தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

அந்நிய முதலீடும் கருப்புப் பணமும் - ராம்


[எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் FDI என்று சொல்லப்படும் அந்நிய நேரடி முதலீட்டுக்குப் பெரும் ஆதரவு தெரிவிக்கின்றன. இதன் உண்மைக் காரணம் மேம்படுத்துதல் அல்ல, கருப்புப் பணத்தைச் சலவை செய்யவே என்பதை இக்கட்டுரை விளக்குகிறது. கட்டுரையாசிரியர் ஆரோவில்லுடனும், தமிழக அரசுடனும் இணைந்து, Sustainable Livelihood Institute என்ற பெயரில் முழுவதும் தற்சார்பான வாழ்வாதாரப் பயிற்சி மையம் ஒன்றை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளார்]

எண்கள் எங்கு வேலை செய்கின்றன ?

ஒரு நேர்மையான அதிகாரி, நமது அரசாங்கத்தில் எண்களை எவ்வாறு மாற்றி எழுதவே தள்ளப்படுகின்றார் என்று சென்ற கட்டுரையில் எழுதியதிலிருந்து பல நண்பர்கள் எனக்கு தங்களது அனுபவத்தினை தெரிவித்து வருகின்றனர். இதிலிருந்து சில உண்மைகள் உறுதியாகிறது –

1) இன்றைய, 'நம்ப முடியாத அளவிற்கு ஊழல் ஊறிவிட்ட' சூழலில் நமது அரசாங்கம் இயங்கி வருவதே ஒரு ஆச்சரியமான செயலாக கருதலாம்

2) நமது அரசாங்கத்தில் மிக துல்லியமாகவும், துரிதமாகவும் எங்கேனும் எண்கள் கணக்கிடப்படுகின்றன என்றால் அது, ஊழல் செய்வதில்தான்

3) மக்களும், தங்களுக்கு தெரிந்தவர்கள் அரசாண்டால் குறைந்தபட்ச ஊழலுடன் தங்கள் வேலைகளை செய்து கொள்ளலாம் என்ற மனப்பான்மையுடன் மட்டுமே வாக்களிக்கின்றார்கள் என்றே தோன்றுகின்றது

“ஒவ்வொரு கிராமப்புற சாலை மற்றும் இதர கட்டுமான வளர்ச்சிப்பணிக்கான ஒப்பந்ததிற்கும் 7 முதல் 10 விழுக்காடு வரை அரசியல்வாதிகளுக்கு கப்பமாக ஒப்பந்ததாரர் அளிக்கவேண்டும். அத்தகைய கப்பத்தை வசூல் செய்வது அந்த பகுதியில் உள்ள அரசாங்க அதிகாரியின் 'எழுதப்படாத' வேலைகளில் ஒன்று. அவ்வாறு அவர் செய்யவில்லை என்றால், அந்த வேலையில் நீண்ட நாள் நீடித்திருக்க முடியாது”, என்று ஒரு அரசாங்க அதிகாரி கூறுகின்றார்.

எவ்வாறு இந்த கப்பம் வசூலிக்கப்பட்டு, சேகரிக்கப்பட்டு, ஓரிடத்திற்கு சென்று சேர்க்கப்படுகின்றது?

“அதற்காகத்தானே மாதா மாதம் இவர்கள் வேலை தொடர்பாக‌ மேலதிகாரிகளுடன் கலந்து உரையாடும் பொருட்டு சென்னைக்கு அழைக்கப்படுகின்றனர்? அங்கு செல்வது மேலதிகாரிக்கு வேலை தொடர்பாக‌ பேச மட்டுமல்ல, சேகரித்த பணத்தை உரிய இடத்தில் சேர்ப்பதற்கும் ஆகும்.”

