் அளிக்க வேண்டும். மீண்டும், உண்மை எடை பசுந்தீவனத்திற்கு - தீவனப்புல் வெட்டி அளிப்பதானால் 2.900/0.25 = 11.600 கிலோ, மேய விடுவதானால் 2.900/0.3 = 9.700 கிலோ. உலர் தீவனம் 1.450/0.9 = 1.600 கிலோ.

கீழ்க்கண்ட அட்டவணை பல நிலைகளிலும் எவ்வாறு நமது உதாரண மாட்டிற்கு 6.5 கிலோ உலர் எடை தீவனத்தை பிரித்து அளிக்கலாம் என்பதை விளக்குகிறது.

ஆ! இவ்வளவு கணக்கு போட வேண்டுமா? விவசாயிகளும், மாட்டுப் பண்ணைகளில் உள்ளவர்களும் இவ்வளவு கணக்கு பார்த்தா தீவனம் அளிக்கிறார்கள்!!

மிகச் சிறிய பண்ணை, அதாவது இரண்டு மூன்று மாடுகள் மட்டும் இருந்தால், ஒவ்வொரு மாட்டிற்கும் கறக்கும் காலத்தில் இவ்வளவு, சினையாக இருக்கும்போது இவ்வளவு, பால் மறந்தால் இவ்வளவு என்பது பழக்கத்தாலேயே கட்டுப்பட்டுவிடும். மிகப் பெரிய பண்ணைகளில் ஒரே அளவு கறக்கும் மாடுகள், கறவை மறந்த மாடுகள் என்று குழுக்களாக பிரித்து தீவனம் அளிப்பது சிறந்தது. பாலின் அளவு குறைய, அதிகரிக்க குழுக்களை மாற்றி அமைத்துக் கொள்வதும் அவசியம். நடுத்தர பண்ணைகளில் குழுவாக அமையும் மாடுகளை பிரித்தும், தனியாக உள்ள மாடுகளுக்கு கவனித்து தேவையான அளவு மட்டும் தீவனம் அளிப்பது மிகவும் முக்கியம். முதல் முறையாக செய்யும் போது சிறிது கடினமாக இருக்கும். சில மாதங்களுக்கு பிறகு நாம் எவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பது பழகி எளிதாகி விடும். தேவைக்கு அதிகமாக தீவனம் அளித்தால் செலவும் அதிகம், மாட்டின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். தேவையான அளவு மேய்ச்சல் நிலம் இருந்தால், இயற்கையாகவே மாடுகளின் தீவனம் எடுக்கும் அளவு கட்டுக்குள் வந்து விடும்.

மாடுகளின் மேய்ச்சலுக்கு எவ்வளவு நிலம் வேண்டும், தீவனப்பயிர்கள் என்ன விளைவிக்கலாம், எவ்வளவு இடம் வேண்டும், எவ்வாறு வடிவமைக்கலாம், உலர் தீவனத்தேவையை எவ்வாறு தற்சார்பாக அமைத்துக் கொள்வது, கலப்புத் தீவனத்திற்கு என்னென்ன வேண்டும், எவ்வெவற்றை நாமே தயாரிக்கலாம் என்பது அடுத்து நாம் கவனிக்க வேண்டியது. அதுவே நமது அடுத்த இதழ் கட்டுரையின் பொருள்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org