மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்- குறள்
மண்ணே ஒரு நாட்டின் முதன்மையான சொத்து என்று சொன்னால் கூட மண்ணின் இன்றியமையாமை தெரியவராது; மண்ணே நாட்டின் உயிர் என்பது தான் சரியானது. ஆனால், உலகில் ஒவ்வொரு
நாட்டிலும் மண் அரிக்கப்பட்டும் வேறு வகைகளிலும் அழிந்துவருகிறது - ஒன்றிய நாடுகளவையின் உணவு மற்றும் வேளாண்மைக் கழகம்.
நல்ல, வளமான மேல் மண் உருவாவதற்கு மிக நெடுங்காலம் தேவை. ஆனால், அதை அழிப்பதற்கும் (மனிதருக்கும் பிற உயிர்களுக்கும் கிடைக்காமல்) முடக்குவதற்கும் மிகக் குறுகிய காலமே போதும்! இது நிலத்தடி நீர், அடர்ந்த இயற்கைக் காடுகள், உயிரினப் பன்மயம் ஆகிய அனைத்து இயற்கை வளங்களுக்கும் பொருந்தும் என்பதை நினைவு கூர்வோம்! மாந்த இனத்திற்கும் பிற உயிரினங்களுக்கும் போதுமான உணவு, நன்னீர் ஆகியவற்றை வழங்குவதற்கும் மனித உடைகளுக்கான இயற்கைப் பொருள்களை உருவாக்குவதற்கும் ஆற்றல் மற்றும் சூழல் மண்டலங்களின் நிலைத்த பாதுகாப்புக்கும் உயிரினப் பன்மயத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் வளமான மண் இருப்பது இன்றியமையாதது. வேளாண்மை, தொல்லியல், நிலவியல் உள்ளிட்ட பல துறைகளில் ஆராய்ச்சி செய்யும் அறிவியலாளர்கள் எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக இது குறித்து எச்சரித்துவந்துள்ளனர். இப்போது உலக அளவில் மண் ஆதாரம் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது பரவலாக உணரப்பட்டுவருகிறது. ஆகவே “மண் பாதுகாப்பு” இப்போது பேசுபொருளாக விளங்குகிறது.
மண்ணை மறந்ததால் அழிந்த பண்டை நாகரிகங்கள்
மண் வளம் பேணத் தவறினால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டிவரும் என்பதற்கு வரலாற்றில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. பண்டைய நாகரிங்கள் பலவற்றின் வீழ்ச்சிக்கும் ஒட்டுமொத்த அழிவுக்கும் மண் வள இழப்பு காரணமாக இருந்துள்ளது. உலகெங்கும் இதற்கு எடுத்துக்காட்டுகள் உள்ளன. இவற்றில் இரண்டைக் குறித்து இனிப் பார்ப்போம்.
ஆசியா மற்றும் ஆப்ரிக்காக் கண்டங்களின் வட பகுதியில் தழைத்த மெசப்பொட்டேமிய - பேபிலோனிய நாகரிகங்கள் (இன்றைய ஈராக், குவைத், சிரியாவின் ஒரு பகுதி) மற்றும் நைல் ஆற்றங்கரை நாகரிகம் (எகிப்து) ஆகியன அழிந்ததற்கு முதன்மையான காரணம் வண்டல் படிந்து அரிய மேல் மண்ணை மூடிவிட்டதுதான்.
க்வாட்டிமாலாவில் 1700 ஆண்டுப் பழமை வாய்ந்த மாயன் நாகரிகம் கி.பி. 900 ஆண்டு வாக்கில் வீழ்ச்சியுற்றது. வேளாண்மைக்காக மலைச் சரிவுகளில் காடுகளை அழித்ததன் விளைவாக மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் கடும் மண் அரிப்பு நேர்ந்தது. அதன் விளைவாக விளைச்சல் மோசமாக பாதிக்கப்பட்டு அந்த 1700 ஆண்டுக் கால நாகரிகம் அழிந்தொழிந்தது.
