தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

நம்மிடையே உள்ள நாயகர்கள் - செம்மல்


இம்மாத நாயகர் வரிசையில் நாம் காணவிருக்கும் திரு. மணி அவர்களைச் சந்திக்க கோவையில் இருந்து ஆனைகட்டி செல்லும் பாதையில் பயணம் செய்து கொண்டிருந்தோம். ஒவ்வொரு முறை எந்த நகரத்திலிருந்தும் புற நகர் பகுதிகளைக் கடக்கும் பொழுது நாம் காணும் அதே மனதைத் தாக்கும் காட்சிகள் - விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாறுவது, புதிய கட்டிடங்களும் குடியிருப்புகளும் வெவ்வேறு நிலைகளில் காட்சியளிப்பது, அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத பலப்பல "நகர்கள்". நம் நாட்டில் ஒரு நகரம் வளருவது என்பது அரக்க வளர்ச்சியாகவே உள்ளது. சூழலைப் பற்றியோ, அங்கு வாழப் போகும் மாந்தரைப் பற்றியோ சிறு சிந்தனை கூடச் செய்யாமல், பணத்தின் மீதுள்ள பேராசை மட்டுமே ஒரே குறியாய் உருவாக்கப்படும் இப்புற நகர்ப் பகுதிகள், பிற்காலத்திற்கு நாம் விட்டுச் செல்லும் செல்வம் அல்ல, துன்பமேயாகும்.

இவ்வாறான எண்ணங்கள் மேலோங்கிய நிலையில் கணுவாய் புற நகர் பகுதியைக் கடந்து நண்பர் மணியின் தோட்டத்திற்குச் செல்லும் பிரிவுச் சாலைக்குள் நுழைந்தோம். அக்குறுகிய சாலை மனதிற்கு இதமளிக்கும் மாற்றத்தைத் தந்தது. இரு மருங்கிலும் தென்னை, பாக்கு மற்றும் வாழைத் தோட்டங்கள் நகரத்துக்கு வெகு அருகிலும் கூட வேளாண்மை இன்னும் வாழ்கிறது என்று நமக்கு உணர்த்தின. சாலையோரத்து மரங்கள் தம் கிளைகளை கோர்த்துக் கொண்டு, இளமாலை வெயில் சிறிதும் சாலையில் செல்வோர் மீது படாமல் அரவணைத்து நின்றன. மூன்று நான்கு கிலோமீட்டர் பயணத்துக்குப் பின், மணியின் தோட்டத்தை அடைந்தோம்.

மணி மண்ணின் மைந்தர். அவரது பெற்றோர், தந்தையின் சகோதரர்கள், உறவினர்கள் யாவரும் தாளியூர் கிராமத்தைச் சேர்ந்த பரம்பரை வேளாண்மைக் குடும்பத்தினர். மணி தனது ஐந்து ஏக்கர் தோட்டத்தில் எளிமையான வீட்டில், தாய், தந்தை, மனைவி, மகன், மகள் ஆகியோருடன் வசித்து வருகிறார். நாம் சென்ற போது, அவரது தந்தை மாடுகளைத் தொழுவத்தில் கட்டிக் கொண்டிருந்தார். மனைவியார், வீட்டிற்குள் ஏதோ பணியில் இருந்தார். அவர் தாயும், மகளும் தோட்டத்தின் துவக்கத்தில் பாக்குக் காய்களைக் கொய்து கொண்டிருந்தனர். மணி தோட்டத்தி னுள்ளே இருப்பதாய்க் கூறினர். நாம் தோட்டத்துக்குள் நடக்கத் துவங்கினோம். சிறிது தொலைவில், மணி எதிரே வந்தார். மிதிவண்டியின் பின்புறம் ஒரு சுமை கறிவேப்பிலையும், சிறு பொதி வல்லாரைக் கீரையும் கட்டப் பட்டிருக்க, அவர் மிதிவண்டியைத் தள்ளிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.

