இரண்டே மாதங்களில் 8,000 கோடி ரூபாய் சம்பாதித்த வெங்காயம்!
வெங்காய விலை கடந்த சில மாதங்களில் தாறுமாறாக ஏறியதால் நாடெங்கிலும் நுகர்வோர் கண்ணீர் சிந்தினர். அந்த விலையேற்றத்தின் பலன் உழவர்களுக்குக் கிடைக்காததால் அவர்கள் எப்போதும்போலக் கண்ணீர் விட்டுக்கொண்டுள்ளனர். ஆனால், வெங்காயத்தைப் பதுக்கி வைத்து விற்றதன் மூலம் வணிகர்கள் கடந்த ஆகசுட்டு, செப்டம்பர் மாதங்களில் மட்டும் 8,000 கோடி ரூபாய்கள் வரை சம்பாதித்திருக்கக்கூடும் என்கிறது இந்திய அரசின் கொள்கைத்திட்டக் குழு.
இந்தியர்கள் மாதம் ஒன்றுக்குச் சுமார் நூறு கோடி கிலோ வெங்காயம் பயன்படுத்துகின்றனர். பல பெரு நகரங்களில் மேற்கண்ட இரண்டு மாதங்களில் வெங்காய விலை கிலோ 70 ரூபாய் வரை உயர்ந்தது. இது சென்ற ஆண்டு அதே மாதங்களில் இருந்த விலையை விட சுமார் 40 ரூபாய் அதிகம்!
[சிறுபண்ணையில் நிரந்தர வருவாய் என்பது உழவன் விடுதலைக்கு இன்றியமையாதது. நாம் முன்னர் 'கெடு முன் கிராமம் சேர்' தொடரில் காணி நாயகர்களாக ஒரு கணவனும் மனைவியும், ஆளுக்கு ஒரு காணியில் தற்சார்பு வேளாண்மை செய்தால் நல்ல வாழ்வு வாழ இயலும் என்று எழுதியிருந்தோம். இதற்கு ஒருங்கிணைந்த உயிர்ச்சூழல் பண்ணை அமைத்தல் முக்கியம். பயிர்ப் பன்மையும் மிகவும் முக்கியம். டெல்டா பகுதி என்றழைக்கப் படும் கடைமடைப் பாசன மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் வயல்களின் வடிவமைப்பு நீரைத் தேக்குவதற்காக அமைக்கப் பட்டுள்ளது. இதில் வடிகால் வசதியும் குறைவு. இந்நிலையில் எவ்வாறு இங்கு உயிர்ச்சூழல் பண்ணை அமைப்பது என்று என்னுடைய இரண்டரை ஏக்கர் வயலைப் பார்வையிட்ட திரு வெங்கிடாசலம் அவர்கள் தன் பரிந்துரையை அளித்தார். வரும் 2016 மாசி- பங்குனி மாதங்களில் இது செயலாக்கம் செய்யப்பட உள்ளது. அப்பரிந்துரையே இக்கட்டுரை - ஆசிரியர்]
இந்த மாதம் டெல்டா பகுதியில் அமைந்துள்ள ஒரு 2.5 ஏக்கர் பண்ணையை எப்படி ஒரு தற்சார்பு பண்ணையாக மாற்றுவது என்று பார்ப்போம். இதற்கு முன்மாதிரியாக நமது பத்திரிகை ஆசிரியர் திரு.பாலாஜி ஷங்கர் அவர்களின் பண்ணையையே எடுத்துக்கொள்வோம். இந்த பூமியானது சரியான வடிகால் அற்ற பூமியாக உள்ளது. மழைக்காலத்தில் சுமார் ஒரு அடிக்கு குறையாமல் நீர் தேங்கி இருக்கும். இரண்டு புறங்களிலும் வாய்க்காலும் நீரோடையும் அமைந்துள்ளன. கிட்டத்தட்ட வயலின் மட்டமும் வாய்க்காலின் அடிமட்டமும் ஒரே சம உயரத்தில் அமைந்துள்ளன. உயரமான கரைகளை கொண்டுள்ளது வாய்க்கால்.