ஆகவே மண்வளம் குறைந்து வருவதைப் பற்றிக் கண்டுகொள்ளாதிருப்பது மனித குலத்திற்குப் பெருந் தீங்கு விளைவிக்கும்.
இவற்றில் குறிப்பாக மண் அரிப்பு என்பது மிகவும் முதன்மையான அழிவுச் சின்னமாகும். தவறான வேளாண் முறைகளும் காடழிப்பும் மண் அரிப்புக்கு முதன்மைக் காரணிகள்
மண் என்பது என்ன?
தாதுகள், காற்று, தண்ணீர், கரிமப் பொருள்கள் ஆகிய நான்கும் சேர்ந்ததே மண். இவற்றில் தாதுப் பொருள்கள் சுமார் 45%, நீரும் காற்றும் 25%, கரிமப் பொருள்கள் 2-5% என்ற கொள்ளளவில் இருக்கும்.
அ. தாதுப்பொருள்கள்
தாதுப் பொருள்கள் மணல், வண்டல், களி(மண்) என மூன்று வகைப்படும். மணலில் சத்துகளும் நீரும் தங்கா. பயிர்களுக்கான சத்துகள் களியில் தான் மிக அதிக அளவில் உள்ளன. பெரும்பாலான இடங்களில் இம்மூன்றும் வெவ்வேறு அளவுகளில் மண்ணில் இருக்கும். மணல், வண்டல், களி ஆகியன எந்த வகையில் கலந்துள்ளன என்பது மண்ணின் கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது. மண் உருண்டைகளின் கட்டமைப்பும் அவற்றில் மணல், வண்டல், களி ஆகிய மூன்றும் எந்த அளவில் இருக்கின்றன என்பதுந்தாம் அம்மண்ணின் நீர்ப் பிடித் திறன், நீரும் காற்றும் தங்கும் கொள்ளளவு மற்றும் அவை சுழற்சி செய்யப்படுவதற்கான வாய்ப்பு, மண் அரிப்பைத் தடுக்குந்திறன், உழவுக்கு ஏதுவாக இருத்தல், வேர்கள் இறங்கும் ஆழம் உள்ளிட்ட பலவற்றைத் தீர்மானிக்கின்றன.
ஆ. கரிமப் பொருள்கள்
உயிருள்ளவையும் அண்மையில் இறந்து வெவ்வேறு நிலைகளில் சிதைந்துகொண்டிருப்பனவும் சேர்ந்தவை கரிமப் பொருள்கள். ஒரு ஏக்கர் நல்ல மண்ணில் சுமார் நானூறு கிலோ மண் புழுக்கள், ஆயிரத்து நூறு கிலோ பூஞ்சான்கள், எழுநூறு கிலோ நுண்மங்கள் (பேக்டீரியாக்கள்), அறுபது கிலோ ஓரணு நுண்ணுயிர்கள், நானூறு கிலோ ஒட்டுத்தோடுடைய இணைப்பு உடலிகள் (மரவட்டை, பூரான் போன்றவை) மற்றும் பாசிகள், சிறு பாலூட்டிகள் ஆகியன இருக்கும்.
இறந்த உயிரினங்கள் (செடி கொடிகள் உள்ளிட்டு) சிதைந்துகொண்டிருக்கும் இறுதி நிலையில் கரிய நிறமுள்ள மட்காகின்றன. மட்கும் கரிமப் பொருள்களும் தம்முள் பெருமளவில் சத்துகளைக் கொண்டுள்ளன. மண்ணில் கரியத்தின் அளவு அதிகரிக்க, அதிகரிக்க அந்த மண்ணின் வளமும் [உயிர்களைத் தாங்கும்] திறனும் அதிகரிக்கின்றன. எனவே, மண்ணின் கரிய அளவை அதிகரிக்கும் வேளாண் முறைகளைப் பின்பற்றுவதற்கு உழவர்களை ஊக்குவிக்கவேண்டும்.
