தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

ஓநாய் அழுகைகள் - பரிதி


[வேதியுர உற்பத்தியாளர்களும் , அவர்களால் நிதியுதவி செய்யப்படும் "தொண்டு" நிறுவனங்களும் சமீப காலமாக புவி வெப்பமயமாதலைப் பற்றியும், சூழல் பாதுகாப்பைப் பற்றியும் பெரும் அக்கறை கொண்டவை போல் நாடகம் நடத்திக் கொண்டிருக்கின்றன. இது ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதைதான். இவற்றைக் கூர்மையாய்க் கண்காணித்துப் புறந்தள்ள வேண்டியது நம் கடமை.] ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய தொழிற் புரட்சியின் உச்சகட்ட விளைவாகக் கடந்த சுமார் அறுபது ஆண்டுகளில் நம் புவியின் இயற்கைச் சூழல் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவுகள் ஆபத்து மிக்கன என அறிவியலாளர்கள் அண்மைக் காலத்தில் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துவருகின்றார்கள். இது குறித்து விவாதித்து முடிவெடுக்கும் நோக்கில் வரும் டிசம்பர் மாதம் பாரிசு நகரில் உலக அரசுகளின் கூட்டம் நடக்கவுள்ளது.

வசதி படைத்தவர்களுடைய மிதமிஞ்சிய நுகர்வு சூழல் கேட்டிற்கு முதன்மையான காரணங்களில் ஒன்று. சூழல் கேட்டில் வேதி வேளாண்மைக்கும் பெரும்பங்கு உள்ளது. (முதலாளித்துவம் எனப்படுகிற) முதலாண்மைப் பொருளாதார முறைமையே இவற்றின் அடிநாதமாக உள்ளது. இந்தப் பொருளாதார முறையின் மிக மோசமான அடையாளங்களாக விரல் விட்டு எண்ணக்கூடிய மிகப் பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் திகழ்கின்றன. பரந்துபட்ட மக்களுடைய உரிமைகளையும் புவியின் சூழலையும் காப்பதற்கு மக்கள் நலச் சிந்தனையாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்துவருகின்றனர். ஆனால் அவர்களுடைய ஒவ்வொரு முயற்சியையும் செயல் திட்டத்தையும் நீர்த்துப் போகச் செய்வது அல்லது குழப்பம் விளைவித்துத் திசை திருப்புவது பன்னாட்டுப் பெரு நிறுவனங்களுடைய தொடர் செயலுத்திகளில் ஒன்று. .

அவற்றில் ஒன்றுதான் "சூழல் மாற்றத்துக்கேற்ற வேளாண்மைக்கான உலகளாவிய சேர்க்கை" எனும் புது அமைப்பு. சூ.ழல் மாற்றங்கள் தொடர்பான உச்சி மாநாட்டை ஒன்றிய நாடுகளவை கடந்த ஆண்டு நியூ யார்க் நகரில் கூட்டிற்று. அப்போது தான் மேற்கண்ட சேர்க்கை அறிவிக்கப்பட்டது.. உலகளவில் வேதியுர உற்பத்தியைத் தம் கட்டுப்பாட்டில் வைத்துள்ள பெரு நிறுவனங்களின் ஏழாண்டுக்கால முயற்சியின் விளைவாக இந்த அமைப்பு தொடங்கப்பெற்றது. வேளாண்மை, சூழல் மாற்றம் ஆகியன துறைகளில் முறையான செயல்பாடுகளைக் குழப்பி முடக்குவதற்கெனவே இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. .