அதாவது நமது அரசாங்க நிர்வாக செயல்பாடுகளும், இன்று எளிதாக‌வும், தங்கு தடையின்றி ஊழல் செய்வதற்கு ஏற்றாற்போல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

மற்றொரு அதிகாரி பேசுகையில் தெரிவிக்கின்ற விவரம் இன்னமும் திகைப்பை ஏற்படுத்துகின்றது – “ஒவ்வொரு முறையும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு பட்டியல் தயாராகின்றது. அதனைத் தொடர்ந்து அந்தத் துறைகளைச் சேர்ந்த மந்திரிகளின் சிப்பந்திகள் அவர்களுடன் தொடர்புகொண்டு, ‘உங்களுக்கு பதவிஉயர்வு மற்றும் ஊதிய உயர்வு வரவிருக்கின்றது, எந்த ஊருக்கு நீங்கள் மாற்றலாக விரும்புகிறீர்கள் என்பதை நேரடியாக வந்து பேசுங்கள்’ என்று ‘அழைப்பு’ விடுப்பர். அந்த அழைப்பின் உட்பொருளைப் புரிந்து கொண்டு, முன்பே நிர்ணயிக்கப்பட்ட தொகையை, மந்திரியின் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் உண்டு. சிலர் இதனை பயன்படுத்திக்கொண்டு தாங்கள் எந்த பதவியில் அதிக ‘கப்பம்’ வசூலிக்க முடியுமோ அங்கு மாற்றம் வாங்கிக்கொண்டு செல்கின்றனர்”. எவ்வளவு சீராகவும், நிலையாகவும், அமைப்பாகவும் ஊழல் இன்று நமது அரசாங்க துறைகளில் புரையோடியுள்ளது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

இதனை நாம் ‘கருப்புப் பணம்’ என்கின்றோம். நிலம் வாங்கும்போது, வழிகாட்டி விலைக்கு (guideline value) அதிகமாக உள்ள தொகையை நாம், “ரொக்கமாக” கொடுக்கின்றோமே அதுதான் ‘கருப்புப் பணத்தின்’ ஆரம்பம். அதனைப் போலவே, பல மருத்துவமனைகளில், மருத்துவருக்கு, “பில்லில் இல்லாத பணமாக” கருப்புப் பணம் நமது நாட்டில் மிகப்பெரிய மருத்துவமனைகள் கூட வசூலிக்கின்றன. இப்படியே பள்ளி மற்றும் கல்லூரிகளில் இடத்துக்காக கொடுக்கப்படும் பணமும் அடங்கும். இவை அனைத்தும் பெரும்பாலும் யாரேனும் உண்மையாக உழைத்து, சிறுகச் சிறுகச் சேர்த்த பணம். இந்தப் பணம் கீழ் மட்டத்திலிருந்து மேல் நோக்கி பயணிக்கும் பொழுது, வெள்ளை நிறத்திலிருந்து கருப்பாகின்றது, அதாவது நேர்மையான உழைப்பின் ஊதியமாக அல்லாமல், நீதியின் கண்களில் குற்றமாகவும், உழைப்பினை சாராத பண சுரண்டலாகவும் உருமாறுகின்றது.

ஆங்கிலத்தில், white collar crime அதாவது, ‘மேல்மட்ட குற்றங்கள்’ (குற்றங்களை இந்த விதத்தில் பாகுபாடு செய்வது ஆங்கில மொழியில்தான் அதிகமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்) என்று இன்றைய காலகட்டத்தில் உருவாகி வரும் நிர்வாகம் சார்ந்த பல குற்றங்களை கூறுகின்றனர். இந்த வகை குற்றங்களின் முக்கிய குறியீடுகள் –


1. இத்தகைய குற்றங்கள் சமூக பாதுகாப்பையும், அமைதியையும் மிகவும் சீர்குலைக்கின்றன. இவை இதர சட்டங்களின் கீழ் குற்றம் என்று சுலபமாக நிர்ணயிக்க இயலாமல் இருக்கும். இவற்றின் சமூகத்தாக்கம் அதிகமாக இருக்கும்


