(கரு உண்மை, உரு கற்பனை)
பார்வதி கொஞ்சம் பயந்து போயிருந்தாள், ரொம்பவே பயந்து போயிருந்தாள். பின்னே இருக்காதா, வாழ்க்கையில் முதல் முறையாக அவள் சிறை செல்ல இருப்பது உறுதியாகிவிட்டது. அவளும், அவள் மிகவும் மதிக்கும் லட்சுமி அக்காவும், உடன் வந்த மற்ற 4 பெண்கள் குழு தலைவிகளும், எவ்வளவோ மன்றாடியும் கேட்காமல், அந்த இரக்கமற்ற தாசில்தார், அவர்களை சிறையில் அடைக்க மிகவும் சாமர்த்தியமாக ஏற்பாடு செய்துவிட்டார். இவர்களை சிறையில் அடைக்க வந்த பெண் கான்ஸ்டபிளோ, “அவளே, இவளே” என்று இவர்கள் 6 பேரையும், வயது வித்தியாசம் பாராமல் திட்டிவிட்டு, இவர்களை சிறைச்சாலைக்கு அழைத்து செல்ல வண்டிக்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்.
எதிர்த்து போராடிய லட்சுமி அக்காவை பார்த்தாள் பார்வதி; இப்பவும் தைரியமாக, லட்சுமியக்கா, சிஸ்டர் பிலொமினாவிடம் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள். 'எட்டு ஆண்டுகளில் சிஸ்டர் பிலொமினவிடம் தான் எவ்வளவு மாறுதல்கள்' என்று எண்ணிய பார்வதிக்கு எல்லாமே நேற்று நடந்தது போலிருந்தது. முதல் பெண்கள் சுய உதவி குழு கூட்டதிற்கு வந்த பார்வதிக்குத்தான் பயம், மாமன் என்ன சொல்லுவானோ என்று கூட தோன்றியது. கொஞ்சம் தைரியம் லட்சுமி அக்காவை பார்த்து வந்தாலும், சிஸ்டரை பார்த்து பேசிய பின்தான், நாமும் வாழ்க்கையில் ஏதேனும் செய்யவெண்டும் என்று ஒரு வலிமை பிறந்தது. சிஸ்டரை பார்த்தால் ஒரு பயம் கலந்த மரியாதை, இன்னமும் நீடித்தது.
பெண்கள் குழுவில் சேர்ந்த பின்னர் பல மாறுதல்கள். இதுவரை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவு தூரத்து ஊர்களுக்கு பயணித்து மற்ற பெண்கள் குழுக்கள் எவ்வாறு இயங்குகின்றன என்று தெரிந்து கொண்டது, முதலில் மாமன் கொடுத்த காசை கொண்டு சேமிக்கத் துவங்கி, பிறகு பூக்கட்டி அதனால் வந்த காசு, அதற்குப் பிறகு வயக்காட்டில் சின்ன சின்ன வேலைகள் அதனால் வந்த காசு என்று சேமிப்பு வளர்ந்து, பெரிதாகி, முதல் முறை கடன் வாங்கியபோது மீண்டும் ஒரு பயம், அதை திருப்பி முழுதுமாக கட்டியபோது ஒரு பெருமை…மாமனுக்கு நினைத்துக் கூட பார்க்க முடியாத, டி.வி.ஸ். 50 வாங்க கடன் வாங்கி, முதல் நாள் அதில் சேர்ந்து உட்கார்ந்து பயணித்த போது, வாழ்க்கையில் இதைவிட பெரிய சுகம் ஒன்றில்லை என்று பூரித்ததின் நினைவு வந்த போது, பார்வதிக்கு அழுகையே வந்து விட்டது. லட்சுமி அக்கா மெள்ளமாக அவளிடம் வந்து, “டீ சாப்பிடு, பாரு” என்று டீ டம்ளரை நீட்டி நின்றாள். லட்சுமியக்காவின் தனித்தன்மை இது, எப்போதும் எல்லாருக்கும் எதாவது வாங்கி கொடுக்க வேண்டும் என்பது, எப்படி இந்த தாசில்தார் ஆபிசில் அதை செய்கின்றார் என்று பார்வதிக்கு தெரியவில்லை.