நம் எண்ணத்தில் இருந்த நகர வளர்ச்சியைக் குறித்த வினாக்களுடனே, மணியுடன் உரையாடத் தொடங்கினோம். அவர் முக்கிய சாலையிலிருந்து உள்ளே நுழைந்ததும் நாம் கண்ட மாற்றத்தைப் பற்றி வினவினார். பின்னர் இவை (தோட்டங்களும் மரங்களும்) யாவும் நம் தலைமுறைக்குள்ளேயே அழிந்து விடும் பேராபத்து இருப்பதையும் ஒத்துக் கொண்டார். நாம் காணாத அவ் வட்டாரத்துக்கான வேறொரு இடரையும் விவரித்தார். கணுவாய் பகுதியில், ஐநூறுக்கும் மேற்பட்ட செங்கற் காளவாய்கள் உள்ளன. யாவும் நவீன இயந்திர மயமாக்கப்பட்ட சேம்பர் செங்கல் தொழிற் சாலைகள். இவற் றிலிருந்து வெளிப் படும் சூடான காற்று மெல்ல மெல்ல இங்கு வரும் மழையின் அளவை பாதித்து வருகிறது. முன்பெல்லாம், சிறு மேக மூட்டம் காணப் பட்டாலும், த‌ம் தோட்டத் தின் உள்பகுதியிலிருந்து வீட்டை அடையும் முன் நன்றாக நனைந்து விடும் அளவுக்கு மழை பெய்யும். ஆனால் சில‌ ஆண்டுகளாய் அந்த நிலை மெதுவாக மாறி வருவதாகக் கூறினார்.

அவரிடம், தாங்கள் தம் தந்தை காலம் முதலே இயற்கை விவசாய முறைகளை மட்டுமே கடைப்பிடித்து வருகி றீர்களா என்று கேட்டோம். அவர். "எங்க பாட்டன் காலத்தில எல்லாமே இயற்கை தானுங்க. நடுவில எங்க அப்பா தலையெடுத்து வரும் போது தான் இந்த டி ஏ பி, யூரியா எல்லாம் அறிமுகமாச்சு. அதுவும் ரொம்பத் தீவிரமான பயன்பாடெல்லாம், இந்த நாப்பது வ‌ருசமாத்தான. இங்க இருக்கற எங்க சித்தப்பா, சகோதரர்கள் எல்லாரும் இன்னும் அதே வழியில தான் போயிட்டிருக்காங்க. நாம தான், திரும்பவும் பாட்டன் வழிக்கே போயி, சாணி மண்புழுன்னு சரியான பாதைக்கே திரும்பிட்டோம்."

தாளாண்மை: "செயற்கை இடுபொருட்களை ஒதுக்கி இயற்கை விவசாயத்துக்கு மாறி எவ்வளவு ஆண்டுகள் ஆயிற்று?"

மணி: "பத்து, பன்னண்டு வருசமாச்சுங்க, இந்த பூமிக்குள்ள வெளிப் பொருள்கள் வந்து. சொன்னா நம்ப மாட்டீங்க. நாங்க இப்போ பராமரிப்புன்னு ஒண்ணுமே செய்யறது இல்லீங்க. இவ்வளவு ஏன், நாங்க தென்ன மரத்துக்குக் கூட தனியா தண்ணி பாய்ச்சறதே இல்ல. ஒரு வருசத்துக்கு ஒரு தரம், மரத்துக்கு அஞ்சு கிலோ வீதம், வேப்பம் புண்ணாக்கு வெக்கறதோட சரிங்க. ஆனா நீங்க நல்ல நம்பிக்கையான இடத்தில வாங்கணுங்க. இல்லாட்டி புளியங்கொட்டையை கலந்துருவாங்க, வேப்பம் புண்ணாக்கிலே"

தாளாண்மை: "அவ்வாறு மாறும் இடைப்பட்ட நிலையில், உங்கள் உற்பத்தி எவ்வாறு பாதிக்கப் பட்டது? அத்தருணத்தில் பொருளாதாரச் சிக்கல்களை எப்படி சமாளித்தீர்கள்?"