2. இத்தகைய குற்றங்களை இழைப்பவர்கள், இத்தகைய குற்றங்களை தொடர்ந்து இழைத்து வருபவர்களாகவே இருப்பார்கள். இவர்கள் இந்த குற்றங்களை இழைக்கும் விதம் வேண்டுமானால் மாறலாம்


3. இந்த குற்றம் நடக்கும் விதம் ஒரே விதத்தில் அமைந்திருக்கும்


4. இத்தகைய குற்றங்களை இழைப்பவர்களின் சமூக நிலைமை எந்த விதத்திலும் குன்றுவதில்லை. இவர்கள் தங்கள் சம சமூக நிலைகளில் உள்ளவர்கள் மத்தியில், மரியாதையுடனும், இன்னமும் சொல்லப்போனால், “பிழைக்கத் தெரிந்தவர்கள்” என்று பாராட்டையும் பெற்றவர்களாகவே இருக்கின்றனர்


5. இத்தைகைய குற்றங்களை இழைப்பவர்கள் சட்டத்திற்கும், அரசாங்க அதிகாரங்களுக்கும், மேலாண்மைத் தேவைகளுக்கும் அதிக மரியாதை கொடுப்பதில்லை! (ஆமாம், அவர்கள் தானே அதனை நடத்துகின்றார்கள், பின்னே எவ்வாறு மரியாதை இருக்கும், என்ற கேள்வி நமது மனதில் எழுகின்றது)


6. சாதாரண குற்றவாளிகள் எந்த அளவிற்கு நீதித்துறையை கண்டு அஞ்சுகின்றார்களோ அந்த அளவிற்குக்கூட இத்தகைய மேல் மட்ட குற்றவாளிகள் அஞ்சுவதில்லை. ஏனென்றால் எப்படியாவது தப்பிவிடலாம் என்றும், பெரிய அளவில் அவர்களுக்கு தண்டனை வராது என்றும், அவர்களது மேலதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள் என்றும் ஒரு தைரியம் அவர்களுக்கு எப்போதும் இருப்பது

இன்று பெரும் தொழிலதிபர்கள், பங்குசந்தை தரகர்கள் மற்றும் பணக்கார திருடர்கள், சட்ட அறிஞர்கள் என்று பலரும் இந்த “மேல்மட்ட குற்றவாளிகள்” பட்டியலில் இடம் பெறுகின்றனர். ஆனால், இந்த குறியீடுகளை கொண்டு நிர்ணயித்தால் நமது அரசாங்கத்தில் உள்ள பல துறைகளே இன்று, ‘மேல் மட்ட குற்றவாளி’ கூண்டில் நிற்க தகுதி படைத்ததாகவே நமக்கு தோன்றுகின்றது.

இப்படி ‘கப்பமாக’ வசூலிக்கப்படும் பணம்தான் வன்முறை, பெரிய அளவிலான சூதாட்டம், தேவையில்லாத ஆடம்பரமான பல கேளிக்கைகள், நமது நாட்டின் சுற்றுச்சூழலையும், மனித நலனையும் குலைக்கும் பலவிதமான துறைகள் என்று பலவிதங்களிலும் ‘முதலீடாக’ வருகின்றது. சமீபத்தில் ஒரு முக்கிய பத்திரிகையாளர், தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி, திரு. சிதம்பரம் மற்றும் அவர் மகன் திரு. கார்த்திக் சிதம்பரம் அவர்களது தொடர் மருத்துவமையின் கிடுகிடு வளர்ச்சி மற்றும் அதற்கு சாதகமாக வந்த அந்நிய முதலீட்டை குறித்து ஆதாரங்களுடன் கட்டுரை எழுதியிருந்தார். இத்தகைய, 'மறைமுக' கும்பெனிகளை அபகரிக்கும் உத்திகளை 2-ஜி அலைகற்றை மற்றும் ஸ்வான் டெலிகாம் என்ற பல உதாரணங்களில் புரிந்து கொள்ளலாம். இந்த உத்தி என்ன என்று எளிதாக விளக்கப் பார்க்கலாம்.