“மொத்தமாக 35 ஏக்கரு பாரு, யோசிச்சி பார், நமக்கு எப்போ இந்த நாட்டில எல்லாம் நிலம் கிடைச்சி, சொந்தமா வாழ்க்கை நடத்த முடியும்?” ஒரு முறை அரசாங்க ஊரக வளர்ச்சி துறை அதிகாரியை சந்தித்துவிட்டு வந்த லட்சுமி அக்கா, தங்கள் பெண்கள் குழுவின் பெயரில் குத்தகைக்கு நிலம் கிடைக்க இருக்கிறது என்பதை தெரிவிக்கும்போது, “இது நிச்சியமா நம்ம உலகத்தில் இல்லை” என்ற எண்ணம் வந்தது. அதுவும் 33 ஆண்டுகள் குத்தகை என்ற போது, அப்போ, தனது 2 வயது மகள் ஸ்னேகாவிற்க்கு கல்யாணம் ஆகி குழந்தை குட்டி பிறக்கிறவரைக்கும் இந்த நிலம் நமது என்று நினைக்கும் போது, இன்னமும் நம்ப முடியாத விஷயமாக இருந்தது. கூட்டத்தில் எவ்வளவோ விவாதித்து விட்டு “சரி, இந்த இடத்தை நம்பி கடன் வாங்கலாம், விவசாயம் செய்யவும், மற்றும் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு ஜோடி மாடுகள் வாங்கவும் இந்த கடன் உதவியாக இருக்கும்”, என்று முடிவானது. அதைத் தவிர முதல் வருடத்திற்கான, பராமரிப்பு மற்றும் தீவனம் வாங்கவும், கடன் உதவியாக இருக்கும் என்றும் முடிவானது.
அப்பவே, தாசில்தார் ஆபிசில் இருந்த அதிகாரிக்கு இது பிடிக்கவில்லை, அதனாலேயே, அந்த நிலத்திற்கான மதிப்பை மிக அதிகமாக கூட்டி, ஒரு ஏக்கர் விலை 50,000 ரூபாய், என்று நிர்ணயம் செய்து, அதில் 4% தொகை, வருடாந்திர குத்தகை தொகையாக செலுத்தவேண்டும் என்றும் கூறியபோது எல்லோருக்கும் தூக்கிவாரிப்போட்டது, ஐந்து குழுக்கள் இணைந்து குத்தகை தொகையை கட்டினால், ஒரு நபருக்கு மாதத்திற்க்கு இதனால் 78 ரூபாய் தான் என்று லட்சுமி அக்கா தைரியம் கூறினார். “ஒரு ஆளுக்கு, ஒரு நாளைக்கு ரெண்டு ரூவா சேமிக்க முடியாதா?” என்று அவர் கேட்டபோது அனைவரும் சம்மதிக்கவே செய்தனர்.
முதலில் கட்டிடம் ஒன்றும் கட்ட வேண்டும் என்றும் அதற்கான செலவை மற்றொரு அரசாங்க நிறுவனம் வேறொரு திட்டதின் கீழ் அளிக்கும் என்றும் தெரிந்தபோது, அனைவருக்கும் மகிழ்ச்சி. அது போலவே, ஒரு குழுவுக்கு தேவையான 3 லட்சம் கடன் (ஒரு நபருக்கு, 20,000 தான் என்று லட்சுமி அக்கா கூறினார்) வங்கியும் ஏற்பாடு செய்து தரும் என்றும் தெரிவித்த போது, அனைவருக்கும் இன்னமும் மகிழ்ச்சி பெருகியது. மாடு வாங்கினால், பால் உற்பத்தி மூலமாக சுலபமாக கடனை மூன்று அல்லது நான்கு வருடங்களுக்குள் கட்டிவிடலாம், அதற்க்கப்புறம் 30 வருடங்களுக்கு நமக்கு நிலமிருக்கு எல்லாம் லாபம்தான், என்று அனைவரும் மனக்கணக்கு போட்டது நினைவிற்கு வந்தது. வெற்றிகரமாக, குத்தகை பத்திரம் அவர்கள் கைக்கு வந்த போது, அனைவரும் கொண்டாடினர். பார்வதி, மாமனுக்கு குடிக்க கூட கொஞ்சம் தானாகவே காசு கொடுத்தாள்.