மணி: "சுமார் பதினஞ்சு வருசத்துக்கு முன்னால ஒரு சம்பவம் நடந்துச்சுங்க. நான் அடுத்த நாள் தென்ன மரத்துக்கு டி ஏ பி போடணும்னு, ஒரு பெரிய அண்டால டி ஏ பியை கரைச்சு வெச்சேன். மறு நாள் காலைல பாத்தா அண்டா அடிப்பாகத்திலே ஆத்து மணல் வண்டலா படிஞ்சு இருக்கு. அப்போ தான் எனக்கு ஒரு உண்மை புரிபட்டதுங்க. நாம உரக்கடைல வாங்கற பொருளெல்லாத்திலேயும், கலப்படம் இருக்க வாய்ப்பு இருக்குன்னு. உரக்கடை காரரோட சரியான சண்டை போட்டேன். அவர் பணத்த திருப்பி கொடுத்திட்டார்.

"ஆனா எனக்கு நாம செய்யறது (செயற்கை உரமிடுதல்) சரியான செயல் தானான்னு ஒரு கேள்வி வந்தது. நம்ம நண்பர் செல்வராஜ்னு ஒருத்தர் பக்கத்தில செம்மேடு கிராமத்தில இயற்கை விவசாயம் பண்ணிட்டு இருக்காரு. அவரை போய் சந்திச்சேன். மெதுவா இயற்கை முறைக்கு மாறிட்டேன். நீங்க கேட்டா மாதிரி அதே சந்தேகம் எனக்கும் தோணிச்சு. அதனால நான் படிப்படியாத்தானுங்க இந்த மாற்றத்த செஞ்சேன். மொத வருசம் அரை ஏக்கரை மட்டும் மருந்தில்லா வேளாண்மைக்கு கொண்டு போனேன். மத்த இடத்திலயும், உரம் மருந்து போடற அளவை பாதியாக் குறைச்சேன். அடுத்த வருசம் ரெண்டு ஏக்கர் இயற்கை விவசாயத்துக்கு, மூணாவது வருசம் முடியும் போது அஞ்சு ஏக்கருமே இயற்கைக்கு மாறிடுச்சு. ஆனா என்னோட உரக்கடை பில்லு வருசா வருசம் கொறஞ்சுட்டே இருந்ததால, நிகர லாபம் நல்லாவே மாறிடுச்சு."

தாளாண்மை: "நீங்கள் எடுத்த மாற்ற முடிவுகளை, உங்கள் குடும்பத்தினரிடம் கலந்து அவர்கள் ஆலோசனைகளை அறிந்து ஏற்று நடைமுறைப் படுத்தினீர்களா?"

மணி: "குழந்தைகள் இருவரும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள். என் தாய், தந்தை இருவரும் என் மீது முழு நம்பிக்கை கொண்டு, சம்மதித்தார்கள். என் மனைவியும் இதற்கு முழு ஆதரவு தான். குடும்பம் அனைத்தும் இம்முயற்சிக்கு ஒத்துழைப்பும் ஊக்கமும் தந்ததே, இந்த மாற்றம் வெற்றியாகக் காரணம். பல நேரங்களில் என் பெற்றோர், தம் இளமைக் காலத்தில் அவர்களுடைய பாட்டனார் செய்த சில யுக்திகளையும் பரிசோதனைகளையும் நினைவு படுத்தி எனக்கு வழி காட்டினர். இந்த முடிவுகளை நாங்கள் நடைமுறைப் படுத்தும் முன்னரே, எங்கள் தந்தை சில ஆதாரமான கொள்கைகளைக் கொண்டிருந்தார். உதாரணமாக, இங்கு பலரும் ஜெர்சி எனும் சீமைப் பசு இருபது லிட்டர் வரை பால் கறக்கும் என்று நாட்டு மாடுகளை விற்று சீமை மாடுகளை வாங்கத் தொடங்கினர். ஆனால் அவர், உறுதியாக மறுத்து விட்டார். அந்த அற்புதமான எண்ண ஓட்டம், நாங்கள் இயற்கை விவசாயத்திற்கு மாறும் போது பெரும் உதவியாக இருந்தது"

