தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

ஏறும் எருதும் - பாமயன்


மாந்தர்குல வரலாற்றில் மாடுகளைப் பயன்படுத்தும் பழக்கம் மிக நீண்ட நெடிய காலத்தைக் கொண்டது. சிந்து வெளியில் காணப்பட்ட முத்திரைகள் காளைகளின் இருப்பை உறுதி செய்துள்ளது. இதுபோல பல பண்டை நாகரிகங்களில் மாடுகளைப் பழக்கிப் பயன்படுத்தியுள்ளனர். சங்க இலக்கியங்களில் மாடுகளைப் பற்றிய ஏராளக் குறிப்புகள் உள்ளன. முல்லை நிலத்தில் ஆவினம் எனப்படும் பசுக்களைப் பற்றியும் மருத நிலத்தில் எருமைகள் பற்றியும் நிறைய செய்திகள் உள்ளன.

மாடுகளில் குறிப்பாக ஆவினம் எனப்படும் பசு மாட்டினங்களை இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர். அதாவது செபு (Zebu) வகை என்றும் டாரைன் (Taurine) வகை என்றும் பிரிக்கின்றனர். இந்த வகையில் செபு வகை மாட்டினங்கள் திமில் கொண்டவை, டாரைன் வகை திமில் இல்லாதவை. ஆனால் இந்த இரண்டு வகைக்கும் மூலமாக ஒரு இனம் இருந்துள்ளது. அந்த மூல இனத்தின் பெயர், அரோச் (Aurochs) என்பதாகும். இதை உரஸ் (ures), உரே (ure) என்றும் அழைக்கின்றனர். இந்தச் சொல்லின் மூலம் தெரியவில்லை (unknown origin) என்று வேர்ச்சொல் அகராதிகள் குறிப்பிடுகின்றன. இதன் பொருள் காட்டு ஆண் மாடு என்று என்பதாகும். இந்தச் சொல்லின் மூல ஒலிப்பு ஏறு, எருது, எருமை என்பதன் அடிப்படையில் காணப்படுவது நமக்கு வியப்பிற்குரியதாக உள்ளது.

பெரும்பாணாற்றுப்படை பல எருதுகளைப் பூட்டிய வண்டியில் உப்புகளை ஏற்றிக் கொண்டு விற்பனைக்காக உமணர் சென்ற செய்தியை

பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி - (பெரும் - 65)

என்று குறிப்பிடுகிறது

இதேபோல பட்டினபப்பாலையின் 52ஆம் வரி, பெரிய இழுவை மாடுகளுக்கு உணவளிக்கும் சாலைகள் இருந்த செய்தியைத்

'தண்கேணி தகை முற்றத்துப் பகட்டெருத்தின் பல சாலை'

என்று குறிப்பிடுகிறது. இது கரிகால் பெருவளத்தான் அரசாட்சியில் நடந்த திட்டங்களில் ஒன்று. (நாம் அசோகன் மரம் நட்டினான், விலங்குகளுக்கு மருத்துவசாலைகள் வைத்தான் என்று படிப்போம். கரிகாலனைப் பற்றிப் படிப்பதில்லை!)

நற்றிணை 125 ஆம் பாடல் எருது பூட்டி கதிர் அடிக்கும் செய்தியை

'எருது எறி களமர்'

என்று கூறுகிறது.

இந்தக் கூற்றுகள் யாவும் பண்டைய காலத்தில் இருந்தே நமது நிலத்தில் ஒரு மூலமான மாட்டினத்தைப் பழக்கிப் பயன்படுத்திய உண்மையை அறிவிக்கின்றன. இந்த மூல இனத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட மாடுகள் ஐரோப்பியப் பகுதியில் வளர்க்கப்பட்டன. அங்குள்ள தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப அவை மாறுபட்டன. குறிப்பாக திமில் இல்லாத ஒரு இனம் ஐரோப்பாவில் தோன்றியது. அதை திடீர் மாற்றம் (mutation) என்று அறிவியல் உலகம் சொல்கிறது. அவை பாலுக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப்பட்டன.

குறிப்பாக பிராமன் அல்லது பிரம்மா என்ற கலப்பு இனம் காங்கிரச், குசராத், ஓங்கோல், கிர் ஆகிய மாடுகளின் கலப்பாக அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது. இறைச்சிக்காகவே அந்த இனத்தை உருவாக்கினார்கள். இந்தியாவில் இருந்து 1854 - 1926 ஆகிய கால கட்டங்களில் இந்திய மாடுகள் அங்கு கொண்டு செல்லப்பட்டன. இது வடஅமெரிக்கா மட்டுமல்லாது தென் அமெரிக்கா முழுவதும் பரவியது. பிரேசில் நாட்டில் இது மிகவும் புகழ் பெற்றது.