இதன் மறுபக்கமாக, மண்ணின் கரிமச் சத்து குறைவதால் நுண்ணியிர்கள், பூஞ்சானங்கள் உள்ளிட்டவை சத்துகளை மறுசுழற்சிக்கு உட்படுத்துவது குறைகிறது. இதன் விளைவாகப் பயிர்களுக்குப் போதுமான சத்துகள் கிடைப்பதில்லை. அதனால் அவற்றின் வளர்ச்சி குறைவதுடன் அவை எளிதில் நோய்த் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன.
நல்ல, வளமான மண் என்பது …
ஒரு நிலத்தில் உள்ள மண் நல்ல நிலையில் இருப்பின் அது கீழ்க்கண்ட தன்மைகளை உடையதாக இருக்கவேண்டும்:
- நீரை நன்கு நிலத்தினுள் வடிய விடும்
- பயிரிட்டபின் கரடுதட்டிப்போகாமல் (இறுகாமல்) இருக்கும்
- நல்ல மழை பெய்தாலும் தண்ணீரை ஓட விடாது உள்வாங்கிக்கொள்ளும்
- வறட்சிக் காலங்களில் பயன்படுவதற்கேற்ப ஈரப் பதத்தைக் காக்கும்
- கட்டியாகிவிடாதிருக்கும்
- [மண்] அரிப்பையும் சத்துகள் வீணாவதையும் எதிர்த்துத் தடுக்கும்
- எண்ணற்ற மண்வாழ் உயிரினங்களுக்குத் தக்க இருப்பிடமாக விளங்கும்
- விளைச்சலை அதிகரிப்பதற்கு மேன்மேலும் உரங்களை எதிர்பார்க்காது
- ஒருவகையான செறிவான வாசனை உள்ளதாக இருக்கும்
- தரமான, வளமான பயிர்களை விளைவிக்கும்.
உலகளாவிய மண்வளச் சிக்கல்
வரலாற்றில் முன் எப்போதும் இருந்திராத அளவு இப்போது மண் வளம் மோசமாகியுள்ளது. மண்ணின் தன்மையும் பொருளாதார மற்றும் சூழல் சேவைகளைத் தருவதில் அதன் பணித் திறனும் கெட்டிருப்பது உலக அளவில் பல வடிவங்களில் வெளிப்படுகிறது. உணவாதாரம், சூழல் காப்பு, உயிரினப் பன்மயம், நன்னீர்ச் சேமிப்பு மற்றும் வழங்கல் ஆகியன பாதிக்கப்படுவது மட்டுமன்றி, மண் வளம் கெடுதல், மண் அரிப்பு ஆகியவற்றின் விளைவாகக் கரியமில வளியும் மீத்தேன் வளியும் வளிமண்டலத்தில் அதிகம் சேர்கின்றன.
மண் அரிப்பு, வளம் இழத்தல், உவர்த் தன்மை அதிகரித்தல், அமிலத் தன்மையுடையதாதல், இறுகுதல், மண்ணில் கரியம் உள்ளிட்ட பொருள்களின் அளவு குறைதல் ஆகியன இயற்கை நிகழ்வுகளே. ஆயினும், பெருமளவில் காடுகளை அழிப்பதாலும் முறை பிறழ்ந்த வேளாண் முறைகளாலும் (எ.கா. நீர் தேங்குதல் மற்றும் வேதியுரங்கள், உயிர்க்கொல்லிகள், ஆலைக் கழிவுகள் ஆகியவற்றைக் கொட்டுதல்) அணைகள், சாலைகள், வானூர்தி நிலையங்கள், பிற கட்டடங்கள், மகிழுந்து நிறுத்தும் திடல்கள் உள்ளிட்டவற்றைக் கட்டுவதாலும் மேற்கண்ட அழிவுகள் இயற்கையாக நடப்பதைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு வேகமாக நடைபெறுகின்றன. மண் வள மேலாண் முறைகளில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் இந்த அழிவின் வேகத்தை ஓரளவுக்குக் குறைக்கலாம்; ஆனால், இதற்கு மிக அதிகச் செலவாகும். மண் மிகவும் முதன்மையானதோர் இயற்கை வளம் என்பதை நாம் உணராததே பல இன்னல்களுக்குக் காரணம். பல நூறாண்டுகளில் இயற்கை உருவாக்கிய மேல் மண்ணைச் செங்கற்கள் உள்ளிட்ட கட்டட வேலைகளுக்குப் பயன்படுத்துதல், விளை நிலங்களின் மீது (கட்டடங்கள்) கட்டுதல் ஆகியன உலகளவில் மண்ணின் உற்பத்தித் திறனைப் பெருமளவு பாதிக்கின்றன.