இதை எல்லாம் ஆரம்பித்து வைத்த அரசாங்க அதிகாரிக்கு அந்த சமயத்தில் மாற்றம் வந்தது. புதிதாக வந்த அதிகாரியும், ‘நானும் உங்களுக்கு தொடர்ந்து நன்மை செய்வேன்’ என்று கூறினார். ஆனால், கட்டங்கள் அப்போதே துவங்கியது யாரும் உணரவில்லை. முதலில் மாடுகள் கட்ட கட்டிடம் ஏற்படுத்தி தருவதாக வாக்களித்த மற்றொரு துறையை சேர்ந்த அதிகாரி, “30 சதுர மீட்டர் இல்லை, 30 சதுர அடி தான் கட்டி தருவதாக சொன்னோம்” என்றபோது, மாடுகளை முன்னமே வாங்கியிருந்த பெண்களுக்கு தூக்கிவாரி போட்டது. கட்டடம் கட்டி முடிப்பதற்க்குள் தான் எத்தனை மாற்றங்களை செய்தார் அந்த அதிகாரி! கடைசியில், கட்டிடம் முடிந்த பின்னர், கட்டியவர்களுடன் சேர்ந்து தனக்கும் பெண்கள் குழுவின் சார்பில் விருந்து வைத்து வேட்டி சட்டை எடுத்து கொடுக்கவேண்டும் என்று மட்டும் வற்புறுத்தி வாங்கினார்.
அப்போது “பரவாயில்லை, நமக்குன்னு ஒரு எடம் ஆயிடுச்சி, இனிமே எல்லாம் நல்லா நடக்கும், நல்ல மனசோட எல்லாம் செய்வோம்!”, என்று தைரியம் கூறிய பார்வதியை, லட்சுமி அக்காவும், சிஸ்டரும் மிகவும் பெருமையாக பார்த்தது நினைவுக்கு வந்தது. முதல் ஒரு வருடத்தில்தான் பெருமைப்படும் வகையில் எத்தனை நிகழ்வுகள்? மாடுகளுக்கு தேவையான விதத்தில் அரசாங்கம் கட்டிய கட்டிடத்தைச் சுற்றி பெண்களே கொட்டகை போட்டது, மாடுகள் வாங்கி, பால் வியாபாரம் மெல்ல பெருக துவங்கியது, கொஞ்சம் இந்த முயற்சி குறித்து பிறருக்கு தெரிய துவங்கியதும், ஊடகங்களில் நேர்காணல், தொலைகாட்சியில் பேட்டி, பார்வதியிடம் கூட கேள்வி கேட்டார்கள், ஆனால், கடைசியில் காண்பிக்கும்போது அவளது பதில் ஏனோ வரவில்லை. பக்கத்தில் புதிதாய் திறந்திருந்த பொறியியல் கல்லூரியிலிருந்து, பாண்டு, சர்ட்டு அணிந்த ஆண்களும் பெண்களும் கூட வந்து இவர்களுடன் ஒரு நாள் வேலை செய்து விட்டு சென்றார்கள். பார்வதிக்கு, “ஒரு நாள் ஸ்னேகா இது போல பாண்டு, சர்ட்டு போட்டு பொறியியல் படிக்க வேண்டும்” என்று எண்ணம் தோன்றியது. அப்போ, அவளும் ஒரு நாளைக்கு நம்மளோட வேலைக்கு வந்து நிறைய படம் எடுத்துகிட்டு போயிடுவாளா? அந்த புள்ளைங்க மாதிரி உடம்பு வணங்காம ஆயிடுமா? என்று எண்ணங்கள் கூடவே வந்தன. இரண்டாவது வருடம் குத்தகை முடியும் போதுதான் தெரிந்தது, பொறியியல் கல்லூரியை கட்டியிருந்த பெரியமனுசனுக்கு இவர்களது குத்தகை நிலத்தின் மீது கண்பட்டுள்ளது