இப்படியான அடிப்படை வரலாற்றைக் கொண்ட மாட்டினங்கள் இப்போது பரவலான சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளன. குறிப்பாக நாட்டு மாடுகள் சிறந்தவை என்றும் கலப்பின மாடுகள் மோசமானவை என்றும் கருத்துகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதிலும் மாட்டைப் 'பன்றி' என்றும் அழைக்கின்ற செய்திகளைக் காண முடிந்தது.

இந்தச் சூழ்நிலையில் காய்தல் உவத்தல் இன்றிக் கவனித்தோமானால் அனைத்தும் வேளாண்மைக்கு மிகவும் பயன்படக் கூடியவையே. வேளாண்மையில் கால்நடைகளின் பங்கும் இன்றியமையாததாயிற்று. அதிலும் இயற்கை வழி வேளாண்மைக்குக் கால்நடைகள் மிக மிக இன்றியமையாதவை. உழவர்களின் உடனடியானதும் உறுதியானதுமான வருமானம் கால்நடைகளின் மூலமே வரும். எனவே பொருளாதார வகையில் பார்த்தாலும் கால்நடைகள் ஒரு பண்ணைக்கு அவசியமானவையே. அதிலும் பண்ணைக் கழிவுகளை வளமான மக்குகளாக மாற்றுவதற்கான சாணம், மோள் (மாட்டுச் சிறுநீர்) ஆகியவை கிடைக்கும். இதனால் வெளியில் இருந்து பண்ணைக்ககான உரங்களை வாங்க வேண்டிய தேவை கிடையாது. ரசாயனங்களைத் தவிர்க்க மிகவும் உதவியாக‌ இருப்பவை கால்நடைகள். அதிலும் மாடுகள் மிகவும் பொருத்தமானவை. பொதுவாக சிறுகுறு உழவர்கள் ஒன்றிரண்டு மாடுகளை வைத்துக் கொள்ளலாம். அதிலும் நமது உள் நாட்டு மாடுகள் மண்ணுக்கு ஏற்றவையாக இருக்கும்.

கலப்பின மாடுகள் பல இன்று நமது மண்ணுக்கு பொருந்திவிட்டன. அவற்றையும் பயன்படுத்தலாம். ஆனாலும் அவற்றிற்கான பராமரிப்புச் செலவு அதிகம். நாட்டு மாடுகளுக்கான பராமரிப்புச் செலவுகள் குறைவு. அத்துடன் திமில் உள்ள மாடுகளுக்கும் திமில் இல்லாத மாடுகளுக்குமான வேறுபாடுகள் பற்றி பல்வேறு சர்ச்சைகள் வரத் தொடங்கிவிட்டன. குறிப்பாக 2000ஆம் ஆண்டு ஏ1-பால், ஏ2- பால் என்ற பிரிவு வெளிப்படுத்தப்பட்டு அதை ஒரு நியுசிலாந்து கும்பணி காப்புரிமை செய்து கொண்டது. இதனால் ஏ2 பால் பற்றிய கருத்துகள் வெளியாகின. இதற்கான ஆதரவும் எதிர்ப்பும் உருவானது. ஏ2 பால் சிறந்தது என்றும் ஏ1 பால் உடலுக்குத் தீமை விளைவிக்கும் சில பீட்டா காசின் (beta-casein) என்ற புரதத்தைக் கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஐரோப்பாவிற்குக் கொண்டு செல்லப்பட்ட மாடுகள் திடீர் மாற்றத்திற்கு (mutation) உட்பட்டதால் ஏ1 வகைப் பாலைக் கொண்டதாக அறிவியல் அறிஞர்கள் நம்புகின்றனர். ஏனெனில் இதை நிறுவிடும் சான்றுகள் உறுதியாக்கப்படவில்லை. ஆயினும் திமில் இல்லாத மாடுகளின் மீது (பாவம்) கடுமையான தாக்குதல் தொடங்கிவிட்டன. அதனால் மிகப் பெரிய சந்தை திறந்துவிடப்பட்டது.