உலகில் பாலைவனமாக மாறியுள்ள நிலத்தில் பாதிக்கும் மேற்பட்ட பரப்பு அப்படி மாறியதற்குக் காரணம் மண் வளம் குறைந்ததுதான். உலக நிலப் பரப்பில் ஏறத்தாழ கால் பங்கு நிலம் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாகப் பத்து முதல் இருபத்து மூன்று லட்சம் எக்ட்டேர் பரப்புள்ள விளை நிலம் உழவுக்குப் பயன்படாது போய்விட்டது. வளரும் நாடுகளில் 130 கோடிப் பேர் மிகவும் வளங்குன்றிய நிலங்களையே தம் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.
இந்தச் சிக்கலின் விளைவுகளைக் குறித்து அரசுகள் அக்கறை செலுத்தாததால் இதனால் ஏற்படும் இழப்புகளை யாரும் இதுவரை கணக்கிடவில்லை. மனித குலத்தின் உணவுத் தேவைகள் மிகப் பெரிய அளவுக்கு நிலத்தைச் சார்ந்துள்ளன. மண் வளம் குன்றி வருவதால் நிலைத்த,. நீடித்த வேளாண்மையும் நம் வாழ்க்கையும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. மண் வளம் நாளுக்கு நாள் மோசமாவதைத் தடுத்து மண்ணை மீண்டும் வளப்படுத்துவதன் தேவையைக் குறித்து போதுமான விழிப்புணர்வு வரவில்லை.
இந்திய அளவில் மண்வளச் சிக்கல்
இந்திய நிலப் பரப்பு 32 கோடியே எண்பது லட்சம் எக்ட்டேர் (1 எக்ட்டேர் = 2.54 ஏக்கர்). இதில் பதினேழரைக் கோடி எக்ட்டேர் நிலம் மண் அரிப்பு உள்ளிட்ட காரணங்களால் வளம் குன்றிவிட்டதாக 1983-ஆம் ஆண்டு வெளியான ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன [மேற்கோள் 5]. ஆனால் 55% வேளாண் நிலம் - சுமார் 14 கோடியே எழுபது லட்சம் எக்ட்டேர் நிலம் - வளம் குன்றிவிட்டதாக 2005-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது [மேற்கோள் 6]. இது மொத்த நிலப் பரப்பில் 44 விழுக்காடு. நீரில் மேல் மண் அடித்துச் செல்லப்படுவது இந்த இழப்புக்கு மிகப் பெரிய (சுமார் 64%) காரணமாக உள்ளது.
பிற காரணங்கள்
மண்ணின் அமிலத் தன்மை அதிகமாதல் (11%) நீர் தேங்குதல் (9.5%) காற்றில் மண் அரிப்பு ஏற்படுதல் (6.5%) உவர்த் தன்மை அல்லது காரத் தன்மை அதிகரித்தல் (4%) இதர (5%)
மண்வள அழிவு 1980-களுக்கும் முன்பே தொடங்கி வரவர மோசமாகிக் கொண்டிருப்பதை இந்த இரண்டு மேற்கோள்களிலும் உள்ள புள்ளிவிவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. இந்தியா போன்ற பரந்த நாடுகளில் இத்தகைய புள்ளி விவரங்களில் வேறுபாடுகள் இருப்பதில் வியப்பில்லை. மொத்தத்தில், பெருமளவிலான வேளாண் நிலத்தில் மண் வளம் குறைந்து வருகிறதென்பது தவிர்க்கவியலாத உண்மை. இதனால் நாமனைவரும் பாதிக்கப்படுவோம். இருப்பினும், சிறு குறு உழவர்களும் பிற வறியோருமே அதிகம் பாதிக்கப்படுவர் [5].
