தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உழவை வெல்வது எப்படி? - பசுமை வெங்கிடாசலம்


[சிறுபண்ணையில் நிரந்தர வருவாய் என்பது உழவன் விடுதலைக்கு இன்றியமையாதது. நாம் முன்னர் 'கெடு முன் கிராமம் சேர்' தொடரில் காணி நாயகர்களாக ஒரு கணவனும் மனைவியும், ஆளுக்கு ஒரு காணியில் தற்சார்பு வேளாண்மை செய்தால் நல்ல வாழ்வு வாழ இயலும் என்று எழுதியிருந்தோம். இதற்கு ஒருங்கிணைந்த உயிர்ச்சூழல் பண்ணை அமைத்தல் முக்கியம். பயிர்ப் பன்மையும் மிகவும் முக்கியம். டெல்டா பகுதி என்றழைக்கப் படும் கடைமடைப் பாசன மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் வயல்களின் வடிவமைப்பு நீரைத் தேக்குவதற்காக அமைக்கப் பட்டுள்ளது. இதில் வடிகால் வசதியும் குறைவு. இந்நிலையில் எவ்வாறு இங்கு உயிர்ச்சூழல் பண்ணை அமைப்பது என்று என்னுடைய இரண்டரை ஏக்கர் வயலைப் பார்வையிட்ட திரு வெங்கிடாசலம் அவர்கள் தன் பரிந்துரையை அளித்தார். வரும் 2016 மாசி- பங்குனி மாதங்களில் இது செயலாக்கம் செய்யப்பட உள்ளது. அப்பரிந்துரையே இக்கட்டுரை - ஆசிரியர்]

இந்த மாதம் டெல்டா பகுதியில் அமைந்துள்ள ஒரு 2.5 ஏக்கர் பண்ணையை எப்படி ஒரு தற்சார்பு பண்ணையாக மாற்றுவது என்று பார்ப்போம். இதற்கு முன்மாதிரியாக நமது பத்திரிகை ஆசிரியர் திரு.பாலாஜி ஷங்கர் அவர்களின் பண்ணையையே எடுத்துக்கொள்வோம். இந்த பூமியானது சரியான வடிகால் அற்ற பூமியாக உள்ளது. மழைக்காலத்தில் சுமார் ஒரு அடிக்கு குறையாமல் நீர் தேங்கி இருக்கும். இரண்டு புறங்களிலும் வாய்க்காலும் நீரோடையும் அமைந்துள்ளன. கிட்டத்தட்ட வயலின் மட்டமும் வாய்க்காலின் அடிமட்டமும் ஒரே சம உயரத்தில் அமைந்துள்ளன. உயரமான கரைகளை கொண்டுள்ளது வாய்க்கால். இரண்டு புறங்களில் ட வடிவில் தார் சாலை அமைந்துள்ளது. ஆக இந்த பூமி மூன்று புறங்கள் மேடாகவும் ஒரு புறத்தில் மட்டும் நீர் வடியும்படியாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூமியில் எந்த விதமான குடியிருப்புப் பகுதியும் இல்லை.

முதலில் இந்த பண்ணைக்கு வேலி தேவைப்படுகிறது. இரண்டாவதாக குடியிருப்புப் பகுதி தேவைப்படுகிறது. குடியிருப்புப் பகுதியை உருவாக்க வேண்டும். குடியிருப்புப் பகுதியை உருவாக்க தார் சாலைக்கு சமமாக பூமியின் அந்த பகுதியை மேடாக்க வேண்டும். இதற்கு அதிகபட்சமாக 100 அடிக்கு 100 அடி மேடு அமைக்கவேண்டும். அதில் ஒரு குடும்பம் தங்குவதற்கு தேவையான வீடு, கால்நடை மற்றும் உலர் தீவனம் சேமிப்பதற்கான இடம் மற்றும் வாத்து, புறா, கோழி போன்றவற்றை வளர்ப்பதற்கான இருப்பிடங்கள் அமைக்கவேண்டும். இந்த மேடை அமைக்க பூமியின் கடைக்கோடியில் (வட கிழக்கு மூலை) இருந்து மண் எடுக்கவேண்டிவரும். அவ்வாறு மண் எடுக்கும் பூமியை ஒரு மீன் குட்டையாக பயன்படுத்த ஏதுவாக வடிவமைத்துக் கொள்ளலாம். இதன் பரப்பு சுமார் 1/2 ஏக்கருக்கு மிகாமல் இருக்கும். குடியிருப்புப் பகுதியும் மீன் குட்டையும் சேர்த்து சுமார் 1/2 ஏக்கருக்குள் அமையும். (மீன் குட்டையை ஒட்டி சுமார் 1/2 ஏக்கரில் நெல் பயிரிடப் பயன்படுத்திக்கொள்ளலாம்).

