செம்போத்து
பறவைகளைக் காணவென்று நாம் அங்கும் இங்கும் செல்லத் தேவையில்லை. நம் வீட்டுச் சன்னலில் , மொட்டை மாடியில் தெரியும் பறவைகளே பலவகை உண்டு. அவற்றைப் பார்த்து, அவற்றின் குரல் அடையாளம் காண்பது,வெவ்வேறு சமயத்தில் அவை வெவ்வேறு குரல் கொடுப்பதை இனங்காண்பது போன்றவை போன்பவை எல்லாம் நம் மன அழுத்தங்களுக்கும் மிக இதமாக இருக்கும்.(உதாரணமாக, பாம்பையோ, லகிடு போன்ற பறவைகளையோ கண்டால் தவிட்டுக் குருவியும் அணிலும் மாறி, மாறி ஒரு விதமான இரைச்சல் எழுப்பும்). பரபரப்பான நவீன வாழ்முறையில், தினம் ஒரு சில நிமிடங்கள் நாம் இயற்கையை ரசிக்க முயற்சித்தால் எவ்வளவோ நன்மை உண்டு.
இம்மாதம் நாம் காணும் பறவை Greater Coucal அல்லது Crow Pheseant என்று அழைக்கப்படும் செம்போத்து.[Centropus sinensis]
தோற்றம்
நிறத்திலும், அளவிலும் காகம் போல் இருக்கும். சிறகுகள் அரக்கு நிறத்தில் கருஞ்சிவப்பாய் இருக்கும். கண்கல் சிவப்பாகவும், வால் நீண்டு கருப்பாயும் இருக்கும். ஆண், பெண் தோற்றம் ஒன்றே. உதர்கள், பனங்காடுகள், மூங்கில் காடுகள், வயல்வெளி, தோட்டங்களில் இவற்றைக் காணலாம். இந்தியா முழுவதும் உள்ளன.
உணவு
நத்தைகள் இவற்றிற்குப் பிடித்த உணவு. புழுக்கள், பூச்சிகள், சிறிய பாம்புகள், எண்ணைப்பனைப் பழங்கள், வேறு சிறிய பழங்கள் ஆகியவற்றை உண்ணும்.
இனப்பெருக்கம்
மழைக்காலங்களில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும். 3 முதல் 5 முட்டைகள் இடும். 15-18 நாட்களுக்குள் குஞ்சு பொரிக்கு. ஆண்கள் மூங்கில் புதர்களில் கிளைகளை இணைத்து இலைகளால் கூடு கட்டும் - கூடு பார்க்கப் பச்சைப்பசேல் என்று இருக்கும். ஆண்-பெண் இருவரும் குஞ்சு வளர்ப்பில் ஈடுபடும்.
சிறப்புக் குறிப்புகள்
குயில் இனத்தைச் சேர்ந்தாலும், குயிலைப்போல் மற்ற பறவைக் கூடுகளில் முட்டை இடாது
இதன் “கூம்,கூம்,கூம் ” என்ற கூவும் ஓசை அபசகுனம் என்று சிலர் மூடப் பழக்கம் கொண்டுள்ளனர். ஆனால் திவ்வியப் பிரபந்தத்தில் திருமங்கை ஆழ்வார் “திருத்தாய் செம்போத்தே” என்று இப்பறவையை, மாதவனை வரும்படிக் கூவு என்று தலைவி இறைஞ்சுமாறு கவி பாடியுள்ளார்.