வறண்ட பகுதிகளில் ஆண்டுக்கு 533 கோடியே நாற்பது லட்சம் மெட்ரிக் டன் (1 டன் = ஆயிரம் கிலோ) மண் அரித்துச் செல்லப்படுகிறது. பாசனப் பகுதிகளில் நீர் தேங்குதலும் மண்ணின் உவர்ப்புத் தன்மை அதிகரித்தலும் முதன்மையான சிக்கல்களாக உள்ளன. இவற்றால் பாதிக்கப்படும் நிலத்தின் பரப்பளவு சுமார் ஆறு கோடி எக்ட்டேர் முதல் பத்தொன்பது கோடி எக்ட்டேர் வரை இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
நிலைத்த மேம்பாட்டுக்கு மண்வளமே அடித்தளம்
சூழல் காப்பில் மண்ணின் பங்கு குறித்த அறிவியல் ஆய்வறிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே வெளியிடப்பட்டன. இருப்பினும் அவை அரசுகளின் திட்டக் கோட்பாடுகளை வகுப்போரைச் சென்றடையவில்லை. ஆகவே நிலைத்த மேம்பாட்டுக்கு வழி வகுக்கும் திட்டங்களில் பல தோல்வியடையும் வாய்ப்பு உள்ளது. மனித குலத்துக்குப் பொருளாதாரம், கலாச்சாரம், உயிரியல்பியல், மற்றும் ஆன்மிகச் சேவைகளை வழங்கும் திணைக் களங்களுக்கும் (அதாவது, சூழல் மண்டலங்களுக்கும்) இயற்கை வனப்பு மிக்க நில அமைப்புகளுக்கும் மண் வளமே அடித்தளமாக விளங்குகிறது. மேலும், வளி மண்டலத்தில் இருப்பதைக் காட்டிலும் இரண்டு மடங்கு கரியமில வளி நிலத்தில் சிக்குண்டுள்ளது. நம் நல்வாய்ப்பாக, அது வளி மண்டலத்திற்கு மறு சுழற்சி செய்யப்படுவதற்கு நெடுங்காலம் ஆகும்; இல்லையேல் புவி சூடாதல் இன்னும் வேகமாக நடைபெறும்!
உயிரினப் பன்மயத்தைப் பற்றிப் பேசும்போதும் மண்ணில் உள்ள உயிரினப் பன்மயத்தைக் குறித்துப் பெரும்பாலும் யாரும் பேசுவதில்லை. பல்வேறு வகைப்பட்டனவும் தமக்குள்ளாக மிகவும் சிக்கலான உறவுகள் நிறைந்த வலைப் பின்னல்களைக் கொண்டனவுமான திணைக் களங்கள் மண்ணில் உள்ளன. புவியின் மேற்பரப்பில் உள்ள திணைக் களங்களில் உள்ள மரபீனிப் பன்மயத்தில் 98 விழுக்காட்டிற்கும் அதிகமானது மண்ணில் தான் உள்ளது. ஆயினும், உயிரினப் பன்மயம் குறித்த ஒன்றிய நாடுகளவையின் அமைப்புகளில் மண்ணின் உயிரினப் பன்மயம் குறித்து எதுவும் விவாதிக்கப்படுவதில்லை. இந்த மிகப் பெரிய விடுபடுதலுக்கு முதன்மையான காரணம் குறித்து இனிப் பார்ப்போம்.
மண் - நிலம்: என்ன பெரிய வேறுபாடு? பெயரில் என்ன இருக்கிறது?!
பெரும்பாலான மக்களைப் பொருத்தவரை இவ்விரண்டுக்கும் இடையில் வேறுபாடே இல்லை. இதன் விளைவாக. ஓரிடத்தின் நில அமைப்புக்கு அந்த இடத்தின் மண் எவ்வளவு முதன்மையானது என்ற புரிதல் அவர்களிடம் இருப்பதில்லை.