பூமியின் மத்தியில் இரண்டு வாய்க்காலுக்கும் இடையில் சுமார் 20 அடிக்கு குறையாத அகலத்தில் ஒரு பாதை அமைக்க வேண்டும். அதுவும் மேடாக இருக்க வேண்டும். கிட்டத்தட்ட குடியிருப்புப் பகுதிக்கு சமமான உயரத்தில் இருக்க வேண்டும். இதை அமைப்பதற்காக பாதை அமைப்பதற்கான பகுதியின் இரு புறமும் சுமார் 10 அடி அகலத்திற்கு 4 அடி ஆழத்திற்கு மண்ணை எடுத்து பாதைக்கு பயன்படுத்தினால் போதுமானது. மீதமிருக்கும் பூமியில் பாதையின் வாக்கிலேயே 35 அடி மேட்டுப்பாத்தியும் 15 அடிக்கு 4 அடி குழியும் எடுத்து மேட்டுப்பாத்தியின் மேலேயே மண்ணை இட்டு மேடாக்க வேண்டும். இப்படி செய்யும்பொழுது மீதியிருக்கும் 1.5 ஏக்கரில் 1 ஏக்கர் மேட்டு நிலமாகவும் 1/2 ஏக்கர் நீர் நிற்கும் குட்டையாகவும் அமையும். இந்த மேட்டுப்பாங்கான 1 ஏக்கரில் மேட்டுப்பாத்தி (3 1/2 அடி x 1 1/2 அடி) அமைத்துத் தெளிப்பு நீர் அல்லது சொட்டு நீர் பாசனம் அமைத்து வருடம் முழுவதும் காய்கறி, கீரை வகைகளை பயிர் செய்து கொள்ளலாம். காய்கறி, கீரைக்கு 10 சென்ட் நிலம் ஒதுக்கினால் போதுமானது. மற்ற பகுதியில் கால்நடை தீவனம், பருப்பு வகைகள், தென்னை, மூலிகை மரங்கள், வாழை, தடி மரங்கள் போன்ற மர வகைகளை மேடான பகுதியின் ஓரங்களில் நட்டு வளர்க்கலாம். மீன் குட்டை ஓரங்களிலும் இதே போல நடவு செய்யலாம். இது நமக்கு நிரந்தரமான வருவாயை கொடுக்கும். இதில் இருந்து கிடைக்கும் இலைகள் மீனுக்கு உணவாகவும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் மற்ற பயிர்களுக்கு உரமாகவும் வருடம் முழுவதும் தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கும். வருவாயும் 2 வருடங்களில் இருந்து 5 வருடங்களுக்குள் எல்லா மரப்பயிர்களில் இருந்தும் கிடைக்கும்.

இந்த பண்ணையை வடிவமைக்க ஆகும் செலவுகளை இப்போது தோராயமாக கணக்கிடலாம்.


JCB செலவு 50 மணி நேரம் * 750 ரூபாய் = 37,500


டிராக்டர் வாடகை மண் அடிக்க = 15,000


மேட்டுப்பாத்தி அமைக்க ஒரு ஏக்கருக்கு = 10,000


நீர் பாசனம் (சொட்டு நீர் / தெளிப்பு நீர்) 1/2 ஏக்கருக்கு = 10,000


ஆட்கூலி = 30,000

ஆக சுமார் 1.5 இலட்சத்தில் இருந்து 2 இலட்சம் வரை செலவு செய்யவேண்டிவரும்.

