தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

8000 கோடிப் பதுக்கல் - பரிதி


இரண்டே மாதங்களில் 8,000 கோடி ரூபாய் சம்பாதித்த வெங்காயம்!

வெங்காய விலை கடந்த சில மாதங்களில் தாறுமாறாக ஏறியதால் நாடெங்கிலும் நுகர்வோர் கண்ணீர் சிந்தினர். அந்த விலையேற்றத்தின் பலன் உழவர்களுக்குக் கிடைக்காததால் அவர்கள் எப்போதும்போலக் கண்ணீர் விட்டுக்கொண்டுள்ளனர். ஆனால், வெங்காயத்தைப் பதுக்கி வைத்து விற்றதன் மூலம் வணிகர்கள் கடந்த ஆகசுட்டு, செப்டம்பர் மாதங்களில் மட்டும் 8,000 கோடி ரூபாய்கள் வரை சம்பாதித்திருக்கக்கூடும் என்கிறது இந்திய அரசின் கொள்கைத்திட்டக் குழு.

இந்தியர்கள் மாதம் ஒன்றுக்குச் சுமார் நூறு கோடி கிலோ வெங்காயம் பயன்படுத்துகின்றனர். பல பெரு நகரங்களில் மேற்கண்ட இரண்டு மாதங்களில் வெங்காய விலை கிலோ 70 ரூபாய் வரை உயர்ந்தது. இது சென்ற ஆண்டு அதே மாதங்களில் இருந்த விலையை விட சுமார் 40 ரூபாய் அதிகம்!

ஒவ்வோராண்டும் வெங்காயத்தின் விலை சூன் முதல் ஆகசுட்டு வரை உயர்வது வழக்கம். இந்த ஆண்டு பெப்ருவரி, மார்ச் மாதங்களில் பெய்த மழை மற்றும் ஆலங்கட்டிகள் (மழையுடன் சில சமயம் விழும் உறைபனிக் கட்டிகள்) காரணமாக மார்ச் - மே மாதங்களில் அறுவடைக்கு வந்திருக்கக்கூடிய வெங்காயத்தில் பெரும்பங்கு சேதமாகிவிட்டது. மேலும், வெங்காய உற்பத்தியில் முதலிரண்டு இடங்களில் உள்ள மகாராட்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வறட்சி காரணமாக வேனிற்காலப் பயிர்களைத் தக்க சமயத்தில் விதைக்கமுடியவில்லை.

2014-15-இல் இந்தியா மொத்தம் சுமார் 1892 கோடி கிலோ வெங்காயம் உற்பத்தி செய்தது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 47 கோடியே எண்பது லட்சம் கிலோ குறைவு.

ஆக, இயற்கைச் சூழல் மாறுபாடுகளின் விளைவாக இவ்வாண்டு வெங்காய உற்பத்தி கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. வணிகர்கள் அதை நன்கு பயன்படுத்திக்கொண்டார்கள்.

இந்நிலையில் அரசு நிறுவனங்கள் உழவர்களிடம் இருந்து போதுமான அளவு வெங்காயத்தை வாங்கி இருப்பில் வைத்திருந்தால் இந்தச் சிக்கலைத் தவிர்த்திருக்கலாம். அப்படி இருப்பு வைப்பதற்குச் சுமார் 100 முதல் 200 கோடி ரூபாய் தான் செலவாகியிருக்கும். ஆனால், இந்திய தேசியக் கூட்டுறவுச் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மற்றும் சிறு உழவர்கள் வேளாண்-தொழில் கூட்டிணைவு ஆகிய இரு நிறுவனங்களும் மொத்தம் 84 லட்சம் கிலோ வெங்காயத்தை மட்டும் உழவர்களிடம் இருந்து கிலோ 19-20 ரூபாய் விலையில் ஏப்ரல் மாதம் நேரடிக் கொள்முதல் செய்தனர். இதற்கு அந்நிறுவனங்கள் அரசாங்கத்திடம் இருந்து முறையே 7.94 கோடி மற்றும் 8.75 கோடி ரூபாய் வட்டியில்லாத முன்பணம் பெற்றன.