மண் என்பது உயிருள்ள ஒரு பொருள். அது நிலத்தின் கூறுகளில் முதன்மையானதொன்று. நிலம் என்பது மண், கல், பாறை, ஆறு, செடி கொடிகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும். நிலவமைப்பில் மண் ஐந்து வகைகளில் பங்கு வகிக்கிறது:
- சத்துகளை சுழற்சி செய்தல்;
- தண்ணீரைத் தக்கவைத்தல்;
- உயிரினப் பன்மயம் மற்றும் வாழிடம் தருதல்;
- பல கூறுகளை உள்ளடக்கிய கூட்டுப் பொருள்களைச் சேமித்து வைத்தல், வடிகட்டுதல், செறிவு மாறாது தாங்குதல், அவற்றில் [வேதியியல்] மாற்றங்களை உண்டுபண்ணுதல்;
- செடி கொடிகள் உள்ளிட்டவற்றுக்கு உறுதியான அடித்தளம் தருதல்.
நிலம் தொடர்பான ஆய்வுரைகள், விவாதங்கள் ஆகியவற்றில் மண்ணுக்குத் தனி இடத்தை ஒதுக்கத் தவறுவதால் மண்ணின் மேற்கண்ட ஐவகைப் பயன்களைக் குறித்தும் நாம் எண்ணத் தவறிவிடுகிறோம். மண் வளம் குன்றுவதால் நிலைத்த மேம்பாடு எவ்வகைகளில் பாதிக்கப்படுகிறது என்பது குறித்த பார்வை நம்மிடையே இல்லை. உணவாதாரம், உயிரினப் பன்மயம், சூழல் மாற்றம், நன்னீர் நெறிப்படுத்தல் உள்ளிட்ட பல சிக்கல்களில் மண் வளத்துக்கு இன்றியமையாத பங்கு உள்ளது. ஆனால் இவற்றுடன் மண் வளத்துக்கு உள்ள இணைப்பைக் குறித்த புரிதலை விளக்குவதற்கு இதுகாறும் எளிமையான வழியொன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை.
மண் வளப் பாதுகாப்பு என்ற கருத்துப் படிவத்தை இதற்குப் பயன்படுத்தலாம். பின்வரும் படமும் பட்டியலும் [மேற்கோள் 2] இவற்றை மேலும் விளக்குகின்றன. உலகை அச்சுறுத்தும் பெருஞ் சிக்கல்களுக்கும் மண் வளத்துக்கும் உள்ள நேரடித் தொடர்பை இவை தெளிவாக்குகின்றன.
- பரிதி (thiru.ramakrishnan@gmail.com)
மேற்கோள்கள்:
- Rural Areas, http://www.soilandhealth.org/01aglibrary/010117attrasoilmanual/010117attra.html
- Andrea Koch, et al, “soil security: solving the global soil crisis”, Global Policy (2013) doi: 10.1111/1758-5899.12096, University of Durham and John Wiley & Sons, Ltd.
- http://www.soilandhealth.org/01aglibrary/010119lowdermilk.usda/cls.html
- http://www.fao.org/docrep/t0389e/T0389E02.htm#Erosion%20destroyed%20civilizations
- Kunwar Jalees, “Loss of Productive Soil in India”, International Journal of Environmental Studies, 1985, vol. 24, pp. 245-250.
- G Mythili, “Agricultural Land Degradation in India: Trend, Causes and Impacts”, World Soil Forum, Berlin, Oct. 30, 2013
சொல்லகராதி
எக்ட்டேர் (10,000 சதுர மீட்டர்) hectare;
எத்தனால் ethanol;
ஒட்டுத்தோடுடைய இணைப்புடலி arthropod;
ஒன்றிய நாடுகளவை the united nations;
ஓரணு நுண்ணுயிர்கள் protozoa;
க்வாட்டிமாலா guatemala;
கரிமப் பொருள்கள் organic matter;
கரியமில வளி carbon di oxide;
கரியம் carbon;
திணைக் களம் (சூழல் மண்டலம்) ecosystem;
நுண்மங்கள் (பேக்டீரியாக்கள்) bacteria;
பேபிலோனியா babylonia;
மாயன் நாகரிகம் mayan civilization;
மீத்தேன் methane;
மெசப்பொட்டேமியா mesapotamia