தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தேடலின் தெளிவு - சாட்சி

பல மாதங்களுக்கு முன்னர் தற்சார்பு வாழ்வியலைப் பற்றியும், அது எவ்வாறு ஒரு குமுக சேவை என்றும், இவ்வாழ்முறையையே எல்லா மதங்களும் தத்தம் மொழிகளில்/வழிகளில் பரிந்துரை செய்கின்றன என்றும் எழுதியிருந்தோம். இக்கட்டுரையில் இத்தேடல் என்பது எதனால் உருவாகிறது, அதன் உந்துதல் என்ன, அதைப் பின்பற்றுவதால் என்ன விளைவுகள் என்று ஆராய முற்படலாம். இதில் பல வடமொழிச் சொற்களும், சொல்லாடல்களும், சிந்தனைகளும் பயன்படுத்தப் பட்டுள்ளன - இதனால் நாம் ஏதோ மதப் பரப்புரைமை செய்கிறோம் என்று எண்ணிவிடல் ஆகாது. தற்சார்பு வாழ்வியல் என்பது அறிவின் தேடல்; அறிவுக்கு ஆத்திகம், நாத்திகம் இரண்டுமே மூட நம்பிக்கைகள்தான். மெய்ப்பொருள் காண்பதே அறிவு - சார்பற்ற, பிரிவினைகளற்ற உண்மையான தேடல் மொழி, மதம் மற்றும் பிற விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது. பல்லாயிரம் ஆண்டுகளாக இத்தேடலில் ஈடுபட்ட அறிஞர்கள் வடமொழியில் பல விடயங்களை அழகாகக் கூறியிருப்பதால் அதை அப்படியே கையாள்வது நமக்கு எளிது அவ்வளவே!

யோக வாசிட்டம் என்ற நூலில் ” செயல் என்பது எப்போதுமே மனதால்தான் செய்யப் படுகிறது, உடலால் அல்ல. மகளை அணைக்கும் அதே கைதான் மனைவியையும் அணைக்கிறது” என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே அறம் என்பது சிந்தையைத் தூய்மையாக்குவதுதான் என்று அறியலாம். நம் வள்ளுவர் இதைத்தான் மிக அழகாக

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற‌

என்கிறார்.

மாசுடன் எதைச் செய்தாலும் அது வெற்று ஆராவாரத் தன்மையுடையது. மாசற்று இருந்தாலே அதில் எல்லா அறங்களும் அடங்கும். சரி எவ்வாறு மனத்தைத் தூய்மை செய்வது? அதற்கு முதலில் நம் மனத்தின் தன்மையைச் சற்று அறியவேண்டும். உறக்கம், கனவு, விழிப்பு என்ற மூன்று நிலைகளில் நாம் கருத வேண்டியது விழிப்பு நிலையைப் பற்றி மட்டுமே (மற்றவற்றைப் பற்றி நாம் விழிக்கும்போது அறியோம்!). விழித்திருக்கும் போது consciousness என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சித்தம் ஆட்சி செய்கிறது. இச்சித்தத்தைத் தெளிவாக்குவதே தூய்மைக்கு வழி. இதைத்தான் நம் முண்டாசுக் கவிஞன் பாரதி

எத்தனைக் கோடி படை கொண்டு வந்தாலும் மாயையே நீ
சித்தம் தெளிவெனும் தீயின்முன் நிற்பாயோ மாயையே

என்கிறான்.

இச்சித்தம் என்பது பல்வேறு சமயங்களில் பல்வேறு விதமாக இருக்கிறது. மிகுந்த சுயநலமாகவும், கெடு எண்ணங்களுடனும் இருப்பதும் இதே சித்தம்தான்; மிகவும் பெருந்தன்மையோடு கொடை, வள்ளன்மை, தியாகம் என்று இருப்பதும் இதே சித்தம்தான். இதை வடமொழியிலே பஞ்ச கோச உடல் என்று அழைக்கின்றனர். கோசம் என்றால் உறை என்று பொருள். உடல் என்பது ஐந்து உறைகளைக் கொண்டது: அன்ன மய கோசம், பிராண மய கோசம், மனோ மய கோசம், விஞ்ஞான மய கோசம், ஆனந்த மய கோசம் என்பவை இவை. உண்மையில் இது சித்தத்தின் 5 நிலைகளைக் குறிக்கிறது (levels of consciousness). இவை ஐந்திலும் சித்தம் மாறி மாறி உலவிக்கொண்டே இருக்கும். அவ்வக் கோசத்தில் இருக்கும்போது அதற்கேற்றாற்போல் சிந்தனை, சொல், செயல் இருக்கும். இவற்றைப் பற்றிச் சற்றுத் தெரிந்து கொள்வோம்.

அன்னமயத்தில் இருக்கும்போது உடல் ரீதியான நுகர்ச்சியும், தேடலும் ஓங்கி இருக்கும். உணவு, கலவி, போதைத் தேடல் போன்றவை ஓங்கி இருக்கும். இக்கோசத்தில் இருக்கும் சித்தம் எப்போதும் நிறைவற்றே இருக்கும்; இதன் நுகர்ச்சிப் பசி தாற்காலிகமாகத் தீர்ந்தவுடன் அடுத்தது என்ன என்று தேடத் துடிக்கும். பண்டைய ரோமானிய அரசர்களும் பிரபுக்களும் விருந்து என்று கண்டபடி தின்று விட்டுப் பின்னர் வாந்தி எடுக்க மருந்து சாப்பிட்டு அதன் பின்னர் மீண்டும் உண்பார்களாம்! உலகிலேயே மிக அதிகமாகப் பார்க்கப் படும் தொலைக்காட்சி நிகழ்ச்சி சமையல் குறிப்புத்தான் என்று விளம்பரத் துறையில் உள்ள ஒரு நண்பர் கூறினார். பிரஞ்சு எழுத்தாளன் ஆல்பர்ட் காமு (Albert Camus) அமெரிக்காவைப் பார்த்து விட்டு, “நீங்கள் எப்போதும் உணவையும் கலவியையும் (food and fornication) மட்டுமே சிந்த்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறினானாம். இப்போது உலகம் முழுவதும் எல்லா மக்களும் இக்கோசத்தில் இருக்கவே முயல்கின்றனர். அளவற்ற போதைப் பொருட்களின் விற்பனையும், நுகர்ச்சியும், பரவலான பாலுணர்வைப் பரப்பும் ஊடகங்களும் எல்லாம் இதற்குச் சான்று.

அடுத்த கோசமான பிராணமயம் என்பது விறுவிறுப்பான ஒரு அன்னமயம் என்று ஒருவாறு புரிந்து கொள்ளலாம். உடற்பயிற்சி, விளையாடுதல், பாதுகாப்பான நலமான உணவு, சுறுசுறுப்பாகச் செயல்களில் ஈடுபடுவது போன்றவை இக்கோசத்தின் குறியீடுகள்.இதில் சித்தம் அன்னமயத்தை விடச்சற்று லேசாக இருக்கும். பிராணன் என்றால் உயிர் என்று பொருள்.

மனோ மயம் என்பது சதா சிந்தனைகளில் ஈடுபடுவது. இதில்தான் பெரும்பாலான மானுடம் உழல்கிறது. “சிந்தைத் துயர் என்று ஒரு பாவி சினந்து சினந்து போர் முயங்க ” என்று தாயுமானவர் இந்நிலையை ஒரு போருடன் ஒப்பிடுகிறார். பாரதியும் “என்னைக் கவலைகள் தின்னத் தகாது என்று நின்னைச் சரண் அடைந்தேன்” என்கிறான். மனோமயத்தில் உள்ள சித்தம் பிறரைப் பற்றிப் பேசுவது, வம்பு, நாடகம், சினிமா பார்த்தல், கவலைப் படுவது, அச்சம், ஆணவம், பிறர் நம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் போன்ற வட்டங்களில் சுழன்று கொண்டு இருக்கும். மானுடத்தில் பெரும்பாலானோரின் சித்த வளர்ச்சி மனோமயத்தைத் தாண்டுவதே இல்லை. இதைத்தான் மாயா ஏஞ்சலோ என்னும் எழுத்தாளர் “பெரும்பாலான மக்கள் வளர்வதே இல்லை, வயது மட்டுமே மூக்கிறார்கள்” என்றார். (Most people do not grow up, they just age). இந்நிலையின் குறியீடுகள் மான, அவமானம், கவுரவம்,பொறாமை, கவலை, சினம், ஆசை, அச்சம், பிரிவினைச் சிந்தைகள் (நம் ஜாதி, நம் மதம், நம் மொழி போன்று) மற்றும் இவை எல்லாவற்றையும் தாண்டி வெகு விரைவில் சலிப்படையும் தன்மை (boredom) ஆகியவை.

நான்காவதான விஞ்ஞான மயகோசம் என்பது சித்தம் புத்திக்கூர்மையில் திளைத்திருப்பது. Intellect என்று இதை ஆங்கிலத்திலே அழைப்பார்கள். இதில் ஆழ்ந்த அறிவியல் தேடலும், பெரும்பாலும் தன்னை மறந்த நிலையும் (அன்னமயம், மனோமயம் போன்ற கோசங்களை அறவே கடந்த சித்தம்), உடல்ரீதியான தேவைகள் மிகவும் குறைந்தும் இருக்கும்.ஆனால் ஆணவத்தோடு கூடிய புத்திக்கூர்மை சித்தத்தைத் தூய்மைப்படுத்தாது. தன்னை மறந்த, உள்நோக்கம‌ற்ற விஞ்ஞான தேடலோ, அறிவுத் தேடலோ சித்தத்தை மிகவும் தூய்மைப் படுத்தி ஒரு உயர்நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும் - ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், ஜகதீச சந்திர போஸ் போன்றோர் இதற்கு எடுத்துக் காட்டு. கிராமத்தில் சம்பளத்தைப் பற்றிக் கவலைப்படாத தச்சர்,கொல்லர், கொத்தனார், தையற்கலைஞர் போன்றோர் வேலை செய்யும் போது இந்தக் கோசத்திலேயே இருப்பார்கள்.

ஐந்தாவதான ஆனந்த மயகோசம் என்பது சித்தம் மிகவும் லேசாகி, மிகக் குறைந்த சிந்தனைகளுடன் ஏதோ ஒன்றில் லயித்து இருப்பது - நல்ல இசை, கவிதை, இயற்கை ரசனை, குழந்தைகளுடன் விளையாடுவது போன்ற நேரங்களில் நம் மனம் இக்கோசத்தில் இருக்கும். உண்மையான இறை பக்தியிலும் சித்தம் ஆனந்த மயமாக இருக்கும். சுயநலம் அற்ற சேவை, தியாகம், அன்பு, கொடை போன்றவை இக்கோசத்தின் குறியீடுகள். ஒவ்வொரு கோசத்திலும் தனக்கு முற்பட்ட கோசத்தை விட சித்தம் தூய்மையாகவும், லேசாகவும் இருக்கிறது. துயருறும்போது 'மனசு கனத்திருக்கு' என்ற சொல்லாடலில் இருந்து இதை நாம் அறியலாம். உற்றுப் பார்த்தால் நாம் வெற்றி என்று பொதுவாய்த் தேடும் அனைத்துமே முதல் மூன்று நிலைகளுக்கு மட்டுமே உணவ‌ளிக்கக் கூடியவை. நான்காம் மற்றும் ஐந்தாம் நிலைகளின் தேவையை நிறைவு செய்யப் பணத்தாலோ, புகழாலோ, ஆளுமையாலோ, பிற மனிதர்களாலோ இயலாது. இதை நாமே நம் சுயதேடல்கள் மூலமே நிறைவு செய்ய இயலும். எனவேதான் மனோமய கோசத்தைக் கடந்து சித்தம் வளரும் போது உலக விடயங்கள் பொருளற்றுப் போகின்றன. நம் சித்தத்தை உயர்த்துவதுதான் தற்சார்பு வாழ்வியலின் அடிப்படைக் கோட்பாடு. ஒவ்வொரு மனிதனும் உள்வளர்ச்சி அடையும் பொழுது அவன் சித்தம் வளர்ச்சியை விரும்புகிறது. தன் சித்தம் தற்போது உள்ள நிலை அவனுக்கு நிறைவை அளிக்காததால் ஒரு உந்துதலில் தேடுகிறான்.

பெரும் நிறுவனங்களில் லட்சங்களில் வாங்கும் சம்பளத்தைத் துறந்து, பள்ளி ஆசிரியராகவும், சிறு விவசாயி ஆகவும், தன்னார்வலர்களாகவும் ஆகும் பலரும் இந்தச் சித்த மேம்படுத்துதல் என்னும் உந்துதலினால்தான் இயக்கப்படுகிறார்கள். அவர்களைக் கிறுக்கர்கள் என்று புறந்தள்ளாமல், அவர்களின் சித்த வளர்ச்சியில் நாம் பங்கு கொள்ளாவிடினும் புரிந்து கொள்ளவேனும் வேண்டும். பிற மனிதர்களுடன் நாம் அன்றாடம் வரவு, செலவு, பேச்சு, செயல் போன்ற போக்குவரத்துக்களைக் கொண்டிருந்தால் சித்தம் சதா மனோமய கோசத்திலேயே இருக்கும். உட்தேடல் தீவிரமாகும்போது இவை சலிப்பூட்டும் - மனம் தனிமையையும், அமைதியையும், உயர் சிந்தனைகளையும் தேடும். இதனால்தான் மௌனமாய் இருப்பது, ஆளில்லா இடத்துக்குப் பெயர்வது போன்ற செயல்களைத் துறவிகள் தேடுகின்றனர். பிற மனிதர்களைக் கூடிய வரை சாராமல் நம் தேவைகளை நாமே நிறைவு செய்ய முற்படுவது தற்சார்பு வாழ்வியல். உணவு வாழ்வின் அடிப்படைத் தேவையாதலால் பெரும்பாலான தற்சார்பு விரும்பிகள், சிறு/குறு விவசாயிகளாக வடிவெடுக்கிறார்கள். எளிமை செய், எளிமை செய் என்று தோரோ சொன்னதும், செய்ததும் இதனால்தான்.

தற்சார்பு என்பது ஒரு கோட்பாடு மட்டும் அல்ல - அது ஒரு வாழ்முறை. வாழ்வே தவம் என்பதன் பொருள் இதுதான். உடல், மன‌ ரீதியான தேவைகளை எளிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் நாம் நம் வாழ்பளுவைக் குறைத்துக் கொள்கிறோம். “என்னைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள்; என் நுகத்தடி எளியது, என் பாரம் லேசானது ” என்று ஏசுநாதர் கூறியது இதுதான். தற்சார்பின் மூலம் நாம் நம் சித்தத்தை லேசாக்கிக் கொள்கிறோம். இதற்குக் கடவுளோ, மதமோ, பெரும் பணமோ, அதிகப் படிப்போ, பிற மனிதர்களின் அங்கீகாரமோ எதுவுமே தேவையில்லை. நம்மை நாமே ஆராய்ந்து கொண்டு நம் சித்தத்தை உயர்த்திக் கொண்டிருந்தால் போதும். தோரோ சொன்னது போல ” மனிதன் தன் முயற்சியால் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள ஐயமற இயலும் என்ற உண்மையை விட எனக்குப் புத்துணர்ச்சி அளிப்பது எதுவுமே இல்லை”.

ஓயாத உள்விழிப்பே உன்னை விடுவிக்கும்
மாயா வினைப்பெருக்கே மற்றெல்லாம் - காயமிது
கொள்நோய் மருந்து கொளப்போமே, கற்பிதமாம்
தன்நோய்க்குத் தானே மருந்து

தவிர்க்க இயலாத காரணங்களினால் வழிப்போக்கனின் "கற்பதும் கசடும்" தொடர் இவ்விதழில் இடம்பெற இயலவில்லை. அடுத்த இதழில் தொடரும். - ஆசிரியர்

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org