தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தோரோ பக்கம் - சாட்சி

என்னைப் பொருத்தவரை அஞ்சல் அலுவலகம் இல்லாமலே என்னால் எளிதாக வாழ இயலும். அதன் மூலம் மிகச் சில முக்கியத் தகவல்களே பரிமாறப்பட்டுள்ளன என்பது என் எண்ணம். உண்மையைச் சொல்வதானால், என் வாழ்வில் அஞ்சலுக்குச் செலவிடும் தபால்தலையின் விலைக்கு அருகதையுள்ள கடிதங்கள் ஒன்றோ, இரண்டோ மட்டுமே இதுவரை பெற்றுள்ளேன். செய்தி என்று கூறப்படும் எல்லாமே ஒரு அறிஞனுக்கு வெறும் வம்புதான்; அதை எழுதி, வெளியிட்டுப் படிப்போர் எல்லாம் தேநீர்க் கோப்பையுடன் ஊர்வம்பு அடிக்கும் மூதாட்டிகள்தான். எனினும் இந்த வம்பிற்கு ஆசைப்படுபவரோ மிகப் பலர். சில நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டுச் செய்தியைத் தெரிந்து கொள்ளும் ஆவ‌லில் எல்லோரும் முட்டி மோதியதில் அஞ்சல் அலுவலகத்தின் பல கண்ணாடி சன்னல்கள் உடைந்ததாகக் கேள்விப்பட்டேன்!

என்ன புதிய செய்தி (news) என்று ஆலாய்ப் பறக்கிறோம் - ஆனால் புதியதை விடவும் பழமையே ஆகாததைத் தெரிந்து கொள்வது முக்கியம் அல்லவா! சீனாவில் வேய் என்னும் மாநிலத்தின் முக்கியஸ்தர் ஒருவர் அறிஞர் கோங்-ட்சு விடம் செய்திகளைத் தெரிந்து கொண்டு வரும்படித் தன் சேவகனை அனுப்பினார். கோங்-ட்சு அத்தூதனைத் தன்னருகில் அமர்த்தி இவ்வாறு கேட்டார்: “உன் எசமானர் என்ன செய்து கொண்டிருக்கிறார்”. அதற்கு அச்சேவகன் மிகுந்த மரியாதையுடன் “என் எசமானர் தன் குறைகளின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார், ஆனால் அது அவரால் இயலவில்லை” என்றான். அவன் சென்றதும் கோங்-ட்சு தன‌க்குள் சொல்லிக் கொண்டார் ” என்ன சிறப்பான தூதுவன்! என்ன சிறப்பான தூதுவன்! ” .

நடிப்பும் கற்பனைகளுமே பெரும் உண்மைகளாக மதிக்கப் படுகின்றன, ஆனால் உண்மையோ ஆச்சரியம்போல் தோன்றுகிறது. மனிதர்கள் திடமுடன் உண்மைகளை மட்டுமே கைக்கொண்டு, எவ்விதக் கற்பனைகளும் தங்களைப் பீடிக்க விடாமல் இருந்தால் வாழ்வு என்பது ஒரு தேவதைக் கதைபோல் இனிமையானதாக இருக்கும். உண்மைகளை மட்டுமே நாம் மதித்தால் தெருவில் இசையும், கவிதையும் பெருக்கெடுத்து ஓடும். நாம் அவசரமின்றியும், அறிவுடனும் இருந்தால், மிகப்பெரிதும், சிறப்பானதும் ஆனவை மட்டுமே நிரந்தரமான தன்மை உள்ளவை என்றும், அற்ப பயங்களும் அற்ப சுகங்களும் நிஜத்தின் ஒரு நிழலே என்றும் புலப்படும். இவ்வறிவு எப்போதுமே புத்துணர்ச்சி ஊட்டுவதாகவும் புனிதமானதாகவும் இருக்கிறது.

கண்ணை மூடித் தூங்குவதால், வெளிமயக்குகளுக்கு மயங்க இசைவதால், மனிதர்கள் தங்கள் அன்றாட வாழ்வையும் அதன் பழக்கங்களையும் உருவாக்கி உறுதிப்படுத்துகின்றனர் - ஆனால் இத்தினசரி வாழ்வோ முற்றிலும் கற்பனையால் ஆன கடைகாற்களின்மேல் கட்டப்பட்டிருக்கிறது.வாழ்க்கை(அம்மா அப்பா) விளையாட்டு விளையாடும் குழந்தைகள் பெரியவரகளை விட அதன் உண்மை விதிகளையும், உறவுகளையும் தெளிவாக அறிகிறார்கள். வாழ்வை நன்றாக வாழாத மாந்தர்கள் தாங்கள் அனுபவத்தால் அறிவடைந்து விட்டதாக எண்ணுகின்றனர் - ஆனால் அனுபவம் என்று அவர்கள் எண்ணுவது தோல்வியையே!

வாழ்வோ சாவோ நாம் உண்மையை மட்டுமே விரும்புகிறோம். உண்மையாய்ச் சாகிறோம் என்றால் விரல் நுனிகளில் சில்லிப்பையும் தொண்டைக் குழியில் செருமலையும் கேட்கலாம்; இல்லை உயிருடன் இருந்தால் எழுந்து நம் வேலையைப் பார்ப்போம்!

- வால்டன் (Walden or Life in the Woods) நூலில் இருந்து தமிழாக்கம் சாட்சி

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org