தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


பஞ்சாப் புகட்டும் பாடம்


ஒவ்வொரு வருடமும் பஞ்சாபில் மானாவாரியாகப் பருத்தி பயிரடப் படுகிறது. மாநிலத்தில் சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் ஆடிப் பட்டத்தில் தென்மேற்குப் ப‌ருவமழையை நம்பி விவசாயிகள் பருத்தி நடுவது வழக்கம். இப்போது பயிரிடப்படும் பருத்தியில் ஏறத்தாழ 95-97 % மன்சான்டோ கும்பனியின் பி.ட்டி. பருத்தியே. ஒரு கிலோ சாதாரண பருத்தி 70 ரூபாய் விலை என்றால், பி.ட்டி பருத்தி 4000 ரூபாய் விலை! இது வானம் பார்த்த பயிராதலால் புழுதி விரைப்பாக நடும் விவசாயிகள், மழை தாமதமானால் மீண்டும் ஒரு முறை விதை வாங்கி விதைக்க வேண்டியிருக்கிறது. எனவே இடுபொருள் செலவு அதிகமாக ஆகி விட்ட சூழலில், இவ்வாண்டு உழவர்களுக்குப் புதியதொரு சிக்கல் உருவாகி உள்ளது. அதுதான் வெள்ளை ஈ.

இவ்வாண்டு மழை பற்றாக் குறையினால் வெள்ளை ஈயின் தாக்கம் மிகவும் அதிகமாகி எண்ணற்ற பயிர்ச்சேதம் விளைவித்துள்ளது. பொருளாதார இழப்பு என்று பார்த்தால் ரூ.4200 கோடியைத் தாண்டும். 120 கோடி ரூபாய்க்கு நச்சுமருந்து மட்டுமெ தெளித்துள்ளார்கள். ஒரு ஏக்கருக்கு ஒரு முறை தெளிக்க 3300 ரூபாய் ஆவதாகக் கூறுகிறார்கள். பல உழவர்கள் 12 முதல் 14 முறை மருந்து தெளித்தும் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.

மரபீனிப் பருத்தியைப் பயிரிட்டால் பூச்சிக்கொல்லிகள் தேவையில்லை என்று விளம்பரப் படுத்திய மகிகோ-மன்சான்டோ நிறுவனம், இப்போது "அது காய்ப் புழுவுக்கு மட்டுமே எதிர்ப்புத் தன்மை கொண்டது, வெள்ளை ஈக்கு உழவர்கள் பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தித் தான் ஆகவேண்டும்" என்று வழுக்குப்பாறையில் இறங்குகிறது. 4200 கோடி நட்டத்திற்கு மாநில அரசு 640 கோடி நிவாரணம் அளிக்க முன்வந்துள்ளது - உழவர்கள் அதைக் கடுமையாகச் சாடி மறுத்து விட்டனர். மன்சான்டோவும் , பூச்சிக்கொல்லி நிறுவனங்களும் கோடிக்கணக்கில் லாபத்தை எண்ணிக் கொண்டிருக்கையில் 15 பருத்தி உழவர்கள் கடன் சுமை தாளாமல் தற்கொலை செய்து கொண்டு விட்டனர்.

எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் மன்சான்டோவிடம் தேர்தல் நிதி பெறுவதால் அவர்களால் உழவர்களுக்கு உதவ இயலாது என்பது தெளிவாகிறது. எது உண்மை என்று தெரிந்தாலும், உதவும் வழி உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிந்தாலும் கைநீட்டிக் காசு வாங்கிப் பதவிக்கு வந்த கட்சிகள் த‌த்தம் முதலாளிகளுக்குச் சேவகம் செய்துதான் ஆக வேண்டும். இது நம் நாட்டில் மட்டுமல்ல - உலகமெங்கும் இதே நிலைதான். 10 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க சனாதிபதித் தேர்தலின் போது மன்சான்டோ வெளிப்படையாகவே "யார் ஆட்சிக்கு வந்தாலும் மரபீனித் தொழில்நுட்பத்தை ஆதரிப்பார்கள்" என்று பிரகடனம் செய்தது. எல்லாப் பெரு நிறுவனங்களும் இதே உத்தியைத்தான் கையாளுகின்றன.

60 ஆண்டுகளுக்கு முன்னர், விவசாயிகள் தற்கொலை என்பது கேள்விப்படாத விடயமாக இருக்கும்போதே, அறிஞர் குமரப்பா, பணப்பயிர் வேளாண்மையை "தற்கொலைக் கொள்கை" (suicidal policy) என்று எச்சரித்தார். இன்று நாம் நேரடியாக அதன் விளைவுகளைக் காண்கிறோம். ஆபகம் என்றால் வடமொழியில் ஆறு என்று பொருள். ஐந்து ஆறுகள் ஒருங்கே ஓடுவதால் "பஞ்சாபகம்" என்ற பெயர் கொண்ட பஞ்சாப் மாநிலம் இந்தியாவிலேயே மிகவும் வளமானது. முன்னர் ப‌சுமைப் புரட்சியில் வேகமாக வளர்ச்சி கண்டு பின்னர் கான்சர் ரயிலுக்குத் தாய‌கம் ஆனது. இன்று மரபீனிப் பயிரிடலிலும் வேகமாக ஈடுபட்டு இப்போது அதன் பலன்களை அனுபவிக்கிறது. பஞ்சாபின் அனுபவங்கள், இயற்கை வேளாண்மையையும், பாரம்பரிய விதைகளையும் கடைப்பிடித்து நம் வேளாண்மையை மீட்டெடுக்க நமக்குப் பாடமாக அமைய வேண்டும். மூடன் தன் பிழையிலும் கல்லான்; அறிவாளியோ பிறன் பிழையிலும் பாடம் கற்பான். தமிழ் உழவ‌ன் மூடனா, அறிஞனா என்று காலம்தான் பதில் சொல்லும்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org