தாளாண்மை: "உங்கள் இந்த வெற்றிகரமான இந்த இயற்கை முறை விவசாயம் பற்றி உங்கள் உறவினர்களின் கருத்து என்ன? எவரேனும் உங்களைப் பின் பற்றுகின்றனரா?"

மணி மெலிதாக நகைக்கிறார். "இப்ப நீங்க என்னப் பத்தி கேள்விப்பட்டு எங்க இருந்தோ வந்திருக்கீங்க. அது போல வெளியூர்ல இருந்து பல பேர் வர்றாங்க. நல்ல விசயம்னு தோணறதை எடுத்துக்கறாங்க. இது அருகா, தொலைவா, தெரிஞ்சவங்களா, சொந்தக்காரங்களா போன்ற அடிப்படையில வர எண்ணங்கள் கிடையதுங்க. நமக்குள்ள தோணற எண்ணங்கள்ளதான் இருக்கு."

மணி தம் தோட்டத்தில் பலப்பல புதுமைகளைச் செய்துள்ளார். வாழை மரங்களை வெட்டுவதே இல்லை. குலை தள்ளியதும், குலையை மட்டும் வெட்டி விடுகின்றார். பக்கக் கன்றுகளை இட மாற்றம் செய்து விடுகிறார். வாழை மீண்டும் குலை கொடுக்கிறது - ஒரு முறை அல்ல பல முறை. அவர் தோட்டத்தில் நாம் பார்த்த வாழை மரங்கள், பதினைந்து அடிக்கும் மேலாய் வளர்ந்திருக்கின்றன. தென்னைக்கு நடுவே, ஊடு பயிராய், கீரை வகைகள், வல்லாரை போன்றவற்றை வளர்க்கிறார். கோவையில் சில இயற்கை அங்காடிகளில், அவரது தோட்ட வாழைப்பழத்திற்கென ஒரு ரசிகர் வட்டமே உள்ளது. தவிர, கோவை R S புரத்தில் உள்ள உழவர் சந்தையில் ஒரு நேரடி விற்பனைக் கடை வைத்துள்ளார்.

அவரது குழந்தைகளைப் பற்றிக் கேட்டோம். பெண் கணினி பொறியியலில் முதுநிலை படிப்பு படித்து, ஒரு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார் (ஆம், நாம் கட்டுரைத் தொடக்கத்தில் சந்தித்த பாக்குக் காய்களைக் கொய்து கொண்டிருந்த அதே பெண் தான்!). மகன், கிள்ளிகுளம் விவசாயக் கல்லூரியில், வேளாண்மை முதுநிலைப் படிப்பு படித்து வருகிறார்.

பள்ளிப்படிப்பு மட்டுமே படித்து, விவசாயம் மட்டுமே செய்து, பிள்ளைகளுக்கு அவர்கள் விரும்பிய படிப்பும் வாழ்க்கையும் ஒருவரால் தர முடியும் எனில், அவர் எவ்வளவு சிறந்த உழைப்பாளியாக இருக்க வேண்டும்.

மணியின் கொங்குத் தமிழ் உரையாடலும், அவரின் எளிமையும், அவராய் தேடி கண்டெடுத்த இயற்கை வழி விவசாயப் பாதையும், அதில் அவர் குடும்பத்தினர் வைத்துள்ள நம்பிக்கையும் நமக்கு பெரிதும் உவகையும் மன நிறைவும் அளிக்கின்றன.

செம்மல்: 99944 47252. மணி: 98944 50564

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org