சூழல் மாசு என்றாலே வழக்கமாகக் கன்னெய நிறுவனங்கள் தான் நம் மனத்தில் தோன்றும். ஆனால் வேதியுரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் இயற்கை எரிவளியைப் பயன்படுத்துகின்றன. குறிப்பாக, வெடிய உர உற்பத்திக்கு ஆற்றல் நிறையத் தேவைப்படுகிறது. உலக ஆற்றல் பயன்பாட்டில் 1 – 2 விழுக்காடு வேதியுர உற்பத்திக்குச் செலவாகிறது. அதற்கேற்ப, ஆண்டுதோறும் உலகில் வெளியிடப்படும் பசுமைக் குடில் வளிகளின் மொத்த அளவில் 3-5 விழுக்காடு வெடிய உரங்களின் பயன்பாட்டின் விளைவாக வெளியாகிறது. அடுத்த பத்தாண்டுகளில் வெடிய உர உற்பத்தி ஆண்டுதோறும் நான்கு விழுக்காடு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வேதியுரங்களை உற்பத்தி செய்யும்போது நேரிடும் சூழல் மாசைக் காட்டிலும் அவற்றைப் பயன்படுத்துகையில் மிக அதிக அளவில் சூழல் மாசுபடுகிறது. நூறு கிலோ வெடிய உரத்தை மண்ணில் இடுகையில் 1 கிலோ வெடியக உயிரகை வளிமண்டலத்தில் கலக்கிறது. இது கரியீருயிரகையைக் காட்டிலும் 300 மடங்கு மோசமானது. கதிர்வீச்சுக்களில் இருந்து உயிர்களைக் காக்கும் மேலடுக்கு ஓசோனை அழிப்பதில் மிக அதிகப் பங்கு வெடியக உயிரகைக்கு உள்ளது. கடந்த முந்நூறு ஆண்டுகளில் வளிமண்டலத்தில் சேர்ந்த வெடியக உயிரகையில் 17 விழுக்காடு வேதியுரங்களால் வெளியிடப்பட்டது என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். பசுமைப் புரட்சிக்கு இதில் பெரும்பங்கு உள்ளது.

வேதியுரங்களைப் பயன்படுத்துகையில் மண்ணில் இயற்கையாகவே இருக்கும் வெடியமும் கரிமச் சத்தும் அழிக்கப்படுகின்றன. அதனால் அவை பயிர்களுக்குக் கிடைக்காமல் வீணாகின்றன. எனவே, உழவர்கள் மேன்மேலும் அதிக அளவில் வேதியுரங்களைப் பயன்படுத்தவேண்டியுள்ளது. கடந்த நாற்பதாண்டுகளில் வெடிய உரங்களின் செயல்திறன் சுமார் எழுபது விழுக்காடு குறைந்துவிட்டது. அவற்றின் பயன்பாடு எக்ட்டேருக்கு ஏழு மடங்கு அதிகரித்துவிட்டது.

இந்த ஆண்டு உலகெங்கும் பயன்படுத்தும் வேதியுரங்களால் நேரும் சூழல் மாசுபாடு அமெரிக்காவில் உள்ள சுமார் 22 கோடி மகிழுந்துகளும் சரக்குந்துகளும் உண்டாக்கும் சூழல் மாசுபாட்டைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வேதியுர நிறுவனங்களின் முதன்மையான வேட்டைக்காடாக இப்போது ஆப்ரிக்கா உள்ளது. 'சூழல் மாசுபடுவதைக் குறைக்கவேண்டுமானால் வேளாண்மைக்காகக் காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்கவேண்டும், [தங்களுடைய] வேதியுரங்களையும் வீரிய ஒட்டு ரக விதைகளையும் பயன்படுத்தினால் தான் இதைச் சாதிக்க முடியும்' என்று பல ஆப்ரிக்க அரசுகளை இணங்கவைத்துள்ளன அந்நிறுவனங்கள். ஆப்ரிக்கா வேதியுர

நிறுவனங்களுக்கு மிகப் பெரும் சந்தையாக மட்டுமன்றி அவற்றுக்குத் தேவையான எரிவளி அதிகம் கிடைக்கும் கண்டமாகவும் இருப்பது ஆப்ரிக்க மக்களின் கெட்ட நேரமே! வேதியுரங்கள் சூழல் கேட்டில் பெரும்பங்கு வகிக்கின்றன என்பதும் அவை இல்லாமலே போதுமான அளவு உணவு உற்பத்தி செய்ய இயலும் என்பதும் உர உற்பத்தி நிறுவனங்களுக்குப் பல்லாண்டுகளாகத் தெரிந்ததுதான். ஆனாலும் இவை ஒன்றிய நாடுகளவை, பல நாட்டு அரசுகள், பல தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டுத் தம் நலனுக்கு ஊறு நேராவண்ணம் புதுப்புது அமைப்புகளையும் செயல்திட்டங்களையும் வகுத்துச் செயல்படுகின்றன.