அந்த வகையில் இந்தியாவிலும் அந்தப் பரப்புதல் ஒருவகையான சார்புடன் கிளம்பியது. இயற்கை வேளாண்மை அரங்குகளிலும் நாட்டு மாடுகள் என்ற நல்ல கருத்திற்கு இந்திய தேசியம் என்ற சாயம் ஏற்றப்பட்டது. அதன் பின்னர் ஏ2 என்ற சாயமும் ஏற்றப்பட்டது. எப்படியோ நாட்டு மாடுகள் அல்லது திமில் உள்ள மாடுகள் அல்லது ஏ2 பால் மாடுகளுக்கான 'கிராக்கி' அதிகமாகிவிட்டது. தமிழ்நாட்டு உழவர்கள் ராஜஸ்தான், குஜராத், மாரட்டியம் என்று வடக்கு மாநிலங்களுக்குப் படையெடுத்து ஏராளமான பணம் செலவு செய்து வட இந்திய மாடுகளை வாங்கத் தொடங்கினர். ஆனால் இன்னும் அறிவியல் உலகம் இரண்டு பாலிலும் பெரிய வேறுபாடு இல்லை என்று கூறுகிறது. இதற்கு எதிர்ப்பும் உள்ளது. சில குறிப்பிட்ட கும்பணிகள் ஏ2 பாலை விற்பனை செய்வதற்காக இப்படிக் கிளப்பி விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

நாம் கொடுக்கின்ற உணவு குறிப்பாக புல், பருத்திக் கொட்டை, பிண்ணாக்கு போன்றவற்றின் மூலமாகவே அவற்றின் சாணம் அமைகிறது. நாட்டு மாடுகள் செய்தித் தாள்களையும் சுவரொட்டிகளையும் தின்றால் நிச்சயம் சாணம் நாற்றமடிக்கும் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக சமைத்த சோற்றைக் கொடுப்பது தவறு. அதனாலும் சாணம் கெட்டுப்போகிறது. இந்தத் தவறான உணவுகளை நாட்டு மாடுகளுக்குக் கொடுத்தாலும் சாணம் நாற்றமடிக்கும் என்பதுதான் உண்மை. எனவே கலப்பின மாடுகளுக்கு முறையான உணவு கொடுத்தும் பராமரிக்கலாம். கலப்பின மாடுகளில் இருந்து கிர் போன்ற திமில் வகை மாடுகளையும் பெருக்கிக் கொள்ளலாம். இதற்கு நல்ல எடுத்துக்காட்டு கரூர் கணேசன் அவர்கள். அவர் பதினைந்து லிட்டர் பால் தரும் கிர் இனப்பசுவை உருவாக்கியுள்ளார். இப்படி மாட்டிடம் பேதம் காட்டாமல் அதுவும் நமது கூட்டாளிகளில் ஒன்று என்று கொள்வோம்.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்றார் வள்ளுவர். அதில் பசுவென்ன பன்றி என்ன?

28 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 19ல் மன்சான்டோவுக்குத் தடை!

மான்சான்ட்டோவின் mon 810 வகை மரபீனி மாற்றப்பெற்ற மக்காச்சோளம் ஒன்றுதான் ஐரோப்பிய ஒன்றியத்தில் (அதுவும், இசுப்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகளில் மட்டும்) விளைவிக்கப்படுகிறது. மேற்கண்ட தடை இந்த மக்காச்சோளத்தைக் குறிப்பாகத் தடை செய்கிறது. இந்தப் பத்தொன்பது நாடுகளில் பெல்சியம், ஒன்றிய அரசியம் ஆகியன தம் நாடுகளின் சில பகுதிகளில் மட்டும் தடை செய்துள்ளன. செர்மனி இன்னும் ஆராய்ச்சி செய்துவருவதால் முழுமையாகத் தடை செய்யவில்லை. இந்தத் தடையைக் குறித்த தம் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு மன்சான்ட்டோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஒரு மாத கால அவகாசம் தரப்பட்டுள்ளது. லாட்வியா-வும் கிரீசும் இந்தப் பயிர்களை முழுமையாகத் தடை செய்திருப்பதை மதித்து ஏற்றுக்கொள்வதாக மன்சான்ட்டோ தெரிவித்துள்ளது.

மரபீனி மாற்றப்பெற்ற உயிரினங்களை முறையாக அடையாளப்படுத்துதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 நாடுகளிலும் நடைமுறையில் உள்ள சட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. (அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இத்தகைய சட்டம் இல்லாததால் மரபீனி மாற்ற உயிரினங்களை நுகர்வோர் அடையாளங் காண இயலாது.)

மரபீனி மாற்றப் பயிர்களைப் பொறுத்தவரை ஐரோப்பியச் சந்தை மிகச் சிறியது என்பதால் தன்னை இந்தத் தடை பாதிக்காது என்கிறது மன்சான்ட்டோ. மேலும், லாட்வியா மற்றும் கிரீசின் தடைகள் அறிவியலுக்கு எதிரானது என்றும் பகர்கிறது!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org