இது போக வேலி அமைக்க உயிர் வேலி என்றால் ஒரு அடிக்கு 20 ரூபாய், கம்பி வேலி அமைக்க ஒரு அடிக்கு 150 ரூபாய் செலவு ஆகும்.

குடியிருப்புக்கு ஒரு குடும்பத்திற்கு சுமார் 1 இலட்ச ரூபாய்,

கால்நடைகள் மாடு 2, கோழி 25, புறா 100 என்கிற என்னிக்கையில் கொட்டகை அமைக்க சுமார் 1 இலட்ச ரூபாய் தேவைப்படும்.

இந்த கட்டுமானத்திற்கு அருகில் உள்ள கட்டுமான பொருட்களை பயன்படுத்தினால் மட்டுமே இந்த செலவிற்குள் அடங்கும்.

அது போக விதை மற்றும் நாற்றுகள் வாங்கும் வகையில் சுமார் 50 ஆயிரம் ரூபாய் தேவைப்படும்.

இவற்றை நடவு செய்ய சுமார் 30 ஆயிரம் ரூபாய் ஆகும்.

ஆக தரிசாக கிடக்கும் ஒரு பூமியை உழவாண்மை பண்ணையாக மாற்றி அமைக்க ஏக்கர் ஒன்றுக்கு வேலி போடும் செலவு தவிர்த்து சுமார் 2 இலட்சம் செலவு செய்ய வேண்டி வரும். இதில் இருந்து எப்படி வருவாய் எடுக்க முடியும்? அதற்கு உண்டான தொழில் நுட்பம் எவை என்பவற்றை அடுத்த இதழில் காண்போம்.

உழவை வெல்வது எப்படி? - நடைமுறைப் பயிற்சி

"பசுமை" மா. வெங்கடாசலம் ஒருங்கிணைப்பில், இரு நாட்கள் பயிற்சி. நட்டமின்றி இயங்குவதே நிலைத்த வேளாண்மையாக இருக்க முடியும். இதற்கான பயிற்சியே இந்த 'தற்சார்பு வாழ்வியல் அறிமுகப்பயிற்சி' ஆகும். இப்பயிற்சி நடக்குமிடம் நட்டத்திலிருந்து ஆதாயத்திற்கு திரும்பியுள்ள ஒரு மாதிரிப்பண்ணை என்பது இதன் சிறப்பு. இப்பயிற்சி இயற்கை வேளாண்மையை விரும்பி ஏற்கும் புதியவர்களுக்கும் ஆதாயத்துடன் கூடிய நிலைத்த வேளாண்மையை விரும்பும் அனைவருக்குமென வடிவமைக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு அவசியம். கட்டணம் உண்டு (உணவு, தங்குமிடம் உட்பட).

ஒருங்கிணைப்பு: "பசுமை" மா. வெங்கடாசலம், அம்மாபேட்டை, ஈரோடு. ( 9443545862 )

பயிற்சிக்காலம் : இரண்டு நாட்கள் (ஒவ்வொரு சனி,ஞாயிறும் தொடர் பயிற்சி, அக்டோபர் 2015 முதல் தொடக்கம்)

பயிற்சி நிகழுமிடம்: "பூர்வ பூமி", கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம்.

முன்பதிவிற்கு : தா. குலசேகரன், திருவருள் பவுண்டேஷன், தஞ்சாவூர். ( 9750583738)

[வெங்கிடாசலம் அவர்கள் பல பண்ணைகளைப் பல்வேறு சூழல்களில் நட்டத்தில் இருந்து லாபத்திற்கு மாற்றியிருக்கிறார். இது தாளாண்மை இதழ் நடத்தும் பயிற்சி அல்ல. பசுமை வெங்கிடாசலம் அவர்கள் தனிப்பட்ட முறையில் நடத்தும் பயிற்சி. - ஆசிரியர்]

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org