அதிக அளவிற்கு லஞ்சம் வாங்கும் மந்திரியாக இருக்கும் ஒருவர் அந்த பணத்தை இந்தியாவில் நேரடியாக எந்த விதத்திலும் செலவு செய்ய இயலாது. இந்த பணத்தின் அசுர உருமாற்றம் அதனை நேர்மையாக எந்த வங்கியிலும் செலுத்த இயலாத நிலைக்கு தள்ளுகின்றது. இது போன்ற பணத்தை நம்பியே உலகத்தில் பல இடங்களில் இயங்கும் வங்கிகள் இருக்கின்றன. இவற்றில், ‘உங்கள் பணம் நேர்மையாக சம்பாதித்தது தானா?’ என்றோ அல்லது, ‘இதனை சம்பாதித்து உங்கள் அரசாங்கத்திற்கு தேவையான வரி செலுத்திவிட்டீர்களா?’ என்றோ கேள்விகளை எழுப்பவதில்லை.

இந்த மாதிரியான வங்கிகள் அதிகமாக சுவிட்சர்லாந்து நாட்டில் இருப்பதை நமது நாட்டு அரசியல்வாதிகளின் வாயிலாக நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், உலகில் பல நாடுகளில் இத்தகைய அசுரப்பணத்தை ஏற்றுக்கொள்ள அசுர வங்கிகள் இயங்குகின்றன.

இந்த அசுரவங்கிகள் உள்ள (சுவிட்சர்லாந்தைத் தவிர) 'டாப் 10' நாடுகளின் பட்டியல் – ஜப்பான், ஜெர்சீ, ஜெர்மனி, லெபனான், அமெரிக்கா, சிங்கப்பூர், கெமன் தீவு, லஃஸம்பர்க் மற்றும் பிரிட்டன். ‘வளர்ந்துவரும்’ (இதற்குக் கூட வளர்ந்து வரும் நாடுகள் பட்டியல் உள்ளது) அசுரவங்கி நாடுகளின் பட்டியலில் முக்கிய இடம் பெற்றுள்ள மற்றொரு நாடு மொரீஷியஸ் தீவு. இரண்டு ஆண்டுகளாக ரஷ்யாவும் தன்னை இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ள முயன்றுவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதன் கருப்பு பணம் சைப்ரஸ் நாட்டிற்கு செல்வதை தவிர்க்க அந்த நாடு சில நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.

நமது நாட்டில் அதிகமாகிவிட்ட கருப்பு பணத்தை இந்த நாடுகளின் அசுர வங்கிகளில் செலுத்தி, அந்த நாட்டிலேயே ஒரு கும்பனியை நிறுவி அந்த நாட்டின் “அந்நிய முதலீடாக” அந்த கருப்புப்பணத்தை நமது நாட்டிற்கே மீண்டும் “வெள்ளை” பணமாக எடுத்து வருவது ஒரு வழக்கமாகி வருகின்றது. இதில், நமது நாட்டு அரசாங்கங்கள் தொடர்ந்து, அந்நிய முதலீட்டை, நாம் அனைவரும் வழிபடவேண்டும் என்று கூறுவதுதான் ஆச்சிரியம். இது பிச்சைக் காசு மாத்திரம் அல்ல, பேராசையினால் வரும் அசுரகாசு.

கடந்த 2000 ஆம் வருடம் முதன் 2015 வரையிலான ‘அந்நிய முதலீடு’ எந்த நாடுகளிலிருந்து அதிக அளவில் வந்துள்ளது என்று பார்த்தால் இது தெளிவாகிவிடும் (இந்திய அரசாங்கத்தின் ‘முதலீடு பெருக்குதல் துறை’யின் இணைய தளத்தில் உள்ள பட்டியிலின் படி) – மொரிஷியஸ் தீவு, சிங்கப்பூர், ரஷியா, அமெரிக்கா, ஜப்பான், சைப்ரஸ், பிரிட்டன், ஜெர்மனி!! இந்த நாடுகள் யாவையும் அசுர வங்கிகள் நடத்தும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org