தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்

ஒநாய் அழுகைகள்


சமீப காலமாக நம் மத்திய அரசுக்கு, நம் நாட்டு ஏழைகள் மீது ஏகப்பட்ட கரிசனம் ஏற்பட்டு விட்டது. உதாரணமாக, பலகோடிப் பேர் சாலையோர தட்டுக் கடைகளில்தான் தினப்படி உணவை வாங்கிச் சாப்பிட்டுச் சுகமாகத்தான் இருக்கிறார்கள். குழாயடி நீரைக் குடித்துத்தான் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படி யாரும் பெரிதாய் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைகளை நிரப்பியதாய்த் தெரிவதில்லை. இவ்வளவு ஆண்டுகளாக மக்களின் உடல்நலத்தைப் பற்றியே சிந்திக்காத அர‌சும், அமைச்சர்களும் திடீரென சுத்தமான உணவு தேவை என்று உணவுப் பாதுகாப்பு மசோதாவில் சென்ற ஆண்டு சில திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதன்படி உணவகங்கள் அடிப்படை சுகாதார நியமங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். எல்லா உணவு விற்பவர்களும் அரசிட‌ம் பதிவு செய்து அனுமதிச் சீட்டு பெற வேண்டும். கரப்பான், எலி போன்றவை உள்ள உணவகங்கள் இழுத்து மூடப்படும்.

இதில் என்ன தவறு, நல்ல விஷயம்தானே என்று கேட்கலாம்? ஆனால், அரசு சுகாதாரத்தைக் காக்கத் தன் பங்கைச் செய்கிறதா? எல்லா நகராட்சிகளிலும், சிற்றூர்களிலும் சொத்து வரி வசூலிக்கப் படுகிறது - ஆனால் சுத்தம் காக்க வேண்டிய பணி நிறைவேற்றப் படுகிறதா? நம் தமிழ்நாட்டில், சுத்தமான பேருந்து நிலையம் என்று ஒன்றைக் காட்ட முடியுமா? ஒரு வலுவான மழை பெய்தால் ஊரே நாறி விடுகிறது - இதில் உணவகங்களை மட்டும் சவுக்கால் அடித்தால் ஒட்டு மொத்த சுகாதாரம் எப்படி மாறிவிடும்?

இதன் உண்மைப் பின்னணி என்ன? சில்லறை வாணிபத்தில் அந்நிய முதலீட்டைத் திறந்து விட்டாலும் அவர்களால், நம் 5 ரூபாய் வடையுடனும், 10 ரூபாய் இட்டிலி சாம்பாருடனும் விலையிலும், சுவையிலும் போட்டியிட முடிவதில்லை. நம் முதலீட்டு முதலைகளுக்கு சந்தையைத் திறந்து விடுவதுதானே அரசின் முதல் கடமை? அதனால்தான் இந்த சட்ட திருத்தம்! கேட்டால் பொதுமக்களின் உடல்நலனுக்குக் கரிசனம். இதே போல், உணவுப் பற்றாக்குறை வந்து விடும், வந்து விடும் என்று அச்சமூட்டியே விதைச்சட்டங்களைக் கொண்டுவரத் துடிக்கிறது அரசு - சரத் பவார் மரபீனி விதைளின் வயல் பரிசோதனைகளை உச்சநீதி மன்றம் நிறுத்தச் சொன்னால், தீக்காயம் பட்டதுபோல் துடியாய்த் துடிக்கிறார். உழவர்களை யாரும் ஏய்த்துவிடக் கூடாது என்று பெரும் கரிசனத்துடன் அரசின் அங்கீகாரம் பெற்ற விதைகளை மட்டுமே விற்க வேண்டும் என்ற சட்டத் திருத்தம். பச்சைப்பால் விற்பது சட்ட விரோதம் என்று பிற நாடுகளைப் போலவே விரைவில் சட்டம் வரலாம்.

அந்நிய முதலீட்டளர்களுக்கு வசதியாக தொழிலாளர்களில் சட்டங்களில் மாற்றம். வேதாந்தா, போஸ்கோ போன்ற சுரண்டல் அசுரர்களுக்காய் சூழல் பாதுகாப்புச் சட்டத்தில் மாற்றம். நில உச்சவரம்புச் சட்டம், நிலம் கையகப் படுத்தும் சட்டம் என்று எல்லாச் சட்டங்களுக்கும் வெளியில் தெரிவிக்கும் நோக்கம் மக்கள் நலன், தேச நலன் - ஆனால் உண்மை நோக்கம் பெருநிறுவனங்கள் நம் வளங்களைச் சுரண்டவும், நம் சந்தையை ஆளவும் தடைகளை அகற்றல்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org