தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உணவுப் பாவை - அன‌ந்து


தாளாண்மையிலும் மற்ற நேர்மையான பத்திரிக்கைகளிலும் பெருநிறுவனங்களின் ஊழல்களையும், சூதுகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வருகையில் பொதுவாக எல்லோரிடத்திலும் எழும் கேள்வி " எல்லாம் சரி, ஆனால் தனி மனிதர்களாகிய நாம் என்ன செய்ய இயலும்?" என்பதுதான். ஒரு தனி மனிதராகப் போராடி அமெரிக்காவின் உணவுத் தொழிற்சாலையையே சட்டையைப் பிடித்து உலுக்கிய ஒரு பெண்ணின் கதைதான் நாம் காணப் போவது. உணவுப் பாவை (food babe) என்று தன்னை அழைத்துக் கொள்ளும் வாணி ஹரி இந்திய வம்சாவளியில் பிறந்த ஒரு அமெரிக்கப் பெண்மணி.

அமெரிக்க வாழ் இந்திய குடும்பங்களில் வளரும் குழந்தைகளை போலவே நன்கு படித்து நல்ல கல்லூரியினின்று தேர்ச்சி பெற்று நல்ல கார்பரேட் கம்பனி வேலையிலிருந்து, அமெரிக்கர்களை போலவே உண்டு, ஊர் சுற்றி, உடல் பெருத்து, வியாதிகள் பெருக்க, மிகவும் நிலைகுலைந்து, பின் விழித்து, உணவினை நெருக்கமாக, உன்னிப்பாக‌ பார்த்து, நல்லுண‌வினாலேயே தனது வியாதிகளையும், அதிக எடையையும் களைந்து (மற்றவர்களும் பயனடையட்டும் என) அதனைப் பற்றி எழுதி அது மிகப்பிரபலமாக, வேறு உலகத்திற்குத் தள்ளப்பட்டு, இன்று அதையே மிகச்சீராக சிறப்பாக செய்து அந்நாட்டில் நல்ல பாதுகாப்பான உணவிற்கு பாடுபடுகிறார்.

www.foodbabe.com என்னும் தன்னுடைய வலைத்தளம் மூலம் இவர் ஒரு பாதுகாப்பான உணவுப் புரட்சியை அமெரிக்காவில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இவரது வலைத்தளம் லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்டுள்ளது. வேகமாக வளர்கிறது. டைம்ஸ் பத்திரிக்கை இவரை இணையத்தில் தாக்கம் ஏற்படுத்தும் 30 முக்கிய‌ நபர்களில் ஒருவராக வரிசையிட்டுள்ளது. மறைக்கப்பட்ட உட்பொருள்கள் (ingredients), தவறாக குறிப்பிடப்பட்ட உள்ளடக்கப்பொருட்கள், கேடு விளைவிக்கும் பொருட்கள்/அவை அடங்கிய உணவுப்பொருட்கள், மரபீனி மாற்றப்பயிர்கள் கொண்ட உணவுகள் (அவை அங்கு அமெரிக்காவில் அதிகமாக உண்டு) என எல்லாவற்றையும் உரித்து உண்மையை எழுதி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் இந்த இளம் பெண். பல பெரிய பூதக்கம்பனிக்கள் இவரால் தூக்கமும் சந்தையும் இழந்தன. க்ராஃப்ட், சிப்போட்டில், சப் வே, ஜெனெரல் மில்ஸ், ஸ்டார் பக்ஸ் போன்ற‌ பெரும் வணிக கம்பனிக்கள் இவரிடம் சரணடைந்து, என்ன மாற்றம் செய்ய வேண்டும் என ஆலோசனை பெற்று நடக்கின்றன/ நடக்க முயலுகின்றன. (அல்லது அவர்களை தன் வழிக்கு எப்படியும் கொண்டு வருகிறார் இந்த வீராங்கனை). தனி மனிதராகப் பாதுகாப்பான உணவிற்கு வழி வகுக்கிறார் இந்த யுவதி.

எடுத்துக்காட்டாக உயிரிக்கெதிரிகள் கொண்ட இறைச்சிக்கு எதிரான இவரது போராட்டத்தைச் சொல்லலாம். பன்னாட்டு உணவு நிறுவனங்கள், அடைத்து வைக்கப்பட்டு வளர்க்கப்படும் கோழி, மாடு, பன்றி போன்ற மிருகங்களை நோய் தாக்காமல் இருக்க அவற்றுக்கு நோய் தடுப்பிற்கென‌, 'ஆன்ட்டிபயாட்டிக்' (antibiotic) என்றழைக்கப்படும் உயிரிக்கெதிரிகள் செலுத்தப்பட்ட இறைச்சியைத்தான் விற்கின்றன. அதனால் நல்ல பாக்டீரியா கொல்லப்பட்டு, உயிரிக்கெதிரிகளை எதிர்க்கும் கிருமிகள் தோன்ற ஆரம்பித்துவிடுகின்றன. அவற்றிடமிருந்து உயிரிக்கெதிரி எதிர்ப்புக் கிருமிகள் மனிதர்களுக்கு வரும். இதில் இறைச்சி உண்ணாமல் காய்கறிகளை மட்டுமே சாப்பிடுபவராக இருந்தாலும்கூட, பாதிப்பு ஏற்படும். நாளை ஏதேனும் உடல் உபாதைக்கு உயிரிக்கெதிரிகள் உட்கொள்ள நேர்ந்தால் அதற்குப் பலனில்லாமல் போகும் வாய்ப்பு அதிகம். ஒரு ஆண்டில் அமெரிக்காவில் தேவையில்லாத உயிரிக்கெதிரி மருந்துகள் மூலம் சுமார் 23 ஆயிரம் பேர் இறந்துபோகிறார்கள். உயிரிக்கெதிரி் செலுத்தப்பட்ட இறைச்சியை உண்டு, அதனால் ஏற்பட்ட பாதிப்புகளால் இறந்தவர்களைக் கணக்கிட்டால், இந்த எண்ணிக்கை மேலும் உயரும்.