2014-ஆம் ஆண்டு வெங்காய உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்தது. ஆனால், அதைச் சேமிப்பதற்குத் தேவையான வசதிகள் இல்லாமையால் மகாராட்டிரத்தில் பல உழவர்கள் தம் உற்பத்தியில் பெரும்பங்கினை இழக்க நேரிட்டது. அதன் விளைவாக நுகர்வோருக்கும் விலைகள் கூடிவிட்டன. மேலும், வெங்காயத்துக்குக் குறைந்தபட்ச விலை எதையும் அரசுகள் செயல்படுத்துவதில்லை. சேமிப்புக் கிடங்கு வசதிகள் முறையாக இல்லாததுதான் இதற்கும் காரணம். மொத்தம் 150 முதல் 200 கோடி கிலோ வெங்காயத்தைச் சேமித்து வைப்பதற்குப் போதுமான கிடங்கு வசதி தேவைப்படுகிறது. ஆனால் அதில் மூன்றில் ஒரு பங்கு (இட வசதி) கூட இப்போது இல்லை. அரசுகளும் இது குறித்து அக்கறை செலுத்துவதில்லை. அவசரத்திற்கு இறக்குமதி செய்து சமாளிக்கின்றன.

சிறு குறு உழவர்களுக்குச் சந்தை நிலவரம் குறித்த தகவல்கள் சரியாகக் கிடைப்பதில்லை. மேலும், அவர்கள் நாட்டிலுள்ள 7,200 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் அரசு உரிமம் பெற்ற தரகு முகவர்களிடம் தம் வெங்காயத்தை விற்க முடிவதில்லை. அப்படி விற்க முடிந்தால் ஓரளவு நல்ல விலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேளாண் உற்பத்திச் சந்தைப்படுத்தல் குழுச் சட்டம் இதற்கு வழி செய்கிறது. ஆனால், இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த வெங்காயத்தில் 97 விழுக்காடு மொத்தம் ஐம்பது பெரிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மட்டும் சந்தைப்படுத்தப்படுகிறது! இந்தக் காரணங்களால் சிறு குறு உழவர்களுக்குப் பேரம் பேசும் திறன் கிடைப்பதில்லை; பெருவணிகர்கள் தரும் விலைக்கு விற்றுவிட்டுச் செல்லவேண்டியுள்ளது.

இறுதியாக, நுகர்வோரைப் பொறுத்தவரை சில்லறை வணிகர்களும் பிற அங்காடிகளும் இன்ன விலைக்குத்தான் விற்கவேண்டும் என்பதை முடிவு செய்து செயல்படுத்தும் சட்டம் எதுவுமில்லை. எனவே, சிறு குறு உழவர்களும் நுகர்வோரும் கண்ணீர் சிந்துவதற்குக் காரணமாக இருக்கும் வெங்காயம் பெரு வணிகர்களுக்கு ஆனந்தக் கண்ணீர் வரவழைக்கிறது!

அருஞ்சொற்பொருள், அயல்மொழிப் பெயர்ச்சொற்கள்

இந்திய தேசியக் கூட்டுறவுச் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு national agricultural cooperative marketing federation of india limited (nafed)

கொள்கைத்திட்டக் குழு ('நிதி ஆயோக்') national institution for transforming india (niti) aayog

சிறு உழவர்கள் வேளாண்-தொழில் கூட்டிணைவு) small farmers agri-business consortium

விழுக்காடு percentage

வேளாண் உற்பத்திச் சந்தைப்படுத்தல் குழுச் சட்டம் agricultural produce marketing committee act

மேற்கோள்கள்

1. http://www.business-standard.com/article/economy-policy/how-traders-may-have-pocketed-rs-8000-cr-during-onion-crisis-115100700060_1.html

2. http://www.moneycontrol.com/news/current-affairs/is-indias-onion-crisismanufactured-problem_3463181.html

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org