மாந்தர்குல வரலாற்றில் மாடுகளைப் பயன்படுத்தும் பழக்கம் மிக நீண்ட நெடிய காலத்தைக் கொண்டது. சிந்து வெளியில் காணப்பட்ட முத்திரைகள் காளைகளின் இருப்பை உறுதி செய்துள்ளது. இதுபோல பல பண்டை நாகரிகங்களில் மாடுகளைப் பழக்கிப் பயன்படுத்தியுள்ளனர். சங்க இலக்கியங்களில் மாடுகளைப் பற்றிய ஏராளக் குறிப்புகள் உள்ளன. முல்லை நிலத்தில் ஆவினம் எனப்படும் பசுக்களைப் பற்றியும் மருத நிலத்தில் எருமைகள் பற்றியும் நிறைய செய்திகள் உள்ளன.
மாடுகளில் குறிப்பாக ஆவினம் எனப்படும் பசு மாட்டினங்களை இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர். அதாவது செபு (Zebu) வகை என்றும் டாரைன் (Taurine) வகை என்றும் பிரிக்கின்றனர். இந்த வகையில் செபு வகை மாட்டினங்கள் திமில் கொண்டவை, டாரைன் வகை திமில் இல்லாதவை. ஆனால் இந்த இரண்டு வகைக்கும் மூலமாக ஒரு இனம் இருந்துள்ளது. அந்த மூல இனத்தின் பெயர், அரோச் (Aurochs) என்பதாகும். இதை உரஸ் (ures), உரே (ure) என்றும் அழைக்கின்றனர். இந்தச் சொல்லின் மூலம் தெரியவில்லை (unknown origin) என்று வேர்ச்சொல் அகராதிகள் குறிப்பிடுகின்றன. இதன் பொருள் காட்டு ஆண் மாடு என்று என்பதாகும். இந்தச் சொல்லின் மூல ஒலிப்பு ஏறு, எருது, எருமை என்பதன் அடிப்படையில் காணப்படுவது நமக்கு வியப்பிற்குரியதாக உள்ளது.
[வேதியுர உற்பத்தியாளர்களும் , அவர்களால் நிதியுதவி செய்யப்படும் "தொண்டு" நிறுவனங்களும் சமீப காலமாக புவி வெப்பமயமாதலைப் பற்றியும், சூழல் பாதுகாப்பைப் பற்றியும் பெரும் அக்கறை கொண்டவை போல் நாடகம் நடத்திக் கொண்டிருக்கின்றன. இது ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதைதான். இவற்றைக் கூர்மையாய்க் கண்காணித்துப் புறந்தள்ள வேண்டியது நம் கடமை.] ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய தொழிற் புரட்சியின் உச்சகட்ட விளைவாகக் கடந்த சுமார் அறுபது ஆண்டுகளில் நம் புவியின் இயற்கைச் சூழல் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவுகள் ஆபத்து மிக்கன என அறிவியலாளர்கள் அண்மைக் காலத்தில் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துவருகின்றார்கள். இது குறித்து விவாதித்து முடிவெடுக்கும் நோக்கில் வரும் டிசம்பர் மாதம் பாரிசு நகரில் உலக அரசுகளின் கூட்டம் நடக்கவுள்ளது.
வசதி படைத்தவர்களுடைய மிதமிஞ்சிய நுகர்வு சூழல் கேட்டிற்கு முதன்மையான காரணங்களில் ஒன்று. சூழல் கேட்டில் வேதி வேளாண்மைக்கும் பெரும்பங்கு உள்ளது. (முதலாளித்துவம் எனப்படுகிற) முதலாண்மைப் பொருளாதார முறைமையே இவற்றின் அடிநாதமாக உள்ளது. இந்தப் பொருளாதார முறையின் மிக மோசமான அடையாளங்களாக விரல் விட்டு எண்ணக்கூடிய மிகப் பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் திகழ்கின்றன. பரந்துபட்ட மக்களுடைய உரிமைகளையும் புவியின் சூழலையும் காப்பதற்கு மக்கள் நலச் சிந்தனையாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்துவருகின்றனர். ஆனால் அவர்களுடைய ஒவ்வொரு முயற்சியையும் செயல் திட்டத்தையும் நீர்த்துப் போகச் செய்வது அல்லது குழப்பம் விளைவித்துத் திசை திருப்புவது பன்னாட்டுப் பெரு நிறுவனங்களுடைய தொடர் செயலுத்திகளில் ஒன்று. .