இவருடைய 'ஆரோக்கியமான உண்ணுதல்' கையேடுகளும், நல்லுணவுக் குறிப்புகளும், உணவே மருந்தாக்கும் உத்திகளும் மிகவும் புகழ்பெற்றவை. இவர் காலை எழுந்ததும் இஞ்சி-எலுமிச்சைச் சாறை வெந்நீரில் இட்டுக் குடிக்கிறார்; அல்லது இஞ்சி-வரமிளகாய் (சிறிதளவு) வெந்நீரில் கலந்து பருகுகிறார். இது கல்லீரலை ஊக்குவித்து பித்த நீர் சுரப்பிற்கு உதவுகிறது - எனவே நம் வயிறு நாள் முழுதும் காரத்தன்மை கொண்டு இருக்கிறது என்கிறார்.

இவர் சமீபத்தில் இந்தியாவிற்கு வருகை தந்தார். அப்பொழுது OFM (இயற்கை விவசாயிகள் சந்தை) மற்றும் பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பான உணவு பற்றியும் தமது பயணத்தை பற்றியும் உரையாற்றினார். அதற்கு முன் இயற்கைப் பருத்தியிலிருந்து கைத்தறியாக, இயற்கை சாயங்களுடன் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் "துலா" ஆடைகள், மற்றும் கூட்டுறவு முறையில் படித்த இளைஞர்களால் நடத்தப்படும் OFM என்னும் இயற்கை விவசாயிகள் சந்தை, இவ்விரண்டையும் சென்று பார்வை இட்டார். மிகவும் பாராட்டினார். பல பெரும் கம்பனிக்களையும் பெரும் முதலை(முதலாளிகளை) எதிர்த்து தனி ஆளாக பல வெற்றிகளைப் பார்த்து வருகிறார். ஒருவரையும் விடாமல், கேள்வி மேல் கேள்வி கேட்டு, துரத்தி, அவர்கள் பயன்படுத்தும் பொருட்களை, மறைக்கும் (வெளியிட மறுக்கும்) பொருட்களை எப்படியேனும் கண்டுபிடித்து வெளியிட்டு மாற்றவோ, மக்களை அந்த பொருட்களை தவிர்க்கவோ செய்கிறார்.

அவர் பேசியதிலிருந்து

நமது இந்திய உணவு மிகவும் சுவையானதும், ஆரோக்கியமானதும் ஆகும். ஆனால் தான் தன்னை சுற்றியிருக்கும் அமெரிக்க நண்பர்களைப்போலவே இருக்க ஆசைப்பட்டு மெக்டோனால்ட்ஸ் போன்ற கேடு பயக்கும் உணவினை உண்டு, வேலையில் சேர்ந்த பின்னரும் அது தொடரவே, உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு, பின்னர் திருந்தி, கூடுதல் எடையையும், வியாதிகளையும் தொலைத்தார். இயற்கை உணவு மற்றும் நல்லுணவிற்க்கு மாறியதும் இவருக்கிருந்த தோல் வியாதிகள், மூச்சிரைப்பு நோய், ஒவ்வாமை எல்லாம் பறந்தன.

இந்திய உணவு என்று இவர் கூறுவது 'பாரம்பரிய' ஆரோக்கிய உணவு. இன்றைய மேற்கத்திய உணவை நகல் எடுக்கும், கூடுதல் ரசாயனங்களாலும், பதப்படுத்துதலாலும், சிதைக்கப்பட்ட உணவை அல்ல. எந்த எண்ணை உபயோகிக்கப்படுகிறது, அதன் மூலம் என்ன, டால்டா போன்ற 'சுத்திகரிக்க'ப்பட்ட எண்ணைகளின் தீமைகள் எல்லாம் மறக்கப்படுகின்றன/மறைக்கப்படுகின்ற‌ன. இவை பல வியாதிகளின் ஊற்றாக இருக்கின்றன.

இன்றைய தினங்களில், மேலை நாடுகளில் விழிப்புணர்வு வேகமாக பரவுகிறது . இந்தியாவிலும் மேகி போன்ற பிரச்சினைகளூம். விவாதங்களும் மிக முக்கியம்.