என்று. முதலில் அவரிடம் வேலை செய்த ஒரு உள்ளூர்காரர், “ஐயா, இந்த இடத்தை வாங்கலாம்னு இருக்காரு, புதுசா, மருத்துவ கல்லூரி கட்டப்போறாரு, நீங்க, 'எங்களால இந்த இடத்தை பராமரிக்க முடியல்ல’, அப்படின்னு எழுதி கொடுத்துடுங்க, மத்தது நாங்க பார்த்துகுறோம்”, என்று கூறினார், எல்லாருக்கும் ஏதோ ஒரு தொகையை ஐயாவே பார்த்து கொடுப்பாரு”, என்று வேறு கூறினார். பின்னர், பல்வேறு வகையிலும், விதமாகவும், பெண்கள் குழு தலைவர்களை மனம் மாற செய்யவும், மிரட்டவும் கூட முயற்சிகள் நடந்தன. குழுக்களின் மத்தியில் பிளவு உண்டாக்க முயற்சியும் நடந்தது. சிஸ்டர் மிகப் பொறுமையாக எல்லாரிடமும் பேசி, “உங்கள் முயற்சியினால், நாட்டில் பல பேருக்கு நம்பிக்கை பிறந்துள்ளது, இன்னுமொரு கல்லூரி வந்து இந்த நாட்டில் பெரிய ஒரு மாறுதலும் நடக்க போவதில்லை, விவசாயம் மற்றும் விவசாய அறிவுத்திறன் அழிந்து வரும் இந்த காலகட்டத்தில், நாம் சுயசார்புடன் செய்யும் இந்த முயற்சி நாட்டிற்கு மிகவும் முக்கியம், வருங்காலத்து பல்கலைகழகம் நீங்கள்தான்”, என்று பேசியபோது, எவ்வளவு பெருமை, ஒற்றுமை!
இந்த நிகழ்வுகளின் மத்தியில்தான் சிஸ்டர் முதல் முறையாக மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். “அடிமேல், அடி விழும்” என்பார்கள், அது என்னவோ பார்வதியின் குழுவிற்கு சரியாகதான் இருந்தது. ஒரு பக்கம் சிஸ்டரைப் பார்க்க சென்னை பெரிய ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்து, இன்னொருபுறம், புதிதாக இவர்களால் நடப்பட்ட மரங்கள், கல்லூரி பெரியவரின் அடியாட்களால் அப்புறப்படுத்தப்பட்டது, தினம் தினம் அவர்களிடமிருந்து வந்த அச்சுறுத்தல்கள். முதல் முறையாக மாமனுக்கு கூட பார்வதியிடம், “கொஞ்சம் தேவையில்லாமல் இதில் எல்லாம் மாட்டிகிட்டியா?” என்று கேட்டான். பல நாட்கள், ஸ்னேகா, பள்ளியிலிருந்து வந்து பக்கத்து வீட்டு ஆயாவிடம் தூங்கியிருந்தாள். இதற்கு இடையில்தான் தெரிய வந்தது, இவர்களுக்கு குத்தகை விடப்பட்ட நிலத்தின் மத்தியில் புதிதாக இல்லாத ஒரு சாலை, இருந்ததாக காண்பித்து, நடுவில் இருந்த ஒரு ஏக்கர் நிலத்தை தாசில்தார் ஆபிசில், 15,400 ரூபாயிக்கு ஒரு விவசாயிக்கு பட்டா போட்டு, விற்பனை செய்திருந்தார்கள். “அப்ப நமக்கு அவங்க வேணுமின்னே அதிக விலைக்கு குத்தகை தொகையை நிர்ணயித்தார்கள்” என்று உணர்ந்தபோது, துக்கமும் கோபமும் சேர்ந்து வந்தது.
