தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

குமரப்பாவிடம் கேட்போம் - பயணி

தற்போது வேளாண் பொருட்களை அரசு கொள்முதல் செய்வது [உணவுப் பற்றக்குறை] நிலைமையை மிகவும் மோசமாக்கி உள்ளது. பணப் பொருளாதாரம் வலுத்த‌வர்கள், எளியோரைச் சுரண்ட மிகவும் இசைவாக இருக்கிறது. அது நற்கொள்கைகளை மறைத்து வாணிபத்தையும், வியாபாரத்தையும் திசை திருப்புகிறது. பணம் கொடுத்துக் கொள்முதல் செய்வதனால் உழவன் தன் நிலத்தைத் தவறான பயன்பாட்டிற்குச் செலுத்த நேரிடும். விலை கொடுத்து அரசு வேளாண் பொருட்களைக் கொள்முதல் செய்து கொள்வதன் விளைவாக, உழவன் குமூகத்திற்கு விரோதமான பொருட்களைக் கூட விளைக்கக் கூடும் [எடுத்துக்காட்டாகப் புகையிலை]. குமுகத்தின் மேல்தட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்படும் ஆலைப் பொருட்களுக்காக உழவர்கள் கச்சாப் பொருட்களை விளைவிக்கிறார்கள்; இதனால் பாமர மக்களுக்குக் கிட்ட வேண்டிய அடிப்படைத் தேவைகள் கிட்டாமல் போகின்றன. பூமித் தாயின் கடமை தன் குழந்தைகளுக்கு உணவு அளிப்பதுதான்; அவ்வாறில்லாமல் நிலத்தைப் பணம் ஈட்டப் பயன்படுத்துவது நிலத்தைக் கற்பழிப்பதற்கு ஒப்பாகும்.

எல்லா இடங்களிலும் நம் முயற்சியானது, நாட்டிற்கு உணவளிக்கும் புனிதமான பொறுப்பு தங்களுக்கு உள்ளது என்று உழவர்களுக்கு முழுமையாய் உணர்த்த வேண்டும். இப்போது, காசுக்கு விளைபொருட்களை விற்கும் ஆசையினால், உழவர்கள் நிலத்தைச் சூறையாடுகிறார்கள். இயந்திர உற்பத்தியில் தொடங்கிய சுரண்டல் இப்போது வேளாண் உற்பத்தியிலும் பரவுகிறது - இது ஒரு தற்கொலைக் கொள்கை என்பதை உணரவேண்டும். உழவர்கள் ஒன்று கூடித் தங்கள் அண்மைத் தேவைகளின் உற்பத்திக்கு நிலத்தைப் பயன்படுத்த வேண்டும்.

களஞ்சியமாக இருந்த விளைநிலங்கள் இப்போது ஒரு முதலீட்டுக் கருவியாக மாறிவிட்டன. இந்நிலை மாற்றத்தால் நாட்டிற்கு உணவு உற்பத்தி செய்யும் மிக இன்றியமையாத பணியின் பல்வேறு கூறுகள் மிகவும் சீர்குலைந்து விட்டன‌. நிலத்தை மேம்படுத்துவதை அலட்சியப் படுத்தி விட்டுத் தன் முதலீட்டிற்கு மிக அதிக வருவாயை நிலச்சுவான்கள் எதிர்பார்க்கின்றனர். உழுபவனோ தன் வருட உற்பத்தியையும், வருவாயையும் மட்டுமே எண்ணி நிலவளத்தைப் பாதுகாப்பதோ, மேம்படுத்தவோ துளியும் அக்கறையின்றி இருக்கிறான். அரசோ, நிலத்தில் இருந்து எவ்வளவு வருவாயை உறிஞ்சி எடுக்கலாம் என்பதிலேயே குறியாய் இருக்கிறது. இதன் விளைவுகளை தற்போதுள்ள உணவுப் பற்றாக்குறையில் காணலாம். இந்நிலையைச் சீர் செய்ய எந்தக் குறுக்கு வழியும் இல்லை. நாம் நிலத்தை நாட்டின் உணவூட்டியான‌ அதன் தூய்மையான, புனிதமான நிலைக்கு மீட்க வேண்டும்; இதற்கு எல்லாத் திட்டங்களும் ஒத்துழைக்க வேண்டும் வெற்றாய் உணவுத் தானியங்களை இறக்குமதி செய்வது ஒரு தீர்வே அல்ல‌

[தற்போது உணவு மிக அதிகமாக விளையும் சூழலிலும், இக்கருத்துக்கள் பெரும் அளவில் பொருந்துகின்றன. பணப்பயிர்கள் என்ற பெயரில், கரும்பு, மஞ்சள் போன்ற நீர் அதிகம் குடிக்கும் பயிர்கள் பெரும் பரப்பில் விளைக்கப் படுகின்றன. இதனை நெறிப்படுத்தாமல் அரசும், அறிவியலாளர்களும் பணப்பயிர்களையும், உணவு தானியங்களில் உயர் விளைச்சல் என்னும் ஒவ்வாத தொழில்நுட்பங்களையும் புகுத்துகின்றனர்.இன்று உலகமே கேவலமாக நம்மைப் பார்க்கும் உழவர் தற்கொலைகளுக்கு இப்பணப்பயிர்களும், வேளாண் தொழில்நுட்பங்களும் நேரடிக் காரணிகள். பணப்பயிர்களைத் “தற்கொலைக் கொள்கை” என்று அன்றே எச்சரித்த குமரப்பாவின் கருத்துக்களை இனியேனும் நாம் கடைப்பிடிக்க முயல வேண்டும்.]

கிராம் உத்யோக் பத்திரிக்கை ஜுலை 1951

தமிழில் பயணி

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org