உலகில் எல்லா இடங்களிலும் மக்கள், உணவையும் அதனால் வரும் பல கேடுகளையும் (புற்று முதல் நரம்பு தளர்ச்சி வரை, ஒவ்வாமை முதல் இதய நோய்கள் வரை) கண்டறிந்து மாற்றங்களை தேடி செல்கின்றனர்.

நாம் இந்த கம்பனிக்களின் பரிசோதனை எலிகளாக இருக்கக்கூடாது. துளி ஐயம் ஏற்பட்டாலும் அவ்வுணவுகளை (மரபீனி) அனுமதிக்கக் கூடாது.

பெரும் அரக்கக்கம்பனிக்களின் வங்கிகளை நிரப்பும் உணவும் அறிவியலும் தேவை இல்லை. நாம் விழித்து ஒன்றுபட்டு அவற்றை எதிர்க்க வேண்டும்.

நெடு நாளைக்கு இருத்தலுக்காக பல ரசயானங்களை கொண்ட பதப்படுத்தப்பட்ட பெரும் இயந்திரப்பொருட்களை தவிர்க்கவேண்டும். நல்ல இயற்கை அங்காடிகளில் , நல்ல, நஞ்ச‌ற்ற பொருட்களை வாங்கிப் பயன்படுத்துங்கள்.

எல்லாவற்றையும் விட மிக முக்கியம், நாமே நமது மொட்டை மாடியிலோ, தோட்டத்திலோ, மாடித்தோட்டம் அமைத்து அவற்றில் நம்மால் இயன்ற‌தை ஒவ்வொருவரும் விளைவிக்க வேண்டும். நமது உணவில் இன்று சேர்க்கைப்பொருட்கள் (additives) மிகவும் அதிகம். அரசுகள் இதன் பெருக்கத்தை தடுக்க தவறி விட்டன. சமீபத்தில் FDA என்னும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆணையத்தின் உயர் அதிகாரி ஒருவர் 'உணவில் வரும் பல ரசாயனப்பொருட்களை பற்றியும் அவற்றின் பின் விளைவுகளும் தங்களுக்கு தெரியாது . மக்களின் கேள்விகளுக்கும் எதிர்பார்ப்பிற்கும் அவர்களிடம் பதில் இல்லை' என்றார். 1950களில் 800 சேர்க்கைப்பொருட்கள் மட்டுமே இருந்தன, ஆனல் இன்று 10000க்கும் மேல் உள்ளன. பெரும் பருமன் கொண்டவர்களையும், நோயாளிகளையும் உருவாக்குவதில் அரசாங்கங்களுக்கு பெரும் பங்கு உண்டு.

"உண்மையை வெளிக்கொணர்ந்து, எவ்வள‌வு இன்னல்களும் எதிர்ப்பும் வந்தாலும், மக்களுக்கு நன்மை பயக்க இவற்றைத் தொடருவேன்" என்றார். அனைவரும் தான் உண்ணும் உணவில் என்ன உள்ளது என்று அறிந்திருக்க வேன்டும், அதற்குத் தனது உழைப்பு தொடர்ந்து இருக்கும் என்றார்.

"உங்களுக்கு எதேனும் ஒன்று தவறென்றோ, பூசி மழுப்பப் படுகிறதென்றோ தோன்றினால் உடனே குரல் எழுப்புங்கள். தயங்காதீர்கள், முழுமுயற்சியுடன் உங்களால் இயன்றவரை எதிர்க்குரல் கொடுங்கள்" என்கிறார்.

இவர், ஒரு சிறந்த, விற்பனையில் முன்னணியில் உள்ள ஒரு நூலையும் எழுதியுள்ளார். "ஃபுட் பேப் வே" (Food Babe Way) என்னும் இந்த நூல் ஆரோக்கிய வாழ்க்கைக்கான 21 நல் வ‌ழக்கங்களைக் காட்டுகிறது. அவற்றையும் தனது வெற்றிகளையும், நல் உணவினைப் பற்றியும், பல நல் ஒழுக்கங்கள்/வழிகள் பற்றியும் எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளன.

அவர் இயற்கை விவசாயிகள் சந்தைக்கு (OFM - Organic Farmers' Market) வந்த பொழுது, கொடைக்கானலில் கழிவுகளை கண்மண் தெரியாமல் கொட்டி, பல பாதிப்புகளை ஏற்படுத்தி, இன்று வரை அந்த விஷக்கழிவுகளை அகற்றாமல் தப்பித்து வரும் ஒழுக்கமற்ற, பொறுப்பற்ற யுனி லிவர் என்னும் பன்னாட்டு அரக்கக்கம்பனியான யுனி லிவரை எதிர்த்தும் அவர்களின் பொருட்களை தவிர்ப்பதாகவும் தெரிவித்தார்.

இவ்வுரையாடலுக்குப் பின் அவருடைய நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. அதில் வந்த 21000 ரூபாயையும் அவர் OFM அமைப்பிற்கே கொடையாகக் கொடுத்து விட்டார் என்பது சிறப்புச் செய்தி!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org