இப்போது, மூன்றாவது வருஷம் முடிஞ்சு போச்சு, நாலாவது வருஷம் குத்தகை பணம் கட்டணும் எங்கின்ற தருவாயில், கொஞ்சம் எல்லாருக்கும் கட்டம்தான், ஒரு வாரம் தாமதமாகி விட்டது. அதை பற்றி பேசத்தான் இந்த தாசில்தார், பெண்கள் குழு தலைவர்களை கூப்பிட்டார். வத்து பேச ஆரம்பிப்பதற்குள், “உங்களுக்கு அந்த இடத்தை எப்படி கொடுத்தாங்கன்னு தெரியல்லை, உங்களால எல்லாம் இந்த மாதிரி முயற்சி எடுத்து நடத்த முடியாது, இப்பதான் இலவசமா எல்லாம் கொடுக்கராங்க, வாங்கிகிட்டு வயல்ல வேலை செஞ்சு பொழைக்க வேண்டியது தானே?” என்றார். லட்சுமியக்கா தான், “அப்படியெல்லாம் பேசாதீங்க, எங்களால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று எங்களுக்கு தெரியும்”, என்று தைரியமாக எதிர்த்து பேசினார். “அப்போ, குத்தகை தொகையை நேரத்தில் கட்டுங்க, இல்லன்ன முடியாது என்று எழுதி கொடுத்துட்டு போங்க. எழுத யாருக்கேனும் தெரியுமா?” என்று மீண்டும் அந்த தாசில்தார் சீண்டவே, ஐந்து பெண்களும் மிகவும் கோபமாகவே அவரிடம் வாதிட்டனர்.
ஆனால் அடுத்தாக அவர் செய்தது இவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. தொலைபேசியில் பெண் போலிஸ் அதிகாரியிடம், அலுவலகத்தில் நுழைந்து தாக்கியதாக குற்றம் சாட்டினார், தொடர்ந்து இவர்கள் அவரை யூனியன் ஆட்கள் யாரையோ வேறு அலைபேசியில் தொடர்பு கொண்டு முறையிட்டார்.அதுதான், இப்போ, பாருவும், லட்சுமி அக்காவும், இன்னும் 4 தலைவிகளும் சிறையை நோக்கி தங்கள் பயணத்தை துவங்கியிருந்தனர். கடைசியாக தாசில்தார் தப்பு செய்துவிட்டார் என்று மனம் மாறூவாரா? என்று ஏக்கத்துடன் பார்வதி அந்த ஆபிசின் வாசலில் நின்றபடி எட்டி பார்த்தாள், உள்ளே, பெரிய காந்தி படம், சிரித்துக்கொண்டிருந்தார் தேசத்தந்தை, “நம்மள மாதிரி ஆளுங்க இந்த நாட்டில ஏதும் புதுசா செய்யவே முயற்சிக்க கூடாதுடி”, என்று ஒரு தலைவி அங்கலாய்த்து கொண்டார். போலிஸ் ஜீப் இவர்களை தாங்கி செல்ல ஆடி அசைந்து வந்து நின்றது.
பி.கு.: இந்த கதையின் முக்கிய சம்பவமாக நடந்த சிறை செல்லுதல் ஒரு வெள்ளிகிழமை மாலை நடந்தது. உள்ளூர் அரசியல்வாதி தலையீட்டினால், பெண்கள் அனைவரும் திங்கட்கிழமை குத்தகை பணத்தை கட்டிவிடவேண்டும் என்ற ஒப்புதலின் பெயரில் விடுவிக்கப்பட்டனர். அவர்களும் ஒப்புக்கொண்டதைப்போலவே பணத்தைக் கட்டிவிட்டனர். அதற்காக, இடைப்பட்ட இரண்டு நாட்களில், அவர்களது மாடுகள் அனைத்தும் விற்கப்பட்டன.