2007-ஆம் ஆண்டு உலக அளவில் உணவுப் பொருள்களின் கடும் விலையேற்றத்தால் (உணவுப் பற்றாக்குறையால் அல்ல) சுமார் நூறு கோடிப் பேர் பசியால் வாடினர். அப்போது பெருநிறுவனங்கள் தம் உரங்களின் விலையை உயர்த்தி அரசுகளையும் உழவர்களையும் மேலும் சுரண்டின. இயற்கை எரிவளியின் விலை உயர்ந்துவிட்டதால் தான் தாங்களும் உரங்களின் விலைகளை அதிகரிக்கவேண்டியிருந்ததாக அப்போது அந்நிறுவனங்கள் கூறின. ஆனால், நார்வே நாட்டைத் தலைமையகமாகக் கொண்ட யாரா, மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மொசேயிக் ஆகிய இரு பெருநிறுவனங்களின் உபரி அந்த ஆண்டு இரண்டு மடங்கு அதிகரித்தது! இந்தத் துறையில் உலக அளவில் செயல்படும் அமைப்புகளில் சிலவற்றின் பெயர்களைக் கீழே தந்துள்ளோம்.. பெருநிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் ஒன்றிய நாடுகளவையின் அமைப்புகள் சிலவும் இந்தப் பட்டியலில் உள்ளன. உலக நாடுகளின் அரசுகள் பலவும் இத்தகைய பெருநிறுவனங்களின் மறைமுகக் கட்டுப்பாட்டில் உள்ளன.

வேதியுர நிறுவனங்களின் உலகளாவிய ஆதிக்கத்தைப் போக்காத வரை வேதியுரங்களை ஒழிப்பதோ இயற்கை வேளாண்மையை உலகம் முழுவதும் பரப்புவதோ இயலாத செயல்கள் என்பதை நாம் உணர்ந்து செயல்படவேண்டும்! அதற்கு முதல் படியாக சூழல் மாற்றத்துக்கேற்ற வேளாண்மைக்கான உலகளாவிய சேர்க்கையை இழுத்து மூடவேண்டும்; டிசம்பரில் பாரிசில் நடக்கவிருக்கும் சூழல் உச்சி மாநாட்டில் வேதியுர நிறுவனங்கள் கலந்துகொள்ளாதிருக்கச் செய்யவேண்டும்.!


African Green Revolution Forum
Alliance for a Green Revolution in Africa,
The Bill and Melinda Gates Foundation
Cargill
Consultative Group for International Agricultural Research
EcoAgriculture
Environmental Defence Fund
Exxon
Food and Agriculture Organization
General Mills
Global Alliance for Climate Smart Agriculture
Global Conference on Agriculture, Food Security, and Climate Change
International Agri-Food Network
International Fertilizer Development Center
Kellog
Monsanto
Mosaic
The Nature Conservancy
PepsiCo
Shell
Solutions from the Land
Sustainable Food Lab
Syngenta
Unilever
US State Department,
The Virtual Fertilizer Research Center
Walmart
World Bank
World Economic Forum
Yara

அருஞ்சொற்பொருள், கலைச்சொற்கள், அயல்மொழிப் பெயர்ச்சொற்கள்
பாரிசு paris
ஓசோன் ozone
நியூ யார்க் new york
சூழல் மாற்றத்துக்கேற்ற வேளாண்மைக்கான உலகளாவிய சேர்க்கை --------------------------------------------the global alliance for climate smart agriculture
கன்னெயம் வெடிய உரம் nitrogen fertilizers
பசுமைக் குடில் வளி greenhouse gases
இயற்கை எரிவளி natural gas
வெடியக உயிரகை nitrous oxide (N2O)
கரியீருயிரகை carbon di-oxide (CO2)
ஒன்றிய நாடுகளவை ('ஐக்கிய நாடுகளவை' என்பதன் தமிழ் வடிவம்) the united nations
நார்வே norway


நன்றி:. The Exxons of Agriculture, Grain (www.grain.org),